Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

அஞ்சாத அஞ்சல்தலை
பேரா. அப்துல் காதர்

கைக்கு முந்திக் கொண்டு காற்றுக்கும் சலாம் சொல்லி அசையும் குஞ்சம்; அதனைத் தாங்கியுள்ள பச்சைக் கோபுரத் தொப்பி, தாடையில் தென்னகம் போலத் தாடி, மகத்தான தன் மகனை மண் முத்தமிட்டதால் நெற்றியில் துலங்கும் தொழுகைக் காய்ப்பு. அந்தக் கண்ணாடி நெற்றியில் ஹஜ்ருல் அஸ்வத் முகம் பார்த்திருக்க வேண்டும். இதழ்களுக்கு மேலும் பொங்கித் ததும்பும் புன்னகை போல நரைத்த மீசை. கண்களில் ஊறும் கருணை வெள்ளத்தைத் தேக்கும் கண்ணாடி அணைக்கட்டு. சமுதாயக் கவலையிலேயே இளைத்த என்பு தோல் போர்த்த உடம்பு, இல்லை அன்புதோல் போர்த்த உடல். எடுத்து வழங்க விரல்கள் இல்லையே என்று ஏங்கும் முழுக்கை வைத்த முரட்டு ஷேர்வானி. முகம் பார்க்க விரும்பி முந்தி வெளியேறும் காஜா கண்களின் கருவிழிபோல ஷேர்வானிப் பொத்தான்கள்.

மரமாயினும் மனிதனுக்கு ‘ருக்கூ’ செய்தலாகாது என்ற கணக்கில், வளைபகுதி முன்னிருக்கப் பிடித்துச் செல்லும் நடைக்குச்சி (Walking stick). வேர் மண்ணும் காயப்படா பூவாளிச் சாரலாகப் பேச்சு. பிஞ்சுப் பருவ என் நெஞ்சில் பதிந்த பேட்டைப் பிறைநிலா காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப். ‘அகராதியில் கண்ணியம் என்ற சொல் தேவையில்லை. காயிதேமில்லத் என்ற சொல் போதும்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வசந்த வார்த்தையே அவர் வாழ்க்கைக்குச் சான்று.

அன்னை தேசமோ அடிமைப் பிணக் குளிர்ச்சியில் உறைந்த நேரம். அந்தக் குளிர்ச்சியைத் தக்க வைத்திட, வெள்ளைப் பனி ஏகாதிபத்திய மழை. விடுதலை வேள்வி நெருப்புக் கங்குகளை உயிர்ப்பிக்க விசிறிகளே வாருங்கள் என அண்ணல் காந்தியார் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு இதோ என் பட்டம் காணிக்கை எனத் தாம்பரம் கிறித்தவர் கல்லூரிப் படிப்பைத் துறந்த தேசபக்தர் அவர். ஆங்கிலப் படைக்கெதிராகக் காங்கிரஸ் பேரியக்கத்துடன் முஸ்லிம் லீக்கை இணைத்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக்கிய சுதந்திரப் போராளி.

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிரெதிராக நெருங்குவது, ஒரு கத்திரிப்பின் இருவாட்கள் நெருங்குவது போல; அவைகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது. இடையில் வரும் மக்கள் நலப்பணிக்கு வரும் தடைகளை மட்டுமே இணைந்து வெட்டி வீழ்த்தும். இந்த இலக்கணத்திற்கு இலக்கியமாகச் சென்னை ராஜதானி சட்டப்பேரவையில், 29 சிறுபான்மை முஸ்லிம் எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவராகச் சாதித்தவர் காயிதே மில்லத்.

“இந்திய மொழிகளில், தேசிய மொழியாக, ஆட்சி மொழியாக அரியணை ஏறும் தகுதி, தொன்மையும், பண்பாட்டு மேன்மையும், இலக்கிய செழிப்பும் மிக்க என் அன்னை மொழியாம் தமிழுக்கே உண்டு” என்று பைஜாமா, ஜிப்பாப் பராளுமன்றத்தில் வேட்டி கட்டிய தமிழுக்கு முதல் மரியாதை பெற்றுத் தந்த பெருந்தகை.

