Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
இஸ்லாமிய தலித்தியம்
- கீரனூர் ஜாகிர்ராஜா

நாங்கள் தயார்; எங்கள் சேரிக்குள் வாழ நீங்கள் தயாரா? அளவற்ற அன்பாளரே; தங்களின் நிகரற்ற இறைச் செய்தியைத் தாரும்.

டெல்லி நேரு பல்கலைக் கழகத்தின் அரபு மொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த (கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஃபிராண்டியர் பிப்ரவரி 5.11.2006 இதழுக்கு) நேர்காணல் ஒன்றின் தமிழாக்கத்தை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதிய தீண்டாமை பேதங்களைக் குறித்து மேலும் தேடிப் பிடித்தாக வேண்டிய தரவுகளை அடையாளம் காட்டும் விதமாக அந்த நேர்காணல் அமைந்திருந்தது.

அரபுத் தோற்று வாயிலிருந்து வந்த முஸ்லிம்களான சையத்துகள் ஷேக்குகள் அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண் அஜாமி முஸ்லிம் பெண்ணை மணந்து கொள்ளலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண் அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்கலாகாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன் ஜுலாஹா(அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இணப் பெண்ணை மணந்து கொள்ளலாம். ஆனால் அன்சாரி, ராயின், மன்சூரி, குரைஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்த ஒரு ஆணும் பத்தான் முஸ்லீம் பெண்ணை மணக்க முடியாது.

ஏனென்றால் இந்த சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்கு கீழானவை. இவ்வாறாக உலமாக்கள் வாதிடுகின்றனர். இது போன்ற நுட்பமான புரிதல்களை அந்த நேர்காணல் தெரிவிக்கின்ற வேளையில் பல இஸ்லாமிய மன்னர்களும் ஏன் இன்றைக்கு இலக்கியவாதிகளால் உயர்த்திப் பிடிக்கப்படுகின்ற புகழ் பெற்ற சூஃபி ஞானிகளும் கூட எவ்வாறெல்லாம் மனுவாத அடிப்படையில் இஸ்லாத்தை இந்தியாவில் உருத்திரித்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி கொள்ள அந்த நேர்காணல் வழிவகுத்தது. இஸ்லாத்தில் தலித்துகள் என்பதும் கூட இதே அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுவோர் தோல் பதனிடுவோர், செருப்புத் தைப்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக் கூடாது என்று பிரபலமான சூஃபி ஞானி ஒருவர் வேறு யாருமல்ல சையது ஜலாலுதீன் புகாரி வலியுறுத்தியுள்ளதாகவும் அறிந்து அதிர்வடைகிறோம்.

ஒரு சில ஆண்டுகள் முன்புவரை இஸ்லாத்தில் ஜாதிகள் என்றவுடன் உடனே அதை மறுதலிக்கிற குரல் கண்டிப்பாக எழத்தான் செய்தது. ஆனால் இன்றளவில் அக்குரல் தேய்ந்து ஓய்ந்து போனது.

இன்றைக்குச் சச்சார் கமிட்டியின் அறிக்கை வெளிவந்துள்ளது. இஸ்லாத்தில் தலித்துகள் உண்டு - அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இஸ்லாத்தில் தேவை என்னும் கருத்து நிலை உறுதிப்பட்டுள்ளது. இது குறித்து புதிய காற்று இதழில் கூட ஹெச்.ஜி. ரசூல் எழுதியுள்ளார். இவர்கள் பேணுகின்ற சமரசம் என்பது பள்ளிவாசலில் தொழுகைக்கு நிற்கும்போது தோளோடு தோள் உரசிக் கொள்ளும் அளவிலேயே இருக்கிறது. மனதளவில் தீண்டாமை வேர்விட்டுப் பரவியிருக்கிறது. அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவும் செய்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவிதர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய காலக்கட்டத்தில் புறக்கணிப்புக்குள்ளான விஷயத்தை அன்புக்குரிய கவிஞர் இன்குலாப் அவர்கள் 1980களில் ‘பாலையில் ஒரு சுனை’ மற்றும் ‘யுகாக்னி’ போன்ற படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். அன்றைக்கு இன்குலாப் அவர்கள் இதைச் சொன்ன நேரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவரை துவேஷத்துடன் அணுகினர். தூற்றினர். சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் ரபி ஃபெர்னாட் பி. ஜெய்னூல் ஆபிதீனை நேர்காணும் போது துருவித் துருவிக் கேட்கிறார். சச்சார் கமிட்டி அறிக்கை குறித்து இருவரும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இஸ்லாத்தில் தலித்துகளாக சில பிரிவினர் உள்ளதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று ரபி கேட்கிறார். அதற்கு பிஜே சாமர்த்தயமாக பதில் சொல்லுகிறார். ‘‘இஸ்லாத்தில் உள்ளோர் அனைவருமே தலித்துகளாகத் தான் இருக்கிறார்கள்’’ என்று. தலித்துகள் என்றால் என்ன? ஜெய்னூல் ஆபிதீனுக்குப் புரியவில்லை. அல்லது புரிந்தும் புரியாதது போல நடிக்கிறார். ஏனெனில் ஜெய்னுலாபுதீன் ஒரு தலித்தாக இல்லை. அவர் உயர்ஜாதி ஆதிக்கத்தை விரும்புகிற இஸ்லாத்தின் அடிப்படைவாதங்களை உயர்த்திப்பிடிக்கிற, சமய நல்லிணக்கம் பேணுகின்ற தர்கா கலாச்சாரத்தை வெறுக்கின்ற ஒரு பிரமுகர்.

