Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
ஆதாயம் தரும் பதவி சர்ச்சை

இரட்டை நாற்காலிச் சண்டை
ராஜசேகரன்

“நாணயமான அரசாங்கம் வேண்டுமெனில்
பெருந்தன்மையான
ஒரு தலைவன் வேண்டும்”
                                -கன்பூசியஸ் (சீனத் தத்துவஞானி)

கடந்த நாடாளுமன்ற இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைத்து பின் மெல்லத் தணிந்திருக்கிறது. ஆதாயம் தரும் இரட்டைப் பதவி பிரச்சினையில் ஒன்றிரண்டு பேரல்ல; மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 62 பேரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 75 பேரும் வசமாய் மாட்டிக் கொண்டனர்.

மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் ‘உருப்படியான’ வருமானம், அதிகாரம், செல்வாக்கு இல்லை என்பதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் தமது கட்சியின் ‘விசுவாச’ ஊழியனுக்கு கட்டாயம் இன்னுமொரு கூடுதல் பதவியை வாங்கித் தந்து விடுகின்றன. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அரசியல் கட்சியின் தலைவர்களே கூட இவ்விஷயத்தில் சில நேரங்களில் மாட்டிக் கொள்வதுண்டு. அப்படித்தான் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாவும் மாட்டிக் கொண்டார். ஏற்கனவே லஞ்சம் வாங்கிய வழக்கில் வசமாய் மாட்டிக் கொண்டு திண்டாடிய பா.ஜ.க. இதை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டது.

தேவையில்லாமல் ஜெயாபச்சன் விஷயத்தில் தலையிட்டு மகுடத்திற்கே சோதனை வந்து விட்டதை உணர்ந்த சோனியாவும் சர்ச்சைக்குரிய ‘தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர்’ பதவியை ராஜினாமா செய்ததோடு தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் தூக்கியெறிந்தார்.

‘பதவிக்காக நான் அலையவில்லை. தியாகம், சேவை ஆகிய இரண்டும் தான் எனது லட்சியங்கள்’ என்று பிரச்சாரம் செய்த சோனியா மீண்டும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். கடந்த இரண்டு மாதங்களாக தூங்குவதாய் நடித்துக் கொண்டிருந்த இப்பிரச்சினை ‘பதவி இழப்பு தடுப்பு மசோதா 2006’ வாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் விசுவரூபமெடுத்து இருக்கிறது. இதற்காக 1959ஆம் ஆண்டு சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நடந்து முடிந்த இவ்வளவு பெரிய பிரச்சினைக்குப் பின்னால் ஒரு பெரிய உண்மை மறைந்திருக்கிறது. இத்தனை நாள் இது குறித்த சர்ச்சை இவ்வளவு பெரிதாக எழாமல் இருந்தது ஏன்? அதற்கான பதில் ஒரே வரியில் அடங்கி விடுகிறது. ‘அரசியல் கட்சிகள் தங்களுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு மௌனம் சாதித்தன’ என்பது தான் அது.

இப்பொழுதும் ஜெயாபச்சன் பிரச்சினையில் காங்கிரஸ் இவ்வளவு மூர்க்கத்தனமாய் நடந்து கொண்டிருக்காவிட்டால், இது பழைய படி தூங்கிக் கொண்டுதானிருந்திருக்கும். நல்லவேளை ஒரு நல்ல ‘இடைவேளை’ ஏற்பட்டிருக்கிறது. ஆம், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 44 எம்.பிக்களின் இரட்டைப் பதவியை மட்டும் பிடுங்க முடியாதவாறு மீண்டுமொரு நங்கூரம் பாய்ச்சப் பட்டிருக்கிறது; முன்னைவிட இப்போது கொஞ்சம் ஸ்திரத் தன்மையுடன்.

இவையெல்லாவற்றையும் தாண்டி முதன்மையான பிரச்சினையாக இவ்விஷயத்தில் பார்க்கப்பட்டது சோனியா வகித்த தேசிய ஆலோசனைக்குழுத் தலைவர் பதவி குறித்து தான். இது குறித்து மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் அத்வானி தெரிவித்த கருத்துக்களை மீடியாக்கள் செவிமடுக்கத் துவங்கியுள்ளன.

“தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியில் சோனியா இருந்த போது பிரதமரின் அதிகாரத்தையும் மீறிய ‘சூப்பர் பிரதமராக’ செயல்பட்டார். அதனால், பிரதமர் அலுவலகத்தின் மதிப்பு குறைந்தது. உண்மையான பிரதமர் பதவி போல செயல்பட்ட தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவிக்கு விலக்கு அளிக்க வேண்டுமானால் தனியாக அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். சாதாரண அரசியல் மசோதா வழியே இதைச் செய்யக் கூடாது. அரசின் நடவடிக்கை அரசியல் சட்டப்பிரிவு 102-வது விதிக்கு எதிரானது. சட்ட நெறிமுறை களை அரசு தகர்க்கிறது” என்பது தான் அவரின் வாதம்.

