Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
இந்தியச் சூழலில் சிறுபான்மையினர் என்ற கருத்துருவாக்கம்
- மு.பு.டெரன்ஸ் சாமுவேல்

வெப்ஸ்டர் ஆங்கில அகராதி, ‘‘இனம், மொழி, மதம், அரசியல்-சார்வு பேன்றவற்றால் அதிகளவு மக்களைக் கொண்ட குழுவினின்று வேறுபட்டும், ஒரு சமூகத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதியளவுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்டுள்ள குழுவை சிறுபான்மையினர்’’ எனக் குறிக்கிறது.1 இந்த விளக்கம் சிறுபான்மையினருக்கான வரையறையை முழுமையாக விளக்குவதாக அமையவில்லை. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில், சிறுபான்மையினர்க்கான வரையறையை எண்களைக் கொண்டோ அல்லது எண்ணிக்கையைக் கொண்டோ மட்டும் குறித்துவிட முடியாது. மாறாக, இக்கருத்து சிக்கலான பல விஷயங்களையும் உள்ளடக்கியதாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

புள்ளியியல்ரீதியாக, சிறுபான்மையினர் என்ற கோட்பாடு, பெரும்பான்மை யினரைவிட எண்ணிக்கையில் குறைந்த மற்றும் வேறுபட்ட மக்கள் கூட்டத்தைக் குறிப்பதாக இருந்தாலும், குழுக்களுக்கு இடையிலான (Intergroup) மற்றும் மனிதர்களுக்கு இடையிலான (Interhuman) சமூக உறவுநிலை என்ற தளத்தில் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதாய் அமைந்துள்ளது. சிறுபான்மையினர் என்ற சொல்லாடல், பெரும் பான்மையினரின் இருப்பையும், பெரும்பான்மையினின்று அவர்களின் வேறுபட்ட நிலைப் பாட்டையும் குறித்து நிற்கிறது. இந்தவிதமான, சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் என்பது போன்ற இருமை எதிர்வுகள், காலனிய நவீனத்துவத்தின் வெளிப்பாடுகள்.2 அப்படியானால் நவீன காலத்துக்கு முன் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற இருமை எதிர்வுகள் யதார்த்தத்தில் இருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

சார்லஸ் டெய்ர், தனது ‘‘The Politics of Recognition’’ என்ற கட்டுரையில்3, காலனிய நவீனத்துவம், சமூகத்தின் பன்மியக் கூறுகளின் இருத்தலை எவ்விதம் வெளிப்படுத்த உதவியது என்று விளக்குவது இவ்விடம் உற்றுநோக்கத்தக்கது. நவீன காலத்துக்கு முன், மனிதர்களால் விருப்புடனோ அல்லது வெறுப்புடனோ ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூகப் படிநிலைகளுடன் ஒரு தனிமனித, சமூக, இன, மொழி அங்கீகாரம் சம்பந்தப்பட்டிருந்தது. நவீன காலத்துக்கு முன் அங்கிகாரம் என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கவில்லை. நவீன காலத்துக்கு முந்தைய சூழலி, ஆதிக்க வர்க்கத்தினரின் அரசியலால், வெகுஜன மக்களுக்கான அங்கீகாரம் எட்டாக் கனியாய் இருந்தது. ஆதிக்க வர்க்க அரசியலுக்கு எதிரான போராட்டங்கள் பெரும்பாலும் அரசியல் வட்டத்திற்கு அப்பாலேயே தீர்மானிக்கப்பட்டன. அல்லது அப்போராட்டக்குழுக்கள் ஆதிக்க வர்க்கத்தினருக்குள் உள்வாங்கப்பட்டுக் கொண்டனர்.

அதாவது, பேரடையாளங்களுக்குள் சிற்றடையாளங்கள் பெரும்பாலும் கரைக்கப்பட்டு விட்டன. ஆயினும் ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் அடக்குமுறை அரசியலால் அங்கீகாரம் குறித்த பிரச்சனை அடையாளம் குறித்த அரசியலாக உருவெடுத்தது. காலனியாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட கலாச்சாரங்கள், தங்களின் தனித்துவங்களைக் காக்க/மீட்டெடுக்க பலவித வடிவங்களை/போராட்ட முறைகளை கையாண்ட நிலையில் சமூகத்தின் பன்மியக் கூறுகளின் அங்கீகாரத் திற்கான அரசியல் துவங்கியது என்கிறார் சார்லஸ் டெய்லர். இதன் தொடர்ச்சியாகவும், மற்றும் இவை தொடர்பான பிற காரணிகளாலும், காலனியாதிக்கத்தின் வெளிப்பாடாகவும், சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற கருத்தாக்கங்கள் உருவாயின. இந்திய அளவில், சிறுபான்மையினர் என்ற கருத்துருவாக்கம் நிகழ்ந்த விதம் குறித்து பின்வரும் பகுதியில் காண்போம்.

அதற்குமுன் சிறுபான்மையினர் என்ற சொல்லாடல் எதைக் குறித்து நிற்கிறது. அச்சொல்லாடல் வெளிப்படுத்தும் சமூக, அரசியல் பரிமாணங்கள் எவை? அச்சொல்லாடல் வெறும் எண்ணிக்கையை மட்டும் குறித்து நிற்கவில்லையாயின்,. அச்சொல்லாடல் உணர்த்தும் பிற விஷயங்கள் என்ன? என்பது குறித்து முதலில் புரிந்துகொள்வோம்.