இஸ்லாத்தில் தலித்துகள் என்றால் என்னுடைய மீன்காரத் தெரு நாவலுக்கு ஹெச்.ஜி. ரசூல் எழுதிய விமர்சனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘‘தமிழகத்தின் வரையறை எல்லைக்குள் தமிழ்முஸ்லிம்கள் மைய நீரோட்டத்தில் மரைக்காயர்கள், ராவுத்தர், லெப்பை எனவும் உருது முஸ்லிம்களில் சையதுகள், ஷேக்குகள், முகல்ஸ், பதான்ஸ் எனவும் வட இந்தியச் சூழலில், அஷ்ரப், அர்சால், எனவும் பன்மை அடையாளங்களோடு உள்ளனர். தமிழ் சூழல் வாழ்வின் பரப்பிற்குள் முஸ்லிம் மைய நீரோட்டத்தில் இணைய முடியாத விளிம்பு நிலை முஸ்லிம்களும் உள்ளனர்.

ஒசாக்கர் எனப்படும் நாவிதர், வண்ணார், குளம் குட்டைகளில் மீன் பிடிப்போர், பீடி சுற்றுவோர், தோல் தொழில் செய்பவர், துப்புரவுத் தொழில் செய்பவர், விவசாயத் தொழில், நெசவு, கைதோலை, பாய்முடைதல்,கிணறு குழி தோண்டுதல்,கசாப்புக் கடை வியாபாரம், இரும்புப் பட்டறைத் தொழிலாளர், நிரந்தரக் குடியிருப்பின்றி அலைந்து திரியும் நாடோடிகள், தர்கா முற்றங்களில் வாழும் முஸôபர்கள் என பலவகையான அடையாளங்களோடு விளிம்பு நிலையில் வாழ்பவர்களாக உள்ளனர். இத்தகையதான மக்கள் சார்ந்து ஒருவகை பிரதிநிதித்துவபடுத்தல் வாழ்வை கதைப் பிரதிக்குள் பிரதிபலித்த வகையில் ஜாகிர்ராஜாவின் மீன்காரத் தெரு நாவல் முக்கியத்துவம் பெறுகிறது’’.

ரசூல் விரித்திருக்கிற பட்டியல் நீளமானது. இவர்கள் தான் இஸ்லாத்தின் தலித்துகள். மேலும் முனைந்து தேடினால் இந்தப் பட்டியல் நீளவும் வழியுண்டு. இன்னும் பக்கிரிஷாக்கள், பாலியல் தொழிலாளர்கள் எனவும் பல உண்டு.

