Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
இஸ்லாமியப் பெண்ணியம் - ஒரு புறப்பார்வை
- ஆர். பிரேம்குமார்

பூமியை மொய்த்தபடி சுற்றும் செயற்கைக் கோள்கள் வழியாக ஊடுருவும் தகவல்களின் பெரும் சதவீதம் ஒருதலைப்பட்சமான அரசியல் மேலாண்மையை நிறுவும் உள்நோக்கம் கொண்டவை. நவீன உலகை நிர்மாணிக்கும் காரணிகள் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் உருவாகும் சலனங்களைச் சார்ந்து அமைகின்றன என்பதை மனித மூளைகளில் பதிவு செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டுள்ளன. ‘மெலானின்’ நிறமி குறைவாக உள்ள தோல் போர்த்தியவர்களும், சூரியக்கதிர்க் குளியல் நடத்துபவர்களும்தான் உலகின் வழிகாட்டி நட்சத்திரங்கள் என்ற கருத்தோட்டம் நிலை பெறுவது தவறானபோக்கு. மறுமலர்ச்சி இயக்கங்களின் போக்கை அதன் தத்துவத்தோடு சேர்த்துப் பரிசீலிக்க வேண்டும். புதுமைக்கருத்துக்களின் வெள்ளோட்டத்தை அதன் ஊற்றுக்கண்களிலிருந்து அடையாளம் காண வேண்டும். புறந்தள்ளப்பட்ட மக்களின் மீட்புக்கென உருவான இஸ்லாம், பெண்களை அடிமைப்படுத்துவதை முதன்மை நோக்கமாய்க் கொண்ட திட்டவரைவு தயாரித்து வைத்து இயங்குகிறது என்ற கற்பனையை, ‘பெண்ணியம்’ வலியுறுத்துகின்ற விழுமியங்களை முன்வைத்தே பரிசீலிக்கலாம்.

யதார்த்தத்தில் இஸ்லாமிய உலகம் என்பது நிறைய வித்தியாசங்கள் நிறைந்தது. அரசியல்,பண்பாடு, பொருளாதாரம் என்ற மூன்று தளங்களிலும் இந்த வித்தியாசம் தெரிகிறது. இந்த வித்தியாசங்களின் ஊடாக ஓர் ஆன்மிக இணைப்புச்சங்கிலி ஓடுகிறது. பன்முகங்களுடன் பிரகாசிக்கும் ஒற்றை நட்சத்திரம்தான் இஸ்லாமிய உலகம் ஒன்றை முகம் கொண்டதாய் இஸ்லாமிய உலகை (சமூக அமைப்பை) வரைய முற்படுவது கயவாளித்தனம்.

‘‘இதுபோல இருந்தது இஸ்லாம்!’’ ‘‘இதுதான் இஸ்லாம்!’’ என்று அறுதியிட்டுக் கூறுகின்ற பீடங்களின் மனவியல் பரிசோதனைக்குரியது.

இன்று அடிப்படைவாத, தீவிரவாதச் சிந்தனைகளை முன் வைத்து சிலர் பேசும்போது ‘பெமினிஸ்ட் சிந்தனைகள் மேற்கத்தியம்’’ என்பதாகச் சொல்லி ஒழிக்கப்பார்க்கிறார்கள். ‘‘பெமினிஸத்தை இஸ்லாமின் உள் இயக்கத்திலிருந்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்’’ என்ற வேண்டுகோளும் வருகிறது. இது ஆக்கபூர்வமான வேண்டுகோள்.

இஸ்லாமில் வரலாற்றில், கருத்தோட்டங்களில், செயல்பாடுகளில் பெண்விடுதலையை முன்நிறுத்தும் பல்வேறு அம்சங்கள் உள்சேர்ந்திருக்கின்றன என்று சமய அடிப்படையில் விளக்குவதுதான் ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ (Islamic Feminism)

பெண்களைப்பற்றிய மரபு சார்ந்த கண்ணோட்டம் :

(i) பெண்கள் பொது அரங்குக்கு வரக்கூடாது.

(ii) பாதுகாப்பின் பொருட்டு பெண் வீட்டினுள் இருப்பதே நல்லது என்பனவாகும்.

மதச்சட்டங்களெல்லாம் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள உறவுகளைப்பற்றியும், கடமைகளைப்பற்றியும் பேசுகிறது எனலாம். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவு பற்றி - அல்லது - ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவு பற்றி அவை பேசுவது இல்லை.

