Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
இஸ்லாம் தலித்திய வாசிப்பும் இந்தியப் புரிதல்களும்
ஹாமீம் முஸ்தபா

இஸ்லாம் உலகில் தோன்றிய புரட்சிகரமான மார்க்கம்; ஐரோப்பிய சமூகம் விழித்தெழுவதற்கு முன்பே அறிவியலையும், நாகரீகத்தையும் உலகுக்கு அறிமுகம் செய்த மார்க்கம்; கணிதத்தில், மருத்துவத்தில், வேதியியலில், வானியலில், தத்துவத்தில் பல அரிய பொக்கிஷங்களை மனித சமூகத்துக்கு கொடுத்த மார்க்கம்;

வர்ணக் கோட்டுபாடுகளால் வடிவமைக்கப்பட்ட இந்திய அமைப்பை உடைத்துப் போட்டு நவீன இந்திய அமைப்புக்கு அடித்தளமிட்ட சமயம். வருவாய்; நீதி, நிர்வாகம், தத்துவம், இலக்கியம், மொழி, கட்டடம், இசை, வழிபாடு, உணவு, உடை என எல்லாத் துறைகளிலும் தனது பங்களிப்பை காத்திரமாக செய்த சமயம்; இன்று உலக அரங்கில் ஏகாதிபத்தியத்தின் முன்னும், இந்தியாவில் வைதீக ஏகாதிபத்தியத்தின் முன்னும் தோற்றுப் போய் நிற்கிறது. பெயர், அடையாளம், தோற்றம், உடை என முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு எதிரானதாகவே மாறி இருக்கிறது.

சிக்கலான சுழலில் முஸ்லிம்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளுர் தொடங்கி உலக நாடுகள் வரை திசைகள், களங்கள் அனைத்தி லிருந்தும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தீவிரப் படுத்தப்பட்டிருக்கிறது. கோவை, குஜராத், ஆப்கன், ஈராக் என தாக்குதல் நிலங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கின்றது. ‘தீவிரவாதிகள்’ ‘சகிப்புத்தன்மை அற்றவர்கள்’ ‘மதவெறியர்கள்’ என தொடர்ந்து பல்வேறு முத்திரைகள் அவர்கள்மீது ‘பச்சை குத்தப்படுகிறது’. இதற்கான காரணத்தைத் தேடி அலைந்த முஸ்லிம் அறிவுலகம், ‘முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து நீண்ட தூரம் விலகிச் சென்றதே’ காரணம், எனவே மீண்டும் இஸ்லாத்திற்குத் திரும்புவோம், என்று சொல்கிறது. இது விவாதத்திற்குய ஒன்று?

இஸ்லாம் என்பது கடவுளுக்கும், மனிதனுக்கும் தொடர்பு ஏற்படுத்துகிற சமய நடவடிக்கை மட்டும்தானா? கலிமா, தொழுகை, நோன்பு, சக்காத், ஹஜ் என்ற கடமைகளில் வழிபாட்டுக் கூறுகளும் பக்திச் செயல்பாடுகளும் மட்டும்தான் நிற்கிறதா? தமிழகத்தில் சுமார் 7500 தொழுகை பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தொழுகைக்குய பாங்கொலி என்ற தொழுகை அழைப்பிலும் அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்படும் கடமையான / கடமையற்ற தொழுகைகளிலும் அல்லாஹ் அக்பர் (இறைவன் பெரியவன்) என்ற சொல் தொடர்ச்சியாக உச்சரிக்கப்படுகிறது.

இந்தச் சொல் தொழுகை என்னும் பக்தி நடவடிக்கையை நிறைவேற்றக் கூடிய வழிபாட்டுச் சொல்மட்டும்தானா? புலன் உணர்வுகளுக்கு புலப்படாத ஒரு சக்தியை பெரியவன் என்றும் அவனே வணங்கத்தக்கவன் என்றும் அறிவிப்பதன் வழியாக புலன் உணர்வுகளுக்குப் புலப்படும் எல்லாரும் சமமானவர்கள், யாரும் யாரைவிட உயர்ந்தவர்களும் அல்ல தாழ்ந்தவர்களும் அல்ல என்னும் அர்த்தப்பாடுகளை நோக்கி இந்த சொல் முஸ்லிம்களை அழைத்துச் செல்லவில்லையா.

