Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
நூல் விமர்சனம் : கருத்துக் கண்ணோட்டம்

மாற்றுக் கருத்தின் மதிப்புகளும் கருத்து வேறுபாட்டின் ஒழுக்கமும்
அஷ்ஷேக், ஸ்ரீலங்கா.

ஒரு நூலை ஆய்வு செய்வதென்பது அதன் அட்டையையும் வடிவமைப்பையும் பற்றி சொல்வதுதான். உண்மையில் ஒரு நூலை மிகத் துல்லியமாக மதிப்பீடு செய்வது கடினமான காரியம் என்றார் கப்ரியல் மார்க்கஸ். இப்பின்னணியில் கருத்துக் கண்ணோட்டம் என்ற இந்நூல் பற்றிய ஓர் எளிய அறிமுகத்தையும் சில அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொள்வதே இவ்விமர்சனக் குறிப்பின் நோக்கமாகும்.

முஸ்லிம் சமூகம் இன்று கட்சியால், இயக்கத்தால், கருத்தால் பல முகங்களாய் சிதறி பிரிந்து நிற்கின்றது. அதற்குக் காரணம் கருத்துவேறுபாடுகள் தான். இக்கருத்து வேறுபாடுகள் என்பது மனிதன் பூமியில் தோன்றியதிலிருந்தே தொடங்கி விட்டது. இது ஒரு பௌதீக விதியாகவும் தெய்வீக நியதியாகவும் செயற்பட்டு வருகின்றது. மனித இன வரலாற்றில் எல்லா கால கட்டங்களிலும் கருத்து பேதங்களும் சிந்தனை வேறுபாடுகளும் நிலவி வந்துள்ளன. வேறுபாடும் அறிவுத்தரம், சிந்திக்கும் போக்கு, விளங்கும் திறன் என்பவற்றுக்கேற்ப அபிப்பிராயங்களும் கருத்துக்களும் வேறுபடுகின்றன. எல்லோருடைய கருத்துகளும் ஒருபடித்தானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஓர் அழகான கனவாகும். அதே வேளை எல்லோருடைய கருத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என பிடிவாதம் கொள்வது கருத்துப் பாஸிசம் அல்லது வன்முறை என்றே கொள்ள வேண்டும்.

இவை இரண்டையும் தாண்டி ஆரோக்கிய மான முறையில் கருத்துக்களை விவாதித்து, முரண்படும் அபிப்பிராயங்களையும் ஆராய்ந்து இறுதியில் செழுமையான முடிவுகளைக் கண்டடைவதே அறிவுபூர்வமான முயற்சியாகும். வேறு வாத்தையில் மாறுபடும் கருத்துக்களை இல்லா தொழிப்பதை விட அவற்றிலிருந்து முடியுமான வரை பயன்பெற முயற்சிப்பதே நடைமுறைச் சாத்தியமான வழியாகும். எனவே, இதற்காக ஆக்கபூர்வமான கருத்தாடல் களங்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான விவாத அரங்குகளை கட்ட வேண்டியும் உள்ளது. இத்தகைய பயனுறுதி வாய்ந்த முயற்சிகளுள் ஒன்றுதான் கருத்துக் கண்ணோட்டம் என்ற இச்சிறிய நூல் எனலாம். இது மாற்றுக் கருத்தின் மதிப்பை உணர்த்தி நிற்கின்ற அதேவேளை கருத்து வேறுபாட்டின் ஒழுக்கத்தினையும் ஓரளவு பேணுகின்றது.

கட்டுரைகள் என்று பார்க்கும்போது முதலாவது இடம்பெறும் கட்டுரையை சந்திரசேகர் எழுதியுள்ளார். அவரது கருத்துச் சுருக்கத்தை பின்வருமாறு முன்வைக்கலாம்.

1. இந்து மதத்தின் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு இஸ்லாம் வளர்ந்தது.

2. இந்தியாவில் இதுவரை சூபித்துவம் தான் இருந்து வந்தது.

3. வஹாபிஸத்தின் வருகை பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள் பிரதானமானவை பின்வருவன.

சமூக அமைதியைக் குலைக்கின்றமை.

