Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
நிகழ்வுகள்

மனித உரிமைக் கருத்தரங்கு

மதுரை கல்லூரியின் தத்துவத் துறை சார்பில் “மனித உரிமைகள் - தேவை புதிய புரிதல்கள்” என்னும் தலைப்பில் பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியுதவியுடன், தென் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை, மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பி.மருதமுத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரியின் தலைவர் முத்துசுவாமி வரவேற்புரை ஆற்றினார். துறையின் தலைவரும், நிகழ்ச்சியின் அமைப்பாளருமான பேரா.முரளி அறிமுக உரை நிகழ்த்தினார்.

முதல் நாளின் முதல் அமர்வுக்கு பேரா.ஆர். கிருஷ்ண மூர்த்தி தலைமை ஏற்றார். முதலாவதாக, தமிழ்நாடு இறை யியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் தயான் சந்த்கார், ‘இனமொழி கலாச்சார அடையாளங்கள் - மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் கட்டுரை ஆற்றினார். தனது உரையில், “இலங்கைப் பிரச்சினையை அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், இஸ்லாமிய தீவிரவாத கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றன. சர்வதேச ஊடகங்களும், அரசு தரப்பு செய்திகளையும், நியாயங்களையும் மட்டுமே வெளியிடுகின்றன. இந்தியாவும், தான் தமிழீழத்தை ஆதரித்தாலோ, சுயாட்சியை ஆதரித்தாலோ, தனது நாட்டின் காஷ்மீர் போன்ற பிராந்தியங்களை அது ஊக்கப்படுவதாக அமைந்து விடும் என நினைக்கிறது என்றார்.

அடுத்த அமர்வுக்கு மதுரை எஸ்.என். கல்லூரியின் ஆங்கிலப் பேரா. பி.விஜயகுமார் தலைமை ஏற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேரா. ஆர்.சுப்பிரமணியன் ‘அரசு வன்முறைகள் - மனித உரிமை பார்வை’எனும் தலைப்பிலான, கட்டுரையில், ‘காவல் நிலையங் களில் கைதிகளும், விசாரணைக் கைதிகளும் எவ்வாறு சித்தரவதைக் குள்ளாகிறார்கள் என்று விளக்கினார்.

மூன்றாவது அமர்வுக்கு மதுரையில் உள்ள, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மோகன் லால்பீர் தலைமையேற்றார். ‘மனித உரிமைகளும் - பழங்குடி மக்களும்’என்ற தலைப்பில் நாவலாசிரியரும், மக்கள் சிவில் உரிமைக் கழக பொதுச் செயலரும், வழக்கறிஞருமான எஸ். பாலமுருகன் தனது கட்டுரையை வாசித்தார்.

முதல் நாளின் இறுதி அமர்வை, மக்கள் சிவில் உரிமைக் கழக மாவட்டச் செயலர் பேரா. எஸ்.சங்கரலிங்கம் நடத்திவைத்தார். மதுரைக் கல்லூரியின் தத்துவத்துறை ஆராய்ச்சி மாணவர் பாலகிருஷ்ணன்,
“தலித்துகளுக்கான மனித உரிமைக் கல்வி” எனும் தலைப்பில் கட்டுரை வாசித்தார்.

இரண்டாவது நாளின் முதல் அமர்வுக்கு மதுரை அருளானந்தர் கல்லூரியின் முனைவர். ஜார்ஜ் ஜோசப் தலைமை ஏற்றார். முதல் கடடுரையை மதுரை காமராஜர் பல்கலை க்கழகத்தின் பேரா. ந.முத்து மோகன் வாசித்தார். “அந்தோனியோ கிராம்சியின் குடிமைச் சமூகம் எனும் கருத்தாக்கம்” என்கிற தலைப்பில், அவர், “அரசியல் மேற்கட்டுமானம் - குடிமைச் சமூக மேற்கட்டுமானம் - ஆளும் அதிகார வர்க்கத்தின் பலாத்கார வடிவங்களின் செயலுக்கு, சமயம், கல்வி வழியாக குடிமைச் சமூகம், ஆதரவான, பொது மனோபாவத்தை அளிக்கிறது. ஆக, ஆளும் வர்க்கம், தனது கருத்தியல் கலாச்சார மேன்மையை, குடிமைச் சமூக வாயிலாக சாதித்துக் கொண்டு, அங்கு ஒரு பொது முகத்தை காட்டிக் கொள்கிறது. மார்க்சியர்கள், அரசு அதிகாரத்தை கைப்பற்று வதோடு, குடிமைச் சமூக மேலாண்மையை நோக்கி நகர வேண்டும் என்றும் கிராம்சி கூறுகிறார்” என்று, குடிமைச் சமூக மேலாண்மைக்கு எட்டப்பட வேண்டிய முயற்சிகளை கூறினார்.