இஸ்லாம் பெண்ணை ஒரு நுகர்பொருளாகக் கருதுகிறது என்பது தவறானப் புரிந்து கொள்ளுதல். ‘‘பிரபஞ்சம் பூமி மனிதனுக்காகப் பû.டக்கப்பட்டது’’ என்பது திருவசனம். ‘மனிதன்’ என்ற பதம் இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அர்த்தத்தில் தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதனால் ‘மனிதனுக்கு வேண்டி, மனிதரல்லாத சகலமும் படைக்கப்பட்டிருக்கிறது’ என்ற மெய்மையிலிருந்து, பெண் ஆணின் நுகர்வுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறாள் என்ற வாதம் எடுபட முடியாமல் போகிறது.

மெதீனாவில் இறைத்துôதர் நிகழ்த்திக்காட்டிய மாபெரும் சாதனை அங்கே நிலவிவந்த பழங்குடி உறவு முறைகளை உடைத்தெறிந்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக சமயம்சார் உறவு முறைகளை நிறுவியதுதான். சமயம் சார் உறவுமுறைகள் ஒரு பக்கத்தில் சமூகத்தோடும், மறுபக்கம் குடும்பக் கட்டமைப்போடும் இணைந்திருக்கச் செய்தார். இதனால்தான் ஒரு இஸ்லாமியக் குடும்பம் இஸ்லாமியச் சமூகத்தின் குறுவடிவம் போல் தோற்றம் அளிக்கிறது. இஸ்லாமியச் சமூகக் கட்டமைப்பில் இமாம் ஆற்றும் பணிகளுக்கு ஒப்புமை கூறத்தக்கது குடும்பத்தில் ஆண்/கணவன் ஆற்றும் பணிகள் எனலாம். தலைமகன் தான் ஆற்றவேண்டிய சமயம்சார் கடமைகளைச் சரியாக நிறைவேற்றாத குடும்பத்திலும்/சமூகத்திலும் பெண்களின் எதிர்ப்பு வெளிப்படுகிறது. இப்படி வெளிப்படும் கருத்து பெண்ணியம் சார்ந்த நடவடிக்கையாகவும் தோற்றம் கொள்கிறது என்பது ஒரு கணிப்பு.

இஸ்லாமியப் பார்வையில் ‘பெண்ணும் ஆணும் சமம்’ என்ற கூற்றை ஏற்றுக் கொள்வதில் முரண்பாடு இருக்கிறது. அல்லியும் தாமரையும் ஒன்றுக்கொன்று சமம் அல்ல. இரண்டும் தனக்கான தனித்துவத்தையும் இருப்பையும் கொண்டுள்ளன என்று சொல்லப்படுவதின் நியாயத்தை விட - ஆண் அல்லி X பெண் அல்லி- அல்லது - ஆண்தாமரை X பெண்தாமரை என்ற உறவுச் சித்தரிப்பின் தனித்துவமும். ஒற்றுமைப் பண்புகளும் பற்றி யோசிக்க வேண்டும். ஆண் தன் தன்மைகளுக்கேற்பவும், பெண் தன் தன்மைகளுக்கேற்பவும் வாழ்வில் சிறக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாமிய நெறியாகக் கருத வேண்டும்.

பெண் குழந்தை பிறப்பதைக் கேவலமாகவும், பாவமாகவும் கருதிய காலகட்டத்தில் திருக்குர்- ஆன் மூலமாக நபிகள் நாயகம் சொல்வது என்ன? ‘‘நீங்கள் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒன்றுபோல பாவியுங்கள்’’ முதன் முதலில் பெண்களுக்குச் சொத்துரிமை அளித்த மதம் இஸ்லாம்தான். கி.பி 7-ம் நூற்றாண்டிலேயே அது நடந்தது என்பது ஆச்சரியம்தான். காலமாற்றத்துக்கேற்றபடி சொத்துரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவில்லை என்பது ஒரு பின்னடைவுதான். பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த ஒரு காலகட்டத்தில், பெண்களுக்குச் சொத்துரிமை பேசியது இஸ்லாம் என்பது சாதாரண நிகழ்வு அல்ல. ‘பலதார மணம்’ பற்றிய கருத்தோட்டம் உருவானதுகூட விதவைகளையும், அனாதைகளையும் ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.

