 |
அம்மாவீடு எழிலரசி
நான் இருந்து
விட்டுச்சென்ற வீடு
எனக்கு மறுபடியும் வாய்ப்பதில்லை.
நெருடல்களும் புழுக்கங்களுமாய்
பிதுக்கம் கொண்டதன் பிற்பாடு
ஒரு போதும் என்னை அது
ஏற்றுக்கொள்வதில்லை
அவ்வப்போது மையம் கொண்ட
தென்றல் திட்டுகள் எண்ணங்களில் மேலோங்கும்
என்னைச் சிறைகொண்டு
உள்புதைக்க முயன்றதன் பிறகு
என் சிறகசைப்பில் அடைப்பட்டதோ
என்னை மீட்டும் தன்னிடம்
கொள்ள விரும்புவதில்லை
அன்று
படிப்பதற்கென
விடுதிக்குச் சென்றதன் பிறகு
என்வீடு விடுமுறைக்கால ஓய்விடமாயிற்று
திருமணத்தின் பிறகு
என் அம்மாவீடாயிற்று.
இன்று
வேலையின் பொருட்டு
வேறிடம் பெயர்ந்து
மீளும் சமயம்
என் வீடு மற்றொருவர் வசம்.
சுற்றிலும் நிறைந்துள்ள
பொருட்களின் மௌனப் பேச்சில்
முடிவெடுத்தேன்
இனி
வீட்டை வெறுப்பதில்லை
நேசிப்பதுமில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|