Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
இந்துத்துவ எதிர்ப்பின் அடையாளம் : ஏ.பி.வள்ளிநாயகம்
மீ.த.பாண்டியன்

‘சம நீதி எழுத்தாளர்’ ஏ.பி.வள்ளிநாயகம் இந்துத்துவ எதிர்ப்பை தனது அடிநாதமாகக் கொண்டவர். இந்துத்துவத்தை, இந்து மதத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற சாதியை மறுத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் வள்ளி. சாதியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டே இந்துத்துவ மறுப்பு பேசும் பலர் மத்தியில் வள்ளி இந்துத்துவ சாதி மறுப்பாளர். வள்ளி தனது தேடல்மூலம் பல இயக்கங்களைக் கண்டறிந்து, மறுதலித்து இறுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, சிறுபான்மை மக்களுக்கான, பெண்களுக்கான சிந்தனையாளனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இருவரையும் தனது தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்.

கும்பகோணத்தில் தனது திராவிடர் கழக செயல்பாடுகள் மூலம் பொதுவாழ்வை தொடங்கியவர். திராவிடர் கழகத்திலிருந்து விடுபட்ட பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அமைப்புகளுக்கு சில ஆண்டுகள் பணியாற்றியவர். மதுரையில் ஈ.பி.ஆர்.எல்.எப். காலூன்றியதற்கு, சி.பி.ஐ. (எம்.எல்) கட்சி தனது தொடர்ச்சியை தக்க வைத்ததற்கு வள்ளியின் பங்களிப்பு முக்கியமானது. பெரியார் சம உரிமைக் கழகச் செயல்பாடுகளில் சிறிதுகாலம் தோழர் ஆனைமுத்து அவர்களுடன் துணை நின்றார். தென்மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியை தாழ்த்தப்பட்டோரல்லாதார் மத்தியில் உருவாக்குவதற்கு கடுமையாகப் பங்களித்தார். பா.ம.க.வின் தத்துவ அணித் தலைவராக இருந்தார்.

‘கோஸ்ட்-ரைட்டர்’ என்பார்களே! பல தலைவர்களின் பெயரால் வந்த முன்னுரைகள், அணிந்துரைகள் வள்ளியால் எழுதப்பட்டவை. அமைப்புகளில் இணைந்து செயலாற்றுவது என்பது பா.ம.க.தான் வள்ளிக்கு இறுதி.

தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பேரவை எனும் அமைப்பை இந்திய மக்கள் முன்னணியின் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.நடராசன் அவர்களுடன் இணைந்து உருவாக்கி வழிநடத்தினார். இப்பேரவையின் குறிப்பான செயல்பாடு ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என அறிவித்து ஊர்திப் பயணங்களைத் தமிழ்நாடெங்கும் நடத்தினார்.

புதுக்கோட்டை ஷெரிப் வள்ளியின் உற்ற தோழமை. பா.ம.க.வில் ஷெரிப்பை இணைத்தவர் வள்ளிதான். பிற்காலத்தில் தோழர் ஷெரிப்புடன் இணைந்து சிறுபான்மையினர்-தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு எனும் அமைப்பை உருவாக்கினார். இந்துத்துவா அரசியலுக்கு எதிராக சிறுபான்மை மக்கள்-தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை அவசியம் என்பதை வலியுறுத்தி வந்தார்.

வள்ளி அமைப்பாக்குவதில், நிகழ்ச்சிகளைக் கட்டமைப்பதில் வல்லவர். சிறிய நிகழ்ச்சியைக்கூட மாநாடுபோல நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பார். தொடக்க காலங்களில் தோழர்களின் திருமண நிகழ்ச்சிகளில் புத்தகங்களை வெளியிடத் தொடங்கினார். எந்த இயக்கப் பின்புலமும், பணப்புலமும் இல்லாமலேயே புத்தக வெளியீட்டை தொடர்ச்சியாகக் கொண்டு வந்தார். பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை தொகுத்து வெளியிட்டார். ‘தலித் முரசு’ இதழில் ‘வேர்களும், விழுதுகளும்’ எனும் தொடர் தமிழகத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் புதைந்து கிடந்த சாதி ஆதிக்க எதிர்ப்பாளர்கள், இந்து மத எதிர்ப்பாளர்கள், பெண் விடுதலை போராளிகளைப் பற்றிய தகவல்களை தேடி அதைத் தோண்டி எடுத்து வெளி உலகத்திற்கு கொண்டு வந்த மாபெரும் பங்களிப்பு போற்றத்தக்கது.

ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு முன்நிபந்தனை அருந்ததியர் தலைமையே என்பதை அவரது கருத்தாக ஆணித்தரமாக முன் வைத்தார். அதே போல் தலித்துகள் பூர்வ பௌத்தவர்கள். இந்து அதிகார அரசு அடக்கு முறைகள் பௌத்த அடையாளங்களை அழித்து, இந்து அடையாளங்களாக நிறுவியுள்ளன. நாம் இந்துக்கள் அல்ல, தலித் மக்கள் இந்துக்கள் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார்.

வள்ளிநாயகம் ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியலை வந்தடைந்தது காலத்தின் கட்டாயம். இந்துத்துவ எதிர்ப்பின் விளைவாக சிறுபான்மை மக்கள் விடுதலை காலத்தின் கட்டாயம். தாழ்த்தப்பட்டோர் விடுதலை அரசியலை இணைத்துக் கொள்ளாத பெரியார், மார்க்சிய சிந்தனையை வள்ளி புறந்தள்ளினார்.

1982-ல் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சிக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் வள்ளி. 2006-ல் கட்சியிலிருந்து விடுபட்டுவிட்டேன் எனக் கேள்விப்பட்டவுடன் கோவையிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அழைப்பிருந்தால் இணையத் தயாரா? எனக் கேட்டார். மாற்றுக் கருத்து உள்ளவராக இருந்தாலும் எந்த அளவுக்கு சேர்ந்து செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம் என அரவணைக்கும் பண்புள்ளவர். அவரது இறுதிக் காலப்பணிகள் தலித் முரசு, தலித் ஆதார மையத்தின் அம்பேத்கர் கல்வி. இரண்டும் குறிப்பிடத்தக்கது.

வள்ளியின் கருத்துக்களை உள்வாங்கிய வாரிசாக அவரது மகன் ஜீவ சகாப்தன் தனது துணையாக ஷமீம் எனும் இஸ்லாமியப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டபோது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார். 2007, ஏப்ரல் 7 இறுதியாக திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில் வள்ளியிடம் விடைபெற்றது. 2007 மே 20 அவரது உயிரற்ற உடலைத்தான் பார்க்க முடிந்தது.

வள்ளிநாயகம் வரலாறு தொகுக்கப்பட வேண்டும். ஏன் என்றால் அவருடைய பொதுவாழ்க்கை வரலாறு இந்துத்துவ, சாதிய, ஆணாதிக்க எதிர்ப்பு வரலாறு. எந்த ஒருவரும் வள்ளியுடன் தொடர்ந்து இருந்ததில்லை. எந்த ஒருவருடனும் வள்ளி தொடர்ந்து இருந்ததில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். வள்ளிநாயகம் வரலாறு தொகுக்கப்பட வேண்டுமெனில் கோவை இராமகிருட்டிணன், கும்பகோணம் ஸ்டாலின், டி.எஸ்.எஸ்.மணி, அரணமுறுவல், வடிவேல் இராவணன், புதுகை ஷெரிப், மதுரை தமிழ்ப்பித்தன் சென்னை எஸ்.நடராசன், ஜெயகரன், புனிதப்பாண்டியன், தமிழினியன், அதியமான், ஓவியா இவர்களது பங்களிப்பு இணைக்கப்பட்டாலொழிய முழுமைப்படுத்த இயலாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com