Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006

நேர்காணல் - பணி. சா. ராசநாயகம் சே.ச
சந்திப்பு: அ. ஜெகநாதன்

இயேசு சபை குருவான ச.ராசநாயகம் சென்னை லயோலா கல்லூரியில் உள்ள காட்சித் தகவலியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கடந்த ஆறு வருடங்களாக இதே கல்லூரியில் உள்ள பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். மாற்று ஊடகம், மாற்று நாடகம் குறித்தான உரையாடல்களையும் சில குறும்படங்களையும் சில வெளியீடுகளையும் தொடர்பகத்தின் வாயிலாக வெளிக் கொணர்ந்தவர். சிலம்பு என்ற மாதப்பத்திரிகையையும் கொணர்ந்தவர். பரவலாக அறியப்பட்ட பின்நவீனத்துவ எழுத்தாளர்; ஊடக ஆய்வாளர்; புலம் சார் ஆய்வாளர் என்ற பரிமாணங்களை கொண்ட ச.ராசநாயகம் தற்போது ‘கருத்துக் கணிப்பு’ மூலம் பரவலாக தமிழகம் முழுக்க அறியப்பட்டவர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மக்கள் சந்திப்பு என்ற பெயரில் மக்களின் மனநிலையை அறிய முற்படும் பின்நவீனத்துவ கதைக்காரரிடம் புதியகாற்றுக்காக உரையாடியதிலிருந்து. . .

கேள்வி: உங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்துங்களேன்?

நான் பிறந்தது அனுமந்தான்பட்டி என்ற கிராமம். இந்த கிராமம் தற்போது தேனி மாவட்டத்தில் இருக்கிறது. 1959ல் பிறந்தேன். பக்கத்து ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தேன். பியூசி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் படித்தேன். கல்லூரிப் படிப்பை திருச்சி ஜோசப் கல்லூரியில் முடித்தேன். பின்னர் சேசு சபையில் சேர்ந்தேன். முதுகலை தகவல் தொடர்பியல் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்தில் முடித்தேன். பின்னர் துறவறக் கல்வியான இறையியல்; தத்துவம் பயின்றேன். 1995ல் லயோலா கல்லூரியில் உள்ள காட்சித் தகவலியல் துறையில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தேன்.

கேள்வி: துறவறத்தில் இருந்து படைப்பிலக்கியம் நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?

துறவறத்திற்கும் எழுத்திற்கும் என்ன முரண்பாடு இருப்பதாக நினைத்து இந்த கேள்வியை எழுப்பினீர்கள்?

கேள்வி: உங்களுடைய எழுத்துக்கள் பின்நவீன எழுத்துக்கள் என அறியப் பட்டன. பின்னர் நீங்கள் தலித் இலக்கியம் என்பதான எழுத்தை எழுத முயற்சித்தீர்கள். பின் நவீனத்துவம் கட்டவிழ்க்கும். நீங்கள் ஒரு கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்டீர்கள் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டு கட்டவிழ்ப்புக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

பயிற்சி என்பது ஒருபுறம் இருக்கட்டும். நான் ‘சாமிக்கண்ணு என சில மனிதர்கள்’ எனும் நாவலில் இதற்கு பதில் சொல்லியிருந்தேன். ஒரு துறவி எப்படி காதலைப் பற்றி பேசலாம். காதல் உணர்வை பேசலாமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லியிருந்தேன்.

கேள்வி: நான் இந்த இடத்திற்கு வரவில்லை. ஒரு துறவிக்கு காதல், காமம் பாலுணர்வு முதலானவைகள் இயல்பாக இருக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டகம் வழி வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். ஒழுங்கை மீறும் ஒரு எழுத்தை எவ்வாறு உங்களால் சுவீகரிக்க முடிந்தது?