அடுத்ததாக, மதுரைக் கல்லூரியின் தத்துவத்துறை ஆராய்ச்சி மாணவி சுசித்ரா “பின் நவீனத்துவத்தின் பார்வையில் மனித உரிமைகள்” எனும் கட்டுரை படித்தார்.

அடுத்த அமர்வுக்கு மூட்டாவைச் சேர்ந்த பேரா. பா.பார்த்தசாரதி தலைமை ஏற்றார். முதலாவதாக பேரா.அ.மார்க்ஸ் அவர்கள், “சிறுபான்மையினரின் மனித உரிமைப் பிரச்சினைகள்” என்கிற தலைப்பில் பேசினார். தகுந்த புள்ளி விவரங்களையும், சிறுபான்மையினர் இந்தியாவில் எவ்வாறு பார்க்கப் படுகின்றனர் என்றும், “மைனாரிட்டிகள்”, “மைனாரிட்டிகளாக இருக்கக் கூட வேண்டிய உரிமைகள் இல்லை” என்றும் கூறிய அவர், “செக்யூரிட்டி என்பது சட்டப்பூர்வமாக மக்களைக் காப்பதிலிருந்து விலகி, சட்டரீதியாக அவர்களை அடக்கி வைப்பது என்பதாகிவிட்டது” என்றார்.

அடுத்து, எவிட்னஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர் அவர்கள் ‘தலித்துகளும் - மனித உரிமைகளும்’ எனும் தலைப்பில், இந்து வர்ணாசிரமத்தையும் அதன் நீட்சியையும் தெளிவாக விளக்கினார்.

அடுத்ததாக ஆராய்ச்சி மாணவர் ரபீக்ராஜா ‘இஸ்லாம் - மனித உரிமைகளும்’ எனும் தலைப்பில் ‘இசுலாமின் ஜிகாத் கருத்தாக்கத்தையும்’, ‘இசுலாமும் - வன்முறையும்’என்கிற பொதுப் பார்வை குறித்த புரிதல்களையும் பற்றிப் பேசினார்.

அடுத்த அமர்வு ‘பெண்ணியம்’ பற்றியது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேரா.அ.ராமசாமி தலைமை ஏற்ற இம்மர்வில், முதலாவதாக ஆராய்ச்சி மாணவி அருணா, ‘பெண்களின் மீதான குடும்ப வன்முறைகள்’என்கிற தனது கட்டுரையில், ‘பெண்கள் பற்றிய சமயக் கண்ணோட்டத்தை காலத்தின் தேவைக்கு ஏற்ப மறுவிளக்கம் செய்து கொள்ள வேண்டும்” என்றார். அடுத்துப் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் வாசுகி, ‘பெண்களின் மீதான வன்முறை என்பது பாலியல் வன்முறை, வரதட்சணையோடு நின்றுவிடுவது அதன் ஒரு பரிமாணம் தான் என்றும், பெண்ணை உழைப்பாளியாக பார்க்கும் பார்வை இங்கு இல்லை’ என்றும் தெளிவாக விளக்கினார்.

கருத்தரங்கத்தின் இறுதி அமர்வுக்கு மதுரை சௌராஷ்டிரா கல்லூரியின் பேரா.பிரேம்பாபு தலைமை ஏற்றார். “மனித உரிமைகளும் - சூபிஸமும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மாணவர் ஷாகுல் ஹமீது கட்டுரை வாசித்தார். அடுத்ததாக அருளானந்தர் கல்லூரியின் தத்துவத்துறை பேரா. லூர்து நாதன், தனது கட்டுரையில், ‘மனித உரிமைகள் என்பது ஓர் ஒற்றைக்கதை’ என்கிற புதிய கோணத்தில் தனது கருத்துகளை தத்துவ விளக்கங்களோடு முன்வைத்தார். மனித உரிமைகளுக்கான தத்துவ அடித்தளத்தை விளக்கிய அவர், அதன் பன்முகத்தன்மையை தருக்கங்களோடு விளக்கினார்.

