Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
உடல்வெளிக்குள் பாசியடர்ந்த பஞ்சபூதமொழி ‘கடைசிப் பறவையும் கடைசி இலையும்’ முன்வைத்து
- பா. செல்வகுமார்

இயற்கையின் மீந்த பாகத்துள் ஊறிப்போன மனிதவுடலொன்று தான் பச்சையத்தால் ஆனவன் என்பதையும் தோலுக்குள் பஞ்சபூதம் கலந்து தகைந்தது என்பதையும் மனிதமொழிக்குள் ஊடுருவியவண்ணம் தன் கிளைகளைச் சடைத்தும் இலைகளைக் கீறியும் வேர்களை அணத்தவிட்டும் பெருஞ்சுழிகளை மேற்கொள்வதுதான் சிறீ. நான். மணிகண்டனின் ‘கடைசிப் பறவையும் கடைசி இலையும்’. தெளிந்த நீரிலிருந்து உடைத்த திவலைகளாகச் சொற்களெனினும், அது அதுவாயிருக்கும் அதனதனுள்ளிருக்கும் மொழியைக் கொண்டு வருகையில், இடுகுறியின் தளமாற்றங்கள் வேறு ரேகைகளுக்கு வாய்ப்பளிக்கையிலும் மொழியிலிருந்து பீய்ச்சும் நிறங்கள் மணிகண்டனின் கூடு நெய்யலுக்கு துணைபுரிவதில் நேர்க்கோடைகின்றன. ஏகமாக நிலங்கள் கண்ணாடி இழைகளை மின்னணு வரைபடத்தைக் கொண்ட பனிக்குடங்களை விந்தின் அமிலத்தன்மையை உற்பத்திச் செய்யும் மீயந்திரப் பொழுதில் கடந்த காலத்திலிருந்தும் கொட்டும் இவ்வரிகள் தன்னுடைய தொன்மத்தை உள்ளே உழல்வதன் மூலமாக வெளியே அகழ்வதன்மூலமாக அடைகள் இருப்பதை உடுக்கையொன்றின் ஒலி நின்ற அயர்ச்சியிலிருந்து கவிந்து கட்டுகின்றன.

சிறுவர்கள் கல்லெறியும் குடுவைக்காலம் நவீனத்திற்கு முந்தியது என்றாலும் நகரத்து உதடுகள் தனது நாவினால் உதட்டை ஈரப்படுத்தி உள்ளிழுத்துக் கொள்வது போன்ற மீதக்காட்சிகள் இன்றும் கிராமத்தில் நிகழலாமெனினும், சிறுவர்களை மறந்து உலகையே திருப்பிவிட்டு காணாமல் போகும் மரம்தான் நவீனத்துவத்தின் எச்சம். பறவைக்கறி குறிப்புகளுக்குள் தன்னை வரித்திட்ட மனிதவுடலின் நாவுகளும் தூரவெளியில் எரிந்துகொண்டிருக்கும் புத்தகப்பரப்பினுள் பதிவாகிவிட்டாலும் புத்தகத்தின் இதயப்பகுதி தாவரவீச்சமுள்ள நிலத்தை, ஒளியை, பனியை, கடலை சேதாரமாக்காமல் அணைத்துக் கொள்ளத் திமிர்கிறது.

சேதாரமாகிடும்போது, சேதாரமாக்கிடும்போது குழந்தையும் தனக்குள்ளிருக்கும் கடலை உற்பத்திக்கிறது. வளர்ந்த தன்னை வெளவால்கள் தொங்கும் படிமமாக்கிக் கொள்கிறது. மொழியற்ற வரலாறற்றகாலமே உடல் எல்லை வரைவற்ற உடல்வெளியில் -பெருநதி பாய்ச்சலில் களித்திருக்க, வரலாற்றுக் காலமோ, உணர்வுகளை வடிவமைக்கும் பெருங்களஞ்சிய கையகப்படுத்தல் நிறுவனப்பின்னணியில், காலத்தின் மீது வடிவமைக்கப்பட்ட மனிதர்கள் அடுக்ககத்தில் தன்னை வேறுகாலவுலகமென்று அறுதியிடினும் வெளவால் கூடாரம் தன்னை இந்நிலத்தின் மீது வேர்விட்டு இதுதான் தன் பழையவுடலென்று ஆர்பரிப்பதுடன், அவ்விடத்தில் தன் பசுங்கனவுகளை மேயவிடுகிறது. கரடுதட்டிய குளத்தில் வழிப்போக்கன் நீச்சலடிக்கிறான். குளம் அடுத்த கரைக்குச் செல்கிறது.

மனிதவுடலைத் தவிர்க்கும் வண்ணத்துப் பூச்சியோ, சிலந்தி வலைக்குத் தப்பி திசைகளழிந்த சுழிவில் அதிகாரத்தைக் கரைத்து சுயத்தைப் புடம்போடும் நிகழ்வில் கவிதையின் ஆதாரமிக்க வளப்பகுதியாவதுடன் வாழ்வியல் வெப்பத்தின் மீது குளிர்மை பனிக்கும் அச்சுணை இரும்பினிலிருந்து பச்சையம் தருவித்துக் கிளம்பும் சாதுர்யம் அடைகிறது. அது உள்ளே ஊருறுவியபடியே அலையும் பல நிறங்களின் வாசனையை கவிழ்த்தெடுக்க, மொழியை அவிழ்த்துச் செல்லும் பழுக்கக் காய்ச்சிய தந்தியில் மின்சாரப் புரள்வின் வேதிமைக் கருவைத் துவக்கிவிடுகிறது.

