Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
குருவாயூர் சத்தியாகிரகம் - உண்மையில் நடந்தது என்ன?
ஏ.எம். சாலன்

நம் இந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்திற்கு அடுத்தபடியாக மிகப் பிரபலமாகப் பேசப்படும் போராட்டங்கள் இரண்டு. ஒன்று, வைக்கம் சத்தியாக்கிரகம். இன்னொன்று குருவாயூர் சத்தியாக்கிரகம். இந்த இரண்டுமே நம் நாட்டிலுள்ள தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களாகும். வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பொறுத்தமட்டில் கேரளத்தில் நடைபெற்றிருந்தாலும்கூட தமிழக வரலாற்றில் அது இன்றும் பிரம்மாதமாகப் பேசப்படுவதைக் கேட்கமுடியும். அதன் நாயகனாக தந்தை பெரியார் சித்தரிக்கப்படுவதையும் காணலாம். அது, எழுதும்போதும் சரி, பேசும்போதும் சரி. இனி, இது நடைபெற்ற வேளையில் தந்தை பெரியார் காங்கிரஸ் இயக்கத்தைச்சார்ந்தவர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பின்னர்தான் திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்து திராவிடக் கழகத்தினரின் தலைவராகிறார். தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரின் கட்சி ஆட்சி அமைத்த பிறகுதான் பெரியாரும், அவரது கொள்கையும் பிரபலப்படுத்தப்பட்டன. ஆக, தந்தை பெரியார் ஒரு சமூகப் போராளி என்பதற்காகப் போற்றப்படவில்லை; தமிழ் இனத்திற்காகப் போராடிய போராளி என்பதற்காகவே போற்றப்பட்டார். இன்றும் இப்படித்தான் அடையாளப்படுத்தப்படுகிறார், பெரியார். ஒருவகையில் சொல்வதாக இருந்தால் இது ஒரு அரசியல் நோக்கமே!

இனி, குருவாயூர் சத்தியாக்கிரகத்தை எடுத்துக்கொண்டோமானால், இதற்குத் தொடக்கம் குறித்தது முற்போக்குச் சிந்தனைப் படைத்த காங்கிரஸ்காரர்கள்தான். ஆனால் அது, அடுத்தக்கட்டத்தை நோக்கி ஏன் நகரவில்லை என்பது இன்னும் கேள்விக்குறியாகவேதான் நம்முன் நிற்கிறது. தாழ்த்தப்பட்ட குலத்தின் முன்னேற்றத்தை காங்கிரஸ் விரும்பவில்லையா? அல்லது அது ஒரு கண்துடைப்பு சமாச்சாரமா? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. என்றாலும் இந்தவேளையில் உண்மையில் நடந்தது என்ன? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வேண்டி போராடியவர்கள் யார் யார்? இந்த சத்தியாக்கிரகத்தில் காந்திஜி வகித்த பங்கு என்ன? போன்றவைகளைப் பற்றியெல்லாம் கேரளத்திலுள்ள வரலாற்று ஏடுகள் நமக்கு சில புதிய தகவல்களைத் தருகிறது.

1931, மேமாதம் 3,4, தேதிகளில் வடகரையில் கூடிய கேரள மாநில காங்கிரஸ் இரண்டு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

1. 1925ல் காந்திஜி தொடங்கிவைத்த அகில இந்திய கதர் இயக்கத்தின் ஒரு கிளையைக் கேரளத்திலும் தோற்றுவிக்க வேண்டும். இதற்குரிய பொறுப்பை சி.ஹெச். கோவிந்தன் நம்பியார், (செகரெட்டரி), சியாம் ஜி சுந்தர்லால், எம். கார்த்தியாயினி அம்மா, கே.டி.குஞ்ஞ]ராமன் நம்பியார், கே.கேளப்பன் போன்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில் 1935 ஆம் ஆண்டில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. அதுதான் இன்றைய சர்வோதய சங்கம்!