‘‘வறியவர்கள் ஏழைகளின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது இறை நம்பிக்கையாளன் அடையாளம்’’ (76:8). ‘‘வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’’(17:31). ‘‘விதவைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்’’(24:32) ‘‘ஒரு சமூகத்தார்மீது கொண்டுள்ள பகை, அநீதி இழைக்கும்படி நம்மைத் தூண்டக் கூடாது’’(5:8) என்றெல்லாம் திருக்குர்ஆன் சொல்லும் செய்திகள் ஆன்மீக, பக்தி நடவடிக்கைகளுக்கு வெளியிலும் இஸ்லாத்தின் சமூக, பொருளியல் நடவடிக்கைகளைக் காட்டுகிறது.

இஸ்லாத்தின் எழுச்சியை காரல் மார்க்ஸ் புரட்சி என்றே உணர்ந்திருந்தார். எங்கெல்ஸ் மார்க்ஸிற்கு அனுப்பிய பதில் கடிதத்தில் ‘நீங்கள் சவரக் கருதியுள்ள முஹம்மதிய புரட்சியில்’ என எழுதியிருந்தார். (இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு. எம்.எஸ்.எம். அனஸ், பக்கம் 24).

எனவே இஸ்லாத்திற்கு திரும்புவோம் என்று சொல்லும்போது இஸ்லாத்தின் புரட்சிகரமான உள்ளீடுகளையெல்லாம் உதிர்த்துப் போட்டுவிட்டு பக்தி நடவடிக்கையின் நீட்சியாக முஸ்லிம் சமயவாதிகள் இன்று காட்டும் சடங்குகளின் இஸ்லாத்திற்கா? இஸ்லாம் தீவிரமாக பேசிய மனித விடுதலை மனித சமத்துவம் என்ற இஸ்லாத்தின் - புரட்சிகரமான தன்மைக்கா? என்ற கேள்வி எழுகிறது.

இஸ்லாத்தின் தோற்றகாலத்தில் மக்காவில் வர்த்தகம் சார்ந்த பெரும் பணக்காரர்கள் சிறுவர்த்தகர்களை ஏமாற்றுதல் மிக இயல்பாக இருந்தது. செல்வத்தை சேமித்தல் என்கின்ற பேராசை எல்லாவிதமான நீதிமீறல்களுக்கும் வழி வகுத்திருந்தது. ‘‘நீங்கள் மிக்க அளவு கடந்து பொருள்களை நேசிக்கிறீர்கள்’’(89:19) ‘‘நீங்கள் கப்ருகளை சந்திக்கும் வரையிலும் (பொருளை) அதிக வசப்படுத்திக்கொள்ளும் பேராசை அல்லாஹ்வை விட்டும் பாராக்காக்கிவிட்டது’’ (101:1,2) என்றெல்லாம் திருக்குர்ஆன் இது குறித்து எச்சத்தது. மக்காவையும் அதனைச் சுற்றியும் இருந்த சிறுவணிகர்கள் இதனால் மிகுந்த பாதிப்படைந்தனர்.

நபிக்கு அப்பொழுது சிறுவயது பருவம். யெமன் தேசத்து வணிகர் ஒருவருக்கும் மக்காவில் வசித்து வந்த ஸ்ஹ்மி என்ற கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ஒரு வர்த்தகப் பிரச்சினை. யெமன் தேசத்து வணிகர் ஒருவர் கொடுத்த பொருளுக்குய காசை ஸ்ஹ்மி கோத்திரத்தை சேர்ந்தவர் கொடுக்கவில்லை. இந்தப் பிரச்சினையைப் பேசுவதற்காக மக்கா பிரமுகர் ஒருவன் இல்லத்தில் ஹாஷிம், முத்தலிப், ஸீஹ்ரா, அஸத், தையிம் ஆகிய மக்காவின் குறைஷியர்பிவின் பிரபலமான கோத்திரத்தார் சந்தித்து, ‘குறைஷியரோ குறைஷி அல்லாதவரோ யாராக இருந்தாலும் ஒருவருக்கு அநீதி ஏற்படுமாயின் பாதிக்கப்பட்ட அவருக்காக கடைசி வரை நிற்பது என்கின்ற உறுதிமொழியை’’ எடுக்கின்றனர். இந்த உறுதிமொழி எடுக்கப்பட்ட சமயத்தில் முஹம்மது நபியும் அங்கிருந்தார்.

பின்பு ஒருமுறை உறுதிமொழி எடுத்த அந்த நாளை முஹம்மது நபி அவர்கள் ஓர்மிக்கும்போது ‘‘அப்த் - அல்லாஹ் - இப்னு - ஜீஅத் உடைய இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த உன்னதமான ஒப்பந்தத்தின்போது நானும் பிரசன்னமாயிருந்தேன். செந்நிற ஒட்டகக் கூட்டம் ஒன்றை பிரதியாகத் தருவதாக இருப்பினும் நான் அதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டேன். இப்பொழுதே இஸ்லாத்தில் இருக்கும் நான் அதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்.’’ (முஹம்மது - மார்ட்டின் லிங்க்ஸ் - பக் 57) என்று நினைவு கூர்ந்தார்.

