Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ்

உலகின் பார்வையை அரபு இலக்கியத்தின் பக்கம் திருப்பியவர்
தமிழில்: முனைவர். அ.ஜாகிர் ஹுசைன் பாகவி

உமர் கய்யாமிற்குப் பிறகு சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரபிக் கவிஞர். பலஸ்தீனக் கவிஙர். இருபது, இருபத்தொன்று நூற்றாண்டு களில் உலகின் பார்வையை அரபி இலக்கியத்தின் பால் திருப்பியவர். தனது பால பருவத்திலேயே தான் பிறந்த மண்ணுக்கும் தனது மக்களுக்கும் எதிரான அடக்கு முறைகளையும் அநீதிகளையும் நேரில் உணர்ந்துள்ளார். எனவேதான், இவரது கவிதையில், ஒடுக்கப் பட்டோருக்கான ஆதரவுக் குரலையும், சூட்டையும் அதிகம் காண முடிகிறது. எளிய நடை வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் சொல்லாடல், சொல்ல வந்ததை ஒளிவு மறைவின்றித் தெளிவாகக் கூறல் ஆகியவை இவரது படைப்புகளின் சிறப்புத் திறன்களாகும்.

மஹ்மூத் தர்வீஷ் உடைய கவிதைகள் நவீனத்துவமிக்க வசன கவிதைகளாயினும் அவற்றில் குர்ஆனைப் போன்றே சந்த நடை இயைபுத் தொடை ஆகியவை அழகூட்டுகின்றன. இதிலிருந்து பொதுவாக நவீன அரபிக் கவிதையில் குர்ஆனின் தாக்கத்தையும் உணர முடிகிறது.

பலஸ்தீனத்தில் அக்காஉ எனும் நகருக்கரகே உள்ள பிர்வா கிராமத்தில் 1941ல் பிறந்தார். 1948ல் அக்கிராமம் இஸ்ரவேலர்களால் அழிக்கப்பட்ட போது லெபனானுக்குக் குடிபெயர்ந்தார். அப்போது அவருக்கு வயது 7. ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பலஸ்தீனத்திற்குத் திரும்பியபோது அப்ப குதி இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இஸ்ரவேலர்களால் பலமுறை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். உயர் கல்வியும் மறுக்கப் பட்டது. 1971ல் கெய்ரோவில் குடியேறிய இவர், சில ஆண்டுகள் பெய்ரூத்திலும் பாரீசிலும் வாழ்ந்தார். 1996ல் மீண்டும் பலஸ்தீனத்திற்குத் திரும்பினார். 65 வயதான இவர் தற்போது பாரீசில் வசிக்கிறார்.

பலஸ்தீன எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் பொது கூட்டமைப்பின் தலைவர், பலஸ்தீன ஆய்வு மைய்யத்தின் இயக்குநர், பி.எல்.ஓ.வின் உயர்மட்டக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

பத்திரிகைத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட தர்வீஷ், ‘அல்இத்திஹாத்’ (ஒற்றுமை) பத்திரிகை, ‘அஷ்ஷுஊனுல் பலஸ்தீனய்யா (பலஸ்தீன விவகாரங்கள்) மாதப் பத்திரிகை ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ‘அல்காமில்’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

முப்பதுக்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள தர்வீஷ் தனது 19ஆவது வயதில் ‘அசாஃபீர் பிலா அஜ்னிஹா’ (சிறகிழந்த பறவைகள்) எனும் முதல் கவிதைத் தொகுதியை 1960ல் வெளியிட்டார்.
‘ஆஷிக் மின் பலஸ்தீன்’ (பலஸ்தீனத்திலிருந்து ஒரு காதலன் - 1996), ‘கிதாபத் அலா ளவ்யி புன்துகிய்யா’ (துப்பாக்கி வெளிச்சத்தில் ஒரு கடிதம் - 1970), ‘உஹிப்புக்கி அவ் லா உஹப்புக்கி’ (உன்னைக் காதலிக்கிறேன் அல்லது உன்னைக் காதலிக்கவில்லை - 1972), ‘முஹாவலா ரக்ம் 7’ (தாக்குதல் இலக்கம் 7-1974), ‘அஹத அஷர கவ்கபன்’ (பதினொன்று நட்சத்திரங்கள் - 1993) ‘சரீருல் கரீபா’ (நாடோடியின் படுக்கை - 1999), ‘ஹாலந்து ஹிசார் (முற்றுகையிடப் பட்டவனின் நிலை - 2002) ஆகிய தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.

