Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை

வஞ்சகம் நிறைந்த கேரளாவும் வஞ்சிக்கப்படும் தமிழகமும்

வையவன்

பெரியாறு படுகை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் அமைந்து இருந்ததால் அங்கு எப்போதுமே ஏராளமான மழை உண்டு. அந்த நீர்வளத்தைப் பயன்படுத்த அங்கு நிலவளம் கிடையாது. எனவே பெரும்பகுதி பயன்படுத்தப் படாமல் வீணாக கடலில் கலப்பதை தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆரம்பித்த அணை பயன்பாட்டுப் பிரச்சனை இன்று உச்சகட்டதை அடைந்துள்ளது. உச்சநீதி மன்றம் தலையிட்ட பிறகும் தீராமல் நீண்டுகொண்டே செல்கிறது.

இராமநாதபுர சேதுபதியின் உத்தரவின் பேரில் முத்து இருளப்ப பிள்ளையின் முயற்சியில் 1798ல் சர்வே எடுக்கப்பட்டது. 1807ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜார்ஜ் பாரிஸ் ஒரு குழுவினருடன் கம்பம் பகுதிக்குச் சென்று சர்வே எடுக்கும் போது கொடிய விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்கிறது வரலாறு. சர்வேயை தொடர்ந்து செய்யுமாறு மதுரை மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கால்டுவெல்லுக்கு அந்த காலத்தில் உத்தரவிடப்பட்டதாம்.

சர்வேயை தொடர்ந்து மேற்கொண்ட கால்டுவெல் ஓராண்டு கழித்து இது மிகவும் சிரமமானது என தனது அறிக்கையை தாக்கல் செய்கிறார். சென்னை ரெவின்யூ போர்டு மெம்பர் ஹாட்சன் பெரியார் அணைத் திட்டத்தைப் பற்றி விரிவான அறிக்கையை 1827ல் அளிக்கிறார். இவ்வறிக்கை 23 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் இடைவிடாத முயற்சியால் 1850ல் மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது.

பெரும் துயரத்திற்கிடையே 8 ஆண்டுகளுக்குப் பின் பெரியார் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 176 அடி. அணை நிரம்பும் போது நீரில் மூழ்கும் பகுதி 8000 ஏக்கர், அரங்கப்பாதையின் நீளம் 5704 அடி; நீரில் மூழ்கும் 8000 ஏக்கருக்கு ஈடாக ஆண்டு தோறும் ரூ.42,963.13 திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு சென்னை அரசு கொடுத்து வந்துள்ளது. 1959ம் ஒப்பந்தப்படி பெரியார் அணையிலிருந்து நீர் மின்சாரம் எடுக்கத் தொடங்கிய பிறகு, தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் ரூ.2,57,789 கேரள அரசுக்கு செலுத்தி வந்துள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கம்பம், தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை கிழக்கு, மத்தி, மேற்கு, மேலூர், நத்தம், சோழவந்தான், திருமங்கலம், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருப்பத்தூர், சிவகங்கை, இராமநாதபுரம், நிலக்கோட்டை, மானாமதுரை, திண்டுக்கல், பரமக்குடி, சேடப்பட்டி என 21 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. பெரியார் அணை கட்டிய பின்பு 1896ம் ஆண்டு கணக்குப்படி 60, 573 ஏக்கர் நிலத்தில் மட்டுமே மக்கள் விவசாயம் செய்து வந்தனர். கேரளத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்திற்குக் கூட இந்த அணையின் தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

62ச.கி.மீ. தண்ணீர் பரப்பளவும், 555 அடி உயரமும் 72 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையை கேரள அரசு 1976ல் கட்டியது. இவ்வணை 780 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. 1976ல் இடுக்கி அணையில் முழு அளவில் மின் உற்பத்தி நடக்கவில்லை. ஆனால் பெரியாறு அணை நீர் மின் உற்பத்தி நிலையத்தில் தொடர்ந்து உற்பத்தி நடந்தது. அப்போது கேரள மின்துறை அமைச்சராக இருந்த டி.கே.பரமேஸ்வரன் நாயர் அமைச்சரவையில் ஓர் ரகசிய அறிக்கை சமர்ப்பித்தார்.