2. எல்லா இந்துக்களையும் சாதி பேதமின்றி கோவிலுக்குள் தரிசனம் பண்ண அனுமதிக்க வேண்டி ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இந்தத் தீர்மானம், திரு.கே.கேளப்பன் அவர்கள் கேரள மாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவேளையில் எடுக்கப்பட்டதாகும். இந்தத் தீர்மானங்கள் காங்கிரஸ் கமிட்டியில் கரகோஷத்தோடு அங்கீகரிக்கப்பட்டது.

காங்கிரஸ் கமிட்டியில் எடுத்த இந்த தீர்மானத்தை கேரளம் முழுக்க பிரச்சாரம் செய்வதற்காக வேண்டி, கேளப்பன் தலைமையில் காங்கிரஸ் இயக்கம் தன் வேலையைத் தொடங்கியது. இப்படித்தான், அமைப்பாளர்கள் குருவாயூருக்கு வந்து சேர்ந்தார்கள்.

குருவாயூர் கோவிலின் கிழக்கு வாசலோரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசுவதற்காக வேண்டி, மேற்கு வாசல் வழியாக வந்து கொண்டிருந்த போது அங்கே நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர்கள் மேற்குவாசல் வழியே “தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது” என, அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும் அவர்கள் “இந்தக் கும்பலில் தீண்டத்தகாத சாதியினர் இருகிறார்களா?” எனவும் கேட்டார்கள்.

“இவர்களெல்லாம் புதியவர்கள். அதனால் எனக்கு இவர்களில் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்களா எனத் தெரியாது” என்றார், கேளப்பன். இதைக் கேட்டதற்குப் பிறகுதான் போலீஸ்காரர்கள் அவர்களை உள்ளே கடத்திவிட்டார்கள்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய கேளப்பன் அவர்கள் சாதி இந்துக்களின் சாதி வெறியைப் பற்றி கீழ்க்கண்டவாறு விமர்சித்தார்.

“கடவுள் பக்தியுள்ள புலையர்குலத்தைச்சேர்ந்த ஒருவரை கோயிலுக்குள் நுழைந்து தெய்வத்தைத் தொழுவதற்கு சாதி இந்துக்கள் அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். பகவானை இவர்கள், ஒரு பால்பாயாசப் பிரியனான ஜன்மியாகவும் சாதாரண மக்களின் துரோகியுமாக ஆக்கிவிட்டார்கள்.....

இந்த அநியாயங்கள் நிறுத்தப்பட வேண்டும். கோவில்களுக்குள்ளே சாப்பாட்டு ராமன்களுக்கு அல்ல, அனுமதி வழங்க வேண்டியது. மாறாக பக்தியுள்ளவர்களுக்கே அனுமதி வழங்க வேண்டும்.” என இதற்குப் பின்னர் மும்பாயில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் திரு.கேளப்பன், கேரளத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயத்திற்குள் சென்று தொழுவதற்குரிய உரிமை சம்பந்தமாக கேரள காங்கிரஸ் கமிட்டி எடுத்த தீர்மானத்தைப் பற்றி விளக்கினார். அதோடு, அந்தப் போராட்டத்தை நடத்துவதற்குரிய காந்திஜியின் சம்மதத்தினையும் அனுக்கிரகத்தையும் பெற்றார்.

மும்பாயிலிருந்து கேரளத்திற்கு திரும்பிவந்த கேளப்பன் அவர்கள், 1931 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று மீண்டும் கேரளக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டினார். குருவாயூர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை (இக்காலக்கட்டத்தில் பறையர், புலையர், மன்னான், சாம்பவர், தீயர் போல் ஈழவர்களும்கூட கேரளத்தில் கோவிலுக்குள் நுழைய முடியாது) நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கேளப்பன் அவர்கள் தன்னுடைய அபிப்பிராயத்தை கமிட்டியின் முன்னால் கீழ்க்கண்டவாறு முன்வைத்தார்.