என்னுடைய இயல்பு என்று நினைக்கிறேன். நான் எப்போதும் விளிம்பு நிலையில் இருந்து சிந்திக்கக் கூடியவன். என்னுடைய படைப்புகளில் உள்ள முன்னுரையில் ச.ராசநாயகம், அனுமந்தன்பட்டி எனப் போட்டிருப்பேன். என்னுடைய வேர்கள் அங்குதான் இருக்கின்றன. அடிப்படையில் நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். ஏழை எளிய மக்கள் படும் துயரங்களை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன். அதிலிருந்து நான் விடுபட்டு மற்றொரு சிந்தனைப் போக்கிற்கோ, அதற்கு நேர்மாறான மதிப்பீடுகளை உள்வாங்குவதற்கோ என்னிடம் இடம் இல்லை. அது என் இயல்பும் கூட இல்லை. ஆனால் எந்த அமைப்பில் நான் இருந்தாலும் அடித்தட்டு பார்வையில் பார்க்கக் கூடிய மனிதனாகவே நான் இன்றும் இருக்கிறேன். அது என் இயல்பு. இந்த இயல்பின் காரணமாகத் தான் இயல்பாகவே மக்களின் இன்ப துன்பங்களை மிக இயல்பாக என்னால் சொல்ல முடிகிறது.

கேள்வி: உங்களுடைய வேலைகளின் ஊடே ‘கருத்துக் கணிப்பு’ எனும் செயல்பாட்டிலும் நீங்கள் இறங்கியிருக்கிறீர்கள். கருத்துக் கணிப்பின் இந்திய வரலாற்றை கொஞ்சம் கூறுங்களேன். .

கருத்துக் கணிப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே இருக்கின்றது. இது 1990ல்தான் இந்தியாவில் பிரபலமானது. தமிழ்நாட்டில் இன்று கருத்துக் கணிப்பு லயோலாக் கல்லூரிக் கருத்துக் கணிப்பால் தான் பேசப்படுகிறது என்று சொல்லலாம். கருத்துக் கணிப்பு பெரிய விசயம். இதை பரவலாக ஸ்பெசலைஸ்ட் ஏஜென்சிதான் பண்ண முடியும் என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். இன்றைக்கு கூட டி.ஆர்.பி என்பதைப் பாருங்கள். இந்த நிறுவனம் யாரிடம் தரவுகளை சேகரிக்கிறார்கள்; என்ன செய்கிறார்கள்; எப்படி டி.ஆர்.பி.யை நிர்ணயிக்கிறார்கள் என்பதை பரம ரகசியமாக வைத்திருக்கிறார்கள். எத்தனை பேரிடம் அவர்கள் கருத்துக் கேட்கிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. இதைக் கட்டுடைக்க வேண்டும். இதனை வெளிப்படையாக்க வேண்டும் என்றுதான் லயோலா கல்லூரி இப்பணியை மேற்கொண்டது. நாங்கள் என்ன செய்தோம் என்பதை வெளிப்படையாகக் கூறினோம். மக்களிடம் இருந்து தரவுகளை சேகரிப்பது; மக்களுக்குத் தெரியாமலேயே அதை மறைத்து வைத்தல் இவர்களது சுயநலத்திற்காக அந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்வது.

ஒருவிதத்தில் இது ஒரு மோசடி, சுரண்டல். இதனை நாம் வெளிப்படுத்த வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது. மக்களிடம் சென்று கேட்டு விட்டு, அம்மக்களிடம் என்ன கேட்டோம் என்பதை சொல்ல மறுப்பது என்ன விதத்தில் சரியாகும்? மக்களிடம் ஒன்றை கேட்டுவிட்டு அவர்களை தன் வழிக்கு திருப்புவது சரியல்ல. சரியான அணுகுமுறை அல்ல.

ஒவ்வொரு முறையும் மக்களிடம் சென்று அவர்களுடைய உணர்வுகளை சேகரித்து வெளிப்படுத்தும் போது அனைத்து ஊடகங்களையும் கூப்பிடுகிறோம். அனைவரும் வருகின்றனர். அதை வெளியிடும் போது ஊடகங்கள் தங்களது கருத்துகளுக்கு ஏற்ப அதை பயன்படுத்துகிறார்கள். நாம் கொடுக்கும் சில தரவுகளை விட்டுவிட்டு அவர்களுக்குத் தேவையான தரவுகளை மட்டும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது. நம்மைப் பொறுத்த வரையில் நடுநிலையில் நின்று அனைத்து ஊடகங் களையும் அழைக்கின்றோம். அந்த விதத்தில் லயோலா கணிப்புகள் சரியாக இருந்திருக்கின்றன. இதன் மூலமாக கணிப்பு என்பது ஒரு மந்திரச் செயலல்ல என்பது கட்டுடைக்கப் பட்டிருக்கிறது.

