Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
நினைவுக் குறிப்புகள் - இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்

“நீலக்கடலும்... திருப்பாற்கடலும்”

குருசாமி மயில்வாகனன்

கடந்த 14.03.06 அன்று திரைப்பட இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் தனது 78வது வயதில் மரணமடைந்து விட்டார். தமிழில் 10 படங்களும் மலையாளத்தில் 300 படங்களுக்கு மேலும் அவரது இசையமைப்பில் வெளிவந்திருக்கின்றன. தமிழ் தினசரிகள் சிறிய அளவிலேனும் கட்டம் கட்டி அவரது படத்தையும் போட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன. தமிழ் சினிமா ரசிகர்கள் இதை அவ்வளவாக கவனம் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனாலும் தமிழ் சினிமா இசை ரசிகர்கள் பலருக்கு இம்மரணச் செய்தி கவனிக்கப்பட வேண்டிய செய்தியாகவே இருந்திருக்கும்.

G.Devarajan தமிழில் இவரது முதல் படம் ‘காவல்தெய்வம். ஜெயகாந்தனின் கதையைத் தழுவி நடிகர் எஸ்.வி.சுப்பையா தயாரித்து சிவாஜி நடித்த படம். 1969ல் வந்தது. எளிமையான கிராமிய மெட்டில் “அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்” பாடல் நினைவிற்குரியது. “உம்மனசும்... எம்மனசும்”... என்று பாடும் டி.எம்.எஸ், சுசீலாவின் குரல்கள் பூர்த்தியானவை. துலாபாரம் 1969லேயே இன்னுமொரு படம். இந்த 2006ல் கிளாசிக் மேட்னியாக ஒளிபரப்பாகும்போது கூட முழுப்படமும் பார்க்கும் பெண்களின் கண்ணீரை வெளிக் கொணரும் படம். முதலில் “பூஞ்சிட்டுக் கன்னங்கள்” பாடலின் ஆரம்ப இசையும் சரி, இடையிசையும் சரி, வயலினையும் பெயர் தெரியாத மணியடிக்கும் வாத்யமும், “இழைப்பது” என்று சொல்வார்களல்லவா? அப்படித்தான் இழைத்திருக்கிறார். சுசீலா, டி.எம்.எஸ்.ஸின் தெளிவான உச்சரிப்பு. குறிப்பாக சுசீலா சொல்லுகிற அந்த, “கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்னுலகம் கண்ணில் காணும்வரை கண்ணுறங்கு கண்ணுறங்கு”- இது முடிந்ததும் அந்த புல்லாங்குழலின் இழைப்பு அதைத் தொடரும் “பூஞ்சிட்டுக் கன்னங்கள்”...

தொழிலாளியின் அவலம் சொல்லும் ஆணின் குரல், அதை உள்வாங்கி அதையும் தாண்டி நம்பிக்கை கொள்ளச் செய்து இப்போது அமைதிப்படுத்தும் பெண்ணின் குரல், இக்குரல்கள் உச்சரிக்கும் வரிகள், உருண்டு செல்லும் தாளம்... சிறந்த சேர்மானம், ஜி.டி.யின் கைவண்ணம்.

அடுத்து “காற்றினிலே... பெருங்காற்றினிலே”, ஜேசுதாசின் பிஞ்சுக் குரலில் மலையாள வாசனையோடு வரும் சோகக்காத்து. நதியின் மீது படகில் செல்லும் பயணத்தை நினைவூட்டிச் செல்லும் தாளம். பாடலின் இடையிசையில் ஏங்குகிற வயலின்களும், புல்லாங்குழல்களும், வெளிச்சம் குறைந்த கடற்கரையில் நம்மை நிறுத்துகிறது. படகோட்டியின் குரலாக ஒலிக்கும் “ஓ” கடலின் உள்ளேயே நம்மை இழுத்துச் செல்கிறது, 35 வருடங்கள் கழிந்த பிறகும் கூட.

அடுத்து, டிரம்செட்டின் தாளத்தில் ஒரு பேரணிப்பாடல். “உழைக்கும் வர்க்கம் சேரட்டும்” என்று தெளிவாக எழுதப்பட்ட பாடல். ஒரு தொழிற்சங்க ஊர்வலத்தில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமான பாடல். இன்றளவும் பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற பாடலும் கூட. இந்தப் பாடலை எழுதியது கண்ணதாசன்.

