Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
இலக்கிய முற்றம் - சிறுகதை

மிச்சங்கள்
திருச்செந்தாழை

இவன் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னதாகவே கடைக்கு வந்துவிட்டான். இன்றுடன் இந்த கடைக்கு வருவது கடைசி என நினைக்கும் போதே சுருக்கென்றது. கடைவாசல் முன்பாக கம்பு, சோளம், கேப்பை என சிதறிக் கிடந்த குப்பையை வயதான ஒரு கிறுக்கி ஏதோ பேசியபடி கூட்டி அள்ளிக் கொண்டு இருந்தாள். வழக்கமான தினமென்றால் இந் நேரத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்திருக்கும் இவனுக்கு. கைலியை மடித்துக் கட்டியபடி,

“போளா... போ அப்பாலே... வியாபார கடைல கூட்டி அள்ளுறியே...”

என விரட்டியிருப்பான். இன்று அப்படி செய்யவில்லை. அந்த கிறுக்கி இவன் திட்டுவான் என எதிர்பார்த்தாள். இவனின் மௌனத்தின் புதிய தோற்றத்தைக் கண்டு சிரித்தபடி ஏதோ கூறியவாறே அகன்றாள்.

உசிலம்பட்டி கடற்கரை நாடாரின் மகன் கைலாச நாடார் நடத்துகின்ற இந்த மளிகைக் கடையின் வயது அறுபதைக் கடந்த பழமை வாய்ந்தது. படியில் தொடங்கி, சேரில் அளந்து, படிக்கல்லில் நிறுத்து இரண்டு மாதத்திற்கு முன் வாங்கிய கம்யூட்டர் தராசு ஆட்சியைப் பிடித்து முன் கூறியவற்றையெல்லாம் தோற்கடித்தது வரலாறு. அந்த நவதானிய ஸ்தாபனத்தின் சரித்திரம் தொன்மமாய் இருந்து வருகிறது. நூலாம்படை அடர்ந்த பரண்களில் சாக்கு மூடைகளில் கட்டிக் கிடக்கின்ற ஆதிகாலத்து பிரம்மாண்ட தராசு வகையறாக்கள். வருடத்திற்கு இருமுறை மலையிறங்கும் அழகராய் கீழ்வரும் புதுக்கணக்கிற்கும், ஆயுத பூஜைக்குமான அவ்விரு தினங்களில் இவனும், இவனையொத்த சிப்பந்திகள் ஐவரின் முதுகெலும்புச் சாறும் வேலையின் பளுவில் பொங்கி வழிந்தோடும்.

ஆத்து இறக்கத்தில் மூன்று பெரிய டிரம்களில் தண்ணீர் நிரப்பி, கடை முற்றத்தில் எல்லா இரும்பு வகை சாமான்களையும் கழுவி, துடைத்து, எண்ணையால் மெருகேற்றி, சந்தனம் ஒரு ரூபாய் அளவிலும், அதனுள் நாலணா அளவில் குங்குமம் வைத்து பூப்போட்டு (இதில் ஒரு முக்கியமான விசயம், கைலாச நாடார் ஒரு முக்கால் நாத்திகர்) கறுப்பு, வெள்ளையில் வரையப்பட்ட கடற்கரை நாடாரின் படத்திற்கும், அவரது அப்பாவே வரைந்ததாய் கூறுகின்ற பழுப்பேறிய ஒரு விநாயகரின் படத்திற்கும் மட்டுமே ரோஜா மாலைகள். மற்ற எவ்வித தெய்வ, மானுட படங்களும் இல்லாவிடினும் நிலைக் கட்டைகளுக்கு நடுவே கிடைக்கின்ற பன்னிரண்டு அடியையும் முஸ்லீம் வீட்டு மாப்பிள்ளையை அலங்கரிப்பதுப் போல பூச்சரம் தொங்க விட்டு அழகு பார்ப்பது கைலாச நாடாரின் ப்ரியமிக்க வழக்கங்களில் ஒன்று) சாம்பிராணி கொளுத்தி, கடையை நிறையச் செய்கின்ற அந்த நாட்களிலெல்லாம், ஒரு பெருமைமிக்க ஸ்தானமொன்றின் பணியாளன் என்ற கர்வம் சதா மனதினுள் பொங்கியபடி இருக்கும்.