கேள்வி: கருத்துக் கணிப்பின் முறையியலாக நீங்கள் மேற்கத்திய முறையியலை பயன் படுத்துகிறீர்களா?

மேற்கத்திய முறையியலை நான் அப்படியே பயன் படுத்தவில்லை. அவர்கள் எண்களை மட்டுமே முக்கியத்துவப் படுத்துவார்கள். நான் எண்களை முக்கியமாக கருதுவது கிடையாது. மக்களின் உணர்வுகளை நான் முக்கியப் படுத்துகிறேன். மக்கள் சந்திப்புக்கு போவதற்கான காரணம் என்ன வெனில் மக்களிடம் இருந்து சேகரித்த தரவுகளின் முடிவுகள் நூலகத்திலும்; துறையிலும் முடங்கி விடுகின்றன. அவர்கள் என்ன பண்ணினார்கள். அதன் விளைவு என்ன என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடமையில்லையா. கல்வியாளனின் கடமையில்லையா. இதைக் கொண்டு சேர்த்தால் தானே மக்களும் வளர முடியும். மாற்றம் என்பது வரும். அதனால் தான் நான் செய்த ஆய்வுகள் மக்களை மையம் கொண்டதாக இருக்கும். அந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ‘மீடியா ரிசர்ச் மெத்தட்’ என்றால் இதுதான்.

மக்கள் சந்திப்பின் போது நானும் அக்குழுவுடன் செல்வேன். அக்குழுவில் எங்களது துறையைச் சார்ந்த மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் இருப்பர். அப்படிப் போகும் போது நேரடியாக மக்களைச் சந்திக்கும் அனுபவம் வித்தியாசமாகத்தான் இருக்கும். உண்மையான கல்வி என்பது அங்குதான் நமக்கு கிடைக்கும். கற்றுக் கொள்ளுதல் என்பது வெளிப்புறத்தில்தான் கிடைக்கும். மக்கள் சிந்திக்கிறார்கள்.

எங்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன என்பதை மக்கள் சொல்வதற்கு எங்கே செல்ல முடியும்? மேடை போட்டு சொல்ல முடியுமா? முடியாது. இங்கு அதற்கான இடமே கிடையாது. சில நாடுகளில் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதி வேலை செய்யவில்லையென்றால் அவர்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வது என்பதான நடைமுறை இருக்கிறது. இங்கு அது இல்லை. சரி மக்களை வேறு மாதிரியாக ஒருங்கிணைக்க வேண்டும் என நினைத்தால் அதற்கான அமைப்பு இங்கு இல்லை. மக்கள் தங்களது எண்ணங்களையும், உணர்வு களையும் வெளிப்படுத்தும் ‘அரங்கம்’ ஒன்று தேவைப்படுகிறது. அப்படி ஒரு அரங்கமாகத்தான் எங்களது சந்திப்பு இருக்கிறது.

கேள்வி: எத்தனை ஆண்டுகளாக இந்தக் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?

கருத்துக் கணிப்பு என்று சொல்லாதீர்கள். மக்கள் சந்திப்பு என்று சொல்லுங்கள். ஆரம்பத்தில் பண்பாடு மக்கள் தொடர்பகமும் காட்சித் தகவலியல் துறையும் இணைந்து இப்பணியை மேற்கொண்டது. அதற்கு முன்னர் 1989ல் காட்சித் தகவலியல் துறையை ஆரம்பித்தோம். அதன் அணுகுமுறை வித்தியாசமானது. Case study method, interview method, participation observation method போன்ற அணுகுமுறை இருக்கிறது. இந்த ஒவ்வொரு அணுகுமுறையை மாணவர்கள் தேர்ந்தெடுத்து சின்ன சின்ன ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு பயனுள்ள விதத்தில் ஏதாவது ஒரு ஆய்வுகளை செய்யலாம் என்று உருவானது தான் இந்த மக்கள் சந்திப்பாகும்.

பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தின் objectivesம்; புலத்தின் தேவை; தனிப்பட்ட என்னுடைய ஆய்வின் நோக்கம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்துதான் பரந்துபட்ட மக்கள் சந்திப்பு உருவானது. இதற்கு இரண்டு முக்கிய காரணம் இருந்தது. மாணவர்களுக்கு நேரடியான களப்பயிற்சி; மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு “அரங்கை” உருவாக்குவது.

கேள்வி: இந்தியா போன்ற நாடுகளில் கருத்துக் கணிப்பின் வளர்ச்சி நிலை எதுவாக இருக்கும்?

நான் பண்றது தேர்தலுக்காக அல்ல. மக்கள் சந்திப்பின் மூலம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 2000த்தில் இருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை நான் மக்கள் சந்திப்பை மேற்கொள்கிறேன். தமிழக மக்களின் உள்ளார்ந்த பண்பாட்டு மாற்றத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். தேர்தல் என்பது பண்பாட்டு ரீதியாக, பொருளியல் ரீதியான முழு ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் கருவியாக இருக்கிறது. மக்களின் பண்பாடு சார்ந்த, பொருளியல் ரீதியான வெளிப்பாடாக தேர்தல் இருந்து வருகிறது. உதாரணமாக எரிமலைக்குள் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலகட்டத்தில் எரிமலையாக வெளிவருகிறது. அந்த மாதிரிதான் நம் தமிழ் மக்களின் மாற்றங்கள். அது எந்த சாதி மக்களாக இருந்தாலும் சமூக உளவியல் மாற்றங்கள், அதன் கூட்டுச் செயல்பாடு தேர்தல் வழியாக வெளிப்படுகிறது.

அதனால்தான் தேர்தல் நேரத்தில் தேர்தல் முடிவுகளை மக்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை ஆழமாக ஆய்வுக்குட்படுத்துகிறோம். அதனால்தான் தேர்தலை ஒட்டிய நமது மக்கள் சந்திப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு இடத்திலேயும் மக்களை சந்திக்கும்போது உரையாடல் நடக்கிறது. ஒரு இடத்தில் மக்களை சந்தித்து மறு இடத்திற்கு செல்லும் போது அங்கே மக்களுடனான உரையாடல் நடக்கும். மக்கள் மிக நேர்த்தியாகவே உரையாடுகிறார்கள். நாங்கள் மக்கள் சிந்தனையை தூண்டிவிடுகிறோம். இது ஒரு சமூகப் பணி.

கேள்வி: பொதுவாக ஊடகங்களின் மக்கள் விரோத திணிப்பிற்கு மாற்றாக உங்கள் கருத்துக் கணிப்பு எவ்வாறு இருந்தது என்பதை ஒப்பிட்டு கூறுங்களேன். நீங்கள் கூட திமுக அணிதான் அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று சொல்லியிருந்தீர்கள் அல்லவா?

எங்களுடைய கருத்துக் கணிப்புதான் மிகச் சரியாக இருந்திருக்கிறது. திமுக அணி 163 வரும் என்றோம். திமுக அணி 160 பெற்றிருக்கிறது. கருத்துக் கணிப்பு என்பதை படித்தவர்களும் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளவில்லை. இதை நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன். மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். கல்வி நிலையத்தில் படித்து பட்டம் பெற்றவர்களைத் தான் De-Educate பண்ண வேண்டியிருக்கிறது. அவர்கள் கற்றுக் கொண்ட விசயத்தில் இருந்து அவர்களை கழற்றி விட வேண்டும். இரண்டாவது விசயம் ஆரம்பத்தில் இருந்தே மக்களிடம் ஒருவித ஏமாற்றம் இருந்தது. ஒரு விரக்தி வெளிப்பட்டது. என்னவென்றால் தேர்தல் முறையில் ஒரு குறைபாடு இருக்கிறது. மக்களுக்கு என்ன தேவை இருக்கிறது. ஒரு தொகுதியில் அதிமுக அல்லது திமுக, ஒன்றிரண்டு சுயேட்சைகள் தேர்தலில் இருக்கிறார்கள்.