‘’Understanding Minority Groups’’ என்ற நூலின் பதிப்பாசிரியரான ஜோசப். பி. கிட்லர் என்பவர், ‘‘ஒரு சமூகத்தின் சிறுபான்மையினரின் இருப்பு என்பது அச்சமூகத்தில், அவர்களைவிட அதிகச் சலுகைகளுடறும், உயர்ந்த அந்தஸ்துடனும் வாழும் பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து அவர்களின் வேறுபட்ட நிலைப்பாட்டைக் குறிக்கிறது. சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து, அவர்கள் வாழும் சமூகச் செயல்பாடுகளில் அவர்களை முழுமையாகப் பங்கெடுக்கவிடாமல் விலக்கி வைக்கிறது’’ என்கிறார்.4 கிட்லரின் இக்கருத்து சிறுபான்மையினரை எண்ணளவில் பார்க்காமல், குழுக்களுக்கு இடையிலான உறவு நிலைகளில், அதிகாரம், அந்தஸ்து, சலுகை போன்ற தளங்களில் சிறுபான்மையினரைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அதாவது, சிறுபான்மையினர் என்போர் பெரும்பான்மையினருக்கு எதிரான நிலையில், சமூகப் படிநிலைகளில் கீழ் நிலையிலும், அதிகாரங்களின் விளிம்பு நிலையிலும் உள்ளனர் என்பதைச் சுட்டுவதாய் இக்கருத்து அமைகிறது.

மேலும், சமூகவியல் ஆய்வாளரான S.K.சிங் அவர்களின் சிறுபான்மையினர் குறித்த கருத்தாக்கம் இவ்விடம் குறிப்பிடத்தக்கது. அவர் சிறுபான்மையினரை வரையறுக்க பிற சமூகவிய லாளர்களின் கருத்தாக்கங்களை மேற்கோள்காட்டி, கீழ்வரும் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.5 அதாவது,

1. சிறுபான்மையினர். பெரும்பான்மையானரைவிட கீழான அல்லது சார்றிலையான இடத்தை வகிக்கின்றனர். (Interior of subordinate).

2. ஒப்பீட்டளவில் சிறுபான்மையினரிடம் அதிகாரம் குறைவு.

3. பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் விலக்கி வைக்கப்படுகின்றனர்; பிரித்தறியப்படுகின்றனர். (Exclusion and Discrimination).

4. சிறுபான்மையினர் குறித்து பெரும்பான்மையினர் நிரூபணமாகாத அல்லது முன்குறித்த எண்ணங்களைக் (Prejudiced Attitude) கொண்டுள்ளனர். அவ்வித எண்ணங்களுடனேயே, பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை நோக்குகின்றனர்; அணுகுகின்றனர்.

சுருக்கமாகச் சொல்வோமானால், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை குழுக்களுக்கு இடையிலான உறவுநிலைகளில், சிறுபான்மையினர். வகிக்கும் இடம் என்பது கீழ்நிலைகளிலேயே உள்ளது. சிறுபான்மையினர் வகிக்கும் கீழான அந்தஸ்தானது, அவர்கள் வாழும் சமூகத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சட்டம் சார்ந்த தளங்களில் பிரதிபலிக்கப்படுகிறது. ஆயினும், இத்தளங்கள் அனைத்திலும் ஒரு சமூகத்தின் சிறுபான்மையினர் பாதிப்படைகின்றனர் என்றும் சொல்வதற்கில்லை. மேலும், சிறுபான்மையினரை தேசியம், மொழி, இனம், சமயம் இனக்குழு சார்ந்து அடையாளப்படுத்த முடியும்.

இவ்வித அடையாளப்படுத்துதல்கள், சிறுபான்மையினர், பெரும்பான்மையினருக்கு இடையிலான வேற்றுமைகளை முன்னிறுத்தி அமைந்தாலும், அவ்வேற்றுமைகளை இக்குழுக்கள் எதிர்கொள்ளும் விதத்திலேயே (Reaction to difference) அவற்றிற்கு இடையிலான மோதல்கள் உருவாகின்றன. இந்தியச் சூழலில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர்க்கு இடையிலான அடையாள வேற்றுமைகளை, இவ்விரு சாராரும் எதிர்கொள்ளும் முறைகள், இவ்விரு சாராருக்கும் இடைப்பட்ட மோதல்களுக்கான கற்பனை-வரையறைகளாக (Fault-Lines of Conflict) மாறுவதாக சுஜாதா பட்டேல் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

மேலும் விளிம்பு நிலை குறித்த சமூகவியல் கோட்பாடும் சிறுபான்மையினரின் நிலையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. விளிம்பு நிலையினர் என்போர், தாம் வாழும் சமூகத்தில் சில நேரங்களில் நாடப்படுவதாகவும், சில சமயங்களில் ஒதுக்கப்படுவதாகவும் உணர்கின்றனர். அத்தகு நிலையில் உள்ளோர், தங்களுக்கான சமூக அங்கீகாரத்தை முழுமையாக உணராத நிலையில், அச் சமூகத்துடனான தங்களின் உடனிருப்பை உணர முடிவதில்லை. இத்தகு விளிம்பு நிலை வாழ்வு முறையானது, சிறுபான்மையினருக்கும் பொருந்துவதாகவே உள்ளது.

