Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
ராமர்பாலம் : இந்துத்துவ மனோபாவமும் பா.ஜ.க. வின் தமிழக இருப்பும்
ராஜசேகரன்

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டு வரும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு இது சோதனைக் காலம். இந்த சோதனைக்கு காரண கர்த்தாக்களாக இந்து முன்னணியின் தமிழ் மாநில அமைப்பாளர் ராம. கோபாலன், ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் இவர்களுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் ஆகியோரை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இந்த மும்மூர்த்திகள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றில் தான் தலைமை நீதிபதி ‘ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது’ என திருவாய் மலர்ந்திருக்கிறார். அதை தமது தளிப்பட்ட கருத்தாகவும் வேறு பதிவு செய்திருக்கிறார். நீதி பரிபாலன அதிகாரத்தில் இருப்பவர்கள் எத்தகையவர் களாகவும் எந்த மனோ நிலையோடும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஆகச் சிறந்த சாட்சி.

‘ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது’ என்பதோடு அவர் தமது கருத்தை நிறுத்தியிருந்தால் பிரச்சினையில்லை. ‘பெரும்பாலான மக்களின் நலனுக்கான திட்டங்களுக்காக இத்தகைய நினைவுச் சின்னங்களை இடிக்கலாம் என்றால், தாஜ்மகாலை இடிக்க முடியுமா?’ (தினமணி - 19.06.2007-பக் 7) என்று கேள்வி கேட்டு தமது ஞானத்தை வெளிப்படுத்திவுள்ளார்.

ராமர் பாலத்தை எந்த அரசாங்கம் நினைவுச் சின்னமாக அறிவித்தது என்றும் தெரியவில்லை. சாமான்ய மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் வழக்கு மன்றங்கள் இது போன்று வெளிப்படுத்தும் கருத்துக்களால் தம்மையே தரம் தாழ்த்திக் கொள்கின்றன என்பதே வெட்ட வெளிச்சமான உண்மை.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சியை இழந்த பிறகு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாக மாறியது. இரு முக்கிய திராவிடக் கட்சிகளும் பா.ஜ.க.வை முற்றிலுமாக கை கழுவி விட்ட நிலையில் எதையாவது செய்து, எப்படியாவது பேசி தமது இருப்பை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் அதற்கு எழுந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்திலும் தமிழகத்தின் இன்ன பிற பகுதிகளிலும் பெரியார் சிலைகளை சேதப்படுத்தியதிலும், ஆங்கிலேயர்களால் ஆதம்ஸ் பாலமாக அறிவிக்கப்பட்ட மணல் திட்டுப்பகுதிகளை ‘ராமர் பாலம்’ ஆக உருவாக்கியதிலும் தமிழ பாஜக தனது அசட்டைத்தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

கமலாலயத்தில் (தமிழக பாஜகவின் தலைமையகம்) தினந்தோறும் கூட்டப்படும் பத்திரிகையாளர் சந்திப்பில் அது தன் இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத் தேவையில் உள்ளதை தெளிவாக உணர முடிகிறது. உண்மையில் ராமர்பாலம் என்ற ஒன்று இல்லாததையும் அது உணர்ந்தே உள்ளது. இல்லாத ஒன்றுக்கே இவர்கள் இவ்வளவு பொங்கி எழுகிறார்களே? இருந்ததை (பாபர் மசூதி) இடிக்கும்போது முஸ்லிம்கள் எவ்வளவு கொதித்திருக்க வேண்டும்? ஆக இடிப்பதில் கைதேர்ந்தவர்கள் இங்கு இந்துத்துவவாதிகள் தான்; வேறு யாருமல்ல.

காங்கிரசும் திராவிட முன்னேற்றக்கழகமும் இதனால் பயனடைகிறது என்கிற எரிச்சல் தன்மையும் பாஜகவிற்கு உள்ளுர இருக்கிறது. ஏனெனில் காங்கிரûஸவிட சேது சமுத்திர திட்டம வருவதற்கு அதிக அக்கறை காட்டியது பா.ஜ.க. தான். அந்தக் கட்சியின் தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்திருக்கும் போதே இதற்கான திட்டத்தை உருவாக்கினார்கள். அப்போது ராமர்பாலம் இருந்தது என்பது இவர்களுக்கு தெரியாமலா போனது?

சேது சமுத்திரத் திட்டம் முழுக்க முழுக்க தேவையில்லாதத் திட்டம் என்கிற வாதம் ஒரு புறமிருக்க அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர் கேடுகள், தமிழக மீனவர்களின் எதிர்காலம், கடல் வளம் அழிதல் குறித்த பிரச்சனைகளை பாஜக எழுப்பியிருந்தால் நாமும் உண்மையில் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கலாம்.