எனவே தான், ‘‘ரா குகையில் நபிகள் பெற்ற இறை அனுபவங்களிலிருந்து தொடர்ந்த இறைவாக்குகளில் ஆன்மீகப் போதனைகளோடு மக்காவில் உக்கிரம் பெற்றிருந்த சமூக வேதனையை நீக்குவதற்கான வழிமுறைகளும், சம அளவில் இடம் பெற்றிருந்தன.’’(இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூகப் பண்பாட்டியல் ஆய்வு - எம்.எஸ்.எம். அனஸ், பக்.145) என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியச் சூழலில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை நடத்துகின்ற இந்துத்துவச் சக்திகள் தலித்துகளை கேடயங்களாக முன்னிறுத்துகிறார்கள். நீண்ட நெடிய காலம் ஆட்சி அதிகாரங்களை தங்கள் கைவசமாகவே வைத்திருக்கும் இந்துத்துவ வாதிகள் அதனைத் தொடர்ந்து தக்கவைப்பதற்காக முஸ்லிம் எதிர்ப்பை திட்டமிட்டு கட்டமைக்கிறார்கள். ‘‘சுருக்கமாகச் சொன்னால், தலித், பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சாதியினரை தன் பண்பாட்டு ஆதிக்கத்திற்குள் வலிந்து கொண்டு வந்து விடுவது. சிறுபான்மையினரை நிரந்தர அச்ச வளையத்திற்குள் மாட்டி விடுவதென்பது அவர்களது வேலைத்திட்டம்.’’ (தலித்மயமாக்கால் - சி. சொக்கலிங்கம் பக்.32)

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் பங்கேற்கும் தலித்துகளின் எண்ணிக்கைப் பெருகிக்கொண்டே செல்கிறது. குஜராத்தில் இந்த எண்ணிக்கைப் பெருக்கம் கொடுரமாகத் தெரிந்தது. சாதி வெறியர்களிடமிருந்தும், சாதிக் கொடுமைகளிலிருந்தும் மீட்படைவதற்காக ‘இஸ்லாத்திற்கு மாறுவோம்’ என்ற கோஷத்தை பாதுகாப்புக்குக் கேடயமாக முன் வைக்கும் தலித் சமூகம் இன்னொரு நிலையில் அதே சாதி வெறியர்களின் ஏவலாள்களாக மாறி முஸ்லிம்களைத் தாக்குகிறது. இது ஒரு விநோதமான முரண்பாடு.

மனித சமத்துவத்தை, மனித விடுதலையை கோட்பாட்டளவிலும், செயல்வடிவிலும் உறுதி செய்கின்ற முஸ்லிம் சமூகத்துடன் கரம் இணையாமல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதி அடுப்புகளில் தங்களை விறகாக்கிய வைதீகர்களோடு இணைந்து நிற்பது தலித்துகளுக்கு எப்படி சாத்தியமாயிற்று?

இந்தியாவிற்கு அறிமுகமான சமயங்கள் என்ற வகையில் இஸ்லாத்துடன் ஒப்பிடும்போது கிறிஸ்தவத்தில் சாதிக் கூறுகள் அதிகம். இன்னும் சொன்னால் கிறித்தவம் இந்தியாவில் பரவியபோது சாதியை அப்படியே உள்வாங்கிக் கொண்டது. ‘‘கிறித்தவரி மதத்திற்கு வந்தவங்க சாதிக் கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் வந்தார்கள். கிறித்தவரி மதத்தில் நாமெல்லாம் சமமாக நடத்தப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்திச்சு. ஆனால் இந்து மதத்துல எப்படி இருக்கோ அதே மாதிரி கிறித்தவத்தில் சாதி அமைப்பு அப்படியே இருக்கு’’ (ஊழ். ஆண்டனி ராஜ் நேர்காணல் - நவ.03 புதியகாற்று பக். 3)

