Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
பஞ்சாபில் ஆரிய சமாஜம்
ந.முத்துமோகன்

19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மீட்டுருவாக்க அமைப்புகளில் ஆரிய சமாஜம் மிக முக்கியமானது. இந்து மத மறுமலர்ச்சி, இந்து அடிப்படைவாதம், இந்து மத வெறி, இந்து தேசியம், இந்துத்துவா என்று பல பெயர்களால் சுட்டப்படும் இயக்கப் போக்குகளுக்கு ஆரிய சமாஜம் முன்னோடியாக அமைந்திருக்கிறது. ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தவர் குஜராத்தைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதி என்றாலும் கூட அது வலுவான கொள்கை திட்டத்தையும் செயல்பாடுகளையும் வகுத்துக் கொண்டது பஞ்சாபில் தான் என்று சொல்ல வேண்டும். பஞ்சாபில் ஆரிய சமாஜம் தயானந்தரைத் தாண்டி வளர்வதற்கான சூழல்கள் அமைந்திருந்தன.

தயானந்த சரஸ்வதி

குஜராத்தை உள்ளடக்கிய அன்றைய பம்பாய் மாநிலத்தில் கத்தியவார் எனும் நகருக்கு அருகிலுள்ள தன்காரா என்ற கிராமத்தில் ஒரு வைதீக பார்ப்பன நில உடைமையாளன் குடும்பத்தில் 1824 ஆம் வருடம் தயானந்தர் பிறந்தார். மூல்சங்கர் என்பது அவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர். ஒரு சிவராத்தி இரவில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு எலி சிவனது உருவச் சிலையின் மீது ஏறி விளையாடியதைக் கண்ட மூல்சங்கர் அந்த உருவச்சிலையில் இறைவன் இல்லை என்பதைப் புந்து கொண்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. விரைவில் வீட்டை விட்டு வெளியேறிய மூல்சங்கர் காசி, மதுரா போன்ற நகரங்களில் அலைந்து திந்து தயானந்தர் ஆனார்.

தயானந்தராக மாறியபோது வேதங்களை முதல்நூலாகக் கொண்டு இந்துமதத்தை மீட்டுருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்ந்திருந்தார். சிவன், விஷ்ணு, கிருஷ்ணன் போன்ற பலவகை புராணியக் கடவுளரை மையப்படுத்திய இந்துமதத்தை நிராகரித்து உருவமில்லாத, பெயரில்லாத ஒரே இறைவனைக் குறிப்பதாக அவர் கருதிய வேதமதத்தை தயானந்தர் முன்னிலைப்படுத்தினார். வெறுமனே எலிக்கதையிலிருந்து அவரது கருத்துக்கள் தோன்றியதாகக் கொள்ள முடியாது. மாறாக, ஒரேக் கொள்கை, ஒரே புனித நூல் போன்ற விஷயங்களைக் கொண்ட கிறித்தவம், இஸ்லாம், சீக்கியம் போன்ற மதங்களின் வடிவில் இந்துமதத்தையும் உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் அவரிடம் இருந்திருக்கிறது.

காசியில் வேதமுதன்மை, உருவவழிபாடு நிராகரிப்பு ஆகியவை குறித்து பழம்பண்டிதர்களோடு அவர் ஒரு பகிரங்க விவாதம் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. பழைய பார்ப்பனர்கள் வைதீகச் சடங்குகளைத் தமது பிழைப்புக்கான வழியாக மட்டும் கொண்டிருந்தனர். ஆயின் எண்ணிலடங்காத வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் கொண்ட இந்துமதத்தைப் புதிய ஒப்பீட்டுச் சூழல்களில், படித்தவர்கள் ‘இதுதான் இந்துமதம்’ என்று முனைப்பாக எடுத்துச் சொல்லும் வகையில் (மீள்) உருவாக்கம் செய்ய வேண்டிய தேவையை ஆரிய சமாஜம் நிறைவேற்றியது.

