Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
பின் காலனித்துவ எழுத்தும் தமிழ்க்கவிதைச் சூழலும்
முஜிபுர் ரஹ்மான்

காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த போது பொது ஜன உளவியலில் நுண் கதையாடல்களாக இருக்கின்ற காலனியாதிக்கம் பற்றிய விழிப்புணர்வும் கீழ்திசையியல் பற்றிய புதிய அணுகு முறைகளும் 1990க்கு பிந்தைய காலகட்டத்தில் பின்காலனித்துவம் என்ற கோட்பாடாக உருவாகியது. காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான பண்பாட்டு தடுப்புணர்வு மரபுரீதியில் இம்மண்ணில் அமைந்திருந்தாலும் அமெரிக்க சூழலில் கல்வியாளர்களால் முன்வைக்கப்பட்ட இக் கோட்பாடு தனது கடந்த காலத்தின் மீது மறுஉரிமை கோரப்படுவதற்கான உணர்வோடு வெளிப்பட்டது. காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளின் மனோநிலை காலனியாதிக்கத்தின் தடங்களை போற்றுவதும், சொந்த மொழி, வரலாறு பண்பாட்டிலிருந்து அந்நியமாகிற காலனிய அன்னியமயமாதலும், மேற்குலகை போல நடந்து கொள்ள விரும்புகின்ற போன்மை மனிதர்களும் பின்காலனிய உலகில் நடைபயிலுவதால் அதை பற்றிய தீவிர பிரக்ஞையூட்டலை பின்காலனித்துவம் இலக்கியத்தில் செய்ய ஆரம்பித்தது.

தேசியங்களும் பாலின செயல்பாடுகளும் காலனிய ஆதிக்கத்தை முன்னிறுத்துகிற நிலையில் காலனியாதிக்கம் நிறைந்த மொழியை பிரித்தெடுக்க வேண்டியதும் முக்கியமாகிறது. பண்பாட்டில் ஒழுக்கம், அறம், அழகியல் மதிப்புகள் பொதிந்துள்ளன. இம்மதிப்புகள் தான் மக்களின் அடையாளத்திற்கான அடித்தளமாயிருக்கிறது. மனித இனத்தில் அவர்களது தனித்தன்மையை காட்டும் உணர்வு போன்றவற்றை மொழி சுமக்கிறது. மக்களின் வரலாற்று அனுபவங்களது கூட்டு நினைவு வங்கியாக இருக்கும் பண்பாடாக மொழி இருக்கிறது. இவ்வாறு இருக்கும் ஒரு தாய்மொழியை புறக்கணித்து காலனிய மொழி சட்டகம் வழியாக, காலனிய கண்ணாடிகள் வழியாக உலகை பார்க்கும் மக்கள் திரளிலிருந்து காலனியாதிக்கத்தை விலக்க வேண்டி இருப்பதும் முக்கிய விஷயமாகும்.