அதாவது “திருவிதாங்கூரிலும் கொச்சியிலும் உள்ள கோயில்கள் அரசாங்கத்தின்கீழ் இயங்கிக் கொண்டிருப்பதால் அங்கேயுள்ள கோவில்கள் முன்னால் சத்தியாக்கிரகம் நடத்துவது என்பது அரசாங்கத்திற்கு எதிராக நடத்தும் போராட்டமாகிவிடும். ஆனால் நாம், நடத்த வேண்டியது அரசாங்கத்திற்கு எதிராக அல்ல; சாதி இந்துக்களுக்கு எதிராக.

இந்தக் காரியத்தைப்பற்றி இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியிருக்கிறது. என்றாலும் கூட, மலபாரிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகத்தைத் தொடங்க வேண்டும். நம் காந்திஜிக்கும் இதே கருத்துதான்” என்றார் திரு.கேளப்பன்.

திரு. கேளப்பன் அவர்களுடைய அபிப்பிராயத்தின் அடிப்படையில் 1931 நவம்பர் 1ஆம் தேதி குருவாயூர் கோயில் நடைக்கு முன்னால் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது.” என்கிறார், “கேளப்பன்” வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் எம்.பி. மன்தன் அவர்கள்.

இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு, இந்த சத்தியாக்கிரகம் நடத்துவதற்குரிய காரணங்களைப் பற்றி மக்களுக்கு இடையே பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. மட்டுமின்றி, முன்னணி ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கவும், கூடவே பணவசூலும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திரு.கேளப்பன் அவர்களுடைய தலைமையில் மலபாரில், பொன்னானி தாலுக்கில் பல முக்கியக் கேந்திரங்கள்போக, தெற்கே கன்னியாகுமாரி வரையிலும், வடக்கே காஸர்கோடு வரையிலும் குருவாயூர் சத்தியாக்கிரகம்பற்றி பிரச்சாரம் நடைபெற்றது.

இந்தவேளையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் திரு.ஏ.கே.கோபாலன், மொயாரத்து சங்கரன், கே. ராமன் மேனன், கே. மாதவமேனன், மன்னத்து பத்மநாபன், கே.பி. கய்யாலக்கல், எம். கார்த்தியாயினி அம்மா, சி. குட்டன் நாயர், கமலாவதி, சி. தேவகியஅம்மா, ருக்மினி அம்மா, வி.டி. பட்டாதிரிப்பாட், கே.என். குஞ்ஞ]கிருஷ்ணன், டி. ,சுப்பிரமணியன் திருமும்பு, என்பவர்களுடைய பெயர்களை இங்கு எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் முக்கிய சொற்பொழிவாளர் சகா.ஏ.கே. கோபாலன் ஆவார். ஒருபுறம் இந்த சத்தியாக்கிரகம் நடைபெறுவதற்கு முன்பே நிதி வந்து குவிந்து கொண்டிருந்தது. மறுபுறம், இதில் பங்கெடுப்பதற்காக வேண்டி இளைஞர்கள் “திமுதிமு” வென வர ஆரம்பித்தார்கள். திரு. கேளப்பன் அவர்களுடைய இந்த சத்தியாக்கிரகத்திற்கு பச்சைக் கொடி காட்டும்விதத்தில் திரு.வல்லபபாய் பட்டேலிடமிருந்து வாழ்த்துக்கள் வந்தது. இதற்கு எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று திருமதி. கஸ்தூர்பாய் காந்தியிடமிருந்து கேரளப் பெண்களுக்கு ஒரு சேதி வேறு வந்தது.

