Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
உத்திரபிரதேசத் தேர்தல் முடிவுகள் குறித்த சில குறிப்புகள்

வெறுப்பை ஆற்றலாக மாற்றிய மாயாவதி
ஸ்டாலின் ராஜாங்கம்

அம்பேத்கர் மறைந்து 50 ஆண்டுகள் நிறைவாகும் தருணத்தில் இந்தியாவில் முதன்முதலாக தலித் இயக்கம் ஒன்று தலைமை மாநிலத்திலேயே தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்களையும், கூட்டணிகளையும் முறியடித்த மாயாவதி இவ்வெற்றியின் மூலம் பின்னாளில் ஏற்படவிருந்த அரசியல் கனவுகளையும் மாற்றியமைத்துவிட்டார். மாயாவதியின் வெற்றியைப் பற்றி ஊடகங்களும் அறிவுஜீவிகளும் பல்வேறு கணிப்புகளில் இறங்கியுள்ளனர். ஆனால் உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் தளத்திலும், இந்தியச் சமூகம் பற்றிய கருத்தியலிலும்கூட புதிய முடிவுகளை நோக்கி நகர வைத்துவிட்டன என்பதை இனி பார்க்கப் போகிறோம். பகுஜன் சமாஜ் கட்சி தலித் இயக்கம் என்பதாலேயே இத்தகைய முக்கியத்துவத்தை ஈட்டியுள்ளது.

ஒருவகையில் இவ்வெற்றி இந்தியா முழுக்கவும் தலித்துகளாலும், தலித் இயக்கங்களாலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி பரவரி வாய்ப்புள்ளது. அதேபோல ஒவ்வொரு மாநில தலித் இயக்கங்களும், தலித் அறிவுஜீவிகளும் உத்திரப் பிரதேச சூழலோடு தங்கள் சூழலை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். தேர்தல் முடிவினை தொடர்ந்து பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்கள் மும்பையில் கூடி ஆலோசனை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் தலித் மற்றும் சிறுபான்மையின கட்சிகளை உள்ளடக்கிய புதிய அணி ஒன்று மாயாவதி தலைமையில் உருவாக வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார். இவ்வாறான எண்ணங்களை நோக்கி இத்தேர்தல் முடிவுகள் இட்டுச் சென்றுள்ளன. மாயாவதியும் தேசிய அரசியல் மீதான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.

தலித், பார்ப்பனர் மற்றும் இசுலாமியர் வாக்குகளை திரட்டுவதில் மாயாவதி வெற்றி பெற்றுள்ளார். கன்சிராமின் அரசியல் வழிகாட்டுதலோடு தொடங்கிய இப்பயணத்தில் 51-வயதில் நான்காவது முறையாக முதல்வராகியிருக்கிறார். இம்முறைதான் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை எட்டியிருக்கிறார். கூட்டணி அரசியல் சிறிய கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இருக்கும் என்று கூறிய கன்சிராமின் கட்சி இப்போது சமூகங்களின் கூட்டணியைச் சாத்தியப் படுத்தியுள்ளது. மாயாவதி கவர்ச்சிகரமான பேச்சாளரோ, வசீகரமான ஆளுமையோ கொண்டவர் அல்லதான்.

பல்வேறு வகையில் தலித்தாகவே வெளிப்பட்ட அவரை இந்திய அரசியல் சூழலும், ஊடகங்களும் தீண்டப் படாதவராகவே விலக்கி வந்தன. அவைகளின் இத்தகு அணுகுமுறையே அவரை இந்திய அரசியல் தளத்தில் இன்றியமையாத சக்தியாக்கியுள்ளனன. கடந்த சில ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதைக்கூட தவிர்த்துவந்த அவன் ஓயாத உழைப்பும், அணுகுமுறையும்தான் சாதனை யாளராக்கியுள்ளன. கட்சிகளின் கூட்டணி என்பது மூலம் யாருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்திராமல் பல்வேறு சமூகத்தவர்களையும் தன் தலைமையின்கீழ் அவர் கொணர்ந்தார். இந்தியாவில் அரசியல் கூட்டணியா? சமூக கூட்டணியா? என்னும் விவாதத்தை இதன் மூலம் இத்தேர்தல் துவக்கிவைத்துள்ளது.

மாயாவதி கூட்டணி அமைத்துள்ள சமூகங்கள் சாதியைக் கைவிட்டவர்கள் என்பது இதன் பொருளல்ல. சாதிகளின் பெரும்பான்மை, சிறுபான்மை அளவு அதிகாரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை கணக்கில் கொண்டு பல்வேறு சாதிகளும் மாயாவதியின் தலைமையின் கீழ் ஒருங்கிணைந்துள்ளனர். பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் பிறசாதியினரும் சேர்ந்து 62 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களில் 24 பேர் வென்றுள்ளனர்.