ஆனால் அவர்களின் நோக்கமோ வேறு மிக நீண்ட நாட்களுக்குப் பின் தென்னிந்தியாவில் ஆட்சியமைக்கும் அதிகாரம் (கர்நாடகத்தில்) பாஜகவுக்கு கிடைத்ததையடுத்து அது தன் தீவிரத்தன்மையை இன்னும் கொஞ்சம் கூடுதலாக்கியிருக்கிறது. ‘ராமர்பாலத்தை இடிப்பதை எதிர்க்கிறோம்’ எனும் பெயரில் வாரணாசி (காசி)யிலிருந்து இந்துத்துவவாதிகள் இராமேஸ்வரத்துக்கு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டவாறு உள்ளனர். இவர்கள் யார்? இராமேசுவரத்திற்கு வந்து என்ன செய்கிறார்கள்? என்பது குறித்து எந்த கண்காணிப்பும் இல்லை. கிறிஸ்தவர்கள், மீனவர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் என பலசமய மக்கள் இணைந்து வாழ்ந்த இராமேஸ்வரம் தீவு இன்றைக்கு ‘காவி மடங்களின் சாட்சியமாக’ உருமாறியிருக்கிறது.

இது போன்ற பிரச்சனைகள் ஒரு புறமிருக்க, ராமர்பாலம் உருவாக்கப்பட்டதா? உருவாகியதா? என்றொரு கேள்வி பாஜக, விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணியின் விஷமப் பிரச்சாரத்தால் சாமான்யனிடம் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி செயற்கைகோள் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்துவதாகவும் ‘புரூடாக்கள்’ வேறு.

உண்மையில் ‘நாசா’ விண்வெளி புகைப்படங்கள் மேடான பாலப்பகுதி இருப்பதை உறுதி செய்கின்றன. அது ‘ஆதம்ஸ்’ பாலம் என்று அதில் கூறப்படுகிறது. இப்போது பிரச்சனையே அது ஆதம்ஸ் பாலமா அல்லது ராமர்பாலமா என்பதுதான். விஞ்ஞான ரீதியாக, அது ஆதம்ஸ் பாலம் என்பதே உண்மை. தனி நபர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்காக நாம் அறிவியல் உண்மையை மறுக்கக் கூடாது.

சேது சமுத்திரத் திட்டம் என்பதே பாக். ஜலசந்தியையும் மன்னார் வளை குடாவையும் இணைக்கும் மேட்டு மணற் பகுதியான ஆதம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்படும் கால்வாய்தான். தூத்துக்குடிக்கு அருகிலுள்ள வான்தீவில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், இராமேஸ்வரத்தின் சிங்கிலித் தீவில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் இக்கால்வாய் தோண்டப்படுகிறது. கப்பல் செல்வதற்காக ஆதம்ஸ் பாலம் என்று சொல்லப்படும் மணல் மேட்டுப் பகுதியில் 152கி.மீ நீளம், 300 மீட்டர் அகலம், 800 அடி ஆழத்துக்கு கால்வாய் தோண்டப்படுகிறது. கடல் பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு 36 மணிநேர பயணம் குறையும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மன்னார் வளைகுடா பகுதி மணற்குன்றுகள் நிறைந்த பகுதி. நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் நீரோட்டத்தால் அடித்து வரப்படும் மணலானது பாம்பன் கடல் பகுதியிலும், மன்னார் கடல் ஓரத்திலும் குவிகின்றன. அக் குவியல்களின் மொத்தச் சேர்க்கையே திடப்பகுதியாக மாறி பாலம் போன்ற உருவத்தை அடைவதாக கடலியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்மீகவாதியும் முன்னாள் தமிழக முதல்வருமான ராஜாஜியே இருபெரும் இதிகாசங்களான ‘இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கற்பனைக் கதைகள்’ என்று கூறியிருக்கிறார். கற்பனையாக எழுதப்பட்ட கதைகளில் வரும் நாயகர்களை கடவுளாக சித்தரித்த வேலை ஒருபுறமிருக்க, அவர்கள்தான் இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைத்தார்கள் என்று சொல்வது இந்தியச் சமூகத்தை காவிமயமாக்கவும் முட்டாள்களாக சித்தரிக்கவும் எடுக்கப்படும் முயற்சி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அமைச்சராக இருந்த உமாபாரதி உத்தரவின்பேரில் இந்திய பூகோள அமைப்பு சேது சமுத்திரத் திட்டப் பகுதிகளை ஆய்வு செய்தது. அது தன் அறிக்கையில் ராமர் பாலம் இருப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே ‘ராமர் பாலம்’ என்பதே பாஜகவின் மீண்டுமொரு கற்பனைக்கதைதான். ஒருவேளை அவதாரமாகவும் இருக்கலாம்.

பாரதியும் ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்றுதான் பாடியிருக்கிறாரே தவிர, ஏற்கனவே ராமரால் அமைக்கப்பட்டிருக்கும் பாலத்தில் வீறு நடை போடச் சொல்லவில்லை. இதை இந்துத்துவவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலுக்காக பேசப்படும் பேச்சுகள் சில நேரம் நகைச்சுவையாகிவிடுவதும் உண்டு. அத்தகைய நகைச்சுவையாளர்களாக தமிழக பாஜக தலைவர்கள் தற்போது காட்சியளிக்கிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com