வேதச்சிந்தனையை ஓர் அடையாளமாக, கருத்தியலாக ஆக்க வேண்டிய வேலையை ஆரிய சமாஜம் செய்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உபநிடதங்களை முன்னிறுத்தி பிரம்ம சமாஜம் அந்த வேலையைச் செய்தது. ஆயின் அது கிறித்தவத்தோடு சமரசம் செய்து கொண்டது என்ற குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியவில்லை. வேதங்களை முன்னிறுத்தி தயானந்தர் இப்போது மற்றொரு அடையாள உருவாக்கத்தில் ஈடுபட்டார். வேதமோ உபநிடதமோ, ஏதோ ஒன்றைக் கொண்டு இப்படி ஓர் ஒற்றை அடையாளம் நகர்ப்புற இந்துக்களுக்குத் தேவைப்பட்டது.

பஞ்சாபில் ஆரிய சமாஜம்

1875ல் தயானந்தர் பம்பாயில் ஆரிய சமாஜத்தின் முதல் கிளைகளை உருவாக்கினார். அது பரவத் தொடங்கியது எனினும் பெரும் ஆதரவைப் பெற முடியவில்லை. 1877-ல் தயானந்தர் பஞ்சாபில் ஆரிய சமாஜக் கிளைகளைத் தொடங்கினார். பஞ்சாபில் ஆரிய சமாஜ முயற்சிகளுக்கு சூடான வரவேற்பு இருந்தது. அன்றைய பஞ்சாபில் இந்துக்கள் முஸ்லிம்களை விட குறைவான எண்ணிக்கையில் இருந்தனர். அதாவது பஞ்சாப் வட்டாரத்தில் இந்துக்கள் ‘சிறுபான்மையினர்’. பஞ்சாப் வட்டாரத்தைத் தாண்டி வட இந்தியப் பரப்பைச் சேர்த்து எடுத்துக் கொண்டால் தாம் பெரும்பான்மையினர் என்ற உணர்வு பஞ்சாப் இந்துக்களிடம் இருந்தது. பஞ்சாபிய ‘சிறுபான்மை’ இந்துக்களின் இந்த ‘பெரும்பான்மை’ உணர்வே ஆரிய சமாஜம் பஞ்சாபில் அடுத்தடுத்து உருவாக்கிய பல இந்துத்துவ வேலைத்திட்டங்களுக்கும் மேற்குறித்த ‘சிறுபான்மை-பெரும்பான்மை’ மனோபாவம் பின்புலமாக இருந்தது.

பஞ்சாபில் ஆரிய சமாஜ வளர்ச்சியை அங்கிருந்த பார்ப்பனர்கள் முன்னெடுத்துச் சென்றார்கள் என்றும் சொல்ல முடியாது. உண்மையில் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பஞ்சாபில் நகர்ப்புற இந்துக்களின் குரல்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் இந்து வணிகர்கள் ஆவார்கள். கத், அரோரா, பனியா சாதிகளைச் சேர்ந்த இந்து வணிகர்களே ஆரிய சமாஜத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார்கள். லாலா முன்ஷிராம் (கத்), பண்டிட் குரு தத்தா (அரோரா), லாலா ஹன்ஸ்ராஜ் (கத்), லாலா லஜபதிராய் (பனியா), பண்டிட் லேக்ராம் (சரஸ்வதி பார்ப்பனர்) போன்ற சமாஜத் தலைவர்களின் சமூகப் பின்புலங்கள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. கத், பனியா, அரோரா சாதிகள் பஞ்சாபில் வைஸ்யர் என்ற வசையில் வைக்கப்படும் சாதிகள், மேற்குறித்த இந்து வணிகச் சாதியினர் பிரிட்டிஷ் ஆட்சியோடு சிக்கலான உறவுகளைக் கொண்டிருந்தனர்.

அதாவது அவர்களது வணிக நலன்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பல வாய்ப்புகளையும் வழங்கினர். பல தடைகளையும் ஏற்படுத்தினர். பிட்டிஷாரால் உருவாக்கப்படும் முதலாளியச் சூழல்களில் வணிக மூலதனத்திற்கு ஒரு மாபெரும் எதிர்காலம் உள்ளது என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே தமது மூலதனத்தின் பெருக்கத்தோடு அரசியல் செல்வாக்கையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேகம் அவர்களிடம் இருந்தது. பஞ்சாபில் ஆரிய சமாஜ உருவாக்கத்திலும் அதன் இன்று வரையிலான அரசியலிலும் இந்து வணிக வர்க்கத்தின் முத்திரையைக் காணமுடியும்.