அக்டோபர் 21 ஆம் தேதி கண்ணனூரிலிருந்து குருவாயூருக்குப் புறப்படும் பாதயாத்திரைக்கு வடக்கு மலபாரிலுள்ள பிரபல நம்பூதிரி குலங்களில் ஒன்றான, தாழக்காட்டுக் குடும்பத்தை சேர்ந்த டி.சுப்பிரமணியன் திருமுன்பு தலைமை ஏற்று நடத்த, யாத்திரைக்கு சகா.ஏ.கே. கோபாலன் கேப்டனாக இருந்தார்.

நவம்பர் ஒன்றாம் தேதியன்று, காலையில் பல தாழ்த்தப்பட்ட குலத்தவர்கள் (இன்று மேல் சாதியெனக் காட்டிக் கொள்ளும் பல சாதியினர் அன்று கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகவே கருதப்பட்டனர்.) குளித்து முடித்து, புத்தாடை உடுத்திக்கொண்டு குருவாயூர் கோவிலுக்குள் நுழைய ஆரம்பித்தனர். “இது வரைதான் தலித்துக்கள் வரலாம்!” என, தலித் மக்களுக்காக வரையறுக்கப்பட்டிருந்த எல்லையைக்கடந்ததும் அதைக்கண்டு ஓடிவந்த கோவில் அதிகாரிகள் அவர்களைப் போகவிடாமல் தடுத்தனர். அவர்கள் தடுக்கவே, சத்தியாக்கிரகிகள் அந்த இடத்திலேயே நின்று விட்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பெய்யும் மழையினையும் பொருட்படுத்தாமல் சத்தியாக்கிரகிகள் தங்கள் சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்தனர். இப்படி, சத்தியாக்கிரகம் குருவாயூர் கோவிலின் மூன்று வாசல்களின் முன்னாலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லா நாட்களிலும் மாலை நேரங்களில் சத்தியாக்கிரகத்தின் நோக்கத்தை விளக்கி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டன. இதில் நாம் மேலேகண்ட தலைவர்கள் பலர் தினமும் உரையாற்றினார்கள்.

இந்தவேளையில் தலித் மக்களின் கோவில் நுழைவுக்கு எதிராக மேல்சாதியைச் சேர்ந்த மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. அதோடு நின்றுவிடவில்லை அவர்கள். அந்தப்போராட்டம் நடைபெறாமல் இருக்க, பல தொல்லைகளும் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்தார்கள். இப்போராட்டத்திற்கு எதிராக, ஆதிக்கச் சாதியினரும் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அவர்களின் அணியில் முக்கிய சொற்பொழிவாளராக பாலியத் குஞ்ஞ]ண்ணி அச்சன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் வழக்கம்போல, சத்தியாக்கிரகப்பந்தலில் பிரார்த்தனையும் நூல்நூற்பும், கீதோபதேசமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல தீண்டாமைக்கொதிராக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள். சத்தியாக்கிரகத்தை நடைபெறவிடாமல் தடுப்பதற்காகவேண்டி கோயில் அதிகாரிகள் பிரயோகித்த தந்திரங்களெல்லாம் தோல்வியில் முடிவடைந்தது. மட்டுமல்ல; அதன் விளைவால் மக்களுக்கு மேலும் சத்தியாக்கிரகிகளின்மீது அனுதாபம்தான் ஏற்பட்டதே தவிர ஆத்திரம் ஏற்படவில்லை. இதனால் கோபம் மூண்ட ஆதிக்கச் சாதியினரிலிருந்து நூற்றுக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து சத்தியாக்கிரகிகளின் கேப்டனாகிய தோழர் ஏ.கே. கோபாலனை வந்து முரட்டுத்தனமாகத் தாக்கினார்கள். ஏ.கே.ஜி. அடிபட்டு மயங்கி விழவே, தலையில் போட்டு மிதிமிதியென மிதித்ததுடன், கழுத்தைப் பிடித்து நெரித்தார்களாம். “கேரளப்பன்” வரலாறு மன்மதன், பக்கம், 62 ) இதில் ஏ.கே.ஜி.யினுடைய விலாஎலும்புகளும், இடுப்புக்குக் கீழேயுள்ள பாகமும் படுகாயமடைந்தன. கூட்டத்தினூடே கரிமருந்து நிரப்பப்பட்ட பட்டாசு வைத்துக் கொளுத்தப்பட்டது. அதிலும் பலர் காயமடைந்தனராம். இவ்வளவு தொல்லைகளுக்கு இடையிலும் கூட, சத்தியாக்கிரகிகள், அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு தங்களுடைய கர்மங்களைத் தொடர்ந்தார்களாம்! ஆதிக்கச் சாதியினரின் சரீரத்தில்கூட சத்தியாக்கிரகிகள் தொடவில்லையாம்.