“1895 - 1970 வரை கேரளத்துக்கு குத்தகை நிலத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ. 40,000 மட்டும் கொடுத்து வந்தது. அதன் பின்னர் ரூ. 2.15 லட்சமாக இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு வினாடிக்கு 140 மெகாவாட் மின்உற்பத்தி செய்து பல கோடி சம்பாதிக்கிறது தமிழகம். 180 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இடுக்கி அணையில் 60 மெகாவாட் மின் உற்பத்தி கூட நடக்கவில்லை. எனவே முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைத்தால் தான் இடுக்கி அணைக்கு முழுமையாக தண்ணீர் வரும். அதன் மூலம் கேரளத்தின் மின்தேவையை சமாளிக்க முடியும். அல்லது தமிழகத்திடமிருந்து ஆண்டுக்கு 500 கோடி பெற வேண்டும்’’ - இதுதான் பரமேஸ்வரன் நாயர் அளித்த அறிக்கையின் சாரம். இவ்வறிக்கை கேரள அரசியல்வாதிகளிடமும் மக்களிடமும் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 1978ல் மலையாள இதழ்கள் ‘பெரியார் அணை உடைபடும் அபாயம். அணையின் நீர்க்கசிவு அதிகரித்துக் கொண்டே போகின்றது’ என்று எழுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

குமுளி கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் அணைக்கு பின்புறம் உள்ளது. வண்டிப் பெரியார் 3350 அடி உயரத்திலும், பாம்பனர் 3700 அடி உயரத்திலும், ஏலப்பாறை 4850 அடி உயரத்திலும் உள்ளது. முல்லைப் பெரியார் அணையோ 2950 அடி உயரத்தில் உள்ளது. ஒருவேளை அணை உடைந்தால் 2800, 2700 என தண்ணீர் கீழ்நோக்கித்தான் போகுமே தவிர மேல் நோக்கிச் செல்ல வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொண்டே இந்த திட்டத்தை கேரளா அரசு எதிர்த்தது.

இதைத் தொடர்ந்து இருமாநில அரசுகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய நீர்விசை கமிஷன் 1978ல் அணையை பார்வையிட்டது. 1979ல் திருவனந்தபுரத்தில் இருமாநில அரசுகளுக்கிடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக் கொள்வது, அணையின் மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஆங்கர் டிரிலிஸ் மூலம் துளையிட்டு, கம்பிகட்டி கான்கிரிட் போட்டு அணையை பலப்படுத்த வேண்டும் - 1241அடி அணையின் நீளத்திற்கும் 404 அடி பேபி அணை நீளத்திற்கும் 5 அடிக்கு 5 துளைகளிட்டு கான்கிரிட் போட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

மேலும் அணையின் மொத்த நீளம் 1241 அடிக்கும் பேஸ் மட்டத்திலிருந்து 126 அடி உயரத்திற்கு அணையை ஒட்டி 10 அடி அகலத்திற்கு முட்டுச்சுவர் கட்ட வேண்டும். அணையின் 126 அடிக்கு மேல் உள்ள 16 அடி உயரத்திற்கும் 12 அடி அகலமாக இருந்ததை 21 அடி அகலமாக மாற்றிக் காட்ட வேண்டும். மழைக் காலத்தில் உள்ள உபரி நீரை வெளியேற்ற 16 அடி உயரம் 36 அடி அகலத்தில் ஏற்கனவே 10 போக்கிகள் இருந்தது. மேலும் 3 புதிய நீர்போக்கிகள் 16 அடி உயரம் 40 அகலத்தில் வைக்க வேண்டும். இதை ஒப்புக் கொண்ட தமிழக அரசு 12.59 கோடி செலவில் பணிகளை தொடங்கியது. மத்திய நீர்விசை தலைமைக் குழுவினர் நேரில் பார்வையிட்டு நற்சான்று கொடுத்த பிறகும், இது போதாது மேலும் சில வேலைகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டுமென மத்திய நீர்விசைக் குழுவிடம் கோரிக்கை வைத்தது கேரள அரசு. அதன்படி அணையின் கைபிடிச்சுவர் 6அடி உயரமாக இருந்ததை 8 அடியாக உயர்த்திக் கட்டப்பட்டது.