தாமரை விருது (1969), இப்னு சினா, லெனின் விருதுகள் ஆகியவற்றையும் பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் 35 மொழிகளில் வந்துள்ளன. முதன் முறையாக அரபி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளிலிருந்து சில. . .

கவிதை 1

என் தாய் நாடே!
நான் உன்மீது கொண்ட அன்பு
எனக்கான சிலுவை மரங்களைத் தவிர
வேறு எதையும்
எனக்குத் தரவில்லை

என் தாய் நாடே! என் தாய் நாடே!
நீ எவ்வளவு அழகானவள்!
என் கண்களை எடுத்துக்கொள்
என் இதயத்தை எடுத்துக்கொள்
என் காதலியையும் எடுத்துக்கொள்

என் தோழர்களின் சவப்பெட்டிகளில்
நான் பாடுகின்றேன்
என் அன்புக்குரிய குழந்தைகளின் தொட்டில்களில்
நான் பாடுகின்றேன்

என் பாட்டனார்களின் இரத்தம்
என்னிடம் திரும்பி வரும்
இரவின் கடைசி
விடியல்தான்

அல்லியின் அத்தருக்குக்
கத்தியின் தாகம் புரியாது
என் காதலி உறங்கமாட்டாள்
எனவே நான் பாடுகிறேன்

என் கவிதை மேடை
தூக்கு மேடையாகட்டும்
மக்களுக்கு சாந்தி உண்டாகட்டும்

ஒவ்வொரு வாசகனின்
இதயத்தில் பாதுகாக்கப்படும்
கவிதையே அழகானது
மக்கள் உன் பாடல் புரியவில்லையென்றால்
நான்தான் குற்றவாளி என்று
நீ கூறு

சில நேரம்
குதிரையில் சவாரிசெய்பவனை நினைத்துப் பார்ப்பேன்
லைலா ஒரு கிராமவாசி
காவலாளிகள்
சூரியன் மறையும் போது
ஒட்டகங்களில் பால் கறக்கிறார்கள்.

என் தாயே
அறியாமைக் காலங்களை
நான் விரும்பவில்லை
எனவே
நேற்றைவிட இன்றைவிட
நாளை நல்லதாக அமையட்டும்

தன்னை மறந்து
சந்தேகத்துடன் நடப்பவன்
நடந்து கொண்டேதான் இருப்பான்
ஓராண்டில் சில எட்டுகள்தான் வைத்திருப்பான்

காலத்தை நிர்மாணித்தவனின்
பேரக் குழந்தைகள்
வளர்ந்தால்
பாறைகளையும்
அநீதியின் பற்களையும்
தகர்ப்பார்கள்

சிறைச்சாலையின் ஓட்டைகள் வழியாக
ஆரஞ்சின் கண்களையும்
கடலின் கோபத்தையும்
விசாலமான அடிவானத்தின் கோபத்தையும்
சந்தித்திருக்கிறேன்

ஏதேனும் ஓர் இரவில்
கவலை இருள் அதிகமானால்
என் காதலியின் கவிதையில்
இரவின் அழகில்
நான் ஆறுதல் பெறுவேன்

இதுதான் எங்கள் காதல்
நாங்கள் கை கோத்து நடந்துசெல்வோம்
பசித்தால் ரொட்டியைப் பகிர்ந்துகொள்வோம்
குளிர் இரவில்
என் கண் இமையாலும்
சூரியனைச் சுற்றும் கவிதைகளாலும்
உன்னைச் சூடேற்றுவேன்

மாலை வேளையில்
நாம் தேநீர் அருந்துவதுதான்
மிகவும் அழகான காட்சி

குழந்தைகளைப் பற்றிப் பேசுவோம்
நாளை நாம்
இரகசியமாகக்கூட சந்திக்கமாட்டோம்
மகிழ்ச்சியிலிருந்து விலகி
நாம் அழுவோம்