ஆனால் ஒப்பீட்டளவில் சிறுபான்மையினரான கிறித்தவர்களுடனான மோதல்களில் மிகக் குறைந்த அளவே தலித்துகளின் பங்கேற்பு இருந்ததை புள்ளி விபரங்கள் தெயப்படுத்துகின்றன. ‘‘பிஜேபி ஆட்சிக்கு வந்தபின் கிறித்தவர்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அவற்றில் தலித் பழங்குடி மக்களின் பங்கேற்பு முற்றிலுமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். கிறித்தவர்கள் அவர்களுடன் நெருங்கியத் தொடர்பும் உறவும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அத்தகைய உறவு முஸ்லிம்களுடன் இல்லை.’’ என்று சொல்லும் காஞ்சா அய்லய்யா, தலித்துகள் விசயத்தில் சாதிக் கொடுமைகள் விசயத்திலும் முஸ்லிம் அறிவு ஜீவிகளின் போதாமையையும் அக்கறையின்மையையும் அதில் கவனப்படுத்துகிறார். (குஜராத் கலவரம் தொடர்பாக இந்து பத்திரிக்கையில் 2002 மே மாதம் எழுதியக் கட்டுரை)

சமூக ஏற்றத் தாழ்வுகளை தவிடு பொடி ஆக்குகிற மூர்க்கத்தன்மை இஸ்லாத்தில் இயல்பாக இருந்தது. சமூக படிநிலை தகர்ப்பு என்ற இஸ்லாத்óதின் ஜீவனை அப்படியே உள்வாங்கிய இஸ்லாமிய சூஃபி ஞானிகள் சாதிப்படி நிலைத் தகர்ப்பு என அதனை இந்தியாவில் அர்த்தப்படுத்தினார்கள். சூஃபிகளும் இறை நேசர்களும் அடித்தள மக்களை நோக்கி நகர்வதும் அடித்தள மக்கள் இஸ்லாத்தினை நோக்கி நகர்வதும் இயல்பாக நடந்தன. ‘‘அவன் கடினமான மலைப்பாதையில் கடந்து செல்லத் துணியவில்லை. கடினமான அந்த மலைப்பாதை எது வென்று உமக்குத் தெயுமா, என்ன? (அது தான்) ஒருவனை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினிநாளில் உறவினரான அனாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதுமாகும்! (90:13.17) என்ற திருமறைச் சொல்லை செயல்படுத்தினார்கள். பசியுற்றவர்களுக்கு உணவளித்தார்கள், நோயுற்றவர்களுக்கு மருத்துவம் செய்தார்கள். ‘‘பசித்தவருக்கு ஒன்றுஈயாத லுத்தரையும் படைத்தாய்’’ (ஞானப் புகழ்ச்சி பாடல் 9 - பீர்முஹம்மது ஒலியுல்லா) தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய காலகட்டத்தில் எல்லாம் சூஃபி ஞானிகள் பசிப்பிணி நீக்கியதாக தகவல்கள் கூறுகின்றன. ‘‘பஞ்சகமற்ற நின்வானவரோடு பகிர்ந்தெடன் பார்த்திபனே’’ (ஞானப் புகழ்ச்சிப் பாடல் 37 - பீர்முஹம்மது ஒலியுல்லா) என்ற இலக்கிய வகள் எல்லாம் இதற்கான அகச்சான்றுகள்.

இறைநேசர்களின் இந்த செயல்பாடுகள் காரணமாக இஸ்லாத்திற்கான மதமாற்றம் என்பது அடித்தள மக்கள் சார்ந்தே அதிகம் நடந்தது. ‘‘வெவ்வேறு ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து திரண்ட மக்கள் அனைவரும் தங்களது பூர்விக வாழ்வையும் நிலத்துடனான தொழில் தொடர்பையும் அறுத்துக்கொண்டு இஸ்லாமியர்களாக மாறும்பொழுது ‘தமிழ் இஸ்லாமியர்கள்’ அல்லது ‘லெப்பை’ என்ற பொது அடையாளத்திற்குள் வந்தார்களே தவிர அவர்களது சாதிய ஒட்டு இஸ்லாத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்படவில்லை என்பதை விடவும் பிரக்ஞைபூர்வமாக அழிக்கப்பட்டது என்று சொல்வதே சயாக இருக்கும். தமிழகத்தில் பரவிய வேறெந்த சமயத்தை விடவும் இஸ்லாமிய சமயத்திற்கான சிறப்பியல்பு என்று இதைச் சொல்வதையே நான் ஆதரிக்கிறேன்’’ (சூஃபிகள் - தர்காக்கள் - சில மாற்று உரையாடல்கள் - டி. தர்மராஜன் - பக்கம் 83)