இந்த அளவான தேவையில் தான் ஒருவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக் கிறது. அதுதான் தேர்தல் முறையாக இருக்கிறது. இதை விட்டுவிட்டு மக்கள் தனது விருப்பப் பட்டவரை தேர்ந்தெடுக்க முடியாது. ஒரு தொகுதியில் இரண்டு கெட்டவர்கள் இருக்கிறார் கள் என்றால் அவர்களில் குறைந்து கெட்டவரைத் தான் தேர்தலில் தேர்ந்தெடுக்க முடியும். ரொம்ப நல்லவர்; ரொம்ப கெட்டவர் இருக்கிறார் என்றால் மக்கள் முடிவு தெளிவாக இருக்கும். இப்ப இருக்கிற சூழல் என்னவென்றால் people like make a choice between two eagles. இதைத்தான் மக்கள் ‘ஃபீல்’ பண்ணுகிறார்கள். இதனால் தான் தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களிக்க மறுக்கின்றனர். இந்த தேர்தலில் சதவிகிதம் அதிகமானதற்கு காரணம் இரண்டு அணிகளுக் கிடையேயான போட்டி; எந்த அணிக்கும் ஆதரவாக எந்த அலையும் வீசாதது; மக்கள் தொடர்ந்து நடுநிலையாளர்களாக இருந்து வேடிக்கை பார்த்தது. மக்களைப் பாராட்ட வேண்டும் இந்த முடிவு எல்லாருக்கும் ‘டிஸ்சப்பாயின்மென்ட்’ தான். தொலைக் காட்சியில் பதவியேற்பு விழாவை பார்த்துக் கொண்டிருந்தேன். யார் முகத்திலும் வெற்றி பெற்று விட்டோம் என்ற மகிழ்ச்சி தெரியவில்லை. திமுக தலைவர் முகத்தில் பெரிய வெற்றி பெற்று விட்டோம்; அராஜக ஆட்சியை வீழ்த்தி விட்டோம் என்ற உணர்வு தென்படவில்லை. ஆக ஒரு அட்டகாசமான முடிவை மக்கள் கொடுத்திருக்கின்றனர்.

மக்கள் தற்போது இருக்கின்ற கட்சிகளுக்கான மாற்றை எதிர்பார்த்தனர். 2001 நாடாளுமன்றத் தேர்தல்; காஞ்சி கும்மிடிபூண்டி இடைத்தேர்தல்; தற்போதைய சட்ட மன்றத் தேர்தல் ஆகிய தேர்தல்களில் மாற்றுக்கான ஏக்கம் அதிகரித்து வருவதை நான் பார்த்தேன். இந்தச் சூழலில்தான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். முதலில் திமுகவை சாடினார். அப்போதிருந்த மக்களின் மனநிலைப் போக்கிற்கும்; இரண்டு கட்சிகளை எதிர்த்து அவர் பேசிய பின்பு இருந்த மக்களின் மனநிலைப் போக்கிற்கும் இடையே பயங்கர வேறுபாடு இருந்தது. தற்போது அவர் நடுநிலையாக இருந்து பேசியபின்பு மக்கள் அவரின் நம்பிக்கையை தேர்தல் வாயிலாக பிரதிபலித்தனர் இது ஒரு ‘சாம்பிள்’தான்.