பஞ்சாப் ஆரிய சமாஜம் மிகப்பெரும் வெற்றி பெற்றது கல்வித் துறையில் என்று சொல்லலாம். ‘‘தயானந்தர் ஆங்கில - வைதீகக் கல்வி நிறுவனம்’’ என்பது சமாஜத்தின் கல்வி அமைப்புகளுக்கான பொதுப் பெயராகும். ‘‘ஆங்கில - வைதீகக் கல்வி’’ என்ற பதச்சேர்க்கை ஆரிய சமாஜத்தின் கல்வி குறித்த கொள்கையை விளக்குகிறது. பழசும், புதுசும், சீர்திருத்தமும் மீட்டுருவாக்கமும் என்ற இரட்டை நிலை இச்சொற்களில் பதிவாகியுள்ளது. ஆரிய சமாஜ வணிகர்கள் மேற்கத்திய சமூகம், மேற்கத்திய கல்வி ஆகியவை குறித்துக் கொண்டிருந்த கருத்துக்களையும் அச்சொற்கள் அறிவுறுத்துகின்றன. மேற்கத்திய கல்வியை அடியோடு நிராகப்பது என்பதான திட்டங்களெல்லாம் ஆரிய சமாஜத்திற்கு இருக்கவில்லை.

மாறாக, வைதீக ஆன்மீகத்தோடு மேற்கத்திய விஞ்ஞானங்களை இணைத்துக் கொண்டு செல்வது எப்படி என்பதே அவர்களின் பிரச்சினையாக இருந்தது. பஞ்சாப் ஆரிய சமாஜத்தினுள் இது குறித்து விவாதங்கள் நடந்ததுண்டு. அதாவது வைதீக ஆன்மீகக் கல்வி மட்டுமே சமாஜத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் சமாஜத்தினுள் தனியாகச் சென்று குருகுல அமைப்புகளை உருவாக்கினார்கள். இது ஆரிய சமாஜத்தினுள் பழைமைவாதிகள் அணி, மற்றொரு அணி வைதீகக் கல்வியோடு ஆங்கிலக் கல்வியை வலியுறுத்தியது. இது மிதவாதிகள் அணி. பஞ்சாபை பொறுத்தமட்டில் ஆரிய சமாஜம் ஆங்கில - வைதீகப் பள்ளிகளையும் கல்லூகளையும் பெருமளவில் ஏற்படுத்தியது.

இந்துக்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றுவது ஆரிய சமாஜத்தின் முக்கியமான வேலைத்திட்டமாக அறிவிக்கப்பட்டது. வரலாற்றில் ஏற்கனவே இஸ்லாமியரிடமும் இப்போது ஆங்கிலேயரிடமும் இந்துக்கள் ‘தோற்றுப் போயிருக்கிறார்கள்’, கிறித்தவரி மதமும் ரயில்வேயும் அய்ரோப்பிய விஞ்ஞானங்களும் இப்போது இந்துக்களிடம் ஏற்படுத்தி வரும் ‘தாழ்வுமனப்பான்மை’ அபமிதமானது. எனவே இந்துக்களுக்கு ‘தமது மதத்தின், தத்துவங்களின் உயர்வை’ எடுத்துரைப்பது சமாஜத்தின் முக்கிய பணி என்று ஆரிய சமாஜ எழுத்தாளர்கள் எழுதினார்கள்.

ஆரிய சமாஜம் போர்க்குணம் கொண்ட ஓர் இந்து அமைப்பாக உருவாவதற்கு பின்புலமாக இருந்த கருத்தியல் நங்கூரம் இது. பஞ்சாபி இந்துக்களின் ‘சிறுபான்மை’ எதார்த்தமும் ‘பெரும்பான்மை’ குறித்த ஏக்கமும் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். தமது பொருளாதார வாய்ப்புக்களை அகலப்படுத்திக் கொள்வதற்கான கலாச்சார மற்றும் அரசியல் பரப்பை நோக்கி பஞ்சாபிய இந்து வணிகர்கள் நகரத் துடித்தனர் என்பதை சமாஜத்தின் வேலைத்திட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பஞ்சாபின் எல்லைகளைத் தாண்டி வேதங்கள், வீரசிவாஜி, சமஸ்கிருதம், சுதேசியம், இந்திமொழி ஆகிய அடையாளங்கள் பின்னப்பட்ட சூழல் இது.