‘ஆதாயம் தரும் பதவி தொடர்பாக அரசியல் சட்டத்தின் 102, 103 ஆகிய பிரிவுகளில் நியாயமான சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. அந்த குறிப்பிட்ட பிரிவுகளை சீர்குலைக்கும் வகையில் சட்டத் திருத்தம் இருக்கக் கூடாது. பொதுவான கண்ணோட்டத்தில் சட்டத்திருத்தம் இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒருவரை காப்பாற்றும் வகையில் இருக்கக் கூடாது’ என்றும் முன்மொழிந்திருக்கிறார்.

இவ்விசயத்தில் இன்னொரு மிக முக்கியப் பிரச்சினையும் விவாதிக்க வேண்டியுள்ளது. அதாவது மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு பதவிகள் வகிப்பது என்பது நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. அதே சமயத்தில், எந்தெந்தப் பதவிகள் ஆதாயம் தரும் பதவிகள் என்று இதுவரை வரையறுக்கப்படவும் இல்லை. அப்படி நெறிமுறைப் படுத்துவதற்கான நேரம், இப்போது உதயமாகி இருக்கிறது.

அந்த வகையில் தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் பதவி என்பது, எந்த வகையிலும் ஆதாயம் தரும் பதவி அல்ல; அதற்கான வரையறைகள் அப்படிச் சொல்லவும் இல்லை. அந்தப் பதவிக்காக சோனியாவுக்கு ஊதியமும் தற்போது வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் சோனியாவின் மீதான எதிர்ப்புக்கோசம் இரட்டைப் பதவி குறித்தது மட்டுமல்ல; மேலும் சில ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததற்கும் சேர்த்துத்தான். மத்திய அரசு நிதியின் கீழ் நேரடியாகச் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை - நேரு நினைவு நிதியம் - சிறுவர்கள் நல்வாழ்வு தேசிய அறக்கட்டளை - ஸ்வராஜ் பவன் அறக்கட்டளை - கமலா நேரு நினைவு மருத்துவமனை - நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் தலைவர் பதவிகளை ஒருசேர அனுபவிப்பதால் தான் பிரச்சனை விசுவரூபமெடுத்திருக்கிறது. இது குறித்து தான் அரசியல் நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது இப்பதவிகள் அனைத்தையும் சோனியா ராஜினாமா செய்துவிட்ட போதிலும் இதுவரை இப்பதவியில் அமர்ந்து பதவி சுகம் அனுபவித்தார் எனும் பழிச்சொல் அவரை விட்டு நீங்கப் போவதில்லை. இதைத் தொடர்ந்து இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் தலைவர் கபில வாத்ஸ்யாயன், கலாச்சார உறவுகளுக்கான தேசிய கவுன்சில் தலைவர் சரண்சிங், தில்லி ஊரக வளர்ச்சி வாரியத் தலைவர் சஜ்ஜன் குமார் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் ராஜீவ் காந்தியின், நீண்டகால விசுவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவில் கையெழுத்திட குடியரசுத் தலைவர் தற்போது மறுத்து விட்டார்.

மசோதாவில் குறிப்பிட்டுள்ள படி, இச்சட்டம் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானதா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். பல்வேறு ஆணையங்கள், கமிஷன்கள், வாரியம், திட்டக் குழுக்கள் இவற்றில் தலைவர் பதவிகளில் எவையெல்லாம் ஆதாயம் தரும் பதவி என்பது குறித்த தெளிவான, திட்டவட்டமான விளக்கங்கள் இல்லை என்பதையும் இத்துடன் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இச்சட்டம் பின்தேதியிட்டு அமல் படுத்துவது குறித்தும் அவர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இம்மசோதா மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு நாடாளு மன்றத்தில் சுற்றுக்கு விடப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படலாம் எனத் தெரிகிறது.

இரண்டாவது முறையாக ஒரு மசோதா திருத்தங்கள் செய்யப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 111-வது விதியின் படி குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட்டாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பவர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் இண்டர்நெட்டில் வெளியிட்டிருப்பதற்கு மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“என்னைப் பற்றி எந்த அவதூறு வேண்டுமானாலும் பரப்பலாம். ஆனால் இந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஒருவர் இரட்டைப் பதவி வகிக்கிறார் என்ற முறையில் களங்கப் படுத்துவது சரியல்ல; இதை மற்ற நாடுகள் கேலிக்குரியதாக பார்க்கும்” என்று தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆதாயம் தரும் பதவி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட போதும், அது குறித்து விவாதம் நடைபெற்ற போதும் சபை விவாதங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அவர் அளித்த விளக்கம் அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளத்தக்கது.