இந்தவேளையில் இவற்றைக் கண்டுகொண்டிருந்த பொதுமக்கள், சத்தியாக்கிரகிகளைக் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்துவதற்காகவேண்டி கோவில் அதிகாரிகளால் அமைக்கப்பட்டிருந்த முள்வேலிகளை வந்து அடித்து நொறுக்கியெறிந்தார்கள். தலித் மக்களின் கோவில் நுழைவுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதையறிந்ததும், அதிகாரிகள் கோவிலின் கதவுகளை இழுத்து மூடிவிட்டுப்போய்விட்டார்கள்.

இதே தருணத்தில் (1932 ஜனவரி 4ல்) வட்டமேசை மகாநாடு முடிந்து, இந்தியாவுக்குத்திரும்பிய காந்திஜி கைது செய்யப்பட்டு யர்வதா சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடெங்கும் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காங்கிரசோடு தொடர்புள்ள ஸ்தாபனங்கள் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்தவேளையில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதித்தே தீரவேண்டும் என்ற லட்சியத்தில் சத்தியாக்கிரகிகள் விடாப்பிடியாக இருந்தார்கள்.

ஒரு முக்கியமான விஷயத்தை நாம் இந்த வேளையில் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்தப்போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லை( ) சோசலிசத்திற்கு ஆதரவு உள்ள காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டு ஆதரவாளர்களும்தான் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். காந்திஜியும் இந்தப் போராட்டத்தை கைவிடக்கூடாது என்றுதான் உபதேசித்திருந்தார். ஆனால், இந்தப் போராட்டத்தின் தலைமையை காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பிலிருந்து பிரித்தெடுத்து ஒரு பிரத்தியேகக் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் முக்கியப் பொறுப்பு திரு.கேளப்பன் அவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வேளையில் சாதி இந்துக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருந்த கள்ளிக்கோட்டை சாமுதிரிப்பாட்டிற்கு கோவில் நுழைவு சம்பந்தமாக ஒரு மனுவும் கொடுக்கப்பட்டது. இதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஹரிஜனங்களுக்கு தேர்தலில் போட்டியிட தனித் தொகுதியை வழங்க, பிரிட்டிஷ் அரசு அனுமதித்தது.

காந்திஜி இதற்கு எதிராக தன் உபவாசத்தைத் தொடங்கினார். இதைப் பத்திரிகை மூலமாக கேளப்பன் அவர்கள் தெரிந்துகொள்ளவே, அவர் “தான் சாகும்வரையில் இந்த உண்ணாவிரதம் தொடரும்” என அறிவிக்கிறார். திரு.கேளப்பன் அவர்கள் எடுத்த இந்த தீர்மானம், கட்சியிலுள்ள பலருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. காங்கிரஸ் தலைவர்களில் பலர், “இந்த வேளையில் இது கூடாது” என, உபதேசித்தார்கள். திரு.கேளப்பன் அவர்கள், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் எடுத்த தீர்மானத்தில் உறுதியாக நின்றார்.