பூமியில்
கவிதைகளும்
உறங்காக் கண்களும் இருக்கும்வரை
நான் மரணத்தை விரும்பமாட்டேன்
அது வருவதாக இருந்தால்
என் அனுமதியுடன்
ஒருபோதும் வராது
ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் மாட்டேன்


கவிதை 2

தீபகற்பங்களில்
ரொட்டி விற்பவனாக இருந்திருந்தால்
புரட்சிக்காரனுடன்
நான் பாடியிருப்பேன் என்று
என்னிடம் சொல்லாதே

யமன் நாட்டில்
கால்நடைகளை மேய்ப்பவனாக இருந்திருந்தால்
காலம் நடுங்குவதற்காக
நான் பாடியிருப்பேன் என்று
என்னிடம் சொல்லதே

அஸ்வான் நாட்டில்
சிறு சுமைத் தூக்கியாக பணிபுரிந்திருந்தால்
பாறைகளுக்காக
நான் பாடியிருப்பேன் என்று
என்னிடம் சொல்லாதே

என் நண்பனே!
நைல் ஒருபோதும்
ஃபூலுஃகாவில் ஓடாது
கூன்ஃகூவும், ஜோர்டானும்
ஃபுராத் நதியில் ஓடாது
ஒவ்வோர் ஆற்றுக்கும்
ஓர் ஊற்று உண்டு
ஒரு பாதை உண்டு
ஒரு வாழ்க்கையும் உண்டு.

நண்பனே!
நம் பூமி
தரிசு நிலம் அல்ல
ஒவ்வொரு பூமிக்கும்
ஒரு பிறப்பு உண்டு
ஒவ்வொரு விடியலுக்கும்
வாக்களிக்கப்பட்ட
புரட்சியாளனும் உண்டு


கவிதை 3

வேண்டுமென்றால்
நீங்கள் என்னை இறுகக் கட்டுங்கள்
நான் எழுதுவதையும் புகைப்பதையும் தடைசெய்யுங்கள்
என் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள்

ஏனெனில்
கவிதை இதயத்தின் குருதி
ரொட்டியின் உப்பு
கண்ணின் திரவம்
அது
நகங்களால்
கண் விழிகளால்
வாள்களால்
எழுதப்படுகிறது

சிறையிலும்
குளியலறையிலும்
தொழுவத்திலும்
அதை நான் பாடுவேன்சவுக்கடி வாங்கும் போதும்
கைது செய்யப்படும் போதும்
விலங்கிடப்படும் போதும்
அதை நான் பாடுவேன்

என் இதயக் கிளைகளில் இருக்கும்
பல கோடி குருவிகள்
போரிடும் ராகத்தைப் படைக்கும்


கவிதை 4

அவர்கள் அவனது வாய்க்குப் பூட்டு போட்டார்கள்
கைகளை மரணப் பாறையில் பிணைத்துக் காட்டினார்கள்
பின்னர் கூறினார்கள்
நீ ஒரு கொலைகாரன் என்று

அவனது உணவையும் உடைகளையும் கொடியையும் பறித்தார்கள்
அவனை மரணச் சிறையில் வீசியெறிந்தார்கள்
பின்னர் கூறினார்கள்
நீ ஒரு திருடன் என்று

எல்லா முகாம்களிலிருந்தும் அவனைத் துரத்தினார்கள்
அவனுடைய இளம் காதலியையும் பிடித்துக்கொண்டார்கள்
பின்னர் கூறினார்கள்
நீ ஓர் அகதி என்று

இரத்தம் வடிக்கும்
கண்களும் கைகளும் உடையவனே!
நிச்சயம் இரவு விடியும்
சிறைச்சாலைகள் மிச்சமிரா
கைவிலங்குகளும் எஞ்சியிரா

நீரோ இறந்துவிட்டான்
ரோம் இன்னும் இறக்கவில்லை
அவள் தனது கண்களால் போரிடுகிறாள்

இறக்கும் கதிரின் விதைகள்
விரைவில் பள்ளத்தாக்கைக்
கதிர்களால் நிரப்பும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com