ஆனால் விஜயகாந்த் முழுக்க முழுக்க மக்களிடம் உள்ள ஏக்கங்களை, மாற்றுக்கான ஏக்கங்களை முழுமையாக நிறைவு செய்யக் கூடியவரா என்பதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. மக்களிடமும் அந்த சந்தேகம் வெளிப்படுகிறது.
ஆக இன்றையத் தேவை நிச்சயமாக இப்பொழுது இருக்கக் கூடிய கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், தலைமை களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மாற்றான புதிய கட்சிகள், புதிய தலைமைகள் வரவேண்டும் என இளைஞர்கள் விரும்புகின்றனர். நான் நினைக்கிறேன் 2011ல் இப்படியான ஒரு மாற்றம் வெளிப்படும். மாற்று வருவதற்கான சாத்தியப் பாடும் இருக்கிறது.

கேள்வி: தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கான மனோபக்குவத்திற்கு வந்து விட்டார்கள் என்பதாக சொல்லலாமா?

கூட்டணி ஆட்சிக்கான மனோபக்குவம் என்று சொல்லலாம். எந்தக் கட்சியையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூட சொல்லலாமே. கூட்டணி ஆட்சி வேண்டும் என்பது ஒரு நாணயத்தின் ஒரு பக்கம். இதை 2001லேயே மக்கள் சொல்லி யிருக்கிறார்கள். அதை நான் பதிவு பண்ணியிருக்கிறேன். தனித்து ஒரே ஆளிடம் ஆட்சியை கொடுத்து அவர்களை கட்டுப் படுத்துவதற்கு எந்த வழியும் இல்லாமல் போவதைவிட சோந்து ஆளவேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. இது ஒரு பக்கம் இந்தத் தேர்தலில் இதுமட்டும் காரணம் கிடையாது. நாணயத்தின் அடுத்த பக்கம் என்னவென்றால் எந்த கட்சியையும் மக்கள் நம்பவில்லை அல்லது ஆதரிக்கவில்லை. இது அதிருப்தியின் வெளிப்பாடு. இதையும் இணைத்து நாம் பார்க்க வேண்டும்.

கேள்வி: வட மாவட்டச் சூழல் பா.ம.க.வுக்கு எதிரான பிறசாதிகளின் வெறுப்பை இத்தேர்தல் பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக தன் சொந்த சாதியே இல்லாத விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் தலித் மற்றும் வன்னியர் அல்லாத சாதிகளின் கூட்டுறவால் வெற்றி பெற்றிருக்கிறார். திண்டிவனம் தொகுதியில் அ.தி.மு.கவை வெற்றிபெற்றிருக்கிறது. பாமாகவும் 33 இடத்தில் போட்டியிட்டு 18 தொகுதியைத்தான் கைப்பற்றி இருக்கிறது. ஒரு தொகுதியை அது தற்போது இழந்திருக்கிறது. தெற்கே விஜயகாந்த்தால் அவ்வளவாக காலூன்ற முடியவில்லை. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தேர்தலுக்கு முன்பே வடக்கில் விஜயகாந்த் வளரவில்லை என்பதை என்னால் கணிக்க முடிந்தது. வன்னியர் என்ற குறிப்பிட்ட சாதியால் விஜயகாந்த் காலூன்றினார் எனக் கூறுகிறீர்கள். அப்படி நாம் கூறிவிட முடியாது. இதை எப்படிப் பார்க்க வேண்டுமானால்; வன்னியர்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் பா.ம.காவிற்கு வன்னியர்களின் எத்தனை சதவீதத்தினர் ஆதரிக்கின்றனர். ஆதரவாளர்களாக இருக்கின்றனர் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் எந்த சாதியாக இருந்தாலும், கொஞ்சம் 2 சதவீதம் கூட குறைவாக இருக்கலாம். தி.மு.க. விற்கு எல்லா சாதியிலும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதே மாதிரி அ.தி.மு.க.விற்கும் இருக்கிறார்கள். இதில் சாதியை அடிப்படையாக வைத்து தோன்றிய எந்தக் கட்சியும் சிதைவை ஏற்படுத்த வில்லை. இதை நாம் கவனிக்க வேண்டும். சாதியை அடிப்படையாகக் கொண்ட கட்சிக்கு எத்தனை சதவீதம் ஆதரவு இருக்கிறது. கம்மிதான். வன்னியர்களில் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப் பவர்கள், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப்பவர்களைக் காட்டிலும் பா.ம.கவிற்கு ஆதரவு தெரிவிப் பவர்கள் குறைவுதான். தலித் மக்களிடம் கூட தி.மு.க.வை ஆதரிக்கும் தலித்துகள், அ.தி.மு.க.வை ஆதரிக்கும் தலித்துகளைக் காட்டிலும் திருமாவளவனை ஆதரிக்கும் தலித்துகள் குறைவு தான். அதனால் சாதியை முன்னிலைப் படுத்தி செல்கிறார்கள் என்பதற்காக சாதி முழுக்கவும் அவர்களைத்தான் ஆதரிக்கின்றன எனச் சொல்ல முடியாது.