தன்னுடைய நடவடிக்கைளைப் பற்றி திரு. கேளப்பன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார். “இந்தப் போராட்டத்தின் விளைவாக நாட்டின் பல இடங்களில் உள்ள பிரபல கோவில்களின் வாசல்கள் திறக்கப்பட்டுவிட்டது. அதுமாதிரி குருவாயூர் கோவிலுக்குள்ளும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரவேசிப்பதற்கு அனுமதியளித்தே தீரவேண்டும் என்ற போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட பத்துமாதங்கள் கடந்துவிட்டன, என்றபோதிலும் கூட வெற்றி, ரொம்ப தூரத்திற்கு அப்பால்தான் இருந்து கொண்டிருக்கிறது. காந்திஜியினுடைய ஆதரவு உள்ள இந்தத் தருணத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கோவிலுக்குள் பிரவேசிக்கும் உரிமையைப் பெறவில்லையெனில் இனி, அது ஒருபோதும் சாத்தியமாகும் என்று தோன்றவில்லை.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நாம் அளித்து வந்த கொடுமையினை எண்ணிப்பார்க்கும்போது இந்த அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்க நேர்ந்தாலும்சரி; அது நாம் இது வரையில் அவர்களுக்கு அளித்துவந்த துன்பங்களுக்கு நிகராகாது. அடிமைப்படுத்துபவர்களும், அடிமைகளும் மனிதராக மாறுவதற்கு இந்தத் தீண்டாமைக் கொடுமை கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டி இருக்கிறது.

நான் செய்வது என்னுடைய கடமை என்றும், அதை உணர்ந்துதான் நான் போராடுகிறேன் என்றும் எனக்கு பூரண நம்பிக்கை இருப்பதால்தான், நான் தலைவர்களோடும், எனது நண்பர்களோடும்,. பொதுமக்களோடும் பிரார்த்தனை செய்துகொண்டு, நான் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறேன்” என (மேலே கண்ட அதே புத்தகம், பக்கம் 63-64) உபவாசம் தொடங்குவதற்கு முதல் நாள் குருவாயூர் ஆலமரத்திற்கு அடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரு. கேளப்பன் அவர்கள் அறிவித்த அறிவிப்பு கேரள மக்களுடைய மனச்சாட்சியைப் பிடித்து குலுக்கிவிட்டது என்றே சொல்லலாம்.!

இதோ, அந்த அறிவிப்பு.

“நம் நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவேண்டி உயிரை தியாகம் பண்ணமுடியும் எனில், அந்த நேரம் வந்துவிட்டது என, எண்ணி நான் நிம்மதியடைகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளுக்காக வேண்டி, அதனை செத்தால்தான் சாதிக்க முடியும் என்றால், நான் அதைப் பெருமையோடு வரவேற்கிறேன்”

திரு. கேளப்பன் அவர்கள் தெரிவித்த இந்த வார்த்தைகளை அங்கே கூடிநின்ற மக்கள் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆக, செப்டம்பர் 20 ஆம் தேதி காந்திஜி தன்னுடைய உபவாசத்தைத் தொடங்க, அதற்கு மறுநாள் “கேரள காந்தி” என அழைக்கப்பட்ட திரு.கேளப்பன் அவர்கள் குருவாயூர் கோவிலின் கிழக்கு வாசலில் தன் உபவாசத்தை ஆரம்பித்தார்.

அன்று காலை ஆறரை மணி அளவில் “ஒன்றிலே வெற்றி அல்லது மரணம்” என்ற உறுதி மொழியோடு கேளப்பன் சென்றதை அங்கே கூடி நின்ற சனங்கள் சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெயில் “மழை” பனி முதலியவைகளைப் பொருட்படுத்தாமல் கோவிலின் கிழக்கு நடையில் திரு.கேளப்பன் உண்ணாவிரதம் இருந்தார். கிட்டத்தட்ட இந்த உண்ணாவிரதம் பத்து நாட்கள் வரையிலும் தொடர்ந்தது, என்றபோதிலும்கூட கோவில் அதிகாரிகள் அசையவே இல்லை. உண்ணாவிரதம் மிக மோசமானக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