சுத்தி, இந்தி, இந்து தேசியம்

பஞ்சாபில் ஆரிய சமாஜத்தின் முக்கியப் பிரச்சினை : எண்ணிக்கை. அங்கு இந்துக்கள் முஸ்லிம்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள். கணிசமான எண்ணிக்கையில் சீக்கியர்களும் இருந்தார்கள். இந்தக் ‘குறை’யை எவ்வாறு நிவர்த்தி செய்வது? தமது சிறுபான்மையை பெரும்பான்மையாக மாற்றுவது எப்படி? மூன்று வேலைத்திட்டங்களை பஞ்சாப் ஆரிய சமாஜத்தினர் கண்டுபிடித்தனர். அவைதான் : சுத்தி, இந்தி, இந்து தேசியம்.

சுத்தி எனில் சுத்தப்படுத்தும் சடங்கு. இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறிச் சென்றவர்கள் அதனால் அசுத்தப்பட்டுவிட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அவர்களைத் திரும்பவும் இந்து மதத்திற்கு மீள அழைப்பதற்கு ஆரிய சமாஜத்தினர் உருவாக்கிய சடங்கு சுத்தி என்ற பெயரைப் பெற்றது. இது அடிப்படையில் ஒரு பிராமணியச் சடங்கு என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். ஏனெனில் சுத்தம்/அசுத்தம் என்ற எதிர்வு பிராமணியத்தின் அடிப்படை எதிர்வாகும். வேதங்களில் சுத்தி எனும் சடங்கிற்கு ஆதாரங்கள் உண்டு என தயானந்தர் எடுத்துக்காட்டினார்.

இடைக்காலத்தில் பயன்பாடு இல்லாமல் போய்விட்ட பழைய வேதச்சடங்கை அவர் மீட்டெடுத்தார். பஞ்சாபில் ஆரிய சமாஜம் பரவியபோது சுத்தி எனும் சடங்கை அங்கிருந்தோர் ‘சிறுபான்மையை பெரும்பான்மையாக’ மாற்றுவதற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். சுத்தி எனும் சடங்கின் வழியாக இஸ்லாமியரையும் கிறித்தவரையும் சீக்கியரையும் ஆரிய சமாஜத்தினர் இந்து மதத்திற்கு மீள அழைத்தனர். ஆனால் இஸ்லாமியர், சீக்கியர், கிறித்தவடையில் சுத்தி வெகுவாக வெற்றி பெற முடியவில்லை. பஞ்சாபிலும் பிற வட்டாரங்களிலும் பிற சமயத்தவடையில் சுத்திக்கு எதிரான எச்சரிக்கை உணர்வுகள் விரைவில் பரவின. சமயப் போட்டி தீவிரமடைந்தது.

இஸ்லாமியரிடையே அஹ்மதியா இயக்கம், சீக்கியடையில் சிங் சபா இயக்கம் ஆகியவை ஆரிய சமாஜத்தின் சுத்தி முயற்சிகளைத் தீவிரமாக எதிர்த்தன. எல்லா மதத்தவரிடையிலும் அடையாள உணர்வை அதிகப்படுத்தி மதப்போட்டியைத் தூண்டியதைத் தவிர ஆரிய சமாஜத்தின் சுத்தி வேறு எதையும் விசேஷமாக சாதிக்க முடியவில்லை. இருப்பினும் அப்படி ஒரு வகை மதப்போட்டி உருவானதை ஆரிய சமாஜத்தவர் தமக்கு ஆதாயமான நிகழ்வாகவே கருதினர். மதப்போட்டி தோன்றியதால் இந்து பெரும்பான்மை ‘‘விழிப்புணர்வு’’ பெற்றதாக அவர்கள் கருதினார்கள்.

