Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
கறுப்பு வெள்ளை
- செல்வ புவியரசன்

புத்திஜீவிகளென புளகாங்கிதம் கொள்ளும் சிலர் அவ்வப்போது அவசரகதியில் அள்ளித்தெளிக்கும் கருத்துகள் எந்த அடிப்படையு மற்றவையெனினும் அதுகுறித்து பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நம்மை ஆட்படுத்திவிடுகின்றன.

ஜெயமோகனின் இலக்கிய முன்னோடிகள் நூல்வரிசை நவீன தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியப் பங்களிப்பு என்பதை மறுப்பதற்கில்லை. தீவிர வாசகரும் படைப்பாளியுமான அவரது இலக்கியப் பேரார்வம் இந்நூல்களெங்கும் வெளிப்படும் அதே நேரத்தில் அகவயமான அவதானிப்புகள் என்ற பெயரில் அவை நிரூபிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்ற முன் குறிப்போடு போகிறபோக்கில் பல விஷயங்களை தொட்டுப்பேசி ‘கருத்து கந்தசாமி’யாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

நவீன இந்திய முற்போக்குக் கருத்தியல் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முற்போக்கு சக்திகளான பக்தி இயக்கங்களின் தொடர்ச்சி என்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தம் இறுதிநாட்களில் தெரிவித்த கருத்தின் துணைகொண்டு ஜெயகாந்தனின் முற்போக்கு அழகியலை அணுகும் ஜெயமோகன் ‘ஈ.வே.ரா. பாணியில் கறுப்பு வெள்ளையில் சிந்தித்துப்பழகிய தமிழ்வாசகனுக்கு இது குழப்பமான சித்திரத்தை அளிக்கலாம்” என்று தனது அகவய அவதானிப்பை வாசகன்மீது திணிக்கையில் அவரது அகத்தை வாசகன் அவதானிக்கவும் வாய்ப்பேற்பட்டுவிடுகிறது.

ராஜாராம் மோகன்ராய், சுவாமி விவேகானந்தர், நாராயணகுரு, வள்ளலார் உள்ளிட்டோரை முன் வைத்திருக்கிறார் இ.எம்.எஸ். இது மிகச்சில வாசகருக்கு குழப்பமான சித்திரத்தினை அளிக்கவும் வாய்ப்பிருக்கலாம். ஆனால், ஈ.வே.ரா பாணியில் சிந்தித்துப் பழகியவனுக்கு இதிலென்ன குழப்பம் வந்து சேரப்போகிறது என்றுதான் தெரியவில்லை. ஈ.வே.ராவின். பார்வை கறுப்பு-வெள்ளை தான் என்று எந்த அடிப்டையில் முடிவுக்கு வருகிறார் என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

முந்தைய காலகட்டத்தின் முற்போக்குச் சக்திகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டிருக்கும் வள்ளலாரின் ஆறாம் திருமுறையிலிருந்து சாமி. சிதம்பரனார் திரட்டித்தந்த நூறு பாடல்களை பெரியாரின் குடியரசு பதிப்பகம் வெயிட்டது என்பதோடு அந்நூல் ‘பெரியாரும் வள்ளலாரும்’ என்ற தலைப்பில் இப்போதும்கூட விற்பனையிலிருக்கிறது. சமீபத்தில் விவேகானந்தரின் நூல்களிலிருந்தும்கூட சில பகுதிகளைத் தொகுத்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

தனியொரு மனிதனின் பொதுப்புத்தியிலிருந்து தோன்றியதே பெரியாரியம் எனும்போதும் ஒத்த புள்ளிகளைக் கண்டடைந்து தம்மோடு அவற்றை இணைத்துக் கொண்டு அவைதீக மரபில் தன்னை வலுவாக நிறுவிக் கொண்டுள்ளது.

பெரியார் தம் கருத்துக்களோடு ஏதோவொரு புள்ளியில் இணைபவர்களையும் அந்தந்த அளவில் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கிறார். பார்ப்பனரல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்ற வகையில் சித்தர்கள் மீது பெரியாருக்கு உயர்வான மதிப்பீடுகள் இருந்திருக்கின்றன. நம் கண்முன்னாலுள்ள சாட்சியாய் குன்றக்குடி மடத்திற்கும் திராவிட இயக்கத்திற்குமான உறவைச்சுட்டலாம்.இயக்கச்சார்புடைய என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா அளவுக்கு ‘பக்திரசம் சொட்டச் சொட்ட’ ‘சிவகவி’யில் நடித்து புகழ்பெற்ற எம்.கே. தியாகராஜ பாகவதர்மீதும் தமிழிசை ஆதரவு என்ற நிலையில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.

இந்த நெகிழ்வுத்தன்மையையும் தனது தொடர்ச்சியாக தன்னையே மறுக்கும் சுதந்திரத்தையும் வேறு எந்த சிந்தனையாளனும் முன்வைத்ததில்லை. காலத்தின் கட்டாயமாக சற்று காட்டமாகவே வெளிப்பட்ட பெரியாரின் கொள்கைகள் கலை இலக்கிய வாதிகளின் படைப்புச்சுதந்திரத்திற்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை. அநேகமாக அவரைத்தவிர இயக்கத்திலிருந்த எல்லோருமே கலை இலக்கியவாதிகளாகவே இருந்தார்கள். தீவிர அரசியலிலும் அவர்கள் பங்கேற்கத் தொடங்கியது தான் திராவிட இயக்க இலக்கியங்கள் ஆரம்பநிலையோடு நின்று போனமைக்குக் காரணம்.

‘செவ்வியல் இலக்கியம்’ என்பதற்கு முன்னோடி இலக்கியம், பேரிலக்கியம் என்று ஜெயமோகன் கூறும் இரண்டு வகைபாடுகளையேக் கொண்டாலும்கூட, இதுவரையிலான திராவிட இயக்க இலக்கியங்களுக்கு முன்னோடி முயற்சிகள் என்ற வகையில் முக்கியத்துவம் இருக்கிறது. பெரியாரியலுக்கான தேவைகளும், திராவிட இயக்கத்திற்கான அவசியமும் முடிந்துவிடவில்லை. மீண்டுமொருமுறை அது தீவிரம் கொள்கையில் பேரிலக்கியமொன்றும் பெருங்கனவல்ல.

‘நான் ஒரு நாத்திகனல்ல; தாராள எண்ணமுடையவன், (ஆனைமுத்து தொகுப்பு பக் : 1186’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர் பெரியார். ஆனால் ஜெயகாந்தனின் நவீன முற்போக்கு அழகியல் எங்கு போய் முடிந்தது? ஹரஹர சங்கராவில்தானே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com