Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
ஆட்டத்தைக் கலைக்கும் உந்துமுகங்கள் ஹரிகிருஷ்ணனின் ‘மயில்ராவணன்’.
பா. செல்வகுமார்

மொழியைச் சிதைப்பதன் வழியாக வழக்கப் புலன் உணர்வுகளை மறுத்தும் புதிய புலன் உணர்வுகளுக்கான திறப்பை அளிப்பதும் பின் நவீன யுகத்தின், எழுத்தின் அறம். பின் நவீன எழுத்து புரிதலுக்கு அறிதலுக்கு இடர்ப்பானதாக நிகழ்ந்து கொண்டிருக்க, அதன் தேவையும் நிகழ்வும் முன் மொழியத்தக்கதாக உருமாறிக் கொண்டிருக்க, வடிவமைக்கப்பட்ட மற்றும் அதீத மெச்சலுக்காகிப் போன மொழிக் களத்தின் முன் நாட்டுப்புற - பேச்சுமொழி விளிம்பாக்கப்படுதலின் நிலையைச் சுட்டி பேச்சுமொழியை முன்னெடுப்பதில் பின் நவீனத்துவ அறத்தேவை பங்காற்ற முடியும் - நாட்டுப்புற அடையாளத்தை உருவேற்ற, அதன் இருப்பை வலுப்படுத்த.

பொதுப் பேச்சுமொழியின் பன்மையானது சவத்தன்மையும் அறிவுக் கூர்மையும் வன்முறையும் பின்வாங்கலுமாக ஒரு புறமிருக்க, இதனை வேறொரு கோணத்தில் வைத்து ஆடுவதன் மூலம் வரலாற்றின் நீள் இழையை பிரித்துப் பார்க்க, வரலாறுகள் ஆக்க, நாட்டுப்புறப் பேச்சு மொழி தன் இயல்பை இருப்பை உயிருள்ள ஒன்றாக என்றும் வைத்திருக்கிறது. நாட்டுப்புற பேச்சுமொழியை, படித்தவர்கள், தினசரிகள், ஊடகங்கள், பிரச்சாரங்கள், விளம்பரக் கொம்புகள் கரைத்து வடிவமைத்துக் கொண்டிருக்கும் சூழலில், இன்று நாட்டுப்புறத்தை அச்சாக்கத்தில் கொண்டு வந்து வால்யூம்களாக்கும் நிலை - ஒன்று தவிர்க்க முடியாதது மற்றொன்று அது அழிபடும் நிலை. இது விவாதகளத்திற்கானது.

பேச்சுமொழியை லாவகமாக சிறுகதைப் படைப்பாக்கத்துள் வெள்ளாமை பார்த்த பனுவல்கள் ஆச்சர்யத்தையும் வியப்பையும் அள்ளிக் கொண்டு போயிருக்க, வரலாறுகளை வேறொரு கட்டுமானத்திலிருந்தும் பார்க்கும்படி, வட்டார வழக்கின் வடிகட்டலில்லாமல் பதிவு செய்திருக்கும் ‘மயில்ராவணனுக்குள்’, தலித் பார்வை, அனுபவங்கள். ‘மயில் ராவணன்’ படைப்பாக்கத்துக்குரிய மறைவு வெளியாக பேணப்படுகிற அஞ்சப்படுகிற வஞ்சப்படுகிற மெச்சப்படுகிற தயாரிப்பு நிலைகளை, கொதிநிலையின் ரசத்தில் உருமாறும் படிநிலைகளை நகாசுடன் கச்சிதம் பண்ணி உள்ளுணர்வுகள் சிதறாத வண்ணம் உருவிப் போடும் மொழிச் சுழற்சியைக் கிரீடமாகக் கொள்ளாமல், நேருக்கு நேர் மண்ணையும் மண்ணைச் சார்ந்த மனிதர்களையும் அவர்களின் உயிருடல்வெளிகளையும் நிறுத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கும் சிறுகதைத் தொகுதி.