“என்னங்க இஸ்மாயில் சாகிப் பாய்? சொல்லவே இல்லையே! விண்ணப்பத்தில் பையனின் பெயருக்குக் கீழே தந்தையின் பெயர் என்ற இடத்தில் தங்கள் பெயரைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். உடனே பரிந்துரை செய்தேன். இடம் கிடைத்த தங்கள் பிள்ளை மியாகான் B.E. பொறியியல் வகுப்பில் நன்றாகப் படிக்கிறாரா?” என்று, மேடையில் தன்னருகே அமர்ந்திருந்த காயிதேமில்லத் அவர்களிடம் காதருகில் கிசுகிசுத்தார் நேருகால மந்திரிசபை மத்திய அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார். “அப்படியா நன்றி” என்று புன்னகையைப் பதிலாக்கி விட்ட காயிதே மில்லத் வீட்டிற்கு வருகிறார். பிள்ளையை அழைக்கிறார். “இனி நீ B.E. பயிலச் செல்ல வேண்டாம்” என்கிறார். தந்தை சொல் தட்டாத தனயன் படிப்பை நிறுத்துகிறார். ரெக்கமென்டேஷன் (Recommendation) என்பது சில சமயம் இரக்கமென் டேஷனாகவும், பலசமயம் ரொக்கமன் டேஷனாகவும் இழிவுறும் நிலையில், அரிதான படிப்பு வாய்ப்பு, முறையற்ற வகையில் கிடைப்பதை ஏற்காத நெறியாளர் அவர் என்பது அரசியல் அதிசயமாக இருக்கிறது.

‘மண்ணின் மைந்தன்’ என்பதையே ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற நெறியை உலகுக்கு உணர்த்திய தமிழர்கள் பரம்பரை தேர்தல் நேரத் தகுதியாகக் கருதுகிறது. காயிதே மில்லத் அவர்களைத் தொடர்ந்து பலமுறை ‘மஞ்சேரி’த் தொகுதிக் கேளரமக்கள் நாடாளு மன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள். தொகுதிக்குப் போகாமலேயே வெற்றி பெற்றவர் என்ற தோற்கடிக்க முடியாச் சரித்திரம் படைத்தவரும் அவர்தான். கேரள மக்கள் அவரைத் தமிழர் என்ற குறுகிய நோக்கில் பார்க்கவில்லை. அவரைப் பார்க்காமலே நாடாளுமன்றத்திற்கு மலையாள மக்கள் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் என்ன? வீட்டு மக்கள் நலம் கருதாமல் நாட்டு மக்கள் நலம் கருதும் தலைவர் என்பதுதான் அந்த மக்களின் கருத்திற்கு இசைவாகப் பட்டிருக்க வேண்டும்.

ஓணம் பண்டிகையின் போது நிகழ்ந்த நிகழ்வை பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தம்பிக்கு’ எழுதிய மடலில் குறிப்பிடுகின்றார். நிகழ்வல்ல அது; நெகிழ்வு. கனத்த கொடி மரத்தைக் கோவில் யானை தூக்கி, தோண்டப்பட்ட குழியில் நட்டு வைக்கும். பிறகு குழியில் மண்ணைத் தள்ளி, செம்மி, இறுக்கி கொடிமரத்தை நிறுத்துவார்கள். பிறகு திருவிழாவிற்கான கொடி ஏற்றுவார்கள். முன்னாளே குழி தோண்டப்பட்டது. மறுநாள் திருநாளின் தொடக்கம், குருவாயூர் கோவில் யானை தடிமரமாம் கொடிமரத்தைத் தூக்கி நடச்சென்றது. நடாமல் கொடிமரத்தைக் கீழேவைத்து விட்டது. மீண்டும் பாகர்கள் அச்சுறுத்தி நடச் சொன்னார்கள். குழிக்கருகில் சென்று நடாது மீண்டும் யானை கொடி மரத்துடன் திரும்பி விட்டது. இப்படி மூன்று முறை யானை அடம்பிடிக்க, பாகர்கள் சென்று குழியைப் பார்த்தார்கள்.

அதற்குள் ஈன்றணிமையுடைய கண்திறக்காத மூன்று பூனைக் குட்டிகள் ‘மியாவ்’ ‘மியாவ்’ என்று மென்மையாகக் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். பின்னர் பூனைக் குட்டிகளை வெளியில் எடுத்த பிறகுதான் யானை கொடிமரத்தை நட்டதாம். இதனைக் குறிப்பிட்டு விட்டு அண்ணா “யானைதான் பெரும்பான்மைச் சமுதாயம், பூனைதான் சிறுபான்மை சமுதாயம். யானையே பூனையைக் காத்தது போலப் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மை சமூகத்தை அரவணைக்க வேண்டும்” என்று எழுதுகிறார். எல்லா வகையிலும் கவலையாய் கவலைக்குரியதாய் இருக்கும் சிறுபான்மை மக்களின் மேம்பாடு ஒன்றே காயிதேமில்லத் அவர்களின் வாழ்நாள் இலட்சியமாய் இருந்தது. அவரைப் பொருத்த அளவில் தற்சார்பு, சமயச்சார்பு என்பது அறவே இல்லை. சிறுபான்மையோர் என்று அவர் கருதியது முஸ்லிம் மக்களை மட்டுமல்ல.