இஸ்லாம் அல்லாதோரிடம் தீர்வு கேட்டுச் செல்கின்றமை.

தனிப் பள்ளிவாயல்கள் மூலம் சமூகம் பிளவுபடுகின்றமை.

முஸ்லிம்-இந்து முரண்பாடுகள் வளர்க்கப் படுகின்றமை.

சந்திரசேகரன் தனது கட்டுரையில் இந்துமதத்தின் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு இஸ்லாம் வளர்ந்ததாக குறிப்பிடும் கருத்தில் நாம் சிறிதேனும் உடன்பட முடியாது. இந்தியாவை சுமார் 600 ஆண்டுகாலம் ஆட்சி செய்த முகலாயப் பேரரசரின் கீழ் வடஇந்தியாவில் மட்டுமின்றி தென்னகத்திலும் பல பண்பாட்டுத் தாக்கத்தை இஸ்லாம் ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருந்தபோது பெரும்பான்மை இந்துப் பண்பாட்டில் பெரியளவில் செல்வாக்குச் செலுத்தினர். இதுதான் வரலாற்று உண்மையாகும். நாயக்கர் ஆட்சிக் காலத்தின் போது திருமலை நாயக்கரின் மகால் என்ற கட்டட கோலங்களிலிருந்து டில்லி சுல்தானியத்திற்கு உட்பட்டிருந்த இந்துக்களின் கோயில்களில் கூட இஸ்லாமிய கலாச்சாரத்தின் கலையம்சங்கள் பிரதிபலித்தன.

முஸ்லிம்களின் கட்டடக் கலை அம்சங்களை உள்வாங்கிக் கொண்டே இந்துக்களின் கட்டடக் கலை கூட வளர்ச்சியடைந்தது. இதுவெறும் பண்பாட்டுத் தளத்தில் மட்டுமன்றி இஸ்லாத்தின் சமூகக் கோட்பாடுகள் கூட இந்துப் பண்பாட்டை பாதித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இஸ்லாத்தின் சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகள் வர்ணாச்சிரம தர்மம், சாதியக் கொடுமைகளில் சிக்கித் திணறிய இந்துக்களுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சாக மாறியது. இஸ்லாத்தின் இந்தக் கோட்பாட்டினால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இந்துக்கள் இன்றும் மேட்டுக்குடிப் பிராமணர்களை எதிர்த்துப் போராடுகின்றனர். இந்த சமத்துவப் போராட்டத் திற்கான கருத்தியல் ஆதாரம் இஸ்லாத்தின் சமூகக் கோட்பாடு தான். வரலாற்று யதார்த்தமும் நிதர்சனமும் இப்படியிருக்க சந்திரசேகர் இந்து மதத்தின் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டே இஸ்லாம் வளர்ந்ததாக கட்பிதம் செய்வது உண்மைக்குப் புறம்பானது. இன்னொரு புறம் வேடிக்கைத் தனமானது.

கே.ஷு.ஐ.பி-ன் கட்டுரையில் இடம்பெறும் முக்கியக் குறிப்புகளை பின்வருமாறு வரையறுக்கலாம்.

இந்து மதத்தை உள்வாங்குவது இயல்பானது.

வஹாபிஸத்திற்கு நிறையவே நல்ல பக்கங்கள் உள்ளன.

மூட நம்பிக்கைகளையும் வைதீகங்களையும் உடைத்தெறிந்ததில் வஹாபிஸத்திற்கு பெரும் பங்குள்ளது.