இரண்டு நாள் நடைபெற்ற கருத்தரங்கத்தை, அமைப்பாளரும், மதுரைக் கல்லூரி தத்தவத்துறை தலைவருமான முனைவர் ஆர்.முரளி அவர்கள் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

இடஒதுக்கீட்டுக் கருத்தரங்கு

கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் இடஒதுக்கீடு தாக்கமும், தடைகளும் என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார். ‘மனித வளர்ச்சி என்பது மனித முகத்தோடு இருக்க வேண்டும். அது மனித அடையாளங்களை அழித்து விடக்கூடாது, என்று கூறினார். மேலும் இடஒதுக்கீடு இந்திய வரலாற்றில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆகவே அவற்றைப் போராடித்தான் பெற வேண்டும். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை பலரும் எதிர்க்கின்றனர். இந்த இடஒதுக்கீடு சட்டம் 1947ல் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு 2006ல் தான் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இயற்றினால் மட்டும் போதாது முழுமையாக அமல் செய்யப்படுவது அவசியம்’ என்றார்.

முதல் அமர்வில் பேரா. பி.எஸ். சந்திரபாபு தன் உரையில், இடஒதுக்கீட்டின் துல்லியமான வரலாற்றினை எடுத்துரைத்து, தென்னிந்திய வளர்ச்சியில் வகுப்பு வாரிய இடஒதுக்கீட்டின் பெரும் பங்கினைக் கூறினார். தொடர்ந்து எம்.ஏ.பிரிட்டோ கருத்துரையாற்றுகையில், ‘இடஒதுக்கீடு’ என்ற வார்த்தை அகற்றப்பட வேண்டிய வார்த்தை, மாறாக நாம் முழங்க வேண்டியது நம் ‘பங்கு’ என்றார். இவ்வாறு ‘இன்றைய சூழலில் இடஒதுக்கீட்டின் தேவை’ என்றார்.

இரண்டாம் அமர்வில் பர்வதவர்த்தினி ‘பெண்களுக்கான இடஒதுக்கீடு’ பற்றி பேசுகையில், ‘பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல, மாறாக ஆணாதிக்கத்திற்கு எதிரானது’ என்றார். தொடர்ந்து ஹாமீம் முஸ்தபா ‘மதச் சிறுபான்மையினருக்கு தேவை இடஒதுக்கீடு’ என்ற தலைப்பில் பேசுகையில், 1950களிலேயே இரும்பு மனிதர் பட்டேல், இராஜாஜி போன்றோர் மதச் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டினை எதிர்த்திருக்கிறார்கள் என்றும், நம் சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள இன்றைய புரிதல் பற்றியும் கருத்துரைத்தார்.

தொடர்ந்து பூ.சந்திரபோஸ் ‘தலித்துகளுக்கு இடஒதுக்கீடு’ என்று தலைப்பில் ‘தலித்’ என்ற சொல்லின் பொருள் கூறி, மண்ணின் மைந்தர்களானவர்கள் வந்தேரிகளின் நூல் வருண அமைப்பில் இருந்து வெளித்தள்ளப்பட்டு 2,500 ஆண்டுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு, இன்றைய சூழலில் மற்றவர்களோடு போட்டியிடும் திராணியில்லை (அந்த எண்ணமே இல்லை) என்று விவரித்து வரலாற்றில் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்த அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளை எடுத்துரைத்தார்.

மூன்றாவது அமர்வில் பேசிய அன்பு செல்வம் அறிவியல் படிப்பு போல இடஒதுக்கீடானது ஒரு சமூக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாக உள்ளது என்றார். இன்று தலித் கிறிஸ்தவர்கள் கிறித்தவத்திற்கு உள்ளேயும், அரசியல் துறை என்ற வெளியிலும் இடஒதுக்கீட்டை பெறுவது சாத்தியம் இல்லை என்று அவர் முடிவாக கூறினார்.

தொடர்ந்து பேசிய ஷாஜகான் ‘ஒதுக்கீட்டினால் தரம் குறையும் என்ற பொய்’ என்று அருமையான தலைப்பில் சொல்வதை விட செயல்படுத்துவதே பயன்படும் என்று தொடக்கத்தில் கூறினார். திறமைகள் சாதியின் அடிப்படையிலோ, கலவர அடிப்படையிலோ தோன்றுவதில்லை. அவர்கள் படும் கடின உழைப்புதான் மதிப்பு மிக்கதாக அமையும். அதை விட அக்கரைக் காட்டுபவனே மிகச்சிறந்த மனிதன் என்றார்.

