Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
விளையாட்டென்றால் விளையாட்டா?

கொஞ்சம் தகவல் கொஞ்சம் அலசல்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

உலகக் கோப்பை போட்டி ஆட்டங்களை நடத்துவது இங்கிலாந்தின் குத்தகையாகவும், அதனை வெல்வது, மேற்கிந்தியத் தீவுகளின் வாடிக்கையாகவும் இருந்த நிலை, 1983ல் இந்தியா, இங்கிலாந்து மண்ணில், மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது முதல் மாற ஆரம்பித்தது. பிறகு அது சுழற்சி முறையில் பல்வேறு நாடுகளுக்கு படையெடுத்தது. எனினும் தனிப்பட்ட நாடுகள் என்றில்லாமல் அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த நாடுகளும் சேர்ந்து இதனை வெற்றிகரமாக நடத்தின. அப்படித்தான் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை என்று ஒரு கூட்டாகவும், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து என்று ஒரு கூட்டாகவும், பிறகு இங்கிலாந்து-ஸ்காட்லாந்து-நெதர்லாந்து என்று வேறொரு கூட்டணியாகவும், கடைசியாக தென்ஆப்ரிக்கா-கென்யா-ஜிம்பாவே ஆகிய நாடுகள் இணைந்தும் நடத்தின. 2007ல் அது மேற்கிந்திய தீவுகளில் நடக்கவிருக்கிறது.

1999 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்து சென்றிருந்தேன். உலக அளவில் முதல் தமிழ் வர்ணனை அது தான். உபயம் லண்டனில் இருந்து ஐரோப்பா முழுவதும் ஒளிபரப்பாகும் 24 மணிநேர தமிழ் வானொலி ஐ.பி.சி. தமிழ்! இன்றும் அதில் வாரந்தோறும் “இந்தியக் கண்ணோட்டம்” என்கிற நிகழ்ச்சியை கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறேன். அதுபோல 4 ஆண்டுகளாக லண்டன் தீபம் தொலைக்காட்சியில் “அரங்கம் - அந்தரங்கம்” என்று ஓர் அரசியல் விமர்சன நிகழ்ச்சி. கனடா “தமிழோசை”யில் செய்திக் கண்ணோட்டம். அவ்வப்போது ஆஸ்திரேலியாவின் “இன்பத் தமிழ் ஒலி”யிலும், துபாயின் ஏஷியாநெட்டிலும் சிற்சில நிகழ்ச்சிகள். தென் ஆப்ரிக்க உலகக் கோப்பை, ஒரு பிப்ரவரி 8ந்தேதி தொடங்கியது. ஆனால் என்னால் ஹஜ்ஜுப் பயணத்தில் இருந்து, 20ந்தேதி தான் திரும்ப முடிந்தது. எனவே செல்ல இயலவில்லை.

என் மானசீக குரு பூர்ணம் விஸ்வநாதன், இலங்கையில் எனது பள்ளி ஆசிரியர் பேரா.கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் வர்ணனையில் எனது சகா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் என்னை விட மூத்த ஒலிபரப்பாளர்கள் என்றாலும் அவர்கள் யாரும் இன்று ஒலிபரப்புக் களத்தில் இல்லை. எனவே 56 வருட அனுபவமுடைய நான் தான் இன்று தமிழில் மூத்த ஒலிபரப்பாளன் என்று மன்னிக்கத்தக்க பெருமையுடன் மார்தட்டிக் கொள்ள முடியும்.

1993ல் உங்கள் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுக்கும் எனக்கும் எங்கள் ஒலிபரப்பு சேவைகளை கருத்தில் கொண்டு இலங்கை அரசு கொழும்பில் நடத்திய ஒரு விழாவில் அன்றைய ஜனாதிபதி “டி.பி.விஜயத்துங்க” அவர்களை கொண்டு ‘பதுருல் மில்லத்’ என்கிற பட்டத்தை அளித்து கௌரவித்தது. இன்றைய கலாச்சார இணை அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஹெச்.எம்.அஸ்வர் இதனால் அந்த பட்டம் பெருமை அடைந்திருப் பதாக தன் உரையில் சொன்னார். இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் அனைத்திந்திய வானொலி “மிகச் சிறந்த ஒலிபரப்புக் கலைஞன்” என்

என்னைத் தேர்ந்தெடுத்து கௌரவித்தது. 2002 நவம்பரில் லண்டன் ஐ.பி.சி. தமிழ் வானொலியும், டி.டி.என். தொலைக்காட்சியும், லண்டன் மாநகரில் இணைந்து நடத்திய ஒரு விழாவிலும் ஒலிபரப்பில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்ததற்காக கௌரவிக்கப்பட்டேன். 2005ல் அமீரக துபாய் நகரில் ஒன்பது தமிழ் அமைப்புகள் இணைந்து ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். உபரியாக “ஊடகச் செல்வர்” என்று ஒரு பட்டமும்!