ஜெகபர்தீனின் கருத்தும் ஷுஐபின் கருத்தை ஆதரிக்கின்றன. ஆனால் அவர் இந்து மதத்தை உள்வாங்கி இஸ்லாம்
இந்தியாவில் வளர்ந்தது என்ற கருத்தை பலமாக மறுத்துரைக்கின்றார். ஒட்டு மொத்தத்தில் இவ்விரு கட்டுரைகளும் முன்வைக்கும் கருத்துக்களின் ஏற்புடைமை பற்றிய வாதவிவாதங்களில் நான் இறங்கவில்லை. அதற்கான காரணம் அக்கருத்துக்கள் முன்வைக்கப்படும் சூழல் பற்றிய பின்னணி அறிவு கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இந்நூலில் இடம்பெறும் ஓரளவு பெரிய கட்டுரை ஹுஸைன் மௌலாவினால் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை வஹாபிய சிந்தனை மரபை ஒரு சமூக அரசியல் கண்ணோட்டத்தில் ஆராய்கிறது. இது சற்று வித்தியாசமான பார்வை. காரணம் இதுவரை வஹாபிஸம் ஒரு சமய ஆன்மீக, நம்பிக்கை சார் கண்ணோட்டத்திலேயே அணுகப்பட்டுள்ளது. அதை ஒரு சமூக அரசியல் கண்ணோட்டத்தில் அணுகியது மிகக் குறைவு என்றே கூற வேண்டும். அந்த இடைவெளியை இக்கட்டுரை ஓரளவு நிரப்ப முயல்கின்றது. இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை பின்வருமாறு சுருக்கலாம்:

சமகால முஸ்லிம் உலகத்தில் முதன்மைப்படுத்த வேண்டிய விஷயம் எது. மேற்குலகம் இன்று வேகமாக வளர்ந்து செல்கின்றது. அறிவு வெடித்துச் சிதறும் யுகத்தில் நாம் வாழ்கின்றோம். இதுவொரு டிஜிட்டல் உலகம். அறிவியல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியினால் உலகம் என்றுமில்லாதவாறு வேகமான மாற்றங்களை உள்வாங்கி வருகின்றது. மாற்றம் என்பதைத் தவிர அனைத்தும் மாறுகின்றது. இந்த மாற்றங்களை வெற்றிகரமாக உள்வாங்கும் பக்குவமும் திறனும் ஆற்றலும் நமக்குத் தேவை. எனவே, இன்று நாம் முதன்மைப்படுத்த வேண்டிய விஷயம் அறிவுத்துறை, தொழில் நுட்பத்துறை முன்னேற்றமும் வளர்ச்சியுமே. ஆனால் வஹாபிஸமோ ஒரு கவனக் கலைப்பானாக மாறிவிட்டது. முஸ்லிம் சமூகத்தின் கவனமும் அக்கறையும் அவசியமற்ற விஷயங்களில் குவிக்கப்படுவதற்கு அது காரணமாகியுள்ளது. சில்லறைத்தனமான விஷயங்களில் அளவுக் கதிகமான அக்கறை காட்டப்படுவதால் சமூகத்தின் உண்மையான தேவைகள் புறக்கணிக்கப் படுகின்றன என இக்கட்டுரை வஹாபிஸசத்தை குறை காண்கின்றது.

இஸ்லாம் என்பது ஒரு சமூகக் கோட்பாடு. அது எப்பொழுதும் சமூக ஓட்டத்துடன் தான் உயிர் வாழ்கின்றது. அது வாழ்வதற்கான ஒரு சமூக அமைப்பு இல்லாதபோது இஸ்லாம் மறைந்து போகின்றது. இப்பின்னணியில் வஹாபிஸம் சமூகக் கட்டுமானத்தை சிதைக்கின்றது. அதன் ஒருமைப்பாட்டைக் குலைக்கின்றது. உட்பிரிவுகளையும் உள்ளக முகாம்களையும் உருவாக்குகின்றது. அதனால் சமூக முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுகின்றது. இவ்வகை சமூகப் பிளவு என்பது வஹாபிஸத்தின் ஒரு மோசமான விளைவு என இக்கட்டுரை விளக்குகின்றது.

சமூகக் கட்டுமானம் என்பது பாரம்பரியங்கள், விழுமியங்கள், பண்பாட்டுப் பிரதிமைகள், கலாச்சாரக் கோலங்கள், முதுசங்கள் என்பவற்றின் அசைவியக்கம். ஒரு சமூகத்தின் தனித்துவ அடையாளங்களை நிலையூண்டச் செய்வது இத்தகைய முதுசங்களுக்கு ஒரு மகத்தான பாத்திரம் இருந்து வருகின்றது. இவ்வாறான ஒரு சமூகவியல் யதார்த்தத்தை இக்கட்டுரை விளக்குகின்றது. எனினும் இன்றுள்ள இப்புதிய சிந்தனை மரபுகளை கட்டுடைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு வேர்களையே பிடுங்கி எறிவதற்கு வஹாபிஸம் முயல்வதாக இக்கட்டுரை விமர்சிக்கின்றது. சமய சீர்திருத்தம் என்ற பெயரில் தொல்பொருளியல் சான்றுகள் அளிக்கப்படுவதை குறிப்பாக கண்டிக்கின்றது.