பஞ்சாப் வட்டாரத்தில் சிறுபான்மையினராக இருந்த இந்துக்களுக்கு ஆதரவாக சுற்றியிருந்த வட்டாரங்களின் இந்துக்களும் திரட்டப்பட்டதாக ஆரிய சமாஜத்தவர் திருப்தியடைந்தனர். பஞ்சாபிலும் பிற வட இந்திய வட்டாரங்களிலும் தோன்றிய இந்து ‘‘விழிப்புணர்வுச்’’ சூழல் ஆரிய சமாஜத்தவரால் ‘‘இந்து தேசியம்’’ என்று பெயடப்பட்டது. இந்து தேசியம் எவ்வாறு தோன்றியது? என்ற ஒரு பெருங்கதையினுள் இப்படியாக நாம் நுழைகிறோம். இஸ்லாமியர், சீக்கியர் விஷயத்தில் தோல்வியடைந்த சுத்தி சடங்குகளை ஆரிய சமாஜத்தினர் தாழ்த்தப்பட்ட சாதிகளை நோக்கியும் பழங்குடிகளை நோக்கியும் திருப்பினர். மீண்டும் இங்கு ஆரிய சமாஜத்தினடையில் மிகத் தெளிவாகத் தொழில்பட்ட பிராமணிய மனோபாவத்தை நினைவூட்ட வேண்டியுள்ளது.

இந்து மதத்தினுள் தாழ்த்தப்பட்டோரும் பழங்குடிகளும் அசுத்தமானவர்கள் என்ற அடிப்படைக் கற்பிதத்தின்படி அவர்களை நோக்கி சுத்தப்படுத்தும் சடங்குகள் செலுத்தப்பட்டன. மேலும் இஸ்லாமியர், சீக்கியர் விஷயத்தில் சுத்தி முயற்சிகள் படுதோல்வி அடைந்தன என்பதை மறைத்து இந்துக்களைப் ‘பெரும்பான்மையாக்கும்’ தமது வேலைத்திட்டம் தொடருவதாகக் காட்டுவதற்கும் ஆரிய சமாஜத்தினர் சுத்தியை அடித்தள மக்களை நோக்கித் திருப்பினர். சியால்கோட் மாவட்டத்தில் மேகா என்னும் ஒடுக்கப்பட்ட சாதியினரை சமாஜத்தினர் சுத்தி சடங்கு நடத்தி ‘‘இந்து’’க்களாக மாற்றினர். அதாவது அவர்களது ‘‘தீட்டு’’ விலகி விட்டதாக அறிவித்தனர்.

கபீர் பந்தியைச் சேர்ந்த தீட்டுச் சாதியினரும் சுத்தியின் வழியாக தூய இந்துக்களாக மாறிவிட்டதாக அறிவித்தனர். ஹோஷியார்பூர் மாவட்டத்து சமர்களிடையிலும் சுத்தி நிகழ்த்தப்பட்டது. காஷ்மீ டோமாக்களிடையிலும் இதுபோல நிகழ்ந்தது. ஹோமம் வளர்த்து, கங்கா ஜலம் தெளித்து, வைதீக மந்திரங்கள் ஓதி அவர்களுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. ஆரிய சமாஜிகள் அவர்களோடு சமபந்தி போஜனம் செய்துகொண்டார்கள். தொடர்ந்து குடும்பச் சடங்குகளில் அவர்கள் பூணூல் அணியும் உரிமை உண்டு என்றும் ஆரிய சமாஜிகள் அறிவிரித்தார்கள்.

அவர்கள் ஆரிய சமாஜ உறுப்பினர்களாகவும் ஆனார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த வட்டாரங்களில் வசித்து வந்த பிற இந்து சாதியினர் சுத்தியை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் ‘‘சுத்திகரிக்கப்பட்ட’’ பிறகும் அதே சாதியினராகவே தொடர்ந்து வாழ வேண்டி வந்தது. அவர்களோடு வேறு எந்த சாதியினரும் திருமண உறவுகளை வைத்துக் கொள்ளவில்லை. போதாத குறைக்கு சனாதன இந்துக்கள் சுத்தி சடங்குகளை நடத்திய ஆரிய சமாஜிகளையும் தம்மிலிருந்து விலக்கி வைத்தார்கள்.

சுத்தி சடங்குகளின் மூலம் ஆரிய சமாஜ உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்காலிகமாகக் கூடியதே தவிர, இந்துக்களிடையில் சாதியம் சிறிதும் மறைந்து விடவில்லை. மாறாக இந்து மதத்திற்குள் சாதியத்தின் இறுக்கம் மிகப்பலமாக உள்ளது என்பதையே சுத்தி எடுத்துக்காட்டியது. ‘‘சுத்தமானவர்களாக’’ ஆக்கிவிட்டதாக அறிவிப்பதால் எந்த பயனும் விளையாது என்பதை சுத்தி எடுத்துக் காட்டியது. சுத்திச் சடங்குகள் பின்னால் எம்.என். சீனிவாஸ் என்ற சமூகவியலாளர் பேசிய சமஸ்கிருதமயமாக்கம் என்ற நிகழ்வை ஒத்திருந்தது.