இதன் பிறகு ஜி.டி.யை. நாம் அருமையான இடத்தில் சந்திக்கிறோம். 1971ல் வந்த “அன்னை வேளாங்கன்னி”. எனக்குத் தெரிந்து, தாங்களே சொந்தமாக வேறுவேறு விதமான வரிகளாய் எழுதிப் படிக்கப்பட்ட ஒரு டியூன் இதுதான். “நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக்காவியமாம்”. இந்தப் பாடலின் கட்டமைப்பு தலைமுறை தாண்டிய ரசனையைப் பூர்த்தி செய்கிறது. பிறகு “கடலலை தாலாட்டும் வேளாங்கன்னி”, ‘கருணை மழையே மேரிமாதா”, ஜேசுதாசுடன் மாதுரி இணைந்து பாடுகின்ற அற்புதமான “வானமென்னும் வீதியிலே” - பிற தமிழ் இசையமைப்பாளர்களிடையே காண முடியாத ஸ்டைல். தாளம் உருளுவதைக் கவனிக்கவும். அடுத்து “பேராயூரணி சின்னக்கறுப்பி பெரிய மனுஷியானா!” - நாட்டுப்புற இசை வடிவங்களின் கலவையான இந்தப் பாடலுக்கு படத்தில் நடனமாடுவது கமலஹாசன்.

1973ல் ‘விஜயா’என்றொரு படம். டி.எம்.எஸ். பாடுகின்ற, “மாலைசூடவந்த மங்கை, அந்த மங்கை ரதியாளின் தங்கை, பிறகு, இரட்டைத் தாளப் பாடலான எஸ்.பி.பி.யின் குரலில் “நேற்று வேறு... இன்று வேறு... நாளை வேறு... நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு” என்கிற பாடல்.

பின்னர் 1974ல் “பருவகாலம்”. இதிலும் மாதுரியின் குரல் “வெள்ளிரதங்கள் அழகுமேகம், செல்லும் வீதி இனியகானம், பாவை நெஞ்சின் இளையராகம், பாடவந்தது பருவ காலம்” என்று இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழுக்கு மாதுரி என்கிற பெண்குரலை அறிமுகப்படுத்திய ஜி.டி. அறிமுகப்படுத்திய ஆண் குரலுக்கானவர் கமலஹாசன். படம் “அந்தரங்கம்” 1975. ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்”, கிடாரிசையைக் கேட்டுப்பாருங்கள்.

இப்போது இன்னுமொரு முக்கியமான இடத்தில் ஜி.டி.யைச் சந்திக்கிறோம் படம் “சுவாமி ஐயப்பன்” வருடம் 1975. ‘நீலக்கடலின் ஓரத்தில்’ போலவே... பாடல் வெளியானதிலிருந்து இன்றைய இளம் பாடகர்கள் வரை பாடியுள்ள பக்திப் பாடலாக இருக்கிற “ஹரிவராசனம், விஸ்வமோகனம்” பாடல். ஜேசுதாஸின் குரலில், ஜி.டி. டியூன்தான். ஜேசுதாஸின் ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே’, டி.எம்.எஸ்.ஸின் ‘சபரிமலையில் வண்ணச் சந்திரோதயம்’, பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசீலாவின் ‘அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே’ நிதானமாக ஊடுருவும் வடிவங்களில் உருவாக்கப்பட்டவை. டி.எம்.எஸ்ஸின் குழுவினரோடு ‘கண்ணில் தெரியும் காட்சியெல்லாம் கடவுள் இருக்கிறார்’என்றொரு பாடல். கடவுள் இல்லாத போதும் ஜி.டி.யின் உணர்வு பூர்வமான இசைக்கு பாடல் சாட்சியாக இருந்து வருகிறது. இருப்பினும் இன்னுமொரு கோரஸ் பாடல் “சாமிசரணம் சரணம் பொன்னய்யப்பா!” பின்னணித் தாளமாக இசைக்கப்படும் உடுக்கு இசை பாடலை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. காடுகளின் வழியே பயணிக்கும் சூழலை உடுக்கின் இசை தந்து விடுகிறது. அவர்கள் வேண்டுமானால் சபரிமலைக்குச் செல்லட்டும், அதற்காக நாம் காட்டினூடே பயணிக்கக் கூடாதா என்ன?

1976ல் ‘குமாரவிஜயம்’, ஜேசுதாஸின் “கன்னிராசி என்ராசி?” பிறகு 1983ல் வில்லியனூர் மாதா. பிறகு படங்கள் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை? இவரது இறுதிச் சடங்கை கேரள அரசு நடத்தியது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com