சமூக மாற்றம் என்பது இரு தளங்களில் நடைபெறுகின்றது. ஒன்று, உள்ளகத் தளத்தில் ஏற்பட வேண்டிய அறிவுத்துறை மாற்றம். இரண்டு, வெளியிலிருந்து வரும் சவால்களையும் அறைகூவல்களையும் சமாளிக்கும் திறன். வெளியிலிருந்து வரும் சவால்களில் பண்பாட்டுப் படையெடுப்பை இக்கட்டுரை எச்சரிக்கை செய்கின்றது. ஹாலிவுட் சினிமா முதல் ஜி.எம். வகை உணவுகள் அனைத்தும் முஸ்லிம் உலகத்தின் பண்பாட்டை சிதைத்து வருகின்றன. இவற்றையெல்லாம் மாற்றீடுகளுடன் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.

எனினும் இக்கட்டுரையில் உள்ள சில கருத்துக்கள் தொடர்பாகவும் குறிப்பிட வேண்டும். கட்டுரையாளர் பாலஸ்தீன், காஷ்மீர், ஆப்கான் போராட்டம் அடிப்படையின்றித் தோன்றி மறைந்து விடுகின்றன என்று குறிப்பிடுகிறார். ஆனால் அடிப்படை என்றால் என்ன என்பது குறித்து அவர் விளக்கவில்லை. அதே வேளை இம்மூன்று போராட்டங்களையும் ஒரே வகைப்பட்டதாக அவர் பார்க்கின்றார். இது உடன்பாடானதொரு கருத்தன்று. ஏனெனில் இம்மூன்றிலும் பாலஸ்தீன் பிரச்சனை முற்றிலும் வேறுபட்ட இயல்பையும் குணாம்சத்தையும் கொண்டது. ஒட்டுமொத்தமாகவே தமது சொந்த நிலத்தில் அகதிகளாகப்பட்டு முகமிழந்தவர்களாய் ஆக்கப்பட்ட ஒரு மக்கள் திரளின் சமூகப் போராட்டம் அது. தோன்றி மறையும் போராட்டத்திற்குள் அதை உள்ளடக்க முடியாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.நூலின் வடிவமைப்புப் பற்றியும் சில சிறிய குறைபாடுகளை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

பிரதிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து வாசிப்பைத் தூண்டும் தன்மை அற்றதாக உள்ளது.

சிறிய நூலாயினும் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன.

மொழிக்கவர்ச்சி இன்னும் செம்மைப் படுத்தப்பட வேண்டும்.

இச்சிறிய குறைபாடுகளைத் தாண்டி சிறிய நூலாயினும் பெரியதோர் கருத்தாடல் களத்தை இது தொடங்கி வைத்துள்ளது. வாதப் பிரதிவாதங்களுக்கான அரங்குகளைக் கட்ட வேண்டிய ஒரு சூழலில் இத்தகைய நூல் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லுமாயின் அதுவே இந்நூலின் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவாகவும் இருக்கக்கூடும். கருத்து முரண்பாட்டுக்கான ஒழுக்கத்தைப் பேணும் அதேவேளை இன்னும் விவாதங்களுக்கான களங்களை திறந்து விட வேண்டியது தான் இன்றைய சமூகத் தேவையாக உள்ளது

நூல் : கருத்துக் கண்ணோட்டம்
(வாதப் பிரதிவாதங்கள்)
வெளியீடு : மிலேனியம் கல்வி ஸ்தாபனம்,
வெலிகமை, இலங்கை.
விலை : ரூ.50/- பக்கங்கள் : 30



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com