பின் காலனித்துவ இலக்கியத்தில் பெண்ககளின் மீது நிலவும் ஆதிக்கத்தை காலனியத்துடன் தொடர்புபடுத்தி அணுகுவதும் அவர்களின் குரல்களை வெளிக் கொண்டு வருவதும், அடித்தள மக்கள் திரளை பேச வைப்பதும் முக்கியமாக இருக்கிறது. மேலும் பின் காலனித்துவம் பண்பாடு குறித்த விஷயத்தில் ஒற்றை பண்பாட்டிற்கும் அல்லது பண்பாட்டு ஆதிக்கத்திற்கும் எதிரான பண்பாட்டு வேற்றுமையையும், பல்பண்பாட்டியல், பன்மியப் போக்கு போன்றவற்றை முன் நிறுத்துகிறது. பூர்வ குடிகள், தாயகத்திலிருந்து வெளியேறியவர், அகதிகள், நாடுகடத்தப்பட்டவர் ஆகியோரது பண்பாட்டு அடையாள நெருக்கடிகள் பற்றியும் பண்பாட்டு வேர்கள் பற்றியும் பின்காலனித்துவ இலக்கியம் இன்று பேசிக் கொண்டிருக்கிறது. புகலிட அல்லது புலம் பெயர்ந்தோர் எழுத்துகளும் காலனிய சட்டகங்களை அல்லது தேசம், தேசியம், ஒரு பண்பாடு, குடிமகன், நீதி, சட்டம் போன்ற எண்ணற்ற தேசிய சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் எழுத்துகளும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பின் காலனித்துவ கூறுகள் கொண்ட இலக்கிய முயற்சிகள் நவீனத்துவத்திற்கு எதிரான தளத்தில் தமிழில் எண்பதுகளின் மத்தியிலேயே உருவாக ஆரம்பித்தது. பழமலய் முக்கிய திருப்பமாக இருக்கிறார். அதற்கு முன்பே மராட்டிய, கன்னட சூழலில் தலித்தியம் வேர்விட்டு பின் காலனித்துவ இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தன. முழுக்க முழுக்க பின் காலனித்துவ சிந்தனைகளை உட்செறித்துக் கொண்டு தொண்ணூறுகளின் மத்தியிலிருந்து தான் பின்காலனித்துவ இலக்கிய எழுத்துக்கள் தொடங்கின. ஹெச். ஜி. ரசூல், ஹாமிம் முஸ்தபா, என்.டி.ராஜ்குமார், செல்சேவிஸ், நட.சிவகுமார், ஜி.எஸ். தயாளன் போன்றோரை தொடர்ந்து ச. கண்ணனும் கழுவேற்றி என்கிற கவிதை தொகுப்புடன் தமிழ் மனதுடன் வினைபுரிகிறார். மராட்டிய தலித் கவிதைகளில் முக்கியத்துவம் பெற்ற பக்வான் ஷாய்யின் ததாகதர் எனும் கவிதை பின் காலனித்துவ எழுத்தின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது. அந்த ததாகதர் கவிதையைப் போல ச. கண்ணனின் கழுவேற்றி கவிதை மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அந்த கலகம் வெறும் எதிர் குரல் அல்ல. மாறாக பிரக்ஞையான காலனிய நீக்கம் தொடர்பான குரல் அது.

“எனக்குள் இருக்கும் பூர்வ மனிதன் கூவினான்: கல்லொன்றை எனது மார்பின் மேல் நிறுத்தி/என் துயரத்தின் படிமங்களை/வேதனையின் பாடல்களை செதுக்கி வடிப்பேன்” (Thathagata - Two poems by Bhagwan Sauai)

நோயல் ஜோசப் இருதயராஜ் இன்றைய காலகட்டத்தைப் பற்றி குறிப்பிடும் போது “தற்கால யுகம் மேற்கத்தியர்களுக்கு ஒன்று என்றால் கிழக்கத்தியவர்களில் ஒருவகையினரான நமக்கு வேறு. மேற்கத்தியர்களுக்கு இந்த யுகம் பின்-நவீனத்துவ யுகம். நமக்கு பின் காலனிய யுகம்.” என்பது பொருத்தமானதாகவேபடுகிறது. ஏனெனில் இந்திய வகைப்பட்ட நவீனத்துவம் மேற்கத்திய நவீனத்துவத்திலிருந்து திரிபடைந்து வேறொரு பாதையை உருவாக்கி கொண்டதன் மூலம் பின் நவீனத்துவம் மூல படிமத்துடன் இந்தியாவில் வருகைபுரியாமல் பின் காலனியமாக வருகை புரிந்தது. பின் காலனியக் கோட்பாடுகள் ஏகாதிபத்திய, காலனிய வரலாறுகள், மானுடவியல், பண்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றை மறுவாசிப்பு செய்வதோடு, காலனியத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் இலக்கியங்கள், இலக்கிய கோட்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு மேற்கத்திய அறிவுக் குவியத்தை தகர்க்க முயல்கின்றன.

பின் காலனித்துவத்தின் பன்மையியம், பல பண்பாட்டியல் போன்ற கருத்தாக்கங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் நிலவும் இந்திய சூழலுக்கு ஏற்றவைதான். பின் காலனித்துவம் முன் மொழிகிற பண்பாட்டு அடையாளங்களில் இரட்டைத் தன்மை, நிலையற்ற தன்மை, ஒட்டுத்தன்மை என்பன ஊடிழை பிரதியாக நிகழ்வதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறோம். பண்பாட்டு அடையாளங்களின் தன்மையை அலசும் போது அமெரிக்க நிக்ரோ கவிதாயினியான ரீடா டோவின் “உதைப்பது” எனும் கவிதையை பார்ப்போம்.

