 |
பொன். இளவேனில் கவிதைகள்
ஆழம் சென்றுவிட்டவனின் நினைவுக் குறிப்பு
தொலைதூரம் அலைந்து போய்விட்ட
அவளின் இரவுகள் உனதாகிவிட்டன
மென்மொழியின் வாசனையை
விழுங்கிவிட்ட உன் குரல்
சாத்தியபடியே இருக்கிறது
மீளவியலாது
தென்றலின் வனத்துக்குள்
அழைத்துச் சென்றுவிட்ட
அவளின் பாடல் குவிந்துவிட்ட
உன் மண்டபம் அமைதியாகிறது
கிளிகள் உறங்கும் பொழுதொன்றில்
எளிமையாய்ச் செல்கிறாய்
பளிங்கு மாளிகையின்
வாயிலுக்குள்.
குளியல் வெளி
என் பாறையை வளைத்திருந்தது
நீர் திரட்சி
முங்கும் முன் குலுங்கின்
சதைக்கூடு
மின்னும் நீர் கண்ணாடியில்
பதிந்திருந்த சூரியன்
குன்றுகளென மதர்தெழுந்த மேகங்கள்
மறுகறையை துளியென காட்டும் தூரம்
வர்ண ஜாலமிடும்
காட்சி வெளியை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அவர்கள்யென்
அம்மணத்தை பகடியாக்குகிறார்கள்.
குறிப்புகள் எழுதுபவன்
உறங்குதவற்கான உத்தேசம் வருமா
குறிப்புகள் எழுதுபவனுக்கு
சரியான குறிகளில் விழுகிறது பழுத்த
பழங்கள்
மின்னும் குறிப்புகள் நட்சத்திரமாகிறது
வானம் முழுக்க குறிப்புகளோ குறிப்புகள்
நட்சத்திரங்களின் வீதியில்
கழுகுகளே பறக்கிறது
கழுகுகளின் பிடியிலோ சிறு குஞ்சுகளின்
அலறல்கள்
ஓலங்களின் சாலைகளில் ஆந்தைகளே
விழித்திருக்க
குறித்துத்தானாக வேண்டும் குறிப்புகளை
குறிப்புகள் தீரவும் போவதில்லை
மரங்களுக்கு செவியும் கேட்பதில்லை
தொடரும் பயணத்தில் இறுதிகளும்
தெரிவதில்லை
இறுதிகள் என்பதும் நிரந்தரமாவதில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|