இறைதூதர், இஸ்லாமுக்கு முந்தைய அரேபியா (Pre-Islamic) பெண்களுக்கு இழைத்த அநீதிகளை முற்றிலுமாகக் களைந்து, புதிய சமுதாயம் படைத்து, பெண்களுக்கு உரிமைகள் வழங்கி கௌரவப் படுத்தினார் என்பதுதான் வரலாறு. இஸ்லாமியச் சமூகத்தின் ஆரம்ப ஆண்டுகளில், இறைதூதரின் தலைமையின்கீழ் அமைந்த சமூக அமைப்பில், பெண்களுக்கு அதிக சுதந்திரமும், பொது நிர்வாகம் மற்றும் சமய நிகழ்வுகளில் பங்கெடுக்கும் உரிமையும் கிடைத்திருந்தது என்றுதான் ஊகிக்க இடமுள்ளது. காலப் போக்கில், இஸ்லாமியச் சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் தலைதூக்கிய ஆணாதிக்கம், இஸ்லாமியத்துக்கு முற்பட்ட அரேபியாவில் இருந்த பெண்களின் நிலையினை மனதில் பதித்து, அவ்வண்ணமே புதிய சமுதாயத்தில் விடுதலை பெற்ற பெண்களுக்குச் சரடுகள் பிணைக்கத் துவங்கியது.

இப்படி, இஸ்லாமைப் புரிந்துகொள்ளும்போது, பெண்ணுக்கு அதிக உரிமைகள் வழங்கிய மதமாக அறிய முடிகிறது. அந்த உண்மையின் பின்புலத்தில், பெண்ணியம் தனக்கு ஆதரவான அடியுரத்தை இஸ்லாமிலிருந்து பெற்றுக் கொள்ளவியலும். எனவேதான் ஐரோப்பியப் பெண்ணியம் முஷ்டி உயர்த்திக் கோஷம் எழுப்புகையில், அதற்கு இணையான அலைவீச்சை அரபுதேசங்களிலிருந்தும் உணர முடிகிறது.

‘நவீனப் பெண்ணியம்’ பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை தீர்க்கமான முறையில் முதலில் முன் மொழிந்தவர் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ். 1869-ல் ஏங்கெல்ஸ் பெண்விடுதலை பற்றி எழுதியவற்றில் விஞ்ஞானப் பார்வையும், பொருளாதாரக்கண்ணோட்டமும் இயைந்து இருந்ததால் இன்றைக்கும் அது ஏற்புடையதாகத் திகழ்கிறது. இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்ணியச் சிந்தனைகளின் வீச்சு அனல் அலைகளைக் கிளப்பியது. தற்போது கணக்கிட்டால் பெண்ணியம் பற்றிய பல்வேறு விளக்கங்களுடன் எண்ணற்ற இயக்கங்களும் அமைப்புகளும் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றன.

1920-ல் அமெரிக்காவின் அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்ட 19-வது திருத்தத்தின்படிதான் பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையே வழங்கப் பட்டது. ஆனால் இருபதாம் நூற்றாண்டு முடியும் தருவாயில் அமெரிக்காவில் பத்து இட்சம் ‘லெஸ்பியன்கள்’ இருப்பதாகவும், இவர்களுக்குத் தேவையான உரிமைகளைத் தடையின்றி கிடைக்கப் பெற தடாலடிப் போராட்டங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, உடல்ரீதியாகவும் காமம் தணிக்கவும் ஆண்களின் துணை அவசியம் இல்லை என்பதை விரும்பும் ‘தன்னின மேனி ஆர்வலர்களாகத்’ தங்களைப் பிரகடனப்படுத்துகின்ற லெஸ்பியன்களைச் சுட்டிக்காட்டி பெண்ணியப் பார்வையை ஒட்டு மொத்தமாகக் கொச்சைப்படுத்திப் பேச அடிப்படைவாதிகள் ஒருபோதும் தயங்குவது இல்லை.

அமெரிக்காவிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கும் ‘பெண்ணியப் புரட்சி வடிவங்கள்’ மூலமாக மட்டும் பெண்ணியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரையறுத்துவிட எத்தனிக்கக் கூடாது. பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடைப்பதற்கே அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பெரும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதுதான் வரலாறு.