என் மகள் கால்களை விரித்து குனிந்து/மயிர்களற்றிருக்கும்/ தன் யோனியைப் பார்க்கிறாள்/எப்போதும் முகத்தைச் சுளிக்க வைக்கும் இந்தத் துணுக்கு/அவளுடைய வீறிடல் இல்லாமல்/அந்நியர் எவரும் தொட்டுவிட முடியாத ஒன்று. அவள்/என்னுடையதைப் பார்க்க கேட்கிறாள்/சிதறிக் கிடக்கிற பொம்மைகளுக்கு நடுவே ஒரு நொடி நேரம்/ நாங்கள் அருகருகே எதிரெதிரே/இரட்டை நட்சத்திரங்கள் போல நிற்கிறோம்/ மழித்து ஒதுங்கிய அவளுடைய முத்து மணிக்கு முன்னால்/பெருத்த எனது வரிச்சோழி/இருந்தும் அதே பளிங்குப் புழை, விரிந்த மடிப்புகள்/ மூன்று வயது அவளுக்கு, அவளுடைய அறியாமையைச்/சொல்லும் அது/உணர்வுகளின் உச்சத்தில் நாங்கள்/சிறு ஊதா மொட்டுக்களாக/அவள் வீறிட்டு பின்னால் நகர்ந்து போகிறாள்/ஒவ்வொரு மாதமும் இது எனக்கு எங்கே நேர்கிறது/ என் கால்களுக்கிடையில் அது என்ன சுருக்கம் விழுந்த கயிறு/என்று கேட்கிறாள்/ இது நல்ல இரத்தம் என்று நான் சொல்கிறேன்/ஆனால் அதுவும் சரியில்லை, முழு உண்மையில்லை/என்ன செய்ய/நான் கருப்புத் தாயாகவும் அவள் பழுப்பு குழந்தையாகவும்/நாங்கள் ஊதாவுக்குள்ளும்/ஊதா எமக்குள்ளும்/ இருப்பது எல்லாம் இதனால் தான்/என்பதை அவளுக்கு எப்படிச் சொல்ல?

ஓவியர் பால் செஸôன் சொல்லும் போது ஒரு பொருளைப் பற்றிய நமது பார்வை நிச்சயமின்மை கொண்டதாக இருக்கிறது என்பார். இந்த பார்வையை தான் கட்டவிழ்த்தலில் நிறுவுகிறார் ழாக் தெரிதா. சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த ஏர்ம்ண் ஓ. ஆட்ஹக்ஷட்ஹ யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. How are forms such as mimicry, hybridity and interstitial categories related to semiotics and phychoanalysis? அவர் சொன்ன பதிலும் ஊதாப்பூவின் ரீடாடோ சொல்கிற விஷயமும் ஒன்றுதான். All forms of identification are partial and Ambivalent என்பதே உண்மையாகும். இந்த கவிதை பின்காலனிய பிரச்சினையை அடையாளப்படுத்துகிறது. பின்காலனித்துவத்திற்கும் எதிர் நவீனத்துவத்துக்கும் இடையில் ஊடுபாவும் தன்மை நிறைய இருக்கிறது. தமிழ்சூழலில் எதிர் நவீனத்துவ தன்மையுடன் பின் காலனிய தன்மையுடன் ஒட்டுதலும் விலக்குதலுமாக பல்வேறு படைப்புகள் உருவாக்கப்பட்டன.

