Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
தமிழ்நதி கவிதைகள்

பேசப்படாதவள்

பூக்கள் இறைந்த கனவின் வழியில்
இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி
இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்
அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி
மறந்துபோகிறான் துணையை

அவன் தேரோடிய வீதிகளும்
கரைந்ததோ நனைந்ததோ

சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள்
திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாயினான்
அவள் பிச்சியாகினாள்

அன்பே! என்னோடிரு...என்னோடிரு...

கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்

சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்


போகமுடியாத பாதை

தனிமையின் காடு அடர்ந்தது
மழைமூடும் மாலைகளோவெனில்
பொட்டு வெளிச்சமுமற்ற
இருள் திண்மம்

விழுதெனப் பற்றியதெல்லாம்
பாம்பெனச் சீறும் அடர்வனத்தில்
முள்கிழிக்க அலைகின்றேன்.
சூரியன் உட்புகா
விசும்பல்கள் வெளியேறா
இலைச்செறிவு விலக்கி
வானம் பார்த்தல்
சாத்தியமற்றிருந்தது நேற்றுவரை.
தனிமையின் பயம் தணிக்க
தனக்குத் தான் பேசியபடி
நடந்து கொண்டிருக்கிறது நதி
அதனருகில்
ஊர்சேர்க்கும்
ஒற்றையடிப்பாதையொன்று
மெலிந்து செல்லப் பார்த்தேன்

போயிருக்கலாம் அதனுôடு
விலங்குகள் காட்டினில்
மட்டுமிருந்தால்.


சாயல்

‘பனிபொழியும் இராக்கால வீதியாய்
வெறிச்சிட்டதேன் உள்ளம்...?’
இதில் எந்தச் சொல்லுக்கும்
நீ உரிமை கொண்டாடலாம்.

‘பின்னிராக்காலம்’ தேய்ந்த சொல்
இதை நானெழுதும் இந்நேரம்
எவளோ எவனோ
சிள்வண்டுகள் ஒலிக்கும்
அதன் மோனத்திலாழ்ந்தபடி
பிரயோகித்துக்கொண்டிருக்கலாம்

மழையிருள் கவிந்த ஓர்நாளில்
ஓடும் நதியில் நகரும் ஒற்றைப்பூவை
இழந்த காதலின் கண்களால்
நானும் நீயும் பார்த்தபடியிருந்தோம்

உன்னையும் என்னையும் உறுத்துகிறான்
பச்சை விழக்கூடாதெனும் பதைப்புடன்
சிக்னல் அருகில் பிச்சையெடுக்கும்
வயோதிபன்

நான் அம்மாவின் முகமாம்
அப்பாவின் குணமாம்

கவிதை மட்டும் சாயலற்றதாய்
இருப்பதெனின்
கண்டுபிடிக்கவேண்டும் புதிய மொழியை.


யன்னல்

கம்பி இழைத்த சிறு சதுரத்தின் வழி
உயிர்ப்பு உள்நுழைகிறது
மழை ஈரக்குரலில் பாடுகிறது
திருப்தியுறாத கவிஞனைப்போல
வெயில் அழித்து அழித்து எழுதுகிறது

யன்னலை அடைப்பதன் மூலம்
உலகத்தைத் துண்டிக்கிறோம்

எங்கோ அசையும் தென்னங்கீற்று
உன்னறையில் கவிதையாகிறது

கடல் கண்களுக்கு வரும்போது
மௌனத்தின் பொருளுணர்கிறாய்

ஒவ்வொரு காலையிலும்
முகம் தெரியாத ஒருவரின் காதலை
எடுத்து வருகிறது தந்திகளின் அதிர்வு

உள்ளே நுழைந்து
சிலநொடி படபடத்து
தன்வழியேகும் வண்ணாத்திப்பூச்சியால்
அழைத்துச்செல்ல முடிகிறது பால்யத்துள்.

யன்னல் ஒளியின் வழி

பூட்டிவைக்கும் எவருள்ளும்
புகமுடியாது வெளிச்சம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com