மனித நாகரிகத்தின் தொட்டில்கள் என்றறியப்படுகிற பாரசீகம் (இரான்), எகிப்து போன்ற நாடுகள் இஸ்லாமைத் தழுவிய பின் சமூகக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நாடுகளில் வியக்கத்தக்க வகையில் பெண்ணியச் சிந்தனைகளின் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இரானின் தலைநகரான டெஹ்ரானில் இன்றைக்கு மேற்கத்திய நாடுகளில் காணப்படுவதைப் போன்ற நடை-உடை-பாவனை பேணுகின்ற மேட்டுக்குடிப் பெண்களைத் தாராளமாகக் காணமுடியும். லெபனான் நாட்டின் கடற்கரையில் விடுமுறைநாட்களில் இளைஞர்களுக்குச் சரியான அளவில் இளம்பெண்களையும் காணலாம். லெபனானின் இளம்பெண்கள் மேனாட்டு யுவதிகளின் உடை அலங்காரத்தை தோற்கடிக்கும் வகையில் கவர்ச்சியாக உடையணிந்து அலைகிறார்கள். எகிப்திலும், சிரியாவிலும், லெபனானிலும், துருக்கியிலும் ஒட்டுத்துணியணிந்து ஆடுகின்ற ‘இடுப்பாட்டம்’ (Belly Dance) உண்டு. இதெல்லாம் பெண்ணியத்தின்/பெண்விடுதலையின் வெளிப்பாடா என்று கேட்டால் இல்லை. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், கிராமங்களிலும் சேரிகளிலும் வசிக்கின்ற பெரும்பான்மை மக்கள்திரள்தான் இஸ்லாமியச் சமூகத்தின் குறியீடு. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த அடித்தள இஸ்லாமியச் சமூகத்தில் பெண்படும் பாடுகள் இஸ்லாமின் விடதலைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றே புலப்படுகிறது.

‘‘மொராக்கோ நாட்டில் பெண்களை இஸ்லாமியச் சமூகத்தின் உறுப்பினர்களாகக்சுட கருதுவதில்லை. அங்கே இஸ்லாமிய நம்பிக்கையாளர்களாக ஆண்களை மட்டுமே கருத மதக்குருக்கள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்’’ என்கிறார் பாத்திமா மெர்னிஸி. இவருடைய ‘‘முகத்திரைக்கு அப்பால்’’ (Beyond the veil) என்ற நூல் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகள் சாதாரணமானவை அல்ல. ‘‘ùஸனகல் நாட்டிலும் மதக்குருக்களின் ஆதிக்கம் இஸ்லாமியப் பெண்கள் கையாலாகாதவர்களாகவே ஆக்கி வைத்திருக்கிறது!’’ என்று வெளிப்படுத்துகிறார் ஆராய்ச்சியாளர் கிளியோ கான்டன்.

இந்தியாவில், மலப்புரம் மாவட்டம் - மாராக்கர பஞ்சாயத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம், எப்படி புரோகிதத்துவத்தின் ஆதிக்கம் கண்மூடித்தனமாக முடிவுகளை முன் மொழிகிறது என்பதைக் காட்டி வேதனைப்பட வைக்கிறது

......ஒன்பது வருடங்களாக வெளிநாட்டில் வேலைசெய்யும் அபுபக்கர் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியின் சகோதரனுக்கு அனுப்பிய கடிதத்தில், மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்துவிட்டதாக எழுதி இருந்தாராம். மூன்று தலாக்கும் சொல்லிவிட்டதாகவும் குறிப்பிடப்படிருந்தது. சென்ற ஜூலை மாதம் விடுமுறையில் வீட்டுக்கு வந்த அபுபக்கரை ஊரில் உள்ள மதப்பிரமுகர்கள் மனைவியோடு சேர்ந்து வாழ அனுமதிக்கவில்லை. ஏதோ எண்ணத்தில் தவறுதலாக அப்படி ஒரு கடிதம் எழுதியதாகவும், உண்மையில் மனைவியைப் பிரிந்து வாழும் உத்தேசம் இல்லை என்றும் அபுபக்கர் சொன்னதை ஏற்க ஆள் இல்லை. இன்னொருவர் ஆயிஷாவைத் திருமணம் செய்து - தலாக்சொல்லி-விவாகரத்து ஆன பின்னரே இனிமேல் அபுபக்கர் தன் மனைவியை மறுமணம் செய்து சேர்ந்து வாழ முடியும் என்று தீர்ப்பு கூறுகிறார்கள் மதசுத்திகரிப்பாளர்கள். விவாதம் தொடர்கிறது........ இங்கே இஸ்லாமியப் பெண்ணுக்கு ஏற்படும் தலைகுனிவு புரோகிதத்துவத்தின் போலித்தனத்தினால் என்பது கண்கூடு.