93 இடங்களில் போட்டியிட்ட தலித் வேட்பாளர்கள் தனித் தொகுதிகளில் மட்டும் தவறாமல் 89 இடங்களிலும் வென்றுள்ளனர் என்பது அபாரமான சாதனை. தலித் இயக்கமொன்று தனித்தொகுதிகள் அனைத்திலும் வெல்வது அவ்வியக்கம் அம்மக்களிடம் கொண்டுள்ள ஆதரவினைக் காட்டுகிறது. இந்திய மாநிலங்களில் எங்கும் இச்சாதனை நடக்கவேயில்லை. தலித் வேட்பாளர்கள் தோற்ற பிற நான்குமே பொதுத் தொகுதிகள். பல்வேறு சாதிக்கூட்டணியோடு அமைந்த இத்தேர்தல் இது ஏன் நிகழ்ந்தது? என்பதை ஆராயும்போது மேலும் சில புதிர்கள் விடுபடக்கூடும்.

முன்பு பா.ஜ.க.வோடும் இப்போது பல்வேறு ஆதிக்க சாதியினரோடும் கூட்டணி அமைத்துள்ள மாயாவதி பார்ப்பனரல்லாத கட்சிகளால், ‘மதச்சார்பற்ற’ அறிவுஜீவிகளால் கடுமையாக வெறுக்கப்பட்டார். ஆனால் பிரதானமாக பேசப்படும் சமூகக் கூட்டணியான தலித், பிற்படுத்தப்பட்டோர் ஒங்கிணைவு என்னும் கருத்தியலோடு 1995-ல் அவர் ஏற்படுத்திய ஆட்சி உடைந்தது. அது ஏன் உடைந்தது? அதில் யார் யாருக்கு எத்தகைய பங்கிருந்தது என்பதை ஆராய்ந்து பிரச்சினையை மதிப்பிட்டவர் என்று யாரையும் சொல்லமுடியாது.

தலித்துகள் தரப்பு கடுமையாக ஏமாற்றப்பட்டனர் என்பதை சொல்லியவர் யார்? இன்று 21% தலித் வாக்குகள் அப்படியே மாயாவதிக்கு கிடைத்துள்ளன என்றால் அங்குள்ள தலித்துகள் இக் கூட்டணியை எவ்வாறு புந்து கொள்கின்றனர் என்பதை நாம் அறியலாம். பார்ப்பனர், தலித்துகள் கூட்டணி என்று இதனை பார்ப்பதைவிட, சாதியுணர்வில் பிற்படுத்தப்பட்டோர் என்னவாக இருக்கின்றனர், தலித் மக்கள் இதனை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதையே இத்தேர்தல் புலப்படுத்துகிறது. ஒரு வகையில் சமூக பெரும்பான்மையை எண்ணிக்கை பெரும்பான்மையால் கட்டுப்படுத்தும் உத்தி இது. இந்திய சனநாயகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான இக்கூறு இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

தலித் அரசியல் சூழலை பொறுத்தவரை மாயாவதியின் இந்த அணுகுமுறை தலித் இயக்கங்களுக்கு முன்னுதாரணமாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் உயர்சாதியினரை நம்பியுள்ள இப்போக்கு, வருங்காலங்களில் ஆட்சியில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் சாதகமானதாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. மாயாவதியின் இச்சமூக கூட்டணி எனும் அணுகுமுறையை தமிழகம் போன்ற மாநிலங்களில் அப்படியே பொருத்த முடியாது.

இங்கு பிற்படுத்தப்பட்டோர் தவிர்த்த சாதிகள் வெற்றியை தீர்மானிக்கத் தக்க வாக்கு வங்கிகளாக இல்லை. பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் அரசியல்ரீதியாக ஒருங்கிணைத்திருக்கிறது திராவிட இயக்கம். இங்கு வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் சாதியம் அரசியல் கருத்தியலாக வடிவம் பெற்றுள்ளது. இவ்வடிவம் ‘அரசியலற்ற பிற்படுத்தப்பட்டோர் திரட்சி’யைக் காட்டிலும் ஆபத்தானதாகும். தலித்துகளை தலைமையாக ஏற்பதில் இப்போக்கு தடையாய் நிற்கிறது.

தலித் கட்சிகளை பொறுத்தவரையில் தலித் மக்களை வாக்கு வங்கிகளாக எந்தக் கட்சியும் திரட்டிவிடவில்லை. பொதுப் பிரச்சினைகளையும், தலித் பிரச்சினைகளையும் சமவேளையில் எவ்வாறு கையெடுப்பது என்பதில் அவைகளுக்கு குழப்பமே மேலோங்கியுள்ளது. தலித் பிரச்சினைகளை தீவிரமாக முன்னெடுப்பதுதான் அம்மக்களை திரட்டிக் கொள்வதற்கான சிறந்த வழி. ஆனால் இதுவரை எட்டியுள்ள வளர்ச்சியே போதுமானது என்று அவைகள் நம்புவதே பலவீனமாகும்.

மாயாவதி தலித்துகளை முழுமையாக திரட்சியாக்கிய பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தற்போது முதல்வராக பதவியேற்ற பின்பும்கூட தனது ஆதரவுதளம் தலித் மக்களே என்பதை கூற அவர் தயங்கவில்லை. பிற சமூகக் கூட்டணி ஏற்பட்ட போதும் தலித் மக்களுக்கான கட்சி எனும் நம்பிக்கையை தக்க வைத்திருந்ததுதான் அவரது பலம். இத்தகைய நம்பிக்கையினை பல்வேறு மாநிலங்களின் தலித் அமைப்புகளும் உருவாக்குவதே அரசியல் அதிகாரம் எனும் பகுதியளவிலான மாற்றத்திற்கு இட்டுச்செல்லும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com