இவன் மூர்த்தி அண்ணனை எதிர்பார்த்தான். அவர் வருகின்ற நேரமிது. அவர்தான் முதலாளி வீட்டில் கடையின் சாவியை வாங்கி வருபவர். அப்பொழுது அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமே உலகத்தின் மிகமதிப்புமிக்க பொருளொன்றை, வெறும் திருடர்கள் மட்டுமே நிறைந்திருக்கிற வீதியில் ரகசியமாய் கொண்டு செல்கிறவனைப் போல ஜாக்கிரதை மிகுந்த உடலசைவுகளுடன் கொண்டு வருவார். அவர் தான் கடையின் ஏஜென்ட் என்றழைக்கப் படும் மூத்த, அதிகாரமிகுந்த தொழிலாளி. அவர் சொல்வதை மட்டும் முதலாளி நம்புவார். முதலாளியிடம் பேசுமளவிற்கு உரிமை அவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். திறமைகளின் அடிப்படையில் ஏஜென்ட் பதவி மாறிக் கொண்டே வரும். இப்பொழுது வெறும் எடையாளாய் மாறிப்போன உலகநாதன் முதலில் அப்பொறுப்பில் இருந்தவர். மழைக் காலமொன்றில் பதம் பார்க்காமல் வாங்கிய ஐந்து மூடை கேப்பையும் இரண்டாவது நாளின் ஆரம்பத்திலேயே புகையத் துவங்க மூடைக்கு முன்னூறு வீதம் ஆயிரத்தைந்நூறு ரூபாயை நட்டக்கணக்கில் குறிக்க வேண்டியதின் கோபக்கணலில் நாடாரின் கண்கள் சிவக்க,

“முட்டாப் பயலே.. முட்டாப் பயலே, அறிவு வேணாம். சித்த வாயில போட்டு அரைச்சு பாக்குறதுக்கு என்ன. சோறு திங்கிற புத்தியிலேயே கிட. இப்ப எவன்டா தாங்குறது இந்த நட்டத்தை. உங்கப்பனா வாங்குவான். எடுவட்ட மூதி முகங்காணாத போ அங்கிட்டு...”

என பொங்கித் தள்ளி விட்டார். பின் ஒரு வியாபாரியிடம் நைச்சியமாய் குத்தூசிப் போட்டு உள்ளங்கையினால் பதவாடையை கசக்கி நீக்கி அந்த ஐந்து மூடையையும் மூர்த்தி அண்ணன் தள்ளி விட்டார். எப்பொழுதும் வீட்டிலிருந்து முதலாளிக்கு வருகின்ற ஏலக்காய் டீயின் மீதி அரை டம்ளர் அன்றைய தினத்திலிருந்து மூர்த்தி அண்ணனுக்கு வரத்துவங்கி அவரது பதவி உயர்வை ரகசியமாய் அறிவித்தது.