இப்படிப்பட்ட அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று, இஸ்லாமிய நெறிகளின்படி முழுமை பெற்ற பெண் சுதந்திரத்தை நிறுவியதில் எகிப்து நாட்டின் ‘‘இஸ்லாமியப் பெண்ணியவாதிகளுக்கு’’ ஸலாம் சொல்லலாம்.

எகிப்திய பெண்ணியத்தின் ஸ்தாகபர் ஹீதாஷராவி. அவர் இத்தாலியில் வைத்து ”எகிப்தியப் பெண்கள் சங்கத்தை” நிறுவினார். அகில உலக மகளிர் மன்றங்களின் சம்மேளனத்தில் பங்கெடுத்துவிட்டு போகும் வழியில் கெய்ரோவின் ரெயில் நிலையத்தில் வைத்து அவர் ‘ஃபெமினிஸ்ட் யூனியன்’ தோற்றுவித்தது பற்றி அறிவித்தார்.

ஹுதா ஷராவி மேட்டுக்குடிப் பெண். அன்றைய காலகட்டத்தில் மேட்டுக்குடிப் பெண்கள் மட்டும்தான் ‘ஃபர்தா’ அணிந்திருந்தார்கள். இப்போதும் எகிப்தில் கிராமப்புறப் பெண்கள் பர்தா அணிவதில்லை. (கெய்ரோ ரெயில்வே ஸ்டேஷனில், பர்தாவை உருவித் தூர எறிந்துவிட்டு, வரவேற்கக் கூடியிருந்த மக்கள் மத்தியில் Egyptian Feminst Union துவங்கி இருப்பது பற்றித் தெரிவித்தார்) ஹுதா ஷராவியும் அவருடைய உறவுக்காரப் பெண்ணான ஸீஸô நப்றாவியும் சேர்ந்து கூட்டங்களுக்குத் தலைமையேற்றனர். ஸீஸô நப்றாவிக்கு அப்போது வயது 17 தான். அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஒரு ஃபெமினிஸ்ட் பத்திரிக்கையும் நடத்தினார்கள்.

மேட்டுக்குடிப் பெண்களை மையப்படுத்தி நடந்த இயக்கத்தில் 1950-களில் மாற்றம் வந்தது. தோரியா ஷபீக் இந்த மாற்றத்துக்கு காரணம் ஆனார். அவர் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர். ‘பின்ந்த்அன்னீல்’ (நைலின் மகள்) என்ற பெயரில் ஒரு ஃபெமினிஸ்ட் வெளியீடும் நடத்தினார்கள். மலையாள எழுத்தாளர் எஸ்.கே.பொற்றெகாட் எகிப்து சென்றபோது தோரியா ஷபீக்கைச் சந்தித்தார் என்பதே அவருடைய பிரசித்திக்கு ஓர் ஆதாரம்.

எண்பதுகளில் எகிப்தியப் பெண்ணியத்தின் மூன்றாம் கட்டம் வலுப்பெற்றது எனலாம். இதற்கு பொதுமக்கள் சுகாதாரத்துறையின் இயக்குநராக இருந்த டாக்டர் நவால் ஸஆதவி முக்கிய காரணம். ‘Women at point Blank’ ‘The Circling Song’ ‘The Fall of Imam’ ஆகிய நூல்களின் ஆசிரியர் அவர். தொடர்ந்து ‘Arab Womens’ Solidarity Association அனைத்து அரபு உலகப் பெண்களையும் மையப்படுத்தி துவங்கப்பட்டது. இதெல்லாம் இஸ்லாமின் உள்ளிருந்து ஏற்ப்பட்டவை அல்ல.

எல்லாவித நவீனக் கோட்பாடுகளுக்கும் இடம் கொடுக்கும் வல்லமை உள்ள நெகிழ்வுத் தன்மை உடையது இஸ்லாம். இந்த உண்மையை ஒப்புக்கொண்டால், இஸ்லாமியப் பெண்ணியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி அகப்பார்வை மேற்கொள்வதன் மூலம் மேலும் அதிகம் அறியமுடியும்.

இஸ்லாம் தலித்திய வாசிப்பும் இந்தியப் புரிதல் கரும்- என்று தங்களின் கட்டுரை சிறப்பாக இருந்தது.

குழப்பவாதிகளால் இஸ்லாம் புறந்தள்ளப்பட்டு அதன் கூறுகள் சிதைக்கப் பட்டிருக்கின்றன-சிதைக்கப்படுகின்றன என்பதே உண்மை. அதன் விளைவை நாம் அனுபவிக்கிறோம் தீவிரவாதிகளாக்கப்பட்டு.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com