வாய்மொழி எழுத்து பதிவிற்கே தன் களத்தை ஒப்புவித்துச் செல்லும் ‘மயில்ராவணன்’, எந்த நிலையிலும், சமரசமற்ற தன் வெளியை படைப்பாளியை முன்னிறுத்திச் செல்லாது, வார்த்தைகள் பகட்டின்றி வந்து விழுந்த மேனிக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்கிறது. கிசுகிசுத்துக் கொள்ளும்படியான வரைமுறையற்ற வாழ்க்கைப் பதிவுகள் - ஆண், பெண் பாலியல் வேட்கையில் களி கொண்டு, தடுமாறி, பதறி, பற்றி, ஏறிமிதித்து, வசவுச் சொல்லில் குறி விடைத்து, குறி காட்டி வன்முறைப் பெருக்கியும் வேட்கைத் தணித்தும், எல்லா மறைமுக பேச்சுகளையும் வெளிப்படை நடவடிக்கைகளையும் இலைமறை காயற்று அழகியல் படைபத்திருப்பது தான் ஹரிகிருஷ்ணனின் தனி வெளிப்பாடு.

சுடச் சுடக் கெட்ட வார்த்தைகள் மட்டுமல்ல எல்லாமுமே அப்பட்டமானவை. நினைப்பதை பேசுவது பெரியது - எழுதுவது அதை விடப் பெரியது - உள்ளதை நிகழ்வதை அப்படியே எழுதுவது அதைவிடப் பெரியது. அதன் துண்டு காட்சிகளில் உள்ள சுழிவோடு நின்றுவிட அடையாளப்படுத்திக் கொண்டு நிற்பது இங்கு கலையாகிறது. அழகியலாகிறது. அரசியலை இதன் பின்னால் வரித்துக் கொள்கிறது. இது ஹரிகிருஷ்ணனின் எழுத்தின் கூடுதல் கவனம். எனவே, இவை உளவியல் பூர்வமான அணுகலுக்கு, சாதியம் சார்ந்த கட்டமைப்புகளை கட்டவிழ்ப்பதற்கு, ஒழுங்குபடுத்தப்பட்ட பாலியலின் மீது நம்பிக்கையற்ற தருணங்கள் நிகழக்கூடிய மறைவெளிகளை ஊடுறுவிச் செல்லும் சாமர்த்தியத்தை உரசிப் பார்ப்பதற்கு இடம் தருகிறது.

சாதிக்கட்டுமானத்தில் மேல்நிலையாக்கங்கள், கீழ்ப்படுத்திய நிலைகளின் உடல்களை எவ்வாறெல்லாம் தங்களது ஒவ்வொரு நிகழ்வின் மூலமாகவும் காயடித்து வைத்திருக்கிறது என்பதை இனம் காண்பதற்கு, வரதப்ப கவுண்டரின், எச்சரிக்கையில்லாத இயல்பான பேச்சு, சாதியத்தை தூக்கிக் கொண்டு அலைகிறது. ‘சக்கிலிப்பசங்க’ ‘பரதேசிக் கண்டார ஓலியூட்டுதுங்க’ ‘திருட்டுத் தேவடியாப்பசங்க’ ‘ஏண்டா சக்கிலி உனக்கு எவ்ள நீரேத்தமிருந்தா’ ‘அந்தச் சாதி நாயிங்களுக்கு கெட்டக்கேடு’ ஆத்துத் தண்ணி கேட்குதா’. ஆனால் கவுண்டச்சியின் கதை வேறாகயிருக்கிறது. நாட்டுப்புற பேச்சு மொழியிலும் மனித மொழியை - சாதியழிந்த வெளியை கவுண்டச்சி செய்கிறாள். ‘சோகியோட மூட்டு சலாம் பையன கீழத்தள்ளி, மேலக்குந்தி...’ இங்கு எழும்பும் கேள்விகள் இன்னும் கேட்கப்படவில்லை.

கூத்து குடும்பத்தின் நோப்பாடுகள், நாடக மேடையிலிருந்து நழுவி அவர்களின் உலகில் விரிகிறது. இயல்பாய் விரியும் அவர்களின் வாழ்க்கை இழைகள், ரணத்தை ஏற்றுக் கொள்வதும் உடல் வலிகள் அடங்கி ஒடுங்குவதுமாக உள் உலகை நமக்குள் கிழித்து இறக்குகிறது. மாயத்துடன், செய்வினை தந்திர உருமாற்றங்களுடன் முடிகிற கதை, விடையற்ற வெளியில்... கதைத் தயாரிப்புக்கான சமவெளியினை உடைத்து விட்டுச் செல்கிறது - செல்லப்பனினு, குமாரில, வாத்தியாரில, சுப்ரமணியத்தில் என ஏறி இறங்கிச் செல்லும் உணர்வு உடல் வலி வெளி சுப்ரமணியத்தின் மனைவியான பூவாயிப்பிள்ளையிடம் கடைசி நான்கு வரிகளில் ஊடுறுவி, வெளியேறத் தெரிந்தால் வெளியேறுமாறு பணித்து விடுகின்றன.