சிறுபான்மையினரை பல்வேறு வகைகளில் ஏற்கனவே கூறியவாறு வகைப்படுத்த இயலும் எனினும், இவ்விடம் இந்தியச் சூழலில் சமயச் சிறுபான்மை யினரை மட்டும் எல்லையாகக் கொண்டே இக்கட்டுரை பின்வரும் பகுதிகளில் அமைகிறது. இந்திய அரசியல் வரலாறானது, சமயத்துக்கும் அரசியலுக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க உறவுமுறை பண்டைய காலந் தொட்டு இருந்து வருவதை வெளிப்படுத்துவதாக, பிரதீப் மண்டவ் என்ற சமூகவியலாளர் குறிப்பிடுகிறார்.6 அத்தகு அளவிற்கு, இந்தியச் சமூக சூழலில் சமயத்தின் பங்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்ற கருத்துக்கள் நவீன காலத்தில் உற்பத்தியானவை என்றாலும், இந்தியச் சூழலில், சமயம் சார்ந்த அடையாள உருவாக்கங்கள் பெரும்பாலும் முன்-நவீன கால வரலாற்றை கையிலெடுத்துச் செய்யப்பட்டுள்ளன. ஜேம்ஸ் மில் என்ற பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர், 1826-ல் எழுதிய ‘’The History of British India’’ என்ற நூலில் பண்டைய ‘இந்திய’ வரலாற்றை ஹிந்துக்களின் காலம் என்றும் மத்திய இந்திய வரலாற்றை முஸ்லீம்களின் காலம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, இந்திய வரலாற்று ஆசிரியர்களும் இவ்வகைபாட்டை பயன்படுத்தத் தொடங்கினர்.

உதாரணமாக மத்திய காலத்துக்கு முந்திய காலத்தை ‘ஹிந்துக்களின்’ பொற்காலம் என்றும், மத்திய காலத்தில் முஸ்லீம் ஆட்சியில் ‘ஹிந்துக்கலாச்சரம்’ பின்னடைவைச் சந்தித்தது என்றும் நவீன காலம் மற்றும் அதற்குப் பிந்தைய தற்போதுள்ள சூழலில் இந்துத் தேசியவாத வரலாற்று ஆசிரியர்கள் கதைப்பது இவ்விடம் குறிப்பிடத் தக்கது. உண்மையில், பண்டைய இந்தியாவிலும் மத்திய கால இந்தியாவிலும் ‘ஹிந்து’ மற்றும் முஸ்லீம் சமயச் சார்ந்த அடித்தளமக்கள் முறையே பலவித இன்னல்களைச் சந்தித்துள்ளனர்; அந்த ஆட்சியாளர்களிடம் ஏவல் பணி புரிந்த, மற்றும் அவர்களுக்கு நெருக்கமான மக்கள் மட்டும், அவர்களிடம் பல சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். ஆனால், இவ்வித வர்க்கம் சார்ந்தவிஷயங்களை, சமயச் சாயம் பூசிப் பார்க்கும் அணுகுமுறை, நவீன காலத்தில் சமயப் பூசல்களுக்கு வித்தாக அமைந்துவிட்டது என்பது வரலாற்று அறிஞர்களின் வாதம்.

இந்தியச் சூழலில் பெரும்பான்மையினர் - சிறுபான்மையினர்

நாம் ஏற்கனவே விவாதித்தப்படி, சிறுபான்மையினர் என்ற சொல்லாடல் பெரும்பான்மையினர் என்ற சொல்லாடலுக்கு எதிரானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு சொல்லாடல்களின் எது முதலாவதாக உருவானது என்று கூறுவது பொருத்தமாக இராது. அவ்விரண்டு சொல்லாடல்களும் அவை சுட்டும் அடையாளங்களின் சமூக-அரசியல்-பொருளாதாரச் செயல்பாடுகளின் ஊடாட்டங்களால் வலுவடைந்துள்ளன. நாம் ஏற்கனவே அறிந்தவாறு ‘ஹிந்து’ என்ற சொல் ‘சிந்து’ என்ற சொல்லில் இருந்து பிறந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெர்சிய அறிஞர்கள், முஸ்லீம் அல்லாதோரை ‘ஹிந்து’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டதாக கேவின் ஃப்ளட் (Gavin Flood) என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.7 புவியியல் ரீதியாக சிந்துப் பகுதியில் வாழ்ந்த சொந்த மக்களைக் (Native people) குறிப்பிடவே அவர்கள் ‘ஹிந்து’ என்ற வார்த்தையை உபயோகித்துள்ளனர். ஆயினும், 15-ம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த ஸ்ரீவரா என்ற சைவ வரலாற்று அறிஞர், முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதோரை பிரித்துக் குறிப்பிடும்படியாய், ‘ஹிந்து’ என்ற வார்த்தையை சமஸ்கிருத மொழியில் பயன்படுத்தினார்.