‘தனியார் துறையில் இடஒதுக்கீடு தேவை என்ற தலைப்பில் பேரா.முனைவர். எம்.விக்டர் லூயிஸ் அந்துவான் கூறுகையில், இட ஒதுக்கீட்டுக்காகவே கட்சி அமைக்கப்பட்ட காலம் பெரியார் வாழ்ந்த காலம் என்று அவருடைய வாழ்க்கை சரிதையைக் சுட்டிக்காட்டி சமூகநீதியைப் பற்றி எடுத்துரைத்தார். பெரிய பெரிய பணக்காரர்கள் அதாவது டாட்டா, பிர்லா போன்றோருடைய பணமும், ஏழை மக்களுடைய பணமும் தனியார் மயமாக்கப் பட்டுள்ளது. அப்படியானால் யார் முதலீடு போட்டுள்ளனர் என்பதை தெளிவாக்க வேண்டும் என்றார்.

ஐந்தாம் அமர்வில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமைக்குத் தேவை இடஒதுக்கீடு என்ற தலைப்பில் பேசிய பி.எஸ்.முத்துப்பாண்டி பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எந்த பொருளாதாரத்திலும் வேறுபட்டவர்கள் அல்ல; மாறாக இருவரும் உழைக்கும் நபர்கள். இரண்டு சமூகமும் இணைகின்ற போது அங்கு ஒரு மாற்றமும், இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கிடைக்கவும் முடியும் என்று கூறினார்.

கருத்தரங்கு நிறைவு உரையில் உயர்திரு. மதுக்கூர் இராமலிங்கம் ‘இடஒதுக்கீட்டுச் சிக்கலில் ஊடகங்கள்’ என்ற தலைப்பில் பேசினார் ஊடகம் செய்யும் உள்வேலை மிகப்பெரியது. ஊடகம் ஒரு விற்பனைப் பொருள். இச்சம்பவங்களை படம் காட்டி சாம்பாதிக்கின்றது என்று கூறினார்.

இரண்டு நாள் அமர்வுகளிலும் தொல்லியல்துறை, வரலாற்றுத்துறை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பெரியகுளம் ஜெயராஜ் அண்ணபாக்கியம் பெண்கள் கல்லூரியில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர். நிகழ்வை பெய்யியல் & வரலாற்றுத்துறையும் மதுரை யடியாஸ் மையமும் இணைந்து ஒருங்கமைத்தது.

ஏலாதி இலக்கிய விருது

தமிழக அளவிலான சிறந்த கட்டுரை / ஆய்வு நூல்களுக்கான போட்டியில் ஜனவரி 2003 முதல் 2006 ஜுலை முடிய வெளிவந்த நூல்கள் வரவேற்கப்பட்டன. இதில் எண்பத்தொரு படைப்பாளிகள் கலந்து கொண்டனர். மூன்று சுற்று தேர்வுக்குப் பின்னால் நடுவர் குழு ஏலாதி விருது இரு சமபரிசுகளுக்கான நூல்களை தேர்வு செய்தது. பரிசளிப்பு விழா தக்கலையில் ஹெச்.ஜி.ரசூல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நட.சிவகுமார், முஜிபுர் ரகுமான் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

சென்னையைச் சேர்ந்த படைப்பாளியும், விமர்சகருமான எம்.ஜி.சுரேஷ் எழுதிய ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன’நூல் ஏலாதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. ‘கணேஷ் சாவித்திரி’சிறப்பு பரிசாக ரூபாய் இரண்டாயிரத்துக்கான பணமுடிப்பும், ஞாபகச் சிற்பமும், பாராட்டுச் சான்றிதழையும் கவிஞர். ஜி.எஸ்.தயாளன் எம்.ஜி.சுரேசுக்கு வழங்கினார். நாட்டுப்புறவியல் ஆய்வாளர் முனைவர். த.கண்ணா கருப்பையா எழுதிய மதுரை வீரன் வழிபாட்டு மரபும், வழக்காறுகளும் நூலுக்கு இன்னொரு சமப்பரிசாக ஏலாதி விருது வழங்கப்பட்டது. ‘அவுக்காரும்மாள்’ நினைவுப் பரிசாக ரூபாய். இரண்டாயிருத்துக்கான பணமுடிப்பும், ஞாபகச்சிற்பமும், பாராட்டு சான்றிதழையும் ஷனா ஏ.எஸ்.ஜெகபர் சாதிக் வழங்கினார்.