பாரதியில் தொடங்கிய நவீன கவிதை மரபு முடிந்து விட்டதாக நாம் நினைத்துக் கொள்ள முடியாது. எனினும் சமூக மனத்தின் அழகியல் உணர்வு மரபு ரீதியான அழகியலில் இருந்து மாறிவிட்டிருக்கிறது என்பதற்கு பின் காலனிய படைப்பிலக்கியம் சாட்சியம் அளிக்கிறது. நவீன கவிதையின் இலக்கணம் பெருமளவுக்கு மாற்றப்பட்டு இலக்கிய அணுகுமுறையில் பலமான மதிப்பீடுகள் கவிதைகளாக மாறியுள்ளது. சமூகத்தின் பண்பாடும், பொது புத்தி மனோபாவமும் கவிதையனுபவத்தை பல்வேறு மதிப்பீடுகள் வழி நிர்ணயித்துக் கொண்டு புதிய பார்வைகளை கைகொள்கிறது.

மதிப்பீடுகளின் மாற்றங்கள் மாறும் பார்வைக்கு ஏற்ப அல்லது காலமாற்றத்திற்கேற்ப பொது புத்தியை கட்டமைத்துக் கொண்டு சமூக மனத்தின் அழகியல் உணர்வுகளை, புதிய பார்வைகளாக முன்மொழிகிறது. நவீன கவிதையில் ஏற்பட்ட பாதிப்புகளும், விளைவுகளும் நவீன வரையறைகளை மீறிக் கொண்டு தத்துவ ஞான பரிச்சயங்களுடன் அல்லது மத வியாக்யானங்களின் புரிதல் வழி மதிப்பீடுகள் உருவாக்கம் அணுகுமுறைகளை மீறி காலனித்துவம் விட்டு சென்று எச்சங்களின் மீது விமர்சனாப்பூர்வமான ஒரு பார்வையை வரித்து கொண்டதன் மூலம் கவிதையின் நகர்வுகள் புதிய சாத்தியங்களை உருவாக்கி உள்ளது.

பின் காலனிய எழுத்தின் வீச்சுக்கள் தமிழ் சூழலில் பலத்த மாறுபாடுகளை புகுத்தவில்லையாதலால் நேர் ஆக்க லாரத்தின் தொடர்ச்சி முடியாமல் போய்விட்டது. அகஸ்டே சாம்டியின் இந்த சிந்தனை மனித உள்ளம் முழுமையான தனி முடிவான அறிவை சேகரித்து அடைவது சாத்தியமில்லை என்பதை அங்கீகரிக்கிறது. அதன் மூலம் பிரபஞ்சத்தின் மூலாதாரம், மூலதோற்றம், காரண நோக்கம் ஆகியவற்றை ஆராயும் எண்ணத்தை, உண்மை நிலைகளின் தொடர்காரண விளைவுகளைப் பற்றிய அறிவை அடையும எண்ணத்தை அதன் மூலம் கலைகளின் செயல்விதிகளை கண்டு பிடிக்கும் வேலையில் ஈடுபடும் எண்ணத்தை கைவிட்டு விடுகிறது.

எனவே தான் நேர் கவிதைகள் அதிகம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. நவீன கவிதையின் இறுக்கம் உடைந்து போனது மட்டுமல்லாது கவிதையின் பரப்பில் ‘பிராந்திய கூறுகள்’ புது வேக பாய்ச்சலுடன் வந்து விட்டது. கவிதையிலும் பெருவாரியாக தொலைந்து விட்டது என்று சொல்லலாம். இதுகாறும் தமிழில் கட்டமைக்கப்பட்ட ‘நயம்பட உரைத்தலே கவிதை’ எனும் விதி புதுப்பானையில் பழைய கள் என்று கூறிவிட்டது. பின் காலனிய கவிதை எழுத்தின் சறுக்கலும் இதுதான் என்பது முக்கியமாகும். மலைச்சாமியின் “போரும் தீர்க்கதரிசியும்” என்னும் கவிதையைப் பார்ப்போம்.