கைலாச நாடார் வேலை விஷயத்தில் எவ்வளவு கெடுபிடியோ, சம்பள விஷயத்திலும் தன்பேர் கெடாத வகையில் கொடுக்கின்றவர். சிப்பந்திகளின் மாத வருகைப் பதிவேடை சரிபார்த்து, கழிக்க வேண்டியதை கழித்து, கூட்டித் தரவேண்டிய சிறப்பு சம்பளங்களையும் சிட்டை போட்டு முப்பதாம், முப்பத்தி ஒன்றாம் தேதி இரவுகளில் குடுத்து விடுவார். மாதச் சம்பளத்தை நான்கு தவணையாய் வாங்குகின்ற பக்கத்து கடை பையன்கள் இவர் கடையின் வேலைப் பளுவை கண்டு அஞ்சுகின்ற அதே நேரத்தில் சம்பள சலுகைகளை கண்டு சப்புக் கொட்டிக் கொள்வர்.
கணக்கு வழக்கு இல்லாமல் வியாபாரம் பெருகிக் கொண்டிருந்த நாளொன்றில் புதிதாக வந்த மலையாளியொருவனின் வியாபாரத் தொடர்பு கடைக்கு கிடைத்தது. எந்த சரக்கையும் பேரம் பேசாமல் வாங்கி விடுகின்ற அவனது பாங்கு மூர்த்தியண்ணனை கவர்ந்தது. இந்த வாரம் வாங்குகின்ற சரக்கை கேரளாவின் ஏதோ ஒரு நகரில் விற்றுவிட்டு அடுத்த வாரம் கடனை திருப்பித் தருகின்ற நாணயத்தை அவன் முதல் ஆறுமாதங்களில் சிறப்பாக நடைமுறைப் படுத்தினான். ஆனாலும் ஒரு சிறு ஊசல் நாடாரின் மனதில் இருந்து கொண்டே வந்தது.

“ஏலே மூர்த்தி, என்னடா சிட்டைத் தொகை வாரத்துக்கு வாரம் ஏறிட்டே போகுது, பாத்துடா, விலாசம் தெரியாத ஆள், வியாபாரத்த சுருக்கிப் போடு..”

“முதலாளி, சரியா பட்டியலை நேர் செஞ்சிடாறான்னே..”

“அட அதுதாண்ட ஆரம்ப சூட்சுமம், பேரம் பேசாம எந்த யாவாரி வாங்குறானோ அவன் சுத்தமில்லாத ஆளுடா, என்னிக்காச்சும் வாரிடுவான் பாத்துக்க...”

“செரிங்க முதலாளி..”

மூர்த்தியண்ணன் கேட்டது போல பாவனை செய்தாலும் சிட்டையின் தொகை கூடிக் கொண்டே போனதுதான் உண்மை. முதலாளியின் மனஉறுத்தல் நிஜமாகிப் போனது. நாகர்கோவில் தரகர் தங்கச்சாமி பிள்ளை தான் அதனை உறுதிப்படுத்தினார்.

“என்னணாச்சி, விலாசம் தெரியாம பட்டியல் போடலாமா. பெரிய பெரிய விலாசமே தகிடுதத்தோம் போடுது. அதுலேயும் மலையாளத்தான். எந்த மலங்காட்டுல போயி அவனைத் தேடுறது. பாக்கி விழுந்து நாலு வாரம் ஆயிப்போச்சி. இதே மலையாளத்தான் முன்ன நாகர்கோயில் எட்வர்ட் அண்ணாச்சி கடைல பாக்கியேத்திட்டு மாயமாய்ட்டான். சுத்திமுத்தி நம்ம கடையிலேயே கைய வெச்சுட்டானே...”

முதலாளி ஒன்றும் பேசாமல் ஆவி பறந்து கொண்டிருக்கும் ஏலக்காய் டீ டம்ளரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே மொத் வியாபாரக் கடைகள் கைலாச நாடாரின் பற்றுக் கணக்கு நிரம்ப உயர்ந்து விட்டதாகவும், வசூல் பணம் சற்று சேர்த்து தரும்படியும் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த விஷயம் மட்டும் கசிந்தால் சரக்கு தருவதையே ஒட்டு மொத்தமாய் நிறுத்தி விட்டு, பாக்கியை வசூலிப்பதில் மட்டுமே குறிக் கோளாய் ஆகிவிடும். அப்புறம் சாதாரணமான சில்லறை வியாபாரத் திற்கு கூட சரக்கிருக்காது.