மேலும் 16-ம் நூற்றாண்டில் நிலவிய வங்காள வைணவ நூல்கள் யவணர்கள் மற்றும் முஸ்லீம்களைத் தவிர்த்த ஏனையோரை ‘ஹிந்து’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டன. இந்த வைணவ நூல்கள், இறந்தோரை எரித்தல், பசுக்களைப் புனிதமாக கருதுதல் போன்றவற்றை தங்களின் வழக்கமாகக் கொண்ட முஸ்லீம்கள் அல்லாதோரை ஹிந்துக்கள் என்ற வார்த்தையால் குறிப்பிட்டதாக கேவின் ஃபிளட் மேலும் கூறுகிறார். நவீன இந்தியாவில், ‘ஹிந்து’ என்ற சொல்லாடலை முதன்முறையாக, 1816-ம் ஆண்டில் ராம்மோகன்ராய் பயன்படுத்தினார். இவரே, ‘ஹிந்து’ என்ற சொல்லாடலைப் பயன் படுத்திய முதல் நவீன-இந்தியர் என்றும் வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறார். இதன்பின், 19-நூற்றாண்டில் இச்சொல்லாடல் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டது. காலனியத்திற்கு எதிரான தேசிய அடையாளக் கட்டமைப்பிலும், கிறித்துவம், இஸ்லாம், மற்றும் பிற நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்களுக்கு எதிராக, இச் சமயங்களைச் சாராதோரின் (‘ஹிந்து’ என்ற சொல்லாடலால் தற்போது குறிக்கப்படுபவர்கள்) சமயரீதியான நிறுவனமயமாதலுக்கும் இச்சொல்லாடல் மிகவும் பயன்பட்டது.

இந்தியச் சூழலில், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் விளைவால் நடந்த சில விஷயங்களையும், நிகழ்வுகளையும் இவ்விடம் நோக்க வேண்டியது அவசியமாகிறது. காலனியவாதிகள், ஆப்பிரிக்க நாடுகளில் மேற் கொண்டதைப் போன்று, சமயம்சார்ந்த ‘சீர்திருத்த’ நடவடிக்கைகளை இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவுடன் ஆரம்பித்துவிடவில்லை; ஆப்பிரிக்கச் சமூகங்களில், அம் மக்களின் சொந்த சமய பழக்கவழக்கங்களை வேரறுத்து, அவர்களுக்கு அறிமுகமில்லாத சமய வழிபாடுகளை விதைத்ததைப் போன்று இந்தியாவில் காலனி யாதிக்கம் முதலில் செயல்பட வில்லை. மாறாக, ஆங்கில காலனியாதிக்கத்தினர், ‘ஹிந்து’ கோட்பாடுகளைப் புரிந்து, அதன் மூலம் இந்திய துணைக் கண்ட மக்களை ஆளுகை செய்ய விளைந்ததாக, கௌரி விஸ்வநாதன் என்பவர், தனது “Colonialism and the construction of Hinduism” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.8

18ம் நூற்றாண்டில், புரவலரின்றி தவித்த சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கு, காலனியாதிக்கத்தினரின் இக்கொள்கை வரப்பிரசாதமாய் அமைந்தது. ஆங்கில ஆட்சியாளர்களுக்கு ‘ஹிந்து’ கோட்பாடுகளை புரியவைக்க சமஸ்கிருதப் பண்டிதர்கள் உதவினர். இந்நிகழ்வில், அப்பண்டிதர்களின் வாழ்வு மேம்பட்டது. ஆனால் சமஸ்கிருத நூல்களில் இடம்பெற்ற கொள்கைகளும், கோட்பாடுகளும், ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது என்ற தோற்றப்பிழை ஏற்படக் காரணமாக அது வழிவகுத்தது. பிராமணர்கள் ஞானமுள்ள வர்களாகவும் சட்டங்களை இயற்றுபவர்களாகவும் ஆங்கிலேயர்களால் யூகிக்கப்பட்டனர் என்று டெர்மட் கில்லிங்லி தனது ‘’ Modernity Reform and Revival‘’ .என்ற கட்டுரையில் தெரிவிக்கிறார்.

அதன்மூலம் சமஸ்கிருத கோட்பாடுகள், ‘ஹிந்து’ என்ற பொது அடையாளம் பெற்று ‘ஹிந்து’ மத புத்துயிர்ப்புக்கும், மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது. இதனால், ‘ஹிந்து’ மதம் மேற்கத்தியமயமாகி, சமய நிறுவனப்படுதலுக்கு ஏதுவாக வளர்ச்சி பெற்றது. ஆனால், இதே கால கட்டத்தில், இஸ்லாமின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. பிரிட்டிஷ் காலனியம் அளித்த நவீனங்களை பயன்படுத்துவதில் மேல்சாதி ஹிந்துக்கள் தேர்ச்சி பெறத் தொடங்கினர். ஆனால், பிரிட்டிஷார் கொணர்ந்த நவீன மயமாக்கங்களை முஸ்லீம்கள் ஏற்கவில்லை; சந்தேகக் கண்களோடு பார்த்தனர்.

அதனால், ஒப்பீட்டளவில், இந்திய துணைக் கண்ட முஸ்லீம்கள் பின்தங்கிப் போயினர் ஆனால், மேல்சாதி ஹிந்துக்கள், பத்ரலோக் (Bhadralok) எனப்படும், ஆங்கிலேயர்க்கு உகந்த நன்மக்களாகினர். அதன்மூலம் அரசு வேலை பெறுவதிலும், வணிகத் திலும் சிறப்படைந்தனர்.