“அதிக கவனமும்/மிக அதிக நிதானமும் கொள்ளுங்கள்/சலனமிடும் காற்றையும்/ஓயாது நச்சரிக்கும் மழையையும்/சற்று அமைதிகொள்ளச் செய்யுங்கள்”/ ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... .../தீர்க்கதரிசியின்/ உடலைக் கொண்டு வந்திருக்கிறோம்/ ... ... ... ... ... ...
... ... ... ... ... ... .../சகாராவின் வெக்கை/தீர்க்கதரிசியின் உடலை சுமக்கிறது
... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... .../நீங்கள்/மூன்றாம் நாளுக்காகக்/காத்திருங்கள்

நவீனத்துவ மரபில் பாரம்பரிய வேர்கள் இல்லாத நவீன கவிதை நூலிலிருந்து கவிதை மரபில் உருவான கவிதையிது. பேசும் பொருளும், முன்வைக்கப்படும் செய்தியும் சாராம்சம் கொண்ட தன்மையை சுட்டிக் காட்டுகிற விதத்தில் வினைபுரிந்து இருக்கிறது. இப்படியாகதான் நவீனத்துவ மரபில் இருந்து பிறழ்வு கொண்டு பின் காலனிய மரபு உருவாக நேர்ந்தது. எனினும் தமிழ் கவிதை மரபின் பிடிகள் தளர்த்தபடாத கவிதையிது என்ற காரணத்தால் தான், பின் காலனிய எழுத்து கூட தமிழில் மாறிவிட்டிருக்கிறது என்று சொல்லிக்கொள்ளவே மலைச்சாமியின் கவிதை நமக்கு பயன்படுகிறது.

1. நயம்பட உரைத்தலும்
2. பிரக்ஞா பூர்வமாக சொல்லுவதும்
3. பொது கருத்துடன் இயைந்திருப்பதும்
4. பிராந்திய வேர்களின் பிடியில் இருப்பதும்
5. பொது மொழியிலிருந்து விலகலும்

ஆகிய ஐந்து கூறுகளை பின் காலனிய எழுத்தில் - தமிழ் சூழலில் பிரதானமாக காண முடிகிறது. இது ஒரு கலவை மனோபாவ விளைவு என்று கூட சொல்லலாம். நவீனத்துவம் கூட தமிழ் சூழலில் தமிழ் மன நவீனத்துவமாகத்தான் உருவாகிவிட்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். எனவே தமிழ் பாரம்பரிய கவிதை மரபில் இருந்து பிறழாமலே வேதிவினை புரிகிறது. இன்றைய பின் காலனிய கவிதையாக்கத்திற்கு தீனி போடும் ஹெச்.ஜி. ரசூல், இலக்குமி குமாரன் ஞானதிரவியம், பாலை நிலவன், ஹாமீம் முஸ்தபா, பா. வெங்கடேசன், நட. சிவகுமார், அன்பாதவன், விக்ரமாதித்தியன், என்.டி.ராஜ்குமார் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் தமிழ்கவிதை மரபின் தொடர்ச்சியில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கிய விஷயமாகும். பின் காலனிய சிந்தனையில் தமிழ்கவிதையின் தொடக்கப்புள்ளியில் ஒருவரான ‘உலகெல்லாம் சூரியன்’ தொகுப்பின் சொந்தக்காரரான கலாப்ரியாவின் செய் நேர்த்தியும், விலகலும் மிக முக்கியமானவை.

கொலு வைக்கும்/ வீடுகளில்/ஒரு குத்து சுண்டல்/அதிகம் கிடைக்குமென்று/தங்கையைத் தூக்க முடியாமல்/தூக்கி போகும்/அக்காக் குழந்தைகள்.

கவிமொழியின் நீள அகலங்கள் உருவாக்கிக் கொள்ளும் கவிஞனே திறம்பட கவிதையை புனைவதை காணலாம். கவிமொழி என்பது கால மாற்றங்களில் பெரிதும் மாறாமல் சாராம்ச தன்மையுடன் திகழ்வதை காணலாம். பிரமிள், நகுலன், சு.ரா. கா.ந.சு, தேவதேவன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், யூமா. வாசுகி, ரமேஷ்-பிரேம் என்று தொடரும் தமிழ் கவிஞர்களிடம் ‘கவிமொழி’ தனித்தன்மையுடன் ஒவ்வொருவருக்கும் மீறப்பட்ட மொழியாய் இருப்பதை காணலாம்.