இஸ்லாத்தில் பாலியல் தொழிலாளிகள் என்றதும் முகத்தைச் சுளிப்பவர்களும் எரிச்சலடைபவர்களும் ஏராளம்பேர் உள்ளனர். எல்லா மதங்களிலும் இனங்களிலும் உள்ளதைப் போலவே இஸ்லாத்திலும் பாலியல் தொழிலாளிகள் இருப்பதில் வியப்படைய என்ன இருக்கிறது? இந்த தொழிலுக்கு வந்து விட்ட காரணத்தினாலேயே அவள் தன் பெயரையும் இன மத அடையாளங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் நீங்கள் அவளைக் கல்லால் எறிந்து கொலை செய்வீர்களா? இவர்கள். இவ்வாறு மாறக் காரணம் இஸ்லாத்தில் மிகுந்து மலிந்து விட்ட வரதட்சணைக் கொடுமையும் தலாக் போன்ற மணவிலக்கும் தான் என்றால் எத்தனை பேர் ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்.

நான் எழுதிக் கொண்டிருக்கிற வந்து போனவர்கள் நாவலில் தொடர்ந்து மூன்று கணவர்களால் தலாக் சொல்லப்பட்ட பெண்ணும் வரதட்சணைக் கேட்டு கேட்டு முதிர்கன்னியாகவே வாழ்வை தொலைத்துக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணும் சமூகச் சூழலில் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிற அவலத்தைத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது மிகு புனைவா? கிடையாது. இவர்களை நான் சந்தித்து இருக்கிறேன்.

இவர்களின் கண்ணீர்க் கதைகளை அறிந்து ஒவ்வொரு இரவும் தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்து எழுந்து நானாக புலம்பியிருக்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கென்ன வெட்கம். இதைக் கேட்பதிலும் வாசிப்பதிலும் பிறருகென்ன அத்தனை ஒவ்வாமை.

இந்த விளிம்பு நிலை மக்கள் குறித்த பிரக்ஞை இல்லாமலேயே இஸ்லாம் சமூகம் ஒரு ஒப்பனையான வாழ்க்கையை வாழ்ந்து செல்கிறது என்பது தான் வேதனைக் குரிய விஷயமாகும். இவர்கள் இம்மையை விடவும், மறுமை குறித்து அதிகம் அதிகம் சிந்திப்பதால் மறுமைக்காகவே உழைப்பதால் நிகழ்வதால் அதில் உழன்று கொண்டிருக்கிற அற்ப புழுக்கள் குறித்த கவனம் போதவில்லை போலும்.

நாங்களும்/நீங்களும் நம்பும் இறை யொன்று தான் / பின்பற்றும் தூதரும் வேறில்லை / நம்பிக்கைகளும் / சடங்குகளும் கூட ஒன்றாகவே இருக்கின்றன / சொர்க்கத்தின் தென்றலோ / நரகத்தின் நெருப்போ/ ஒன்று போலவே வருடவோ வாட்டவோ செய்யும் / ஆனாலும் / நீங்கள் எங்களைத் / தூரத்திலேயே வைத்திருக்கிறீர்கள்.

ஊர் நேச்சையில் இந்தக் கவிதையை எழுதிய ஹாமிம் முஸ்தபாவின் குரல் ஒரு தலித் முஸ்லிமின் குரலாகத் தான் ஒலிக்கிறது. அதே போல இஸ்லாமியர்களின் மிகப் பெரிய மூட நம்பிக்கையாக நான் கருதுவது வெளிநாடு சென்று சம்பாதித்து தான் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மீரான் மைதீன் போன்றவர்களின் ஓதி எறியப்படாத முட்டைகள் போன்ற படைப்புகளை வாசிக்க நேர்கையில் இக்கருத்து சமூகத்தில் எத்தனை தூரம் புரையோடிப் போயிருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. மேலும் முஜ்புர் ரஹ்மான் போன்றவர்களின் படைப்புகளை இந்த வகையில் அணுக வேண்டும் என்ற ஆர்வத்திலேயே உள்ளேன்.

மீன்காரத் தெரு நாவல் நான் பால்யத்திலிருந்து கவனித்து வந்தவைகளின் பாதிப்பு. எல்லோரும் முஸ்லிம்களாய் இருப்பதும் அதல் குறிப்பாக ஒரே ஒரு தெரு மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டு ஓரங்கட்டப்படுவதும் எதனால் என்னும் கேள்வி ஒரு ஏழெட்டு வயதிலேயே எழுந்து விட்டது. தப்பித் தவறி வழி தெரியாமல் கூட அந்தத் தெருவுக்குள் நுழைந்து வெளியேறி விட்டால் கிண்டலடிக்கப்படுவதும் கேலிக்குள்ளாக்குவதுமான நிலை. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் சேரிகள் இருந்தன. ஆனால் ஊருக்குள்ளேயே ஒரு சேரி. நீண்ட நெடுங்காலமாக அந்த மக்களை மீங்காரன் என விளித்து கீழ் நிலையில் பாவிக்கிற ஜமாத்தார்கள். உதிரிபாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த அவர்கள் நிறத்தால் கருப்பர்கள். தங்களுக்குள் கொச்சையான மொழியை புழங்கிக் கொள்கிறவர்கள்.