உடல், ‘அழித்தொழிந்து நகர்கின்றன / பின் தொடர்கிறகால்கள்’ என்று ‘கால்கள்’ உருவகத்திற்கு இடம் பெயர்ந்தாலும், உடலின் மேல் விழுந்த அச்சம் உணர்வின்மீது ஒரு சிறு வெளிச்சத்தைப் பரப்ப முடியாமல் பிரபஞ்ச இருப்பசைவில் ‘விழுங்கிப் போகிறது கடல்’ என்பதுள் வழக்கமான ஒன்றாகி விடுகிறது. ‘மனித விடுதலைக்காக’ அச்சத்தை-குழப்பத்தை-தீர்வற்றமையை மொழிக்குள் பரிசோதித்து மௌன உலகின் அடர்த்தியை விகசிக்கிறபோது உணர்வின்கீழ் தகையும் மண்டலம், நிகழ்வுலகின் எச்சரிக்கையைப் புறக்கணித்து உடலை வெளியேற்றிடும் போது அனைத்தும் தமக்குள் இடம் பெயர்கிறது. ‘இடம் மாறுகின்ற காட்சி’களில்.

ஆக, வரைபடங்களைத் தாண்டிச் செல்லும் பால்வெளி பிரயாணத்தின் மொழி, வரைபடத்தில் பொதிந்திருக்கும் சாளரத்தில் லாவகமாக படர்ந்திட, வண்ணத்துப்பூச்சி இன்னும் சிலந்திவலையில் சிக்காத தருணம் திரும்பக் கிடைக்கின்றன. வெளவால்களைக் கொண்ட உடலைப் போலவே பிணத்திற்குள் வாழும் உடல்கள் கிடைக்கிறபோது வண்ணத்துப் பூச்சியின் இணைகோட்டில் பின்நவீன உலகம் சளைக்காமல் தொடர்கிறது. உடலைத் தொலைத்து பிணத்திற்குள் வாழும் புதிய வடிவமைப்புகளை ‘இரவுப்பூச்சிகள்’ தருகிறது. கனவுகளைத் தேடி வந்தவனின் உடல் ஏற்கனவே தொலைக்கப்பட்டு இருப்பதும் நிகழில் அதன் தொல்லையுமாக பழைய உடலை எடுக்க கனவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறான். கனவுகளைப் போல உடலைத்தேடும் உடலை வனையும் மாந்திரீக விளையாட்டு கணக்குப் புத்தகத்திலும் தொடர்கிறது, ‘தனிமங்களுக்குள்ளும்/ குறியீடுகளுக்குள்ளும்’ இருக்கும் மாயக்காரன்.

‘...சூக்கும உடலோடு வேடம்’ தரிக்கிற விளையாட்டு உடலைத்தள்ளிவிட்டு புலன் உணர்வுகளின் உள்வெளிக்குள் சென்று விடும் துணிச்சலைச் செய்து, செய்வித்து புதிய பரப்பொன்றில் நிகழ்கிறான். மாந்திரீகத்தின் இடம்பெயர்ச்சி இசைக்குள் விழும்போது விரல்களும் குரலிசையும் மரக்குருவியுடன் இணைத்து உடலைத் தொலைக்கிறபோது ஒளிப்பழங்களாக மாறிவிடுகிறது கனிகள்.

மாந்திரீகத்தில் உடல்கரைவை ஏற்படுத்தாத மெய்யியல்புலம் மதிக்காத கடவுள் அரசனாகவே இருக்க ஆசைப்படுகிறான். பொதுவெளியில் உடலைக் கரைக்கத் தெரியாத அவன், பீடங்களை இழக்கிறான். சரியும் பீடங்கள் புதிய அரசனையும் புதிய கடவுளையும் கரையாத கல்லாக்கிடும்போது இங்கே நிலைகொள்ளும் உடல் பதற்றத்தைத் தருகிறது. பச்சையம் கழித்து காயடிக்கப்பட்டு கரைந்த உடல்கள் கனவுகளைத் துரத்துகிறது.

‘கனவுகளில் துரத்துகிறவர்கள்’ பயத்தின் மேலாடை காற்றுக்கு படபடக்கிற தன்மையை, உள்ளாடையுடன் அதன் தொடர்பை உள்ளுக்குள்ளேயே ஊதித்தள்ளுகிறதைப்போல் தந்தியூட்டப்பட்ட பயவுடல் சொற்களில் - தொலைந்து போன உடலைப்போல் தூரமாகி இங்கு பாலையைப்போல் கானலில் நெளியும் கனவுவெளி உண்மையுமாக இருப்பதை அது ஒவ்வாமை கொண்டு நெளிகையில் மீண்டும் தொலைக்கப்பட்ட உடல் நிரூபணமாகிறது ‘சுருக்கி நெளிகிற வெளி’யில்.

உடலைப் புரிந்துகொள்வதும் வெவ்வேறு உடல்வெளிகள் கண்டடைவதும், இருந்த உடலைக் காப்பதும், இழந்த உடலைத் தேடுவதும், பின்னமான உடலை ஆராய்வதும், பின்னமாகாத உடலுக்கு தவமிருப்பதும் எனும் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட நிலவரைவை வைத்துவிடுவதுடன் தமிழ் என்ற பழஞ்சொல்லின் உடலை உணர்வைத் தேடும் குறியீடாக ‘கடைசிப் பறவையும் கடைசி இலையும்’ அளவான மொழிநிலத்தில் கவிதை வலியை வேதிமையுடன் இனங்காட்டுகிறது.

‘கடைசிப் பறவையும் கடைசி இலையும்’ கவிதை நூல்,
சிறீ. நான். மணிகண்டன்,
மயூரா பதிப்பகம்,
33. தொட்டராயன் கோயில் விதி,
காட்டூர், கோயம்புத்தூர் - 641009.
பக் . 52. விலை ரூ. 35.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com