சூஃபிகளும் இறைநேசர்களும் உருவாக்கி வளர்த்த அடித்தள மக்களுடனான இந்த உறவுப் பின்னல் எந்த இடத்தில் அறுபட்டுப் போனது. இஸ்லாத்தினைப் போலவே ரகசியமற்ற, வெளிப்படையான, விமர்சனபூர்வமான அடித்தள சமூகத்தின் பண்பாட்டு வேர்களிலிருந்து இந்திய இஸ்லாத்தின் மூலங்களைத் தேடாமல் வேதங்கள், உபநிடதங்கள் இவற்றின் இடுமுடுக்குகளில் சென்று இஸ்லாத்தினைப் பற்றிய இறைத்தூதர் பற்றிய சங்கேதக் குறிப்புகளை தேடும் மரபைத் தொடங்கியது யார்? காஞ்ச அய்லையா கூறுவது போல், ‘பார்ப்பனியத்தின் தாக்கத்திற்கு முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் மன்னர்களும் இரையானார்களா?

இந்துக்கள் புனிதமாகக் கருதகிறார்கள் எனவே பசுவைக் கொல்லாதே என்று தன் மகன் ஹுமாயூனுக்கு உயில் எழுதிய பாபன் மனத்திரையில் ஓடிய இந்துக்கள் பட்டியலில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் பெயர்கள் இருந்ததா?

காசிநாதர் ஆலயத்தில் இருக்கின்ற ஒளரங்கசீப்பின் கல்வெட்டுச் செய்தியில் குறிப்பிடப்படுகின்ற இறுதிவாசகமான ‘‘இந்து கோயில்களை பாதுகாப்பதில் இஸ்லாமியர் உயிர்த்தியாகம் புரிந்திடவும் தயாராகவும்’’ என்ற இறுதி வாசகத்தில் வருகின்ற இந்துக் கோயில்களில் அடித்தள மக்களுக்கு உரிமை இருந்ததா?

முஸ்லிம் மன்னர்கள் சிருங்கே மடத்திற்கு பட்டது போல் அடித்தள மக்களின் தெய்வ நடவடிக்கைகள் குறித்து கவலையும் அக்கறையும் கொண்டதுண்டா?

(தகவல் ஆதாரம் இஸ்லாத்தில் மனித மதிப்பு - மு. அப்துல் சமது - பக்கம் 191 முதல் 200 வரை)

அடித்தள மக்கள் (இஸ்லாத்திற்கு உள்ளம் வெளியிலும்) சார்ந்த பண்பாட்டு செயல்பாடுகளை நிராகரித்ததின் நீட்சியாக அவுலியாக்களை நிராகப்பதை வைத்துக் கொள்ளலாமா? இவைகள் எல்லாம் விவாதத்திற்குரியது...?

இந்திய வைதீக மரபும் இஸ்லாமிய வைதீக மரபும் ஒன்றல்ல என்பது மட்டுமல்ல எதிரெதிரானதும் கூட. சுத்தமும் பெயதுமான புருஷனின் முகத்தில் தோன்றியவர்கள், முதலில் வந்தவர்கள், உயர்வானவர்கள் என்று மனுதர்மம் அடையாளப்படுத்தும் பார்ப்பனர்களை வேதத்திற்கு உமையாளர்களாகவும், வேதம் ஓதவும், ஓதுவிக்கவும் உரிமை படைத்தவர்களாகவும் வைதீகம் கூறுகிறது. இஸ்லாமிய மரபு மேய்ப்பவர்கள், வேளாண்மையாளர்கள், நெசவாளர்கள், வர்த்தகர்கள், தச்சர்கள் இவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்களாகவும், தூதர்களாகவும் காட்டுகிறது. இது போன்ற தொழில் செய்பவர்களை வைதீகம் புறசாதிகளாக வர்ணத்திற்கு வெளியே நிறுத்துகிறது.

வேத மொழியை பார்ப்பனர்களுக்குய தனிச் சொத்தாக வைதீகம் பேச இஸ்லாம் எல்லா மொழிகளுக்கும் இறைவன் தூதர்களை அனுப்பியதாகக் கூறுகிறது. ‘‘(நபியே) ஒவ்வொரு தூதரும் (தன் மக்களுக்குத்) தெளிவாக விவத்துக்கூறும் பொருட்டு அவர்களுடைய மக்களின் மொழியைக்கொண்டே போதனை புரியுமாறு நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்’’ (திருக்குர்ஆன்14:4)