முதலாளி விழுந்து விட்டார் எனவும், கடை திவாலாகி மூடப்போகிற தெனவும் கூட வேலை பார்க்கும் பணியாளர்கள் பேசிக் கொண்டனர். ஒவ்வொரு ஆளாய் வேலையி லிருந்து நின்று கொள்ளத் துவங்கினர். கடையும் மெல்ல மெல்ல வேர் அரிக்கப்பட்ட பெருமரம் போல வீழத் துவங்கியது. சுவர் தெரியாத அளவிற்கு சரக்கு மூடைகள் அட்டியல் போடப்பட்டிருந்த நாட்கள் போய் பத்து கிலோவும், பதினஞ்சு கிலோவுமாய் சரக்குகள் சுருங்கிப் போய் சவலைப் பிள்ளையாய் கடை மாறிப் போனது. முதலாளியும் பிடிதளர்ந்து போய் வதங்கிப் போனார். கடன் தந்தவர்களின் பிடி இறுகிப் போன நாளொன்றில் கணக்கு தீர்த்து கடையை விற்றுவிட முடிவு செய்தார் முதலாளி. நெஞ்சில் சுருக்கென முள்ளேற்றிய அச்சேதியை இவனால் நம்ப முடியவில்லை. மூர்த்தியண்ணன் அழுதே விட்டார். தன்னால் தான் இத்தனையும் என புலம்பியபடி காய்ச்சலால் விழந்து விட்டார். இன்று கடையின் இறுதிநாள். இன்று நிச்சயம் வருவாரென எண்ணினான்.

தேரடியில் ஆடுபுலி வெட்டாட்டம் ஆடிக்கொண்டிருக்கிற எடையாட்கள் வந்து விட்டனர். குதிரை வண்டியிலும், ரிக்ஷாவிலுமாய் மொத்தக்கடை முதலாளிகள் வந்து சற்று நேரத்திற்கெல்லாம் குருசாமி ரிக்ஷாவில் முதலாளி வந்திறங்கினார். சுற்றும் முற்றும் சற்று நேரம் பார்த்தவர் ஒருமுறை கடையின் நெற்றியைப் பார்த்தார். பழைய காலத்து போர்டில் உசிலை கடற்கரை நாடார், கைலாச நாடார் வணிக ஸ்தலம் என்ற நீல எழுத்துக்களை மனதிற்குள் வாசித்தபடி கடைச்சாவியை கையிலெடுத்து,

“எங்கடா மூர்த்திய...”

என்றார். இவன் மெல்லிய குரலில், “வரலை அண்ணாச்சி” என்றான். சற்று யோசித்தவர்,

“ம்... சரி... இந்தா திற...” எனச் சாவியை நீட்டினார். இவனுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கியது. கடையில் சேர்ந்து பத்து வருட காலத்தில் கடையை திறக்கின்ற கௌரவம் அதன் கடைசி நாளான இன்று கிடைத்திருக்கிறது.
கொஞ்ச நேரம் எல்லோரும் கைலாச நாடாருக்கு அனுதாபம் சொல்கின்ற தோரணையில் பேசினர். இது நிகழ்ந்திருக்கக் கூடாதென சிலரும், அந்த மலையாளத்துக் காரனுக்கும், ஏஜன்ட் மூர்த்திக்கும் ரகசிய ஒப்பந்தம் இருப்பதாயும் சிலர் கூற, ஒரு அதட்டலில் அத்தனையும் நிறுத்தினார் கைலாச நாடார்.