அதாவது சாதிப்படி நிலையில் மேல்நிலையைச் சாதிப்பதற்கு அடித்தளச் சாதியினர் சமஸ்கிருதக் கலாச்சாரத்தை சுவீகத்துக் கொள்ள வேண்டும் என்பதாகத் தான் சுத்தி அமைந்தது. இது அடிப்படையில் உயர்சாதியினரை ‘‘தூய சாதியினர்’’ என்றும் அடித்தளச் சாதிகளைத் ‘‘தூய்மை அற்றோர்’’ என்றும் கூறும் பழைய பிராமணியத்தை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறது. அதே அடிப்படையில் சுத்தி எனும் சடங்கை நிகழ்த்துகிறது. இது அடித்தள மக்களை கேவலப்படுத்துவதாகும். ஆரிய சமாஜத்தினன் ‘‘சீர்திருத்தம்’’ பிராமணிய எல்லைகளைத் தாண்டாமலேயே அமைந்திருக்கக் காண்கிறோம்.

பஞ்சாப் இந்துக்களைப் பெரும்பான்மையினராக மாற்றுவதற்கு ஆரிய சமாஜ் கண்டுபிடித்த மற்றொரு உத்தி ‘‘இந்தி மொழியே தேசிய மொழி’’ என்னும் கோஷமாகும். இக்கோஷம் எழுந்த பின்னணியைப் புந்து கொள்ள 19 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் பஞ்சாபில் நிலவிய மொழிச்சூழல் புந்து கொள்ளப்பட வேண்டும். சுமார் எட்டு நூற்றாண்டுகளாக வடமேற்கு இந்தியா இஸ்லாமிய மதச்சார்பு கொண்ட பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த மன்னர்கள் பல வேளைகளில் லாகூரைத் தமது தலைநகராகக் கொண்டிருந்தனர். இன்னும் பல வேளைகளில் டில்லி, ஆக்ரா ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு ஆட்சிபுந்தனர்.

இவ்வாறாக லாகூர் முதல் டில்லி ஆக்ரா வரையில் கில்ஜி, லோடி, மொகலாய மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களது ஆட்சிக்காலத்தில் பாரசீகம், ஆப்கானியம், அரபு ஆகிய மொழிகளின் செல்வாக்கு இப்பகுதிகளில் ஏற்பட்டது. மேற்குறித்த மொழிகளும் அவ்வட்டாரங்களில் வழங்கிய இந்திய மொழிகளும் சேர்ந்து உருது என்ற புதிய மொழி ஒன்றும் உருவாகியது. பாரசீகம் அறிஞர்களின் மொழியாகவும் உருது சாதாரண மக்களின் மொழியாகவும் கூட கருதப்பட்டன. பாரசீகமும் உருது மொழியும் அதிக அளவு புழங்கிய நிலப்பகுதி பஞ்சாப் எனலாம்.

ஆரிய சமாஜத்தின் நிறுவகரான தயானந்தர் ஆரம்பத்தில் சமஸ்கிருத மொழியில் தான் அதிக அக்கறை காட்டினார். வங்காளத்தில் அவர் கேசப் சந்திரா சென்னைச் சந்தித்தபோது அவர்தான் இவரை இந்தியில் பேசவும் எழுதவும் அறிவுறுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, பஞ்சாப் ஆரிய சமாஜத்தினர் பஞ்சாபில் முஸ்லிம்களோடு சமய அரசியலில் ஈடுபட்ட போது இந்தியை தமது மொழியாகப் பற்றிக் கொண்டனர். குறிப்பிட்ட அக்காலத்தில் பஞ்சாபில் வாழ்ந்த இந்துக்கள் தமது இல்லங்களில் அல்லது தெருக்களில் பேசிய மொழி உருது அல்லது பஞ்சாபி ஆகும்.