ஆங்கிலேயரின் பாணியில் சங்கங்கள், சபைகள், சமாஜங்கள், மிஷன்கள் அமைத்து, ‘ஹிந்து’ புத்துயிர்ப்புக்கு உதவினர். ஆயினும் இத்தகு மன்றங்களின் பெரும்பாலானவை ‘‘எதிர்வினை நவீன வாதிகளாலேயே’’ (Reactionary Modernist) நிரம்பி இருந்தன. இவ்வித ‘‘எதிர்வினை நவீனவாதிகள்’’ நவீனத் தொழில்நுட்பங்களை வரவேற்பவர்களாகவும், அறிவொளிக்கால (Enlightenment Age) பகுத்தறிவை ஏற்க மறுப்பவர்களாகவும் விளங்கினர்’’

மேலும், சமஸ்கிருதப் பண்டிதர்களின் உதவியுடன் ஆங்கிலேயர் இந்திய மக்களை புரிந்துகொள்ள விளைந்ததால், சாதி, வர்ணம், இனக்குழு குறித்த ஹிந்து மத கோட்பாடுகள் சார்ந்த அனைத்து மக்களையும் பெரும்பான்மையினர் என்றும், இவ்வித உட்பிரிவுகளற்ற சமயத்தினரை ‘‘சிறுபான்மையினர்’’ என்றும் ஆங்கிலேயர் புரிந்து கொண்டனர் என்று சுஜாதா பட்டேல் விளக்குகிறார். இவ்வித புரிதலில், ஒரு தீவிரமான பிரச்சனையும் உள்ளடங்கி உள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. சாதி, இனக்குழு பிரிவுகளைக் கொண்ட அனைத்து மக்கள் கூட்டத்தினரும், ‘ஹிந்து’ என்ற சொல்லாடலுக்குள் உட்படுத்தப்பட்டு, ஓர் ஒற்றை மையம் உருவாக்கப்பட்டதில், பன்முகக் கூறுகளின் இருப்பை நினைத்து சிலர் புளகாங்கிதம் அடையலாம். ஆனால் இவ்வித ஒற்றை மையம் கொண்ட பன்முகக் கூறுகளுக்கு இடையில் சமத்துவம் இல்லை.

மாறாக, சமத்துவமற்ற பன்முகங்களும் / பன்மியக் கூறுகளும், அவைகளுக் கிடையிலான அதிகாரப் படிநிலைகளை இயல்பானதென்று ஏற்குமாறு ‘ஹிந்து’ என்ற சொல்லாடல் வினை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விதமாகச் சொல்வோமானல், சமத்துவமற்ற பன்மியக் கூறுகளை ‘ஹிந்து’ என்ற ஒரே சொல்லாடலின் கீழ்க் கொண்டு வந்ததன் மூலமே, இந்தியாவில் ‘‘பெரும்பான்மை’’ என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தவிதமான ஹிந்துப் பெரும்பான்மை என்பது பிராமணிய ஆணாதிக்கக் கோட்பாட்டின் துணைகொண்டு கட்டமைக்கப்பட்டது என்றும் இந்தியாவில் ‘பெரும்பான்மையினர்’ என்ற கோட்பாடு உருவாக்கத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘Melting Pot’ கொள்கையுடன் ஒப்பிட முடியும் என்றும் கூறுகிறார் சுஜாதா பட்டேல்”

இது ஒருபுறமிருக்க ‘ஆங்கிலேயரின் வரவால், இந்தியாவின் மீதான தங்களது சிறிது கால ஆதிக்கத்தையும் இழந்ததால், தன்னம்பிக்கையின்றி வாழ்ந்த முஸ்லீம்கள் தாங்கள் பிறரினின்று வேறுபட்டவர்கள் என்பதை நிரூபிக்கத் தலைப்பட்டனர்” என்று பத்ருதீன் தியாப்ஜி குறிப்பிடுகிறார்” மேலும், ஆங்கிலேய ஆட்சியினால், முஸ்லீம் பிரபுக்கள் முதலில் பாதிப்பு அடைந்தனர். 1793ம் ஆண்டு வெளியிடப்பட்ட நிரந்தரக் குடியேற்றச் சட்டத்தினால், அதுவரை அரசுக்கும், நிலவரி வசூலிப்பவர்களுக்கும் இடையில் செயல்பட்ட முஸ்லீம் அதிகாரிகள் வேலை இழந்தனர். ஆங்கிலேய கலெக்டர்கள் முஸ்லீம் அதிகாரிகளின் இடத்தை இச் சட்டத்தின் மூலம் ஆக்கிரமித்தனர்.

மேலும் 1857-ல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்குப் பின், ஆங்கிலேயர் முஸ்லீம்களை விரோதிகளாகப் பாவித்தனர்; அவர்களை பயங்கரமான எதிரிகளாகப் பாவித்து, தமது உக்கிரங்களை அவர்கள்மேல் செலுத்தத் தொடங்கினர். இதனால், ஆங்கிலேயப் படைகளில் சேரும் வாய்ப்பும் முஸ்லீம்களுக்கு மறுக்கப்பட்டது. நீதிப்பரிபாலன முறைகளில் வழக்கிலிருந்த பெர்சிய மொழிக்குப் பதில் ஆங்கிலம் புகுத்தப்பட்டதால், 19ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்ஸிம் காதிக்கள் (Qadi) வேலையிழந்தனர். ஆங்கிலத்தைக் கற்றுணர்ந்த மேல்சாதி ஹிந்துக்கள், முஸ்ஸிம்கள் வகித்த பதவிகளையும், பொறுப்புகளையும், மாறுபட்ட சூழலில் வகித்தனர். இச் சூழ்நிலையை ஹஃபிஸ் மாலிக் (Hafeez Malik) என்பவர் பின்வருமாறு எடுத்துரைக்கிறார். 19ம் நூற்றாண்டின் மத்தியில், சுமை துôக்கிகள், தகவல் கொண்டு செல்பவர். பேனாவில் மை நிரப்புவர் போன்ற வேலைகளுக்கு மேம்பட்ட பணிகளைச் செய்யும் முஸ்லீம்கள், கல்கத்தாவில் உள்ள அரசு அலுவலகங்களில் அரிதாகினர்.” இத்தகு அளவிற்கு முஸ்லீம் சிறுபான்மையினரின் நிலை கீழான நிலைக்குத் தள்ளப்பட்டது.