விலங்குகளின் பாலியல் திணவு, மனிதர்களின் மீது கவிந்து எழுப்பும் ரசவுணர்ச்சி நகைச்சுவை நிற்கமாட்டாமல் துவங்க, பால்வெளியில் பாலியல் கதைகளே, நாட்டுப்புற மரபில் உள்ளதைச் சொல்லும் குடுகுடுப்பையைப் போல சொல்லி, அவிழாமல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. வதைந்து போன நரை காலத்திலும் வதையை இழுக்கும் கிழவிக்கு, படும்பாட்டை கிழவன் சொல்லுவது, அதே எழுத்தின் மீதிருந்து.

தானே தன்னை மூடி வைத்துக் கொண்ட முகங்களிலிருந்து அள்ள அள்ளக் குறையாமல் ஒவ்வொரு முகத்திலிருந்தும் பல முகங்களை எடுக்கும் ‘ஊடுவாயி’ கதையில், முதலும் இறுதியுமாய் தொடர்ந்து செல்லும் ‘உடல்’ வன்முறை ‘பாலியல்’. காட்சிப்பதிவுகள் இக்கதைக்கு கூடுதல் அழகூட்டுகையில், பிடிமானங்கொண்டு கதை நிற்பது, வன்முறையில் அழிக்கும் காமமும் காமம் சார்ந்த காலங்களையும் கொண்டு.

அர்த்தப்படுத்தல் தலைப்பாகிவிடுகையில் ‘கிங்கிணிக்கு கிங்கிணியுங் கெட்டு’, அதன் மேல் தகைந்து செல்லும் கதைசொல்லல், எவ்விடத்திலும் பிசகடையாத நேர்த்தியுடன் பாத்திரத்தின் முற்றான விளிம்புகளை சின்ன சின்ன கடைசல்களாகச் சேர்த்து நிறைவடைய, சிரிப்பதும் - இயலாமையை உணர்வதும், விதியின் மீது மனதின் ஓய்வடையாத பெண்டுலம் அசையத் துவங்குகிறது. தங்கவேலுப் பையனுக்கு எந்தவித சமாதானத்தையும் சொல்ல முடியாது, அவனும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதுடன் நகரும் வாழ்க்கையோட்டத்தை வேறெப்படியும் வரிக்க முடியாமல் கிராமப்புற வாழ்க்கை வைத்திருக்கும் நைச்சியங்கள் எல்லோருக்குமானதுதான்.

நகைச்சுவை தொலைத்த சூழ்நிலையில், வாய்ப்பாட்டு நகைச்சுவையை நமக்குள் வடிவமைக்கும் ஊடகத்திற்கு வெளியே, ‘அப்புறம்’ என்று தடுமாறி பேச வழியில்லாத நகரிய உரையாடலின் தோல்விக்கு வெளியே, ‘தங்காச்சி’ வலிக்க வலிக்க சிரிப்பை மூட்டுகிறது. அனுபவக்களம் அதன் வலிமையை கூடுதலாக்குகிறது. தொகுதி முழுக்க பளிச்சிடுகிற நகைச்சுவை, கங்காணியில் உச்சாணிக் கொம்பை பற்றி விடுகிறது. அதற்குள் உண்டான வலியும் தன்னை மறந்து சிரிப்பதுதான், எழுத்தின் பூச்சற்றதில் தன்னை தான் பதிவு செய்யும் அனுபவ மொழி கூட.
‘குடிநாசுவன்’ - கதையில், “இந்த அங்கமுத்து நாசுவனும், செங்கோட வண்ணானும், கொட்டுக் கொட்ற நடேச தோட்டியும்’ செருப்பு தெக்கிற செம மூஞ்சியூட்டாரும் அன்னிக்குப் பொழச்ச பொழப்ப இன்னிக்கும் அச்சுக் கொலயாம அப்பிடியேதான் பொழைக்கறாங்க” என்பதுடன் இக்கட்டுரை இம்மட்டில் நிறைவு கொள்கிறது.


‘மயில் ராவணன்’ - சிறுகதைத் தொகுதி, ஹரிகிருஷ்ணன், இறக்கை வெளியீடு, இறக்கை, வாய்ப்பாடி அஞ்சல், விஜயமங்கலம் வழி, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம் - 638 056. விலை. ரூ.50.00.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com