“நிறுத்துங்க நாகு பிள்ளை! எல்லாம் முடிஞ்சி போச்சி. லாபத்த வாங்கி மடில கட்டி கொண்டு போன அன்னிக்கி அவனுக்கு பங்கா கொடுத்தேன். எனக்கும் ஆசை ஓடுனதாலதானே சரக்கு மேல சரக்கு போட்டேன். அவனை மட்டும் குறை கூறினா? அட்டியல் சாஞ்சு ஒரு தடவை அவன சாவடிக்க தெரிஞ்சது உங்களுக்குத் தெரியுமா? அவனுக்கு தலையெழுத்தா என்ன. ? இந்தா நிக்கிறானே இவன் கூடல்லாம் நாலு வார்த்தைப் பேசியிருப்பேனா.. எல்லாப் பயலுவளும் அத்துகிட்டு ஓடிட்டானுவ. இன்னமும் காலை சுத்திக்கிட்டு கிடக்கானே... நான் அள்ளிக் குடுப்பேன்கிற நெனப்புலயா... வேலைய பாரும்யா...”

இந்த சீறலில் எல்லா முணுமுணுப்பும் அடங்கிப் போக, கடன் தீர்ப்பு பத்திரத்தை கோவில்பட்டி ரங்கசாமி நாய்க்கர் வாசித்தார்.

“உசிலம்பட்டி கடற்கரை நாடாரின் மகனும், மதுரை வடக்கு வாசல் வணிகருமான கைலாச நாடாரின் வியாபார நடவடிக்கைகளின் பொருட்டு ஏற்பட்ட நஷ்டத்தினால் தான் சரக்காகவும், பணமாகவும் கடன் வாங்கியவர்களுக்கு, பேசி முடித்தபடி ரூபாய்க்கு நாற்பது பைசாவீதம் பைசல் செய்ய உடன்பாடு ஏற்பட்டு, அதனைக் கொடுப்பதற்கான வழியாக தனது கடைசரக்குகளையும், தான் நடத்தி வந்த டோர்.நிர்.72ம், இரண்டாவது வடக்கு தெருவில் அமைந்துள்ள ஆயிரத்து எண்ணூறு சதுர அடியிலுள்ள தகப்பனார் வழி வந்த பூர்வீகச் சொத்தான கடைகளையும் விற்று மேற்கூறிய இரு வழிகளிலும் கிடைக்கப் பெறும் மொத்தப் பணத்தை பாக்கியாளர்கள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு மீதித் தொகை வரும் எனில் கைலாச நாடார் வசம் ஒப்படைக்க வேண்டியது -இல்லை யென்றால் அன்னாரின் இயலாநிலையை விளங்கிக் கொண்டு நாற்பது பைசா தீர்வை சற்று குறைத்து அன்னாரின் பற்றுக் கணக்கை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு வாங்கியுள்ள பற்றுச் சிட்டைகளை ஒப்படைக்க வேண்டியது. கணீர் கணீரென ஒலித்த ஒவ்வொரு வார்த்தையிலும் கைலாச நாடார் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தார். அனைவரும் கையெழுத்திட்ட உடன்பாட்டு பத்திரம் அவர் வசம் ஒப்படைக்கப் பட்டது. இந்த நிமிசத்திலிருந்து அவரின் கடையல்ல இது.

“ஏ கந்தா சரக்கை எடை வைடா...”

நாய்க்கரின் உத்தரவுக்கிணங்க எடையாள்கள் செயல்படத் துவங்கினர். மலங்க, மலங்க விழித்தபடி மாநகராட்சி வண்டியில் இழுத்துப் போகின்ற தெருநாயின் பரிதாப நிலையை கடையில் உணர்ந்தான் இவன்.

“அண்ணே, கொக்கிய பாத்து போடுண்ணே, சாக்கு கிழியுது” - மிகவும் தாழ்மையுடன் சொன்னான். ஆனாலும் அந்த எடையாளுக்கு கோபம் சுர்ரென தலைக்கேறிவிட்டது.

“யேலே... பொத்திக்கிட்டு நில்லுடா. உம் முதலாளி கடை இல்லைடா இப்ப. ஒதுங்கிப் போ..”

என விரட்ட இவனுக்கு அவமானம் செரிக்காத உணவைப் போல கசந்தது.

“டேய், கொஞ்சம் ஒதுங்கிக்கோடா..”

