Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
தீட்டு விலகுமா?

ராதிகா

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன், அப்போதுதான் பிள்ளை பெற்றிருக்கும் ஒரு பெண் அல்லது உதிரப்போக்குள்ள பெண், ஒரு பிணம். இதில் ஏதேனும் ஒன்றை யார் தொட்டுவிடுகிறானோ, உடை அணிந்தவாறே குளித்தால் அவன் தூய்மையடைவான்”.

இது பிராமண ஆண்களுக்காக எழுதப்பட்ட இந்து தர்ம கோட்பாடு. கௌத்தமாவின் தர்ம சூத்திரத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது. இது சாமவேதத்துடன் தொடர்புடைய சூத்திரம்.

இது எழுதப்பட்டு பல ஆயிரமாண்டு கடந்துவிட்டது. ஆனால் நிலைத்திருக்கிறது. அதை இந்நாள்வரை ஒரு ஜனநாயக அரசே அங்கீகரித்தது. அதனை ஒரு நீதிமன்றமும் உறுதி செய்தது என்பதுதான் வேடிக்கை. உச்சநீதிமன்றம் என்ன நிலை எடுக்கும் என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வி.

முதல் சர்ச்சை, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மூலம் தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயமான ஜோசியர் உன்னிகிருஷ்ண பணிக்கர் கடந்த ஜூன் மாதம் சபரிமலையில் ‘தேவ பிரசன்னம்’ (கடவுளின் எண்ணம் அறிதல்) பார்த்தார்.

பத்திலிருந்து ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படாத சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் ஒரு பெண் நுழைந்தார் என்றும் ஐயப்ப விக்ரகத்தை தொட்டுவிட்டார் என்றும் பணிக்கர் கூறினார். இது அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட பல “தெய்வக் குற்றங்களில்” ஒன்று. பணிக்கரின் குற்றச்சாட்டு கோடிகளில் புழங்கும் இந்த கோயிலின் நிர்வாக மற்றும் திருவாங்கூர் தேவஸம் போர்டை நோக்கி எய்தப்பட்டவை என்பது கவனிக்கத்தக்கது.

சர்ச்சை இரண்டு, பணிக்கரின் பிரசனம் வெளிவந்த மறுநாளே சொல்லி வைத்தார் போல் கன்னட நடிகை ஜெயமாலா, 1987ல் ஐயப்பன் கோயிலில் தான் நுழைந்ததாக கூறி பேக்ஸ் மூலம் சபரிமலை நிர்வாகிகளிடம் மன்னிப்பு கடிதம் எழுதினார்.

கோயிலை அடைவதற்குமுன் குளித்துவிட்டு செல்லும் பம்பை நதிக்கரையிலேயே பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் அவர்களைத் தாண்டி, ஆண்களே முட்டி செல்லும் புனிதமாக கருதப்பட்ட குறுகலான 18 படிகளையும் ஏறி ஜெயமாலா, சன்னிதானத்தில் இருந்த ஐயப்பன் சிலையை தொடமுடியுமா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, இந்து கோயில்களில், ஏன் வாழ்க்கையிலும் கடைபிடிக்கும் ‘தீட்டு” என்ற அருவறுப்பான பெண் தள்ளிவைப்பு வழக்கம் வெளிச்சத்திற்கு வந்தது.

பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கு பூஜை செய்து வந்த கண்டறாரு மோகனறாரு எனப்படும் தலைமை தந்திரி (பூசாரி) பின்பு பாலியல் சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்பது மற்றொரு வேடிக்கை!

பலமாதமாக ஓயாமல் இருந்த ஜெயமாலா கோவிலுக்குள் நுழைந்த சர்ச்சை ஒரு வழியாக தற்போது உச்சநீதிமன்ற வாயிலை அடைந்துள்ளது.

சபரிமலை கோயில் வழக்கம் - பெண்களை அனுமதிக்க கூடாது என்ற - தவறானது என்று புது தில்லியை சார்ந்த ஐந்து பெண் வக்கீல்கள் வழக்கு தொடுத்துள்ளனர். பெண்கள் நுழைவதை அனுமதிக்க கேரள அரசை பணிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை.

உச்சநீதிமன்றமும் கடந்த 18ஆம் தேதி கேரள அரசுக்கு அனுப்பிய நோட்டீஸில் எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளார்கள் என்று கேட்டுள்ளது. மேலும் இந்த வினா எழுப்பிய தலைமை நீதிபதி சபர்வால் மற்றும் நீதிபதிகள் எஸ்.எச்..கபாடியா, சி.ஜே..தாக்கர் ஆகியோர் அடங்கிய பென்ச், திருவிதாங்கூர் தேவசம் போர்டு, தேவசம் ஆணையர், சபரிமலை தலைமை தந்திரி மற்றும் பத்தினம் திட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

அரசு நீதிமன்றத்திற்கு என்ன பதில் தரும் என்பது இப்போது புதிர்தான். பெண்களை அனுமதிக்கலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் அரசிடமிருந்து வரத்தொடங்கியுள்ளன.

கேரள கோயில் விவகாரத்துறை மந்திரி ஜி.சுதாகரன், நோட்டீஸ் வந்த அன்றே ஒரு தொலைக்காட்சி பேட்டியில், பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். “உச்சநீதிமன்றம் எங்களிடம் நேரிடையாக அனுமதிப்பது பற்றி கேட்டால் மட்டுமே இந்த பதில் சொல்லப்படும்” என்றும் கூறினார் சுதாகரன்.