இந்தச் சேதி, நாடெங்கும் காட்டுத்தீபோல் பரவிற்று. இந்த உண்ணாவிரதத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைப்பற்றி ஆங்காங்கே விவாதம் கிளம்பிற்று. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குருவாயூர் கோவிலுக்குள் நுழைய அனுமதியளித்து, உடனே உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சாமுதிரிப்பாட்டிற்கு ஏராளமான தந்திகள் வந்து கொண்டிருந்தன. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் (இவர்களில் பெரும்பாலானோர் ஆதிக்கச் சாதியினர்) ஒன்று கூடி., ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள்ளே நுழைய குருவாயூர் கோவிலின் வாசலைத் திறந்துகொடுக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இந்தத் தருணத்தில் இன்னொரு முக்கியமான சம்பவமும் நடந்தது.

திரு.வி.டி பட்டாதிரிப்பாட், கே.ஏ. தாமோதரமேனன் உட்பட கிட்டத்தட்ட 25 பேர்கள் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொழுவதற்காக வேண்டி குருவாயூர் கோவிலின் கதவைத் திறந்து கொடுக்க வேண்டும் என, கோவிலுக்குள்ளே உண்ணாவிரதத்தைக் தொடங்கினார்கள். ஆக, குருவாயூர் கோவிலுக்குள்ளே நுழைந்து, தொழுவதற்குரிய உரிமையை ஆதிக்கச் சாதியினர் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிக் கொண்டிருந்த இந்த வேளையில் காந்திஜி இதையறிந்து திரு.கேளப்பனைக் கூப்பிட்டு உபதேசம் பண்ணினார்.

அதாவது “இந்தப் போராட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொண்டு, மூன்று மாதங்கள் வரையில் காத்திருப்போம்; அதற்குப் பிறகும் ஒடுக்கப்பட்ட மக்களை குருவாயூர் கோவிலுக்குள் நுழைய விட வில்லையெனில் அப்போது இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தால் போதும்” என. இதை, கோவில் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துமாறு காந்திஜி கேட்டுக்கொண்டாராம். இதன்படி திரு.கேளப்பன் அவர்கள், அக்டோபர் 2ஆம் தேதியன்று தன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். அத்துடன் இந்தப்போராட்டம் இதோடு முடிவடையவில்லை என்றும், இது தற்காலிகமாகத்தான் நிறுத்தப்படுகிறது என்றும் திரு.கேளப்பன் மக்களுக்கு எடுத்துச்சொன்னார்.

இந்தக் கட்டத்தில் இதேமாதிரி காந்திஜியும் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதையும் இத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டி இருக்கிறது.

இதோ, அந்தக்கருத்து: “கேளப்பன் நடத்தவேண்டிய உபவாசத்திற்குரிய காலம் இன்னும் ஆகவில்லை என்று தனக்குத் தோன்றியதாலும், கட்டாயப்படுத்தி உரிமையைப் பெறுகிறோமோ என, எங்கேயோ ஒரு மூலையில் எனக்குள் தட்டுப்பட்டதாலும்தான் (அல்லது சந்தேகம் எழுந்ததால்தான்) நான் திரு.கேளப்பனை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு உபதேசித்தேன்” என்றாராம் காந்திஜி.

மாதங்கள் மூன்று வேகமாக கடந்து ஓடின. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேண்டி குருவாயூர் கோவிலின் வாசல் திறக்கப்படவே இல்லை. நம் காந்திஜி அறிவித்தபடி பின்னர் இந்தச் சத்தியாக்கிரகம் ஒருபோதும் நடைபெறவுமில்லை; மட்டுமின்றி., அவருடைய வாரிசுகளென மார்தட்டிக் கொண்டு நடக்கும் காங்கிரஸ் காரர்களாலும்கூட இந்தப் பிரச்சினை இதுநாள் வரை தொடப்படவும் இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com