ஆனால் கலாப்ரியாவின் கவிமொழி படிமமோ, தளமாற்றமோ, இலக்கண போலியோ இல்லாத மொழி. எளிமையானதும் கூட. எனவே பொதுத் தமிழ் மரபில் பின் காலனிய சிந்தனையை கவிமொழிக்கும் செய்நேர்த்தி கலாப்ரியாவிடம் அதிகம் இருப்பதை காணலாம். கவிமொழிக்கும் தொடர்பு மொழிக்கும் சம்பந்தம் இருக்க கூடாது தான். உணர்ச்சி, உரையாடல், செய்தி, சங்கேதம் போன்றவை சொல்லும் தொடர்பு மொழி மனோபாவத்தை செய் நேர்த்தியாக்கும் கவிமொழியில் மாறுபடுகிறது. எனவே கவிமொழி புரிய வேண்டும் என்பதில்லை. கவிதையில் என்ன மாதிரியான மனோபாவம் சொல்லப்பட்டிருக்கிறது என்று கவிமொழி வெளிப்படுத்துவதை தெரிந்து கொள்ளும் போது ஒரு கனவு நமக்கு காட்சியாக தெரிவதன் பிரமை தோன்றிவிடுகிறது.

இன்றைய பின் காலனிய சிந்தனையில் தமிழ் கவிதை மரபு மந்திரவாத கவிதையையும், தலித்திய விடுதலையையும், பெண்ணிய விடுதலையையும், அடையாள எழுச்சியையும், நாட்டார் மொழி கூறுகளையும், நாட்டார் பண்பாட்டையும் பிரதானப்படுத்தும் தன்மைகள் பொதுவாக காணமுடிகிறது. பெண் கவிஞர்களின் மொழியில் பெண் உடலை எழுதுதலும் தலித்திய கவிஞர்களின் மொழியில் கெட்ட வழக்காறுகளை பயன்படுத்துவதும் பொதுவாக காணப்பட்டாலும் உணர்ச்சியும், கோபமும் தான் இம்மொழியில் பிரதான இடம் வகிக்கிறது. கே.ஏ. குணசேகரனின் “வார்த்தை சாபம்” இதற்கு நல்ல ஒரு உதாரணமாகும்.

“... ... ... .../எங்க கலைகளை ஒதுக்கி வைச்சது யாரு/எங்க மொழியைத் தள்ளி வச்சது யாரு/ எங்க நெலத்தைப் புடுங்கினவன் யாரு/ எங்க உரிமையைப் பறிச்சவன் யாரு/எங்கள மதிக்காத ஈனப்பயக யாரு/ எடுத்த சனம்/எடுத்த மாதிரி/கொண்டாந்து வைக்கணும்/இல்லே...”

மேலும் ‘சனங்களின் கதை’ மூலம் புகழ்பெற்ற த. பழமலய் தான் பின் காலனிய எழுத்தை தமிழில் படைப்பாக மாற்றியிருக்கிறார் என்பது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். நவீனத்துவத்துக்கும் பின் காலனியத்துக்குமான வேறுபாடுகள் முற்போக்கு இலக்கியத்திற்கும் மரபு இலக்கியத்திற்குமான வேறுபாடுகளை போலவே இருக்கிறது. பின் காலனியத்துவ எழுத்து முறைகள் மரபுவழி வந்த இலக்கிய மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் நிராகரிக்கிறது. சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கும் பண்பாட்டு பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதால் முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம் அல்லது பின் காலனிய இலக்கியம் இழிசனர் இலக்கியமாகி போனதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

எழுத்தாளன் படைப்பிலே தீர்க்கமான அரசியல் பிரசாரத்தை எடுத்துரைத்தால் பிரச்சாரமாகிவிடும் என்பதும் உருவகம் முக்கியமே தவிர உள்ளடக்கம் முக்கியமல்ல என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இலக்கிய இயக்கத்திலே மொழி நடைக்கு முதன்மை அளிப்பதை பின் காலனிய எழுத்தில் பிராந்திய மொழி நடையாகி அல்லது மணிப்பிரவாள நடைக்கு / வழக்காறுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது எழுத்தாளனின் தனித்துவமிக்க மொழி வெளிப்பாடு என்பதும் முக்கியமாகும். எக்காலத்துக்கும் பொருத்தமான பொதுவான மனித பிரச்சினைகளை பேசுவதிலிருந்து காலனித்துவ பிரச்சினைகளை மையப்படுத்துகிறது பின் காலனிய எழுத்துகள் என்று அறிய முடியும்.