இந்த அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ்தான் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் உட்பட நான்கு வாரியங்கள் அமைந்துள்ளன. இதே அமைச்சர் உச்சநீதிமன்ற நோட்டீஸ் கிடைப்பதற்கு முன்பு ‘சபரிமலை கோவிலின் வழக்கம் மாற்ற முடியாது’ என்ற பேட்டியை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பழமையை மாற்ற முடியாது எனச் சொன்ன அமைச்சர் தற்போது புரட்சிக்காரராய் காட்சி தருகிறார். ஆனால் சுதாகரனின் கருத்தை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் நிகாரித்து விட்டார்.

பெண்களை அனுமதிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சுதாகரன் கூறியிருப்பது அவரது “சொந்தக் கருத்து” என்றும் அரசுக்கு இதனுடன் எந்த சம்பந்தமுமில்லை என்றார் அச்சுதானந்தன்.

பதிலடியாக சுதாகரன் தான் சொன்னது அரசின் கருத்து என்று கூற; தற்போது அரசின் நிலைபாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையில் பதில் கூற நோட்டீஸ் கொடுக்கப்பட்ட தேவசம் வாரியத் தலைவர் ஜி.ராமன் நாயர், பெண்களை அனுமதிக்க முடியாது என்ற கருத்தைக் கூறியுள்ளார்.

“1991ல் கேரள உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பைதான் நாங்களும் பின்பற்றுகிறோம். காலங்காலமாக கடைபிடித்து வந்த ஐதீகங்களும் வழக்கங்களும் இவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வழக்கத்தை மாற்ற கூடாது என்ற கருத்தையே நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிப்போம்” என்றார்.

“கோவிலுக்கு வருபவர் 41 நாள் விரதம் எடுத்து தூய்மையாக இருந்து வரவேண்டும் என்பது ஐதீகம். உதிரப்போக்குள்ள பெண் எப்படி இந்த விரதத்தை 41 நாள் கடைபிடிக்க முடியும்” என்று கூறி வருகிறார் தலைமை தந்திரி கண்டராறு மகேஸ்வராறு.

கேரளாவில் “கேரள இந்து பொது வழிப்பாடு தலங்கள்” 1965, என்ற ஒரு சட்டம் (Rule)இருந்து வருகிறது. ஐதீகம் மற்றும் வழக்கத்தின் அடிப்படையில் அனுமதி மறுப்பு பற்றியது இச்சட்ட வடிவமாகும்.

1991ல் கேரள உயர் நீதிமன்றம் இந்த சட்டம் செல்லும் என்று கூறியது மட்டுமல்லாமல் 10-50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று வயதை வரையறுத்தும் கூறியது. பெண்களின் உடலில் உதிரப்போக்கு ஏற்படும் வயது அதுவென்று கணக்கிட்டது உயர்நீதிமன்றம்! மேலும் இந்த தடையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவும் போட்டது.

இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்திற்கு சென்ற கதையில் இரண்டு சம்பவங்கள் உண்டு. 1989ல் சபரிமலை கோயிலில் நடந்த படப்பிடிப்பின் போது புனிதமாக கருதப்பட்ட பதினெட்டாம் படியில் பெண்கள் நடனமாட அனுமதிக்கப்பட்டார்கள் என்பது சிலரது கோபத்தை தூண்ட, வழக்கு நீதிமன்றம் சென்றது என்றும், கோயிலுக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அங்கிருந்த பெண் கலெக்டர் அனுமதிக்கப்படாததால் அதுவே வழக்காகி நீதிமன்றம் சென்றது என்றும் இரண்டு கருத்து உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பக்தி மாஸ்ரிஜா, லக்ஷ்மி சாஸ்த்ரி, பிரேர்னா குமாரி, அல்கா சர்மா மற்றும் சுதாபல் ஆகியோர் கேட்டிருப்பது இதுதான். கேரளாவின் 1965 அனுமதி மறுப்பு சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பாகம் - 14 (Article - 14) (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. எனவே இதனை நீக்க வேண்டும்.

ஐயப்ப கோவிலின் வழக்கம்; பாகம் - 25 (Artice-25) (மதங்களை கடைபிடிக்க எல்லோருக்கும் சமஉரிமை) பாகம் - 15 (Article-15) (அரசு மதம், ஜாதி, பாலினம், பிறந்த இடம், இனம் ஆகியவையின் அடிப்படையில் பாகுபாடு காட்ட கூடாது) பாகம் - 51 (Article-51) (ஒவ்வொரு குடிமகனும் பெண்களை சிறுமைப் படுத்தும் வழக்கத்தை விட்டுவிட கடமைப்பட்டவன்) ஆகிய அரசியலமைப்பு சட்டங்களை புறக்கணித்துள்ளது என்று கூறியுள்ளனர். இரு பாலரும் மத வழக்கங்களில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்கள்.

சட்டத்தின் மூலம் சில வெற்றிகள் பெறுவது தேவை என்றாலும் இந்திய நாட்டில் சட்டம் மட்டுமே சமூக பிரச்சனைகளை சாதித்ததாக சரித்தரம் இல்லை. ஐயப்பன் கோவிலில் நுழைய அனுமதி கொடுத்தால் உடனடியாக பெண்கள் கோவிலுக்கு நூற்றுக் கணக்கில் கிளம்பிப் போவது இல்லைதான். ஆனால் சில ஆண் அமைப்புகளை கேள்விக்குட்படுத்துவது சமுதாய போக்கை பற்றிய ஒரு புரிதலைக் கொடுக்கும் என்ற அளவில் அவசியமான ஒன்றுதான். இந்திய அரசியலமைப்பு சட்டம் வெல்கிறதா அல்லது மோசமான மத வழக்கங்கள் வெல்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com