வைதீக மரபு அடித்தள மக்களை புறச் சேகளில் உட்காரவைக்கும். விருந்துகளில் இருந்து வெளியேற்றும். பந்தியில் இருந்து விலக்கப்பட வேண்டியவர்கள் என்ற மனுதர்மம் ஒரு பட்டியலே கொடுக்கும். ஆனால் இஸ்லாமிய மரபு விருந்துகளிலே மோசமானதாக ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்தைக் கூறும். மனித படைப்பைப் பற்றி வைதீக மரபு கூறும்போது இறைவனுடைய முகம் தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளிலிருந்து முறையே பார்ப்பன, சத்திய, வைசிய சூத்திரர்கள் தோன்றினார்கள் என்று பேசும். இவ்வாறு பிறந்தவர்களில் பார்ப்பனர்களே சிறந்தவர்கள் என்று மனுதர்மம் பேசும். ‘‘எவனுடைய மந்திர கோஷங்களாலும் அவிர்ப்பாகத்தாலும் தேவபிதுரர்கள் திருப்தியை அடைகிறார்களோ அவனிலும் சிறந்த ஜீவன் யார்?’’ (மனுதர்மம் முதல் அத்தியாயம் - விதி 95)

ஆனால் இஸ்லாம், பிறப்பின் பெயலான உயர்வு தாழ்வை நிராகரிக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஆண் பெண்ணிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்கிறது. பிறப்பினால் எந்த உயர்வும் தாழ்வும் இல்லை என்கிறது. குலங்களும் கோத்திரங்களும் அறிதலுக்கும் புதலுக்குமானது என்கிறது.

‘‘உங்களின் இந்த சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே’’- திருக்குர்ஆன் 21:92

கோயில் வழிபாடுகளில், கருவறைகளில், தலித்துகளின் எல்லை கவனமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தெருமறிச்சான்கள் கண்ணுக்குள் தெந்தும் தெரியாமலும் ஒவ்வொரு இடங்களிலும் தலித்துகளை தடுத்து நிறுத்துகின்றன. ‘‘இன்றைக்கு அமெக்காவுக்கு நான் போக வேண்டுமென்றால் விசா கிடைத்தால் போய்விடலாம். உலகில் எந்த நாட்டுக்கும் போகலாம் ஆனால் இந்த நாட்டுக்குள் இருக்கிற கோயிலுக்குள் நான் போக முடியாது’’ என்கிறார் ‘அய்யாவழி’ சமய மரபின் தலைவரான பால பிராஜதிபதி (புதிய காற்று நேர்காணல் - பக்கம் 19 மே 2003) வைதீக இந்து மதம் வர்ண ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில் சமூகத்தைக் கட்டமைக்கும்போது இஸ்லாமோ சமூக நீதியின் அடித்தளத்தில் சமூகத்ததைக் கட்டுகிறது.

வைதீக மரபும் இஸ்லாமிய மரபும் எதிரெதிர் திசைகளில் பயணப்படும் அதே நேரத்தில் அடித்தள மக்களின் பண்பாடும், இஸ்லாத்தின் பண்பாடும் பல்வேறு களங்களில் இசைந்தும், இணைந்தும் செல்வதை நாம் அவதானிக்க முடியும். முஸ்லிம்களும், தலித்துகளும் பரஸ்பரம் இணை, உறவு பண்பாடுகளைச் சார்ந்தவர்கள். இந்திய வைதீகம் மண்ணோடு தொடர்புடையவர்கள் என்று தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக்கி விலக்கி வைக்கும்.

இஸ்லாம் மனிதர்களை இறைவன் மண்ணிலிருந்து பிறப்பித்தான் என்று சொல்லும். ‘‘பூமியே உன்னுடைய மண்ணை நானெடுத்து, அந்த மண்ணில் நின்றுமொரு படைப்பை படைப்பேன்’’ (கஸஸýல் அன்பியா - பக்கம் - 21) என்று இறைவன் பூமியிடம் செய்தி சொன்னதாக இஸ்லாமிய தொன்மம் நம்புகிறது. படைத்ததுடன் மட்டுமல்லாமல் மனிதர்களை இறைவன் கௌரவித்ததாகவும் திருமறை பேசுகிறது (‘‘நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்’’ திருக்குர்ஆன்)

தலித்துகள், முஸ்லிம்கள் இருவரும் மண்ணோடு தொடர்புடையவர்கள். இந்த உலகில் ஒருமுறை பிறந்து, வாழ்ந்து, இறந்து போகின்ற ஒரு பிறப்பாளர்கள். உழைப்பை பிரதானப்படுத்துபவர்கள். ‘உழைப்பாளியின் வியர்வை உலருமுன் கூலியைக் கொடுங்கள்’ என்று சொன்னதும், உழைப்பாளியின் காய்த்துத் தழும்பேறிய கரங்களைப் பிடித்து முத்தமிட்டார்கள் என்பதும் நபியின் வாழ்விலிருந்து நமக்குக் கிடைக்கின்ற செய்திகள். இறைவனுக்கும் இபுலீசுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளியே இறைவன் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக நின்றதும், இபுலீசு நெருப்பு/மண் என்கின்ற குறியீட்டின் மூலம் மண்ணால் படைக்கப்பட்ட ஆதத்தை விடவும் நெருப்பால் படைக்கப்பட்ட தான் உயர்ந்தவன் என்று ஏற்றத்தாழ்வு பேசியதும் தான். இந்திய இஸ்லாமிய அறிவுலகம் இவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவது ஆச்சரியமானதாக இருக்கிறது.