சமயச்சார்பற்ற தளங்களில் (சமூக, அரசியல், பொருளாதார தளங்கள்) நிலவிய ஏற்றத் தாழ்வுகளை, சமயச் சார்ந்து நோக்கும் அணுதுமுறையை நவீன காலத்து தொழில்நுட்பங்கள், மற்றும் நவீன காலத் தொழில்நுட்பமான அச்சுக்கலை, இதுவரை மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே உரித்தான அறிவை சனநாயகப்படுத்தியது. இது வெகுசன அரசியலுக்கு வித்திட்டது. கிறித்துவ மிஷினரிகளால் மேற் கொள்ளப்பட்ட கல்விப்பணியால், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் கல்வி அறிவு பெற்றனர். கல்வி அறிவு பெற்ற மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில், தொழில் வளர்ச்சி அமையவில்லை காலனியத்தால், இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது கைத்தொழில், கைவினைத் தொழில்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நலிவடைந்தன.

கல்வியறிவு பெற்ற நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் மீண்டும் தங்களின் பழைய தொழில்களையோ, விவசாயத்தையோ திரும்பவுமாக மேற்கொள்ளவில்லை. எனவே அரசுப்பணிகளுக்கும், வியாபாரத்திற்கும் பெரும்போட்டி நிலவியது. குறைந்த அளவிலான பொருளாதார வாய்ப்புகளில் பெரும்பங்கு பெறுவதற்கு, அன்றைய நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் சாதி, மாகாணம், சமயம், இனம், சார்ந்த அடையாளங்களை பயன்படுத்தினர். அதன்மூலம் சிலர் அரசு வேலைகளைப் பெற்றனர் என்று பிபின் சந்திரா குறிப்பிடுகிறார். இவ்வாறாக மதச் சார்பற்ற பிரச்னைகள், நடுத்தர வர்க்கத்தினால் சமய அடையாளங்கள் சார்ந்த பிரச்சனைகளாகத் திருப்பி விடப்பட்டன. மேலும் இவ்வித நெருக்கடிகள், அரசு வேலைகளில், சாதி, மதம் சார்ந்த இட ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு இட்டுச் சென்றன என்று பிபின் சந்திரா மேலும் குறிப்பிடுகிறார். நாளடைவில்., இவ்வித கோரிக்கைகள் அரசியலிலும் பிரதிபலிக்கத் தொடங்கின.

1885-ல் இந்திய தேசியக் காங்கிரஸ் துவக்கப்பட்டது. ஆயினும், முஸ்லீம்கள் பெரும்பாலான அளவில் காங்கிரஸில் இணையவில்லை. துவக்கத்தில் காங்கிரஸின் கொள்கைகள் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாக அமையவில்லை. குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ், மதம், இனம், வர்க்கப் பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் தேசிய விடுதலைக்கான கருவியாக தன்னை வர்ணித்துக் கொண்டது. மேலும் 1885ம் ஆண்டு நடைபெற்ற முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கெடுத்த அமீர் அலியின் மத்திய தேசிய விடுதலைக்கான கருவியாக தன்னை வருணித்துக் கொண்டது. மேலும், 1885ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் பங்கெடுக்கவில்லை.

அதற்கான காரணத்தை அறிக்கையாக அச்சங்கம் வெளியிட்டது. அவ்வறிக்கையில், ‘பிரதிநிதித்துவ நிறுவனங்களை இந்நாட்டில் அறிமுகப்படுத்துவதன் மூலம், முகம்மதியர்களுக்கு முன்னுரிமை கிடைத்துவிடும் என்று இச்சங்கம் நம்பவில்லை. பிரதிநிதித்துவம் என்ற கொள்கை, சிறுபான்மையினரின் உரிமைகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். ஆயினும் சிறுபான்மைச் சமூகத்தினர் இந்நாட்டின் எல்லாத் துறைகளிலும் புற்றீசலாய் நிரம்ப அனுமதிக்கும் எவ்வித முறைமையையும் இச்சங்கம் ஆதரிக்காது’ என அச்சங்கம் குறிப்பிட்டது. இவ்வறிக்கையில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் நலன்கள் / உரிமைகள் குறித்து முதன் முறையாக பேசப்பட்டுள்ளன.