என் சுயதம்பட்டத்தை என்றுமே ஓசைபட முழங்கியதில்லை. அடக்கியே வாசிப்பதுண்டு. அதனால் பல முஸ்லிம்-தமிழ் அமைப்புகளுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாது. அதுவும் நல்லதற்குத்தான். இல்லாவிட்டால் என்னை ஒரு வழி பண்ணியிருப்பார்கள். இந்த சிறிய விளம்பர இடைவெளிக்குப் பின் கட்டுரை மீண்டும் தொடர்கின்றது.

2011ல் உலகக் கோப்பை போட்டி ஆட்டங்களை யார் நடத்துவது என்பதில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் போட்டி. டெஸ்ட் போட்டி ஆடும் அந்தஸ்து பெற்ற 10 நாடுகளுடன் வாக்களிக்கும் உரிமையுடன் கூடிய துணை உறுப்பு நாடுகளான அமீரகம், இஸ்ரேல், ஆகியவை உட்பட உள்ள நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தான் இதனைத் தீர்மானிக்கும் என்ற நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் அதன் புதிய தலைமையகமான துபாயில் கூடியது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகியவை ஒரு அணியிலும் ஏனைய நாடுகள் வேறோர் அணியிலும் நிற்க இடையில் மேற்கிந்திய தீவுகளின் வாக்கு முக்கியத்துவம் பெற்றது. எப்போதுமே அது தங்களுக்கு பல வகைகளில் பேருதவிகளைச் செய்யும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பக்கமே நிற்கும். அப்படி நின்றால் இழுபறி நிலை ஏற்படும். ஆனால் அது இந்தியாவுடனேயே நின்றது இந்தியக் கூட்டணியும் வென்றது. எனவே இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை-பங்களாதேஷ் ஆகியவை இணைந்து இந்த போட்டி ஆட்டங்களை நடத்தப் போகின்றன. இந்தியாவில் 22 ஆட்டங்களும், பாகிஸ்தானில் 14ம், இலங்கையில் 8ம், பங்களாதேஷில் 6ம் ஆக ஆட்டங்கள் நடத்தபெறும். இறுதி ஆட்டம் லாகூரிலா? அல்லது கல்கத்தாவிலா? என்பதும், கராச்சியிலும், கொழும்பிலும் பாதுகாப்புக் கருதி சில நாடுகள் ஆட மறுத்தால் அதை தவிர்க்கும் விதமாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியதுமான தலைவலியும் உள்ளது.

2007 உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகளில் நடந்து முடியும் போது அது கணிசமான லாபம் ஈட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கு முன்பு தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் நிதிச் சிக்கல் இருந்து வருகின்றது. அதை நிவர்த்தி செய்ய இந்திய வாரியம் பெருமளவில் முன்வந்ததே மேற்கிந்திய தீவுகளின் மன மாற்றத்துக்கும், இந்திய ஆதரவு நிலைக்கும் காரணம் என்றும் கிசுகிசுக்கப் படுகின்றது. அல்லாமலும், இந்தியாவுக்கு சாதகமான பல அம்சங்கள் உள்ளன. தொலைக்காட்சி மூலம் கிடைக்கும் வருமானம் போட்டி உலகின் எந்த பாகத்தில் நடந்தாலும் கிடைக்கும். ஆனால் மக்கள் ஆட்டங்களை பார்க்கச் செலுத்தும் கட்டண விஷயத்தில் இந்தியாவை அடிக்க எந்த நாடாலும் முடியாது. அது பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று நம்பப்படுகிறது. அங்குல இடம் கூட விடப்படாமல் நிரப்பப்படும் ஆடுகள விளம்பரம் அடுத்த வருமானம்.