தலித்/பெண்ணிய வாத எழுத்து முறைகள் அரசியலுடன் இடம் பெறுவதினால் வெற்று கோஷங்கள் எழுத்தாளனை சரிபடுத்தி விடுகிறது என்பதும் அரசியலிலிருந்து விடுபடும் இலக்கிய படைப்பே அழகுணர்ச்சி நிறைவாக இருக்க முடியும் என்ற மரபு இலக்கிய விதிகளும், ஒழுங்கு முறைகளும் இங்கே கடக்கப்பட்டு விட்டன. மேலும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற ஈழத்தமிழர் உட்பட்ட எழுத்துகள் தான் பின் காலனிய எழுத்துகளுக்கு சரியான உரம் தருபவையாக உள்ளன. இலங்கையைப் பொறுத்த வரையில் 1948ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறைந்த போதும் இன பேரினவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

1958ம் ஆண்டில் முதல் இனக்கலவரம் வெடித்தது முதல் கொண்டு தமிழர்களுக்கு சமூக, பொருளாதார, பண்பாட்டு, உளவியல் நெருக்கடிகள் எழுந்தன. 1977ல் இனக்கலவரம் வெடித்து தமிழர்கள் பெருவாரியாக விரட்டியடிக்கப்பட்ட போதும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த பகுதி ஐரோப்பிய நாடுகளே ஆகும். இன்று உலகமெங்கும் புலம் பெயர்ந்தது போல காத்திரமான படைப்பாக்கங்களை உருவாக்கி விடுகின்றனர். சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், நுஃமான், கைலாசபதி போன்றவர்களின் எழுத்து முயற்சிகள் பின் காலனிய அடையாள எழுத்தின் தொகுப்புகளாகவே இருக்கின்றன. பின் காலனிய சூழலை கொண்ட இலங்கை இலக்கிய எழுத்தும் முக்கியத்துவம் பெற்றதாகவே திகழ்கிறது. அவர்கள் வந்தார்கள்/நாங்கள் தைத்துக் கொடுத்த/செருப்புகளை/அணிந்து வந்தார்கள்/ எங்கள் காலை/நட்சத்திரத்தோடு மறைத்து/ போனார்கள்”

(‘ஜோகதி கள்ளு’ என்னும் தலித் கவிதை ஏற்படுத்திய தாக்கங்கள் இன்று தமிழ் சூழலில் 1975ல் சித்தலிங்கையா எழுதிய ஹோலே - மடிகார ஹாடு என்ற முதல் கவிதை கன்னடத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் - எல்லாவற்றிலும் மேலாக உச்சஸ்தாயில் போல கொண்டிருக்கிறது. கன்னடத்தில் அரவிந்த மாளகத்தி, மனஜா, கே.பி. சித்தையா, சத்யானந்த பத்ரோதா போன்றோர்கள் சாதித்ததை விட, ‘மூகநிகேபாய் பண்பியா, கப்பு காவ்யா’ போன்ற கவிதைத் தொகுப்புகள் ஏற்படுத்திய அதிர்ச்சியை விட தலித் இலக்கியம் தமிழில் விரிவானது என்றாலும் தமிழ் சூழலில் பின் காலனிய சூழல் எழுத்துகள் அதிகம் வருவதால் தலித் வகையினம் மெல்ல பின் காலனிய எழுத்தாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும்.

இலங்கையை பொறுத்தவரையில் டானியல், டொமினிக் ஜீவா, பசுபதி, சுபத்ரன், பெனடிக்ட் டாலன், மௌனகுரு, குருநாதன் போன்றோர்கள் ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தும் இருப்பதாலும் ‘தலித்திய இலக்கியமாக’ நாம் அவர்களின் படைப்பை அடையாளப்படுத்த முடியாமல் தான் உள்ளது. பின் காலனிய எழுத்துகள் தலித், பெண்ணிய, புலம் பெயர்ந்தோர், நாட்டார் என்று விரிந்துகொண்ட இருக்குமேயொழிய தலித்தியம், பெண்ணியம் என்று சொல்வது வட்டத்துக்குள் வட்டத்தை உருவாக்கும் முயற்சியாகும். அண்மை காலங்களில் பெண்ணிய எழுத்துக்கள் அதிகம் கவனப்படுத்தப்பட்டதும் புலம் பெயர்ந்து போன பெண் கவிதாயினிகளின் எழுத்துகள் பின் காலனிய எழுத்தின் வகைப்பட்டதாகவே இருக்கிறது.