இந்த முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த சையது அகமது கான் பிற்பாடாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். 1887ல், வைசிராய் டஃபரினும், உத்திரப்பிரதேச கவர்னரான ஏ.கால்வினும், இந்திய தேசிய காங்கிரஸின் காலனிய எதிர்ப்பு நிலையைக் கண்டு, காங்கிரஸைக் கடுமையாய்ச் சாட ஆரம்பித்தனர். தான் துவங்கிய அலிகார் கல்லூரிக்கு பிரிட்டிஷாரின் உதவி தேவை என்று உணர்ந்த அகமது கான், காங்கிரûஸ எதிர்க்க ஆரம்பித்தார்’16. பிரதிநிதித்துவ தேர்தல் குறித்து, தொடர்ந்து சையது அகமதுகானும், அமீர் அலியும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வந்தனர்.

வேற்றுமைகள் நிறைந்த இந்தியச் சமூகத்திற்கு இம்முறை ஒத்துவராது என்று கூறிவந்த சையது அகமதுகான், 28.12.1887ல் லக்னௌவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது, ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமான தனிநாடு கோரிக்கையை முன் மொழிந்தார். முஸ்லீம்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் அவர்கள் ஹிந்துக்களின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள் என்ற தனது கருத்தை, தனிநாடு கோரிக்கைக்கு ஆதாரமாக வெளியிட்டார். ‘இதன்மூலமாக, சமூகச் செயலூக்கமுள்ள, அரசியல் உறுதிப்பாடுள்ள ஹிந்துப் பெரும்பான்மையினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லீம் சிறுபான்மையினர் என்று கருத்து இந்தியச் சூழலில் உருவாக்கம் பெற்றது’17 என்கிறார் ப்ரதீப் மண்டவ.

அடுத்ததாக, வங்கப்பிரிவினையின் போது இந்த இருமைகள் குறியீட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மேலும் வலுப்பெற்றன. தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தின்போது, வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தில், இந்து அடையாளங்களான கங்கா ஸ்நானம், துர்க்கையம்மனை பாரத மாதாவாகச் சித்தரித்து நடைபெற்ற ஊர்வலங்கள், போன்றவை இந்திய தேசிய விடுதலைப் போராட்டங்களை இந்து தேசியவாதமாக குறியீட்டு அளவில் இட்டுச் சென்றன. திலகரின் கணேஷ் பூஜை, சிவாஜி விழா போன்றவை இந்திய தேசியவாதத்தை இந்துக்களின் குறியீடுகளைக் கொண்டு நோக்கின.

பங்கிம் சந்திரர், தனது ‘ஆனந்தமடம்’ என்ற நாவலில், முஸ்லீம் ஆட்சியாளர்களைக் கொடுங்கோலர்களாகச் சித்தரித்தார். ‘வந்தே மாதரம்’ என்ற பாடல், முஸ்லீம் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையினின்று இந்துக்களின் விடுதலையைச் சுட்டிப் பாடப்படுவதாய், இந்நாவலில் காட்சியமைப்பைப் பெற்றது. இந்தி, பெங்காலி, உருது மற்றும் பிறமொழி எழுத்தாளர்களும், முஸ்லீம்களை அந்நியர்களாய்ச் சித்தரித்து எழுதத் தொடங்கினர். மேலும், முஸ்லீம்கள் தமக்குச் சாதகமெனக் கருதிய வங்கப் பிரிவினையை காங்கிரஸ் எதிர்த்தது. வங்கப் பிரிவினையை கைவிடுமாறு ஆங்கிலேய அரசிடம் கோரியது. இதன் விளைவாக அகில இந்திய முஸ்லீம் லீக் 03.12.1906 ல் உருவானது.

1909ல் ம.ச. முகர்ஜி, லால்சந்த் ஆகியோரால் பஞ்சாப் ஹிந்து சபா துவங்கப்பட்டது. இவர்கள், முஸ்லீம்களை தாஜா செய்வதாக (Appeasement) இந்திய தேசிய காங்கிரûஸக் குற்றம் சாட்டினர். முஸ்லீம்களுக்கு எதிரான சண்டையில், பிரிட்டிஷ் அரசாங்கத்தை நடுநிலைப்படுத்த இந்துக்கள் முயல வேண்டும் என்றும், ஓர் இந்து என்பவர் முதலில் இந்துவாகவும், அடுத்ததாக இந்தியனாகவும் விளங்க வேண்டும் என்றும் லால்சந்த் அறைகூவல் விடுத்தார். மேலும் 1915ல் இந்து மகா சபை சென்னையில் துவங்கப்பட்டது. இச்சபாக்கள், இந்துப் பெரும்பான்மையை தேசியத்தோடும், பிற சமயச் சிறுபான்மையினரை ‘அந்நியராகவும்’ உருவகித்து நோக்கின.

இவ்வாறாக, நிருபணமாகாத, முன்குறித்த எண்ணங்களுடன், அரசியல் ரீதியாகவும், சிறுபான்மை-பெரும்பான்மை என்ற இருமைகள் வலுவடைந்தன. இவ்வாறாக,சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற கருத்தாக்கங்கள், காலிய நவீனத்துவத்தால் வித்திடப்பட்டு, நவீன காலத்திய காலனியாதிக்க ஆட்சியாலும், இந்திய தேசிய விடுதலைப் போராட்டங்களின் போதும் உருவாக்கம் பெற்றுக் கனிந்தன. ஏற்கனவே, சிறுபான்மை யினர்க்கான வரையறையாக நாம் குறிப்பிட்டவாறு, இந்தியச் சூழலில் முஸ்லீம்கள் சமயச் சிறுபான்மை யினராய் உருவெடுத்தனர். இதே காலகட்டத்தில் சீக்கியரும் தங்களைச் சிறுபான்மையினர் (இந்துமதத்தினின்று வேறுபட்டவர்) என அங்கீகரிக்கக் கோரி செயல்பட்டுள்ளனர். 1920களில் அவ்வுரிமையை அவர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றுள்ளனர்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின்போது கிறித்துவ மிஷனரிமார்களுக்கு எதிரான நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. கம்பெனி ஆட்சியின் முடிவுக்குப் பிறகு, கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினராகக் கருதி, அவர்களுக்கென சில சலுகைகளை பிரிட்டிஷ் அரசு செயல்படுத்தியது.