கேள்வி: விஜயகாந்த்தின் வாக்கு வங்கி எந்தக் கட்சியை பாதித்திருக்கிறது?

மேலோட்டமாக பார்க்கும் போது; நம்பர்களை பார்க்கும் போது அ.தி.மு.க. வாக்கு வங்கியைத்தான் அதிகமாக பாதித்திருக்கிறது. கடைசியாக நாங்கள் வெளியிட்ட கணிப்பில் சுட்டிக் காண்பத்தோம். அ.தி.மு.க. வாக்கு வங்கியை தே.மு.தி.க. பிரித்தது என்பதை விட அ.தி.மு.க. சார்பு வாக்கு வங்கியை தே.மு.தி.க. கைப்பற்றி இருக்கிறது.

கேள்வி: தி.மு.க. கட்சி கூட்டணியின் பலத்தில் இருந்தாலும், அராஜக ஆட்சி என கோசமிட்ட போதிலும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி வீழ்ச்சியடைய வில்லையே?

இந்த தேர்தலில் மிக அருமையான முடிவுகள் வெளிப்பட்டன. மக்களின் அரசியல் நிலைப்பாடு இருக்கிறதல்லவா; மக்கள் ஒரு ‘ஸ்டெப்’ வெளியில் வந்து ‘நீங்கள் நாடகம் போடுங்கப்பா’ என்று வேடிக்கை பார்த்தனர். அரசியல் அரங்கத்தில் கட்சிகள் நாடகம் போட்டன. மக்கள் தள்ளி இருந்து நாடகம் பார்த்தனர். தமிழ்நாட்டு மக்களுக்கு சிலையே வைக்கலாம். கருத்து கணிப்புகள் மக்களை ஆட்டுமந்தை போல் ஒரு கட்சிக்கு தள்ளிவிடும் என்றெல்லாம் சொன்னார்கள். அதெல்லாம் கிடையாது. மக்கள் தன்நிலையில் நின்றுவிட்டார்கள். கண்மூடித்தனமாக ஆதரவை மக்கள் அளிக்கவில்லை. தி..மு.க.வின் ஓட்டு வங்கி அப்படியே நிற்கிறது.

நடுநிலை வாக்காளர்கள் 15 அல்லது 20 சதவிகித வாக்காளர்களில் பெரும்பாலோர் விஜயகாந்திற்கு ஆதரவு தெரிவித் திருக்கிறார்கள். சில சுயேட்சைகளுக்கு அங்கங்கே ஆதரவு போயிருக்கிறது. வித்தியாசம் ரொம்ப கம்மி. இந்த தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித் துவம் இருந்திருக்கும் என்றால் ரொம்ப சூப்பரா இருந்திருக்கும். சட்டமன்றத்தின் அமைப்பே வித்தியாசமாகியிருக்கும். அ.தி.மு.க.விற்கு 61 சீட்டை விட அதிகமாகியிருக்கும். தி.மு.க.விற்கு 95 என்பது குறைந்திருக்கும். ஏறத்தாள சமமாக இருந்திருக்கும். ஒவ்வொரு கட்சியும் அவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் எனும் போது 20, 25 சீட் வரைக்கும் வந்திருக்கும்.