இவை போக புல்தரை ஆடுகளம் (Turf wicket) கொச்சி முதல் கோட்லா வரை பல நகரங்களில் உள்ளன. பல்வேறு மாநிலத் தலைநகர்களில் பகல்-இரவு ஆட்டத்துக்கான ஒளிவெள்ள ஏற்பாடுகளும் உண்டு. ஒரு பெரிய நகரத்தில் தங்கி பக்கத்தில் உள்ள மாவட்ட தலைநகருக்கு ஒருசில மணி நேரமாவது பேருந்துப் பயணம் என்கிற அவலம் ஆட்டக்காரர்களுக்கு இல்லை.

எல்லா மாநிலத் தலைநகர்களிலும் ஏன், ஒரு சில மாவட்ட தலைநகர்களிலும் கூட ஐந்து நட்சத்திர விடுதி வசதிகளும் விமான போக்குவரத்து வசதிகளும் வந்துவிட்டன. உதாரணமாக நெல்லை - தாழையூத்து - சங்கர்நகர் மைதானத்தில் ஓர் ஆட்டம் ஏற்பாடு செய்யப்பட்டால் கூட இன்று நெல்லை - தூத்துக்குடி நகர்களுக்கு மத்தியில் உள்ள வாகைக்குளம் வரை விமானசேவை வந்தாயிற்று. மிக முக்கியமாக செய்திகள் - படங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அனுப்பும் செய்தித் தொடர்பு வசதிகள் வியக்கத்தக்க அளவுக்கு பல்கிப் பெருகி உள்ளன. ஆக வெள்ளைக்காரன் இப்போது தன் தோலின் நிறத்தை மட்டுமே வைத்து பீற்றிக் கொள்ளலாம். மற்றபடி நாம் அவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பது இன்றைய யதார்த்தம், நாளைய சரித்திரம், என்றென்றைக்கும் ஒரு சாதனை.

உள்ளூரில் கோலோச்சி, அமீரக அபுதாபியிலும் தங்கள் திறமையை மாற்றுரைத்த, இந்திய அணி, உண்மையில் ஓர் அக்னிப் பரிட்சைக்காக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ளது. அடுத்த ஆண்டு அங்கு வைத்தே உலகக் கோப்பை நடைபெறவிருப்பதால் அது இந்த இளம் அணிக்கு நல்ல அனுபவப் பாடங்களைத் தரும் என நம்பலாம். தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு சச்சின் சென்னையில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். உடற்பயிற்சியில் அவருக்கு உதவுபவராக சென்னையைச் சேர்ந்த உடற்கூறு வல்லுநர் ராம்ஜி சீனிவாசன் கடமையாற்றுகிறார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்படும் போது தன் பெயர் இருக்குமா என்பதை அறிய ஆவலோடு காத்திருப்பவர்களில் கங்குலியும் ஒருவர். ஒருவேளை அப்படி அறிவிக்கப்படா விட்டால் அவரது பயணம் லண்டனை நோக்கி இருக்கும். சென்ற முறை “கிளமோர்கன்” என்ற அணிக்காக ஆடினார். இம்முறை “சர்ரே” என்ற அணிக்காக ஆடலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால் அழைப்பு வந்தது ‘நார்த்தாம்டன் ஷயர்” அணியிடமிருந்து! லண்டனில் அஜய் ஜடேஜாவின் சித்தப்பாவிற்கும், கங்குலியின் தகப்பனாருக்கும் இருக்கும் அரண்மனை போன்ற வீடுகளும், அதனை சுற்றி உள்ள மனோகரமான பூக்களும், பல கோடிகள் பெறும். கங்குலி ராஜபோக வாழ்க்கைக்கு சொந்தக்காரரான பரம்பரைப் பணக்காரார்.

வர்ணணை வல்லுநரான விஸி என்று செல்லமாக அழைக்கப்பட்ட விஜயநகர ராஜா நல்ல உடல் ஆகிறுதி உள்ள பஞ்சாபில் இருந்துதான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றுவார்கள் என்று ஆருடம் சொல்லி வந்தார். ஆனால் உண்மையில் அது சற்று வடக்கே போய் காஷ்மீரில் இருந்து தோன்றுவார்கள் போல் தெரிகிறது. ஏற்கனவே எம்.ஆர்.எஃப். வேகப்பந்து பயிற்சி பள்ளியில் மூன்று காஷ்மீர் இளைஞர்கள் பயிற்சி பெற்று வர இப்போது புதிதாக மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம், நம்மால் என்றில்லாமல், நம்மையும் மீறி, பிரகாசமாக இருக்கும் போல்தான் தெரிகிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com