‘மக்களவையில் ஒரு பிரச்சனை பற்றி விவாதிக்கப்படும் போது, அதில் சபாநாயகருக்கு சிறிதும் ஆர்வமோ தொடர்போ இருக்கக்கூடாது. ஆதாயம் தரும் பதவி பிரச்சினையில் எனக்கு தொடர்பு உள்ளது. அதனால், அது தொடர்பாக விவாதம் நடக்கும் போது சபையில் நான் இருப்பது நல்லதல்ல’ - இதுதான் அவர் அளித்த விளக்கம். இது போன்ற கருத்துக்களை சமீபத்திய அரசியல்வாதிகள் எவரிடமும் எதிர்பார்க்க முடியாது.

சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் சொல்வதைப் போல நேர்மையும் பெருந்தன்மையும் மிக்க தலைவர்களை கண்டுபிடிப்பது தற்கால அரசியல் வரலாற்றில் நகைப்பிற்குரிய ஒன்றாக மாறிப் போயிருக்கிறது. இச்சூழலில் நமது அரசியல் வாதிகள் குறித்த ‘லட்சணங்களை’ புள்ளி விபரம் ஒன்று அமர்க்களப்படுத்துகிறது.

மக்களவையின் 542 எம்.பிக்களில் 98 பேருக்கு கிரிமினல் அந்தஸ்து உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள - ஏழைகளின் சதவீதம் கூடுதலாக உள்ள உ.பி.யில் 80 பேரில் 20பேர் கிரிமினல் அந்தஸ்து இருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். மொத்த கேபினட் அமைச்சர்களில் ஐந்தில் ஒரு பங்கு கிரிமினல் ரெக்கார்டு உள்ளவர்கள். ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்று பவர்கள் கிரிமினல்களாகவும் தண்டனைக் குற்றவாளிகளாகவும் இருக்கிற தேசத்தில் ஆதாயம் தரும் பதவிகளில் அரசியல்வாதிகள் பங்கெடுப்தில் நேர்மையை எதிர்பார்க்க முடியாதுதான். ஆளும் சிலருக்கு இங்கே ‘நாற்காலி’ சுகமான அரிப்பாற் மாறியிருக்கிறது. மெல்லச் சொரிந்து கொடுப்பதும் பின் இளைப்பாறிக் கொள்வதும் அவர்களுக்கு வாடிக்கையான ஒன்றுதான். நாற்காலிச் சண்டைகளுக்குப் பின்னால் மக்களும் அவர்களது நலனும் பின்னுக்குத் தள்ளப்படுவதை இவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.

பொது வாழ்வுக்கு வருபவர்கள் இரண்டு மூன்று பதவிகளில் அமர்வது ஒன்றும் தப்பில்லை என்பது போன்ற கற்பிதங்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு நமது தேசத்தில் எடுபடும் என்பது தெரியவில்லை. மாநில அரசுகளால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ எனச் சட்டம் கொண்டு வருவதும் மத்திய அரசுகளால் ‘பதவி தகுதி இழப்பு தடுப்பு மசோதா’ கொண்டு வருவதும் எதிர்க் கட்சிகளைப் பயமுறுத்தும் வேலையே தவிர, இந்திய அரசியலைத் தூய்மையாக்கும் ஒரு முன்னேற் பாடாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு குறைந்த பட்ச நேர்மையும், மக்கள் விசுவாசமும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதை விடுத்து, எந்த வகையிலாவது ‘ஊர்க்காசை உலையில் போடத் துடிக்கும் போலி பொது நலவாதிகள் இருக்கும் வரை சட்டத் திருத்தங்களும் திருத்த மசோதாக்களும் எந்த வித குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் விளைவிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஆதாயம் தரும் பதவியைத் தீர்மானிக்கும் 5 அம்சங்கள்

‘ஆதாயம் தரும் பதவி’ என்றால் என்ன? என்பது குறித்த திட்டவட்டமான விளக்கம் அரசியல் சட்டத்தில் இல்லை. உச்சநீதிமன்றம் சில வழக்குகளில் குறிப்பிட்டுக் காட்டிய 5 அம்சங்களின் அடிப்படையில் அதை தீர்மானிக்கிறது தேர்தல் ஆணையம்.

1. அந்தப் பதவி அரசாங்கத்தின் நியமன ஆணைப்படி பெற்றதாக இருக்க வேண்டும்.

2. அப்பதவியிலிருந்து அவரை மாற்றவும் நீக்கவும் அரசுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

3. அப்பதவிக்கான ஊதியத்தையோ, படிகளையோ அரசாங்கம் தருவதாக இருக்க வேண்டும்.

4. அரசுக்காக அந்தப் பதவியைக் குறிப்பிட்ட நபர் வகிக்க வேண்டும்.

5. அந்தப் பதவியின் மீதோ (அ) பதவியில் இருப்பவரின் செயல்பாடுகள் மீதோ அரசுக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com