திருமணம், திருமண விலக்கு, மறுமணம் இவைகள் தலித் சமூகத்திலும், இஸ்லாமிய சமூகத்திலும் இயல்பானதாகவே சொல்லப்படுகின்றன. ஆனால் மனுதர்மம் விதவை திருமணத்தைத் தடைசெய்கிறது. (கைம்மையினள் தன் காலம் உள்ளளவும் பொறுமை, தூய்மை, உடற்கலப்பின்மை, கள், புலால் கொள்ளாமை, மேன்மையான கற்பிலக்கணம் இவை பொருந்தக் கடவுள் மனு தர்மம் - 5ஆம் அத்தியாயம் 158 -வது பிவு) இஸ்லாம் பெண்ணுக்கு சட்ட பூர்வமாக வழங்கி இருக்கிற உமையைப்போல சில இடங்களில் அதைவிட அதிகமாகவும் இந்தியாவில் பெற்றிருப்பது அடித்தள சமூகத்துப் பெண்கள்தான்.

தலித் சமூக அமைப்பில் எளிமையான வழிபாட்டுத்தன்மையும் புரோகிதமற்ற நிலையும் காண்பதை இஸ்லாமிய சமூக அமைப்பிலும் காணலாம். கூட்டுத் தொழுகை, கூட்டுப் பிரார்த்தனை, கூட்டு உணவு என இஸ்லாம் வைதீகத்திற்கு எதிரான கருத்தியலை செயல்தளங்களில் கொண்டு செல்கிறது. முசாஹபாக்களின் வழி எல்லா மனிதர்களையும் கட்டித்தழுவரி வைக்கிறது.

இறைவன் அடியார்களிடமிருந்து விரும்புவது தனக்கு சஜ்தா செய்வதையா அல்லது மனிதர்களை கண்ணியப்படுத்துவதையா என்ற கேள்வியை எழுப்பினால் மனிதர்களை கண்ணியப் படுத்துவதைத் தான் இறைவன் முக்கியப்படுத்துகிறான். தன்னை வழிபடுவதை மட்டுமே இறைவன் முன்னிலைப்படுத்தி இருந்தால் ஷைத்தானுக்கும் இறைவனுக்கும் பகை முரண்பாடே வந்திருக்க வாய்ப்பில்லை. ஷைத்தானை விட இறைவனை அதிகம் தொழுதவர்கள் யாராக இருக்க முடியும். ஆனால் இறைவன் மனிதனை கண்ணியப்படுத்த கட்டளையிட்டது, மனிதனை கண்ணியப்படுத்த ஷைத்தான் மறுத்தது, அதுவும் எதை வைத்து பிறப்பை வைத்து.

ஆனால் முஸ்லிம் உலகம் தன் ஆன்மாவை இந்தியச் சூழலில் சாதியின் நுண் அலகுகளோடு ஊடாட வைத்திருக்கிறது. தன் சமயத்திற்குள்ளேயும், தன் சமயத்திற்கு வெளியிலும் மிகக்கவனமாக இந்த ஊடாட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மிக அடர்த்தியான முஸ்லிம் குடியிருப்புகளை உற்று அவதானிக்கும்போது அவர்களின் கொள்வினை கொடுப்பினை முறைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

இஸ்லாமிய ஞான மரபிலும், சமய நெறியிலும் நப்சை (ஆன்மாவை) வென்றெடுத்தல் என்ற பயிற்சி முறை ஒன்று உண்டு. அதன் அர்த்தப் புரிதல் பெரும்பாலும் உள்ளீடற்ற ஆன்மீகத் தளத்திலேயே கணக்கிலெடுக்கப்பட்டது. ஆனால் இந்திய மரபில் வெறும் ஆன்மீகச் சொல்லாடல் அல்ல. இந்திய மனிதனின் ஆன்மா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பழக்கப்பட்ட சாதி ஆன்மா. சாதிப் படிநிலைகளில் பழக்கப்பட்ட இந்திய மனிதர்கள்தான் இன்று முஸ்லிம்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மரபில் நப்சை வென்றெடுத்தல் என்பது சாதிவயப்பட்ட ஆன்மாவை வென்றெடுத்தலாக மாறவேண்டிய தேவை இருக்கிறது.