வெள்ளை மெழுகுவர்த்திகளை ஊதிக் கொண்டாடப் பட்ட, இந்திய சுதந்திரத்தின் முதல் பிறந்தநாளில் இந்தியாகேக் இரண்டாக வெட்டுப் பட்டது. பாகிஸ்தான் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்குபெறுமாறு காயிதே மில்லத் அவர்களை அழைத்த காயிதே ஆஜம் முகமது அலி ஜின்னா, “சகோதரரே! ஒன்றுபட்ட இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியது நம் இயக்கமான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக். இன்று நாடு இரண்டானதைப் போல முஸ்லிம். லீக்கும் இரண்டாகிவிட்டது. ஒன்றாக இருந்த முஸ்லிம் லீக் கட்சிக்குள்ள சொத்துக்களைப் பாகம் பிரித்ததில், 17 இலட்சம் ரூபாய் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் லீக்கிற்குச் சேர வேண்டும். அந்தத் தொகையையும் தாங்கள் கராச்சிக்கு வரும்போது பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய நாடாம் பாகிஸ்தானத்து அரசு விருந்தினராகச் சுதந்திர தின விழாவில் பங்கேற்க அவசியம் வருகை தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். பாகிஸ்தானின் தந்தைக்குப் பாரதத்தின் பிள்ளை இஸ்மாயில் சாகிப், ‘தங்கள் அழைப்பிற்கு நன்றி. இந்திய முஸ்லிம் லீக்கின் பங்கிற்குரிய 17 இலட்சம் ரூபாய் எங்கட்கு வேண்டாம். நீங்கள் பாகிஸ்தானியர்கள் நாங்கள் இந்தியர்கள்; ஒரு பாகிஸ்தானியரின் கைக்குக் கீழே ஒர் இந்தியரின் கை தாழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அந்த 17 இலட்சம் ரூபாய்க்குப் பதிலாக, பாகிஸ்தான், ஆட்சித் தலைவராக இருக்கும் தாங்கள் ஓர் உத்திரவாதம் வழங்கினால், பெரிதும் மகிழ்வேன். பாகிஸ்தானிலிருக்கும் சிறுபான்மையினரான இந்து சகோதர, சகோதரிகளுக்குத் தங்கள் அரசாங்கம் பாரபட்சமின்றி என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்ற உறுதிமொழியை தாங்கள் சுதந்திர தினப் பரிசு அறிவிப்பாக வழங்க வேண்டுமென அன்புடன் கோருகின்றேன்” எனப் பதில் மடல் விடுத்தார். பிரசவத்தில் தாய் இரத்தம் சிந்துவது இயல்பு. ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிரசவிக்கப்பட்ட போது, பிள்ளைகளும் இரத்தம் சிந்திய பிரிவினை ரணங்களுக்குக் காயிதே மில்லத் வழங்கியவை களிம்புவரிகள்.

பௌத்தம் தந்த பாரதத்துக்குப் பகரமாக யுத்தம் தந்தது செஞ்சீனா 1961இல். ஆக்கிரமிப்பில் சிக்கிய அன்னை தேசத்து எல்லைக் கோட்டை நம் வீரர்கள் மீட்டு, இரத்தத்தால் வரையத் தொடங்கிய வேளை. போர்நிதியை அனைவரும் திரட்டி நேரு பெருமானார்க்கு அனுப்பிய நேரம் முதல் பிரதமர் பண்டிதருக்குக் காயிதே மில்லத் கடிதமொன்று வரைந்தார்.