ஆறு குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்து ஜீவனம் செய்பவர்கள். அல்லாமல் பலகாரக் கடைகளிலும் சிறு ஹோட்டல்களிலும் உணவு தயாரித்து விளம்புகிறவர்கள். வெளியூர் விசேசங்களுக்கு பண்டாரிகளாக செல்பவர்கள், உயர்ஜாதி முஸ்லிம்களின் வீடுகளில் வேலை செய்பவர்கள், அதனால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறவர்கள். எப்போதும் குடி கேளிக்கை என்று கூத்தாடுகிறவர்கள். இந்த விளிம்பு நிலை மக்களோடு மனதளவில் எவ்வித ஒட்டுதலும் இல்லாதவர்கள், பள்ளிவாசலில் தோளோடு தோள் உரச நின்று தொழுவதில் மட்டும் என்ன பெரிய அங்கீகாரத்தை தந்துவிடப் போகிறார்கள். அதிலும் முதல் ஷப்பில் நின்று விட அந்த ஜாதி முஸ்லிம்கள் காட்டுகிற ஆர்வமே இவர்களுடன் சேர்ந்து நின்று தொழுவதை தவிர்ப்பதற்கு தானே என்று நுட்பமாக அறிந்து கொள்ளும் போது மனம் பதைக்கத்தான் செய்கிறது.

நாவலில் வருகின்ற நைனா ஷேக் ஆத்தா, பாதக்கா, காசிம், ஆமினா, ரஜியா, இலுமு, கருப்பி, ஜக்கரிய்யா, லைலா, சலீம், சண்முகம், துருத்தி, ரமீஜா, ஆயிஷா, வள்ளி போன்ற கதை மாந்தர்கள் கற்பனையன்று. இன்றளவும் என் மண்ணில் உயிருடன் உலகிறவர்களே. பழனியிலிருந்து 12 கிலோ மீட்டர் பயணித்து கீரனூர் கிராமத்தில் இறங்கி மீன்காரத் தெரு என்று விசாரித்தீர்களே யானால் புருவம் உயர்த்தியோ, தாழ்த்தியோ உங்களுக்கு வழிகாட்ட ஒருவர் தயாராக இருப்பார்.

ஆக என்னுடைய நாவலின் வாயிலாக நான் கற்பனையான சங்கதி எதையும் இந்த சமூகத்துக்கு வழங்கவில்லை. வலிய எதையும் புனைவாக வடித்து இஸ்லாத்தில் தலித்துகள் என்று அதிர்வலைகளை கிளப்ப முனையவில்லை. ஆனால் நிஜத்தை சொல்லுவதில் இருந்தும் என்னை நீங்கள் நிறுத்தி வைக்க முடியாது. மீன் காரத் தெரு நாவல் குறித்து ஒன்றிரண்டு விமர்சனங்கள் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. கவிஞர் ஹெச்.ஜி.ரசூல், கெண்டை மீன் குஞ்சும் குர்ரான் தேவதையும் என்ற தலைப்பில் ஒரு கருத்துச் செறிவான ஆய்வை விமர்சனமாகத் தந்துள்ளார். எழுத்தாளர்கள் கோணங்கி, யூமா வாசுகி, ரமேஷ்-பிரேம், மாலதி மைத்ரி, சு.தமிழ்ச்செல்வி, யவனிகா ஸ்ரீராம், சி.மோகன், கரிகாலன், சுப்ரபாரதி மணியன், பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் நேரிட என்னிடம் நாவல் குறித்து நல்ல அபிப்ராயம் கூறியவர்களாவர். இதை விடவும் தமிழ் சூழலில் ஒரு கலைப்படைப்புக்கு என்ன நேர்ந்து விடப் போகிறது.