“அதன்பின்/தேமல் படர்ந்த எவனாயினும்/என்னோடு உரையாடட்டும்/அப்போது கூறுகிறேன்/பதிலை/என் மொழியில்/என் ஆதித்தாயின்/பெண் மொழியில்/அதுவரை நீ காத்திரு.”

ஆழியாளின் கனம் நிறைந்த பரிணாமம் இது. வசந்தி-ராஜா, சுமதிரூபன், ரஞ்சனி போன்றோர்கள் பாலியல் சுதந்திரம், பாலின சமத்துவம், பெண் தனித்துவம், பால்நிலை உறவுகள் எல்லாம் புகலிட சூழலில் மாறிப் போய் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்துகிறார்கள். ‘மறையா மறுபாதி’ எனும் அண்மையில் வெளிவந்த தொகுப்பு பேசப்படாத மௌனங்களை அழுத்தமாக மௌனமாக வெளிப்படுத்தும் வகையில் பின் காலனித்துவத்தின் பெரும்பாய்ச்சலை கொண்டதாக அவதானிக்க முடிகிறது.

புலம் பெயர் இலக்கியத்தில் கூட பழமை ஏக்கம் அல்லது தாய் நாட்டை பிரிந்த ஏக்கம் முக்கியமாகும். இது ஒரு வகையில் பிறந்த மண்ணின் நினைவுகளை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாகவோ அல்லது சமூக இருப்பின் அடையாளமாகவோ இருக்கிறது. சொந்த பண்பாட்டு அம்சங்களை பேணுவதும் அதை பாதுகாப்பதும் புலம் பெயர் வாழ்வின் முக்கிய அம்சங்கள். எல்லா வகையான பண்பாட்டு அடையாளங்களையும் கூறும் வகையில் எழுத்தில் அதை செய்வதும் புலம் பெயர்கிற சூழலில் தனிநபர்களுக்கிடையிலான அடையாளத்தை கடந்து ஒரு வரலாறும் பூர்வீகமும் கொண்ட குழுக்கள் கூட்டு கலாச்சாரத்தை இனம் காண்பதும் முக்கியமானதாகும். புலம் பெயர்ந்த இலக்கிய படைப்புகளில் பிரிவுத்துயர் சார்ந்த படைப்புகள் சொந்த மண்ணை களமாக கொண்டும், புகலிட சூழலை களமாக கொண்டும் இரண்டு விதமாக இயங்குகிறது. அண்மையில் ‘ஏக்கம்’ என்ற தலைப்பில் வெளிவந்த கவிதை பின்காலனித்துவம் சொல்லும் பழமையின் ஏக்கத்தை திறம்பட சுட்டிக் காட்டுகிறது.

“கோரப்பனிக்குளிரில்/உதடுகள் வெடித்து/உதிரம் கொட்ட.../உறக்கமிழந்த அந்த இரவில் / ஸ்ரேலிய பவுண்களை / எண்ணுகிற போது / உனது நினைவுகள் / என்னை ஓலமிட்டு அழவைக்கும்/ இன்னும் எனக்கு ஞாபகமிருக்கு/அப்போ எனக்கு / பன்னிரண்டு வயதிருக்கும்/நம் வீட்டு முன்றிலிலே/ நான் தடுக்கி விழுந்து / என் உதட்டின் மெல்லியதான கீறலுக்கே / நீ ஓவென்று அழுதாயே/ இங்கே எனக்காய் / அழுவதற்கு யாரிருக்கிறார் / இந்த ஐரோப்பிய நாட்டில் / அகதியாய் / அனாதையாய் / வெந்து போகிறது மனது / எப்போது என் நாட்டில் / எப்போது என் வீட்டில் / எப்போது உன் மடியில்”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com