உலக வங்கியும், மத்திய நீரியல் கமிஷனும் அணையை பார்வையிட்டு அணையை பலப்படுத்தும் போது, எடுத்த பள்ளத்தை மூடும்படி அறிவுறுத்தினர். அதன்படி, புதிதாக குவாரியினால் கல்உடைந்து பள்ளத்தை நிரப்பும் திட்டத்தை மேற்கொள்ளும் போது குவாரியில் கல் உடைக்க கூடாது என கேரள அரசு தடுத்தது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு முயலும் போதெல்லாம் ஆளும் அரசுகள் எதிர்ப்பது தொடர்கிறது. 1986 - 1998 வரை அரசு அலுவலர் மட்டத்திலும் அமைச்சர்கள் இடையேயும் பேச்சு வார்த்தை நடத்தி எந்தப் பயனும் இல்லை. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீர்மட்டத்தை 15 அடியாக உயர்த்தும் படி வழக்கு தொடரப்பட்டது. அதே போல கேரளா உயர்நீதிமன்றத்திலும் 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்த வழக்கு ஒன்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதி மன்றத்தில் (1049-1055/1998) மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இருமாநில உயர் நீதிமன்றங்களில் நிலுவையிலிருந்த வழக்குகளை உச்சநீதி மன்றத்திற்கு மாற்றி தீர்வு வழங்க வேண்டி, இந்த மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியார் அணையின் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்றும் இதற்கு கேரள அரசு ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம் என்று தீர்ப்பளித்தது. கடந்த பிப்-27ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியானதை அடுத்து, மார்ச்-15 அன்று கேரள சட்டப் பேரவையைக் கூட்டி கேரள நீர்ப்பாசன மற்றும் தண்ணீர் பாதுகாப்பு சட்டத்திருத்தம் ஒன்று நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத் திருத்தத்தின் படி, முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் அதிகாரம் கேரள அணையின் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடமும்தான் கருத்து கேட்டறிந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நடந்தும் தமிழக அரசியல் கட்சிகள் முல்லைப் பெரியார் பிரச்சினையில் தமிழ் மக்களின் உரிமைக்கு போராட மறுக்கின்றனர்.

தண்ணீர் தர மறுக்கும் கேரளத்திற்கு தமிழ் நாட்டிலிருந்து கொண்டு செல்லும் மணல், கருங்கல், மாடு, வைக்கோல், மீன், பால், அரிசி, காய்கறி ஆகியவற்றை தடுத்து நிறுத்தி கேரளாவும் தமிழ்நாட்டை சார்ந்திருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுக்கும் கேரளா மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசை இங்குள்ள கட்சிகள் வலியுறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு உற்பத்தியாகுமிடம் தமிழர்கள் வாழும் பகுதியான தேவிகுளம் தாலுகாவில் தான் உள்ளது. இத்தாலுகா 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, கேரளாவோடு இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவையும் மீட்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை தமிழ்த் தேசீய வாதிகள் தற்போது எழுப்பி இருக்கின்றனர்.

1886ம் ஆண்டு போடப்பட்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தை அடாவடியாக கேரளா மீறுகிற போது, 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை தமிழ்நாடு தன் உரிமைக்காக மீறுவது தவறாகாது எனப்து நடுநிலையாளர்களின் கருத்தாக தற்போது உருவெடுத்துள்ளது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com