குறிப்பாக வசதிபடைத்த இந்துக்கள் தம்மை சமூக மேல்தட்டினராக காட்டிக் கொள்ள பாரசீக மொழியைப் பயன்படுத்தினர். பஞ்சாபைத் தாண்டி கிழக்கு நோக்கி நகரும் போது தான் இந்தி மொழி பேசும் நிலப்பகுதிகள் தொடங்குகின்றன. ஆரிய சமாஜத்தினர் பஞ்சாபில் முஸ்லிம்களை எண்ணிக்கைரீதியாக எதிர்கொள்ள பஞ்சாபிற்குக் கிழக்கே இருந்த இந்துக்களோடு தம்மை அய்க்கியப்படுத்திக் கொண்டனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய கருவியே ‘‘இந்தி மொழி’’ ஆகும். பஞ்சாபில் தாம் சிறுபான்மையினர் என்ற யதார்த்தத்தை பஞ்சாபி இந்துக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே பஞ்சாபி இந்துக்களின் தாய்மொழி இந்தி எனும் கோஷம் ஆரிய சமாஜத்தவரால் உண்டாக்கப்பட்டது.

1860 லிருந்தே உருது மொழியை அகற்றி இந்தி மொழியை முதன்மைப்படுத்துவது குறித்த விவாதங்கள் பஞ்சாபில் தொடங்கிவிட்டன. பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கென கல்வித் திட்டத்தை உருவாக்க ஹன்டர் கமிஷனை நிறுவியபோது இந்த விவாதம் தீவிரமடைந்தது. ஆரிய சமாஜிகள், பிரம்ம சமாஜிகள், சனாதன இந்துக்கள் ஆகிய பரவலான அணியினர் ஒரே குரலில் இந்தியை ஆதத்தனர். பஞ்சாப் ஆரிய சமாஜிகளில் லாலா லஜபதி ராய், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோர் இந்தி மொழியில் இந்து தேசியத்தைக் கண்டனர். 1881-1883 வருடங்களில் ஆரிய சமாஜம் இந்தி மொழி வழிக் கல்வி, இந்தி ஆட்சி மொழி ஆகிய கோஷங்களை பெதும் பிரபலப்படுத்தியது.

பஞ்சாபில் இந்துக்கள் இல்லங்களில் பேசிய மொழி இந்தி அல்ல என்பது சுட்டிக் காட்டப்பட்டபோது, பேச்சு மொழியாக பஞ்சாபியே இருந்த போதும் அதனை தேவநாகி (அதாவது இந்தி) எழுத்துக்களில் தான் எழுத வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தி மொழி குறித்த பிரச்சினை பஞ்சாபில் இன்று வரை தொடரும் பிரச்சினை. உருது மொழியை அப்புறப்படுத்தி இந்தியைக் கொண்டுவருவது என்பதைத் தாண்டி, பஞ்சாபி இந்துக்கள் தமது தாய்மொழியான பஞ்சாபியை மறுத்து, இந்தியை அதன் தேவநாகி எழுத்தைத் தாய்மொழியாக அறிவித்தல் என்ற அளவிற்கு இப்பிரச்சினையைச் சிக்கலாக்கினர். சீக்கியர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது தாய்மொழி பஞ்சாபி, அதன் எழுத்துக்கள் குருமுகி வடிவில் உள்ளன.

அவை அவர்களது குருமார்களின் மொழியும் கூட. பஞ்சாபின் சமய அரசியலில் இந்துக்கள் தமது தாய்மொழியாக இந்தியை அறிவித்தது சீக்கியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்த ஒன்றாகும். நவீன இந்திய அரசியலில் இந்துக்களிடமிருந்து சீக்கியர்களை அந்நியப்படுத்துவதற்கான ஒரு களம் இந்தி மொழியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. பஞ்சாபி இந்துக்களைப் பொறுத்த மட்டிலோ சீக்கியர்களின் நட்பை இழப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. வட இந்திய அளவில் இந்து எனும் பெரும்பான்மையை ஈட்டுவதையே அவர்கள் அதிக முக்கியம் எனக் கருதினர்.

ஆரிய சமாஜத்தைப் பொறுத்த மட்டில், பஞ்சாபில் இந்துக்களின் சிறுபான்மை நிலையைப் பெரும்பான்மையாக உருமாற்ற இந்தி மொழியும் இந்து தேசியமும் பெரிதும் உதவின. இந்த முயற்சியில் ஆரிய சமாஜம் வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com