ஏலாதி விருது பெற்ற பின்நவீனத்துவம் என்றால் என்ன 2004ம் ஆண்டில் வெளிவந்தது. தமிழ் சூழலில் வெகுவான கவனத்தைப் பெற்ற இந்நூல் பின்நவீனத்துவ சூழலையும், சிந்தனைகளையும், எளிமையாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ழாக்தெரிதா, பூக்கோ, ரோலன்பர்த், ழாக்லகான் உள்ளிட்ட பின்நவீனத்துவ அறிஞர்களையும், மொழி, அதிகாரம், இலக்கியம், உளவியல், பெண்ணியம், ஓவியம், திரைப்படங்கள் உடனான பின்நவீனத்துவ உரையாடல்களையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.

மதுரை வீரன் வழிபாட்டு மரபும், வழக்காறுகளும் நூலாசிரியர். முனைவர் த.கண்ணாகருப்பையா திண்டுக்கல் மாவட்டம் அம்மையன் நாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்போது திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றுகிறார். நாட்டார் வழக்காற்றியல், தற்கால இலக்கியம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். தமிழகத்தில் நாட்டார் வழிபாடு உருவாகிய விதம், தொன்மைத் தன்மை, வழிபாட்டு வடிவங்கள், மதுரை வீரனை வழிபடும் அருந்ததியர் உள்ளிட்ட சமூகத்தாரின் வழிபாட்டு நிலைகள், கலை வடிவங்களில் மதுரை வீரன் கதை உள்ளிட்ட பல அரிய தகவல்களை களப்பணி மூலம் சேகரித்து ஆய்வு செய்து நூலாக்கியுள்ளார்.

ஏலாதி இலக்கிய விருதுபெற்ற எம்.ஜி.சுரேஷ் மற்றும் முனைவர். கண்ணா கருப்பையா உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இந்நிகழ்வில் தலித் மயமாக்கல் நூலாசிரியர். சி. சொக்கலிங்கம், உவர்மண் கவிதை நூலாசிரியர் நட.சிவகுமார், தேவதைகளின் சொந்தக் குழந்தைகள் கதை நூலாசிரியர் முஜிபுர் ரகுமான், மைலாஞ்சி கவிதை நூலாசிரியர் ஹெச்.ஜி.ரசூல், சுவர் முழுக்க எறும்புகள் பரபரக்கின்றன கவிதை நூலாசிரியர் ஜி.எஸ். தயாளன், கொம்பியே கவிதை நூலாசிரியர் செல்சேவிஸ் சராசரி கவிதை நூலாசிரியர் ஆர். பிரேம்குமார், புதியகாற்று மாத இதழாசிரியர் ஹாமீம் முஸ்தபா, சிலேட் இதழாசிரியர் லட்சுமி மணிவண்ணன், மீசான் கற்கள் மலையாள நாவல் மொழிபெயர்ப்பாளர் எஸ்.எம்.யூசுப், உக்கிலு கதை நூலாசிரியர் குமாரசெல்வா, தலித் சித்தாந்த தேடல் நூலாசிரியர் வி.சிவராமன், மக்களிசைப் பாடகர் ஐ.தர்மசிங் திரைத்துறை உதவி இயக்குநர் முத்துராமன் மற்றும் கவிஞர்கள், ஆன்றனி ராஜாசிங், சிபி மைக்கேல், செ. தங்ககிருஷ்ணன், எர்சாத் அகமது உள்ளிட்ட படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர்கள் கலந்து கொண்டு உரையாடல் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கடந்த ஆண்டு சிறந்த கதை நூல்களுக்கான இரு சமப் பரிசினை கதை யாளர்கள் உமாமகேஸ்வரி, ஆதவன் தீட்சண்யா பெற்றனர். அதற்கும் முந்தைய ஆண்டு சிறந்த கவிதை நூல்களுக் கான இரு சமப்பரிசுகளை வெண்ணிலா மற்றும் கரிகாலன் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: தமிழ்ப்பிரியன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com