ஆயினும், முஸ்லீம் சிறுபான்மையினரைப் போன்று இந்தியத் துணைக்கண்ட அளவில், பிற சிறுபான்மையினரின் அரசியல் கோரிக்கைகள்/போராட்டங்கள் அமையவில்லை. மேலும், மதம் சார்ந்த சிறுபான்மையினரின் அரசியல், முஸ்லீம்களைப் போன்று பிற சமயத்தாரால் மதச்சார்பற்ற தளங்களில், இந்திய அளவில் தீவிரமாய் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

முடிவுரை

இன்றைய சூழலில், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒட்டிய கால கட்டங்களில், ஹிந்து புத்துயிர்ப்பு பணி செய்த சங்கங்கள் / சமாஜங்கள்/ மிஷன்கள் / சபைகள் / போன்றவை கட்டியெழுப்பிய ‘ஹிந்து’ பெரும்பான்மையைக் கட்டிக்காக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் மேற்கொண்டுள்ளன. ஜைன மதத்தினரை சிறுபான்மையினராக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் (Bal Patil vs Union of India Case, 2005) வழக்கிற்கு ஒவ்வாத சில கருத்துக்களை சிறுபான்மை யினருக்கெதிரே வழங்கி 08.08.2005 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது என அவர்கள் விமர்சித்துள்ளார்.

மேலும், அக்கட்டுரையில், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ்ஸும் ஏற்றுக்கொள்ளும் என்று நூராணி தெரிவித்து இருப்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. இத்தீர்ப்பில் நைனர்களையும், சீக்கியர்களையும் இந்து சமூகத்தின் உட்பிரிவினர் களாகவும், ஜைனத்தை இந்த வேதங்களை அடிப்படையாகக் கொண்ட மதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, வேத அதிகாரங்களையும், பிற இந்து தர்மங்களையும் எதிர்த்த சமயங்களையும் இந்து சமயத்திற்குள் அடக்கிக் காண எத்தனிக்கும் போக்கு இன்னும் தொடர்கிறது. மதமாற்றச் தடைச்சட்டம், தலித் சிறுபான்மையினருக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்க்கான உரிமை வழங்காமை, இன்னும் இது போன்றவை சிறுபான்மையினரின் இருப்பை ஒடுக்குவதாகவே உள்ளன. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் நிறைவுறும் வேளையிலும், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வரையறைக்குள்ளாகவே சிறுபான்மையினரைப் புரிந்துகொள்ளும் அவல நிலை இன்றும் உள்ளது வருந்தத்தக்கது.


REFERENCES-

1. The New International Webster’s Comprehensive Dictionary of the English Language, Trident Press International, Naples, 1996, p. 812

2. Sujatha Patel, Sociological Study of Religion : Colonial Modernity and 19th Century Majoritarianism, Economic and Political Weekly, March 3 - April 6, 2007, Vol. XL II, No.13, p.1089.

3. Ed., David Theo Goldbery, Multiculturalism, Blackwell Publishers Ltd., Oxford, 1998, p.10.

4. Ed., Joseph, B.Gittler, Understanding Minority Groups, John Wiley & Sons, Inc., Newyork, 1956, p.127.

5. S.K. Singh, Minority : Concept and Status, in S.N.Singh, Muslims in India, Anmol Publications Pvt. Ltd., New Delhi, 2003, pp.215-6.

6. Pradeep Mandav, Communalism in India : A Paradigsm Shift to Indian Politics, Authors Press, Delhi, 2000, p.130.

7. Ed., Gavin Flood, The Blackwell Companion to Hinduism, Blackwell Publishing Ltd., Oxford, 2003, p.3.

8. Ibid., p.26

9. Ibid., p.513

10. Meera Nanda, Ho Modern Are We? - Cultural Contradictions of India’s Modernity, Economic and Political Weekly, Feb. 11-17, 2006, Vol. XLI, No.6, p.494.

11. Sujatha Patel, Op.cit., p. 1091

12. Quoted by Sebastian Vempeny, Minorities in Contemporay India, Kanishka Publishers, Distributors, New Delhi, 2003, p.10.

13. Ibid. p.112.

14. Bipan Chandra, et al.,India’s Struggle for Independence, Penguin Books India Ltd., New Delhi, 1989, p.403.

15. Pradeep Mandav, Op.cit., p.125.

16. Ibid., p.414-5.

17. Pradeep Mandav, Op.cit., p.48.

18. A.G. Noorani, Minority Rights and Human Rights, Economic and Political Weekly, May 6-12,2006, Vol.XLI, No.18,p.1741.

19. Syed Shahabuddin, Minority Rights are Indivisible-Majority Pressures can Deny Equality, Abstracts of Sikh Studies, Jan.- March 2006, Vol. VIII,Issue 1, pp.58-9.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com