இதுதான் இந்திய இஸ்லாத்தின் ஆன்மீகமாக இருக்க முடியும். ராவுத்தர், லெப்பை, மரக்காயர், உருது, தமிழ், தங்ஙள், சையது, ஒசா, மோதீன் என்ற சொற்கள் எல்லாம் வெறும் சொற்களாக மட்டும் முஸ்லிம்கள் மனதில் பதியவில்லை. அவை அவை அதற்குய பண்பாட்டுக்கூறுகளுடனும், படிநிலைத் தன்மைகளுடனும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. எனவே முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே சுயசாதி நீக்கம் செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

இஸ்லாத்தின் உயிர்த்துவமாக இருக்கின்ற இந்த விடுதலை உணர்வை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் செல்வந்தர்கள் உள்வாங்கி அடித்தள மக்களை (கிறித்தவரி / கிறிஸ்தவர் அல்லாதார் அனைவருக்கும்) நோக்கி கல்வியை / மருத்துவத்தை / தொழில் நிறுவனங்களைக் கொண்டு சென்றதைப்போல இஸ்லாமிய சமூகம் அடித்தள மக்களை நோக்கிப் பயணப்படவில்லை.

இந்திய சமூக அமைப்பில் இஸ்லாம் / முஸ்லிம்கள் இதை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டுத் தொழுகையின்போதும் இமாம் சொல்லுகின்ற உங்கள் வசைகளை நெருக்கமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள் இறைவன் கிருபை செய்வான் (சப்பு சுப்க்கும் வரஹ்மத்துல்லா) என்ற சொல் தொழுகை நடவடிக்கையோடு சுருங்கிப் போனது.

இஸ்லாமிய சொற்கள் தந்து கொண்டிருக்கும் உயிர்த்துவமான பொருள்களை புறந்தள்ளிவிட்டு, முஸôஹாபா செய்வது கரங்களின் அளவா, உடலின் அளவாரி நபி தொழுகையின்போது வசையினை நேராக்கச் சொன்னார்களா என்று அதற்குய ஆதாரத்தைத் தேடி முஸ்லிம் அறிஞர்கள் அலைகிறார்கள். இஸ்லாத்தை தூய்மைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அதன் உயிரான ஜீவன்கள் புறந்தள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் அடித்தள மக்களையும், சிறுபான்மையினரையும் ஒடுக்குவதில் முன்னெப்போதையும் விட கூர்மைப்பட்டிருக்கும் இந்துத்துவத்தை எதிர்கொள்ள தலித் இஸ்லாமிய இணைவு அவசியமாகிறது. தலித் என்ற சொல்லை ஒடுக்கப்பட்டவர்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற அர்த்தப் புரிதல்களில் நாம் அணுகும்போது முஸ்லிம்களும் அதற்குள் வருவதைக் காணலாம். ‘‘ஒடுக்குமுறைக்கு உள்ளானோர் அனைவரும் தலித்துகளாகிவிட வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு முஸ்லிம் தன்னை தலித் என்று கொள்வதில் எந்தக் கேவலமும் இல்லை. என்று முதலில் நம்ப வேண்டும். நடைமுறையில் தலித்துகளைவிட கீழானவர்களாகவே முஸ்லிம்கள் நடத்தப்படுகிறார்கள்’’ என்று நூல் விமர்சனம் ஒன்றில் விமர்சகர் முஜீப் ரகுமான் (புதியகாற்று டிச. 2003)ல் கூறுகிறார்.

இந்தியச் சூழலில் இஸ்லாத்திற்கு திரும்புரிதல் என்பது இஸ்லாத்தை தலித் மயமாக்குதலுடன் தொடர்புடையது. இந்தியாவுக்கான இஸ்லாம் என்பது அடித்தள மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்தது. நபியை இறையை அல்லது குர்ஆன் ஹதீதைப் பின்பற்றுதல் என்பது எந்திரத்தனமான புறவயச் சடங்குகளை பிடித்துக்கொண்டு அலைவதல்ல. ஒடுக்கப் பட்டவர்களின் அனைத்து விடுதலைக்காகவும் போராடுவது ‘‘பலவீனமான ஆண்கள்’’ *பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்காக இறைவனின் பாதையில் போர் புரியாமல் இருக்க என்ன காரணம்’’(4:75) என்றுதான் இறைவனும் திருமறையில் கேள்வி கேட்கிறான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com