என்றார் முதலாளி. கடையை ஒப்புக் கொண்ட சோழவந்தான் ராவுத்தர், பணக் கட்டுக்களை அடுக்கியபடி சிட்டைகளை தீர்த்துக் கொண்டிருந்தார்.

இவனுக்கு தலைசுற்றுவது போல் தோன்றியது. காலையில் சாப்பிடாமல் வந்தது. ‘இன்னும் இந்த இடத்தில் நின்று கொண்டிருப்பது அர்த்தமற்ற செயல் எனத் தோன்றியது. வெளியே வந்தான். மதிய வெயில் கடை வீதியெங்கும் பரவியிருக்க, பக்கத்து கடை முதலாளி, தொழிலாளிகளின் ஏளனப் பார்வையும், வார்த்தைகளும் முதுகில் ஒலிக்கக் கடைத் தெருவின் முக்கில் வந்து நின்றான். பசி காதடைக்க உடனே வீட்டிற்கு செல்ல வேண்டும் போல் இருந்தது. கொல்லம் பட்டறைச் சந்து வழியாகச் செல்லத் துவங்கினான்.

ஆட்கள் அற்ற அத்தெருவில் தோளில் பிழிந்த ஈரத்துண்டை கொடியில் உலர்த்தியபடி ஒரு பெண் இவனைப் பார்த்தாள். சற்றுத் தள்ளி கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை ஒரு நாய் அமர்ந்தபடி சுற்றி சுற்றி வந்தது. ஒளி சிதறிக் கொண்டிருந்த அந்த பாத்திரங்களின் மினுமினுப்பும் ஏற்கனவே இருந்த மயக்கத்திலும் இவனுக்கு சொருகிக் கொண்டு வர, அருகிலிருந்த திண்ணையில் சோர்ந்தமர்ந்தான்.

எந்த வினாடியில்அப்படியே மயங்கிப் போனான் எனத் தெரியவில்லை. தூரத்தில் முதலாளியின் குரல் கேட்பது போல தோன்ற, திறக்க முடியாமல் கண்ணைத் திறந்தான். குருசாமி ரிக்ஷாவின் முன் சக்கரம் கண்ணில் விழ, தொடர்ந்து உள்ளிருந்த முதலாளியும் தெரிந்தார்.

“ஏலே... என்னடா ஆச்சு..?”

என்றார். இவன் சிரமப்பட்டு எழுந்து நின்றான்.

“சொல்லுங்க... முதலாளி...”

“நீ பாட்டுக்கு ஓடியாந்துட்ட.. குறை மாசச் சம்பளம் வாங்காம. இந்தாடா பதினெட்டு நாள் சம்பளம். மேற்கொண்டு சேர்த்துதான் வெச்சிருக்கேன். சேர்த்து தரலாம்னு பார்த்தேன். மிச்ச தொகை நெனைச்சதவிட குறைச்சலாத் தாண்ட வந்துச்சு. பிடி..”

என்றார். இவனுக்கு கண்ணீரின் சூடு விழிகளில் பரவ, “வேணாம் முதலாளி, இருக்கட்டும்..” என்றான்.

“அப்பன் சொத்த வித்து கடனடச்சிட்டு வந்திருக்கேண்டா. உனக்கு கடன் தரணும்கிற கொறை இருக்கணுமாடா. பிடிடா. கைலாச நாடார் பேரில எவன்கிட்டயும் பற்றுத் தொகை இருக்க கூடாதுடா..”

இவனது பையில் பணத்தை திணித்தார். பின் கடற்கரை நாடாரின் படத்தையும், அந்த கறுப்பு வெள்ளை வினாயகர் படத்தையும் எடுத்து மடியில் வைத்துக் கொண்டபடி,

“ம்.. போட்டும்டா குருசாமி...”

என்றார். நகரத் துவங்கிய ரிக்ஷாவின் பின்புறத்தையே இவன் வெறித்தபடி நின்றான் ரொம்ப நேரமாய்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com