கேள்வி: தலித் வாக்கு வங்கி வடக்கே சற்று முன்னேறி வந்திருப்பதாகத் தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதியை சொந்த சின்னத்தில் நின்று கைப்பற்றி இருக்கிறார்கள். தெற்கே தலித் வாக்கு வங்கி சற்று பின்னடைவை பெற்றிருக்கிறது. குறிப்பாக கிருஷ்ணசாமி 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறார்.

இதனை நீங்கள் எப்படி கண்ணோக்குகிறீர்கள்?

இது பின்னடைவு அல்ல. திருமாவளவன் மாதிரி ஒரு லீடர்; சிந்தித்து பேசும் ஆற்றலுடையவர், சிந்திக்கவும் வைப்பவர். இவரின் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தான் இருந்திருக்கிறது. தெற்கே இந்த அளவிற்கு இளைஞர்களை சிந்திக்கத் தூண்டும் அளவிற்கு யாரும் இல்லை. அப்படி ஒரு தலைவர் உருவாக வில்லை அல்லது திருமாவளவனின் செயல் பாடுகள் விரிவடைய வில்லை. முக்குலத் தோரில் கள்ளர், மறவர், அகமுடையார் என்று இருக்கின்றனர். இவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். பொதுவான விசயத்தில் முக்குலத்தோர் என ஒன்றிணைந்து கொள்வர். இதைப்போன்று ஓட்டியும் ஒட்டாமலும் இருக்கும் போக்கு தலித்துகளிடமும் இருக்கிறது.

தலைவர்களிலேயும் கூட ஒருங்கிணைந்த தலைமை வரவில்லை. தலித் அரசியல் ஒரு ‘பிராசசில்’ இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தலித் அரசியல் இப்படி இல்லையே. இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதே ஒரு வளர்ச்சி தான். இந்த தேர்தல் சில இடைவெளிகளை; சில குறைபாடுகளை சுட்டிக் காண்பித்திருக்கிறது. அதை நிறைவு செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும்.

கேள்வி: விடுதலைச் சிறுத்தைகள் 9 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டை மட்டும் வென்றிருக்கின்றன. அந்த இரண்டு தொகுதியிலேயும் வி.சி. தனித்தே நின்றாலும் வெற்றியடையும் எனச் சொல்லப்படுகிறது. இத் தொகுதிகளில் தலித்துகள் அடர்த்தியாக வாழ்வதே இதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இவை தவிர்த்த ஏனைய தொகுதிகளில் வி.சி. பிற்பட்டவர்களை நம்ப வேண்டியிருந்தது. பிற்படுத்தப்பட்டவர்கள் இங்கு வி.சியை ஏற்கவில்லை. தலித்து மக்களின் சுய அடையாள அரசியலை பிற்படுத்தப்பட்டவர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்பதாக இதனைப் பொருள் கொள்ளலாமா?

நான் வேறு மாதிரி பார்க்கிறேன். நாற்பத்தி நான்கு தனித் தொகுதிகள் இருக்கிறது. தலித் கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தத் தொகுதிகளில் பொது வேட்பாளரை நியமிக்கவேண்டும். திராவிட கட்சிகளிடம் சேராத தலித் அமைப்புகள் இத் தொகுதிகளை கைப்பற்றிவிட்டால் பிற அரசியல் கட்சிகள் தலித் அமைப்புகளை நோக்கி வந்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

அரசியல் ரீதியாக தலித் மக்களின் மேலாண்மையை நிலை நிறுத்துவதற்கு; அல்லது ஒரு ‘பார்கேன் பவரை’ கொண்டு வருவதற்கு இது பயன்படும். இதனை முழுமையாக நாம் பயன்படுத்தவில்லை. சாதி என்பது ஆழ வேரூன்றி இருக்கிறது. வேறு வழியில்லாமல் கட்சிக்காக தலித் அல்லாதவர்கள் தனித் தொகுதியில் வாக்களிக்கிறார்கள். தற்காலிகமாக சாதியை கடந்து வாக்களிக்கிறார்கள். இது சட்டபூர்வமான நிர்பந்தம். இதனால் அம்மக்கள் முழுமையாக சாதி உணர்வில் இருந்து விடுபட்டதாக அர்த்தம் கொள்ள கூடாது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com