தமிழில் முதல் தலித் இஸ்லாமிய நாவல் என்ற தலைப்பிட்டு புதிய புத்தகம் பேசுது இதழில் மதிப்புரை வந்தது. நீங்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும் நாவலின் எந்த ஒரு பக்கத்திலும் நான் வலிந்து பிரசங்கம் செய்யவில்லை. படைப்பு ஒவ்வொரு வரியிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வாசகனைக் கடந்து செல்கிறது. மிகக் குறைந்த பக்கங்களில் சொல்லப்பட்ட நாவல் தான். இதை 300 பக்கங்களுக்கு இழுத்துச் செல்வதால் உண்டாகும் நீர்த்துப் போகும் தன்மையை தவிர்த்துள்ளேன். இது வாசகர்களுக்கு நான் செய்யும் நன்மை. ஆனால் யூமா வாசுகி போன்றவர்கள் இந்த நாவல் விரித்து எழுதப்பட வேண்டியதன் அவசியத்தைக் குறித்து நிறையச் சொன்னார்கள். எதிர்காலத்தில் அதற்கும் வாய்ப்பு இருக்கிறதென்றே தோன்றுகிறது.

ஒரு படைப்பு அதை எழுதி முடிக்கப்பட்டவுடன் படைப்பாளியை விட்டு பூர்ணமாக கழன்று விடுகிறது. அவனுக்கும் அதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் மீன் காரத் தெரு என் நெஞ்சை விட்டு அகலவேயில்லை. எனது பால்யத்திலிருந்து நான் உள்ளிழுத்திருக்கின்ற அந்த நீண்ட தெருவின் கவிச்சியை மரணிக்கும் வரை வெளியேற்றிவிட முடியாது என கனவிலும் நனவிலும் அந்தக் கருத்த முரட்டு மேனிக்காரர்கள் தான் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிகின்றனர்.

சமூகம் அவர்களுக்கு இழைத்த கொடுமைகள், அதை அலட்சியப்படுத்துகிற அவர்களின் பிறவி மனோபாவம், ஏன் என்று கேட்காமலோ, உரத்த குரலில் ஒரு கோஷம் எழுப்பாமலோ வாழ்ந்து கொண்டிருப்பதின் நிமித்தம் தங்களைச் சுரண்டுகின்ற சமூகத்திற்கு எதிர்வினை அளித்தல், இதனூடாக நைனா போன்ற கலகக்காரனை சுமந்து திரிகின்ற அந்த தெருவின் தகிப்பு, வாழ்வை ஒரு சிட்டிகைப் பொடியை எடுத்து கடைவாயில் இழுத்துக் கொள்வதன் வாயிலாக இலகுவாக்கிக் கொள்வது இரவா பகலா என்ற கால பேதமின்றி கேளிக்கைகளில் மூழ்கித் திரிவதன் மூலமாக ஒழுக்க விதிகளை வலியுறுத்தி பேணுகின்ற இந்த சமூகம் மீதான எதிர்வினைகள் ஆற்றுவது, வன்மம், குரோதம், பொறாமை, பொச்சரிப்பு, காமம், கள்ளம் போன்ற மனித மனத்தின் குணாம்சங்களைக் கடந்து ஒருவர் மீது ஒருவர் காட்டிக் கொள்ளும் பரிவு இவைகளைத் தான் இந்த நாவலின் உயர்ந்த குணாம்சங்கள் என கருதி நான் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த நாவல் வெற்றி கண்டதன் மூலமாக எனக்கான கதவுகள் திறந்து இருப்பதாக நான் கருதுகிறேன். இனி தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகத்தைப் பெற்றவனாக இருக்கிறேன். என்னிடமிருந்து நீங்கள் பெறுவதற்கு இன்னும் பத்து நாவல்களேனும் இருக்கிறது என்று சொன்னால் ஒரு சிலர் மறைவாக நகைக்கக் கூடும். வாழ்க்கையை அத்தனை பாரங்களைக் கொண்டு வந்து மறைமுகமாகவோ நேரிடையாகவோ சுமத்துகிறது. இதை எழுதாமல் இருப்பது சமூகத்துக்குச் செய்கின்ற துரோகமாகிவிடக் கூடும் என்பதாலும் எழுதுகிறேன்.

கலை இலக்கியப் பெருமன்ற கன்னியாகுமரி கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வேண்டுமென பல காலம் ஆசைப்பட்டு இருக்கிறேன். மீன் காரத் தெரு மூலமாக அது நிறைவேறியதில் சந்தோசம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com