“மாண்புமிகு பிரதமர் அவர்களே! வெள்ளி மலை இந்திய எல்லைகளை மீட்க, வெள்ளிப் பணத்தை அள்ளி வழங்குகிறார் நாட்டு மக்கள். தாய்பூமிக்கு தனயனாம்
நானும் யுத்தநிதி வழங்குகிறேன். நான் பெற்றெடுத்த என் ஒரே பிள்ளை மியாகனை யுத்தநிதியாக வழங்குகிறேன். ஏற்றருள்க! எல்லைக்கு அவனை அனுப்புக
இந்தியத் தாய்மண்ணைக் காக்கும் பணிக்கு அவன் தன்னை அர்ப்பணிக்கத் தயாராகவுள்ளான்”

ஆமாம் இறைவனுக்குப் பிள்ளையை அர்ப்பணிக்க இப்ராஹிம் நபி எண்ணிய போது, பாலகர் இஸ்மாயில் (அலை) வெட்ட வாள் ஏந்திய தந்தையை நோக்கி

“தந்தையே, வான் பார்க்கும் வகையில், உம் முகத்தை நான் பார்க்கும் வகையில் என்னைக் கிடத்தி அறுக்க முயலவேண்டாம். இறைவனுக்கான குர்பானி (அர்ப்பணம்)ப் பலி நிகழ வேண்டிய போது, பிள்ளை முகம் பார்த்து, பாசத்தால் தாங்கள் தயங்கக் கூடும். ஒருவேளை பலியிடுவதை நிறுத்தி விடக் கூடும். இறைக் கட்டளையை மீறினார் என் தந்தை என்ற அவப்பெயர் வரவேண்டாம். என் முகம் தரை பார்க்கும் வண்ணம் என்னை குப்புறப் படுக்க வைத்துத் தாங்கள் அறுக்க வேண்டும்” என்று

கூறியவை புல்லரிக்க வைக்கும் புனித வரலாறு. அந்த மரபின் தொடர்ச்சியைத் தந்தை காயிதே மில்லத்திடமும், தனயன் மியாகானிடமும் தரணி பார்த்தது அன்று.

“consider ther postage stamp; its usefulness
centists in the ability to stick to one thing
till gets there”

என்கிறார் அறிஞர் பில்லிங்ஸ் (Billings). என்ன நோக்கத்திற்காகத் தன் பயணம் நிகழ்கிறதோ, அந்த இலக்கை அடையும் வரை, இலட்சியத்தை விட்டுப் பிரிந்து விடாமல் இருப்பதற்கான எளிமையான எடுத்துக்காட்டாக அஞ்சல் தலையைக் குறிப்பிடுகின்றார். அஞ்சல் தலையைப் போன்றவர்கள்தான் அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவர்கள். அஞ்சல் தலை கடித உறையின் நடுநாயகமானகம் நிகழ்கிறது என்ற தன்முனைப் பில்லை. மாறாக கடிதத்தின் ஒரு மூலையில் அடக்கமாக இருக்கிறது. போராட்டத்தில் வெயிலில், மழையில், தடியடியில், கைதில் தொண்டர்களை முன்னே தள்ளிவிட்டுக் குளிர்பான அறைகளில் பின்தங்கி விடும் அஞ்சும் தலைவர்கள் உண்டு. ஆனால் ‘அஞ்சல் தலைவர்’ கவரின் முனை முகப்பில் முன்னே நிற்கிறார். அஞ்சல் நிலையத்தில் குத்தும் முத்திரையாய் தானே காயமும் படுகிறார். இருப்பினும் இலட்சியத்தை விட்டு விலகல் இல்லை.

சமூகத்தின் கைகளில் கொண்டு சேர்க்கும் வரை வேறு பணிகளுக்காகப் பிறழ்வுகள் இல்லை. ஆனால் சமூகம் கடிதம் கிடைத்தவுடன் கிழிக்கும் உறையோடு அஞ்சல் தiயையும் தூக்கி எறிந்து விடுகிறது. முத்திரையிட்டவுடனேயே அஞ்சல் தலை மரணம் அடைந்துவிடுகிறது. மரணத்திற்குப் பிறகும் இலக்கினுக்குக் கடிதத்தை கொண்டு சேர்க்கிறது. வாழ்ந்த காலச் செயல்பாட்டால், வாழுங்காலத்திற்கும் அதன் பணி தொடர்கிறது. வெறும் பயன் பாட்டுப் பார்வையுடைய சமூகத்தில் முத்திரையிடப் பட்ட அஞ்சல் தலைகட்கு மதிப்பில்லை. அதன் பணியை இறுதிவரை அஞ்சல்தலை ஆற்றியதே என்ற நன்றியுணர்வும் இல்லை. கருமமே கண்ணான அஞ்சல் தலைகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதுமில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com