Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
ஆசிய உற்பத்தி முறையும் பின்னைக் காலனியமும்
- ந. முத்துமோகன்

முன்னுரை

ஆசிய உற்பத்தி முறை என்ற ஓன்றைப் பற்றி கார்ல் மார்க்ஸ் பேசினார். புராதன இனக்குழு சமூகம், அடிமை முறை, நில உடமை முறை, முதலாளியம், சோசலிசம் என்ற ஐரோப்பிய வரலாற்று வரிசையிலிந்து வேறுபட்டு கீழைநாடுகளுக்குச் சொந்தமான சமூக வாழ்வியல் முறையாக மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறையைச் சுட்டிக் காட்டினார். இந்தியா போன்ற நாடுகளின் சமூக அமைப்புகளுக்குச் சொந்தமான பிரத்தியேகப் பண்புகளை அந்நாடுகளின் அறிஞர்கள் சுயமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என மார்க்சியத்தை முன்வனர்ந்தார் என்பதற்கு ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தாக்கம் இன்று வரை சாட்சியாக நிற்கிறது. 1920-30களிலிருந்து மார்க்சியத்தை சுவீகரிக்கத் தொடங்கிய இந்திய மார்க்சியர்கள் மார்க்கின் இந்த முன்னுணர்வைக் கணக்கில் கொள்ள வில்லை என்று கூற முடியாது. பல வரலாற்றுப் பேராசியர்கள் இக்கருத்தாக்கத்தை தமது ஆய்வுகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் இந்தியாவின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அளவுரீதியாகவும் குணாம்சரீதியாகவும் அதிகப்பட்டுக் கொண்டே போகும் போது,புதிய சமூக இயக்கங்கள் புதிய பிரச்சனைகளை நோக்கி நமது கவனத்தை ஈர்க்கும்போது, தொடர்ந்து இக்கருத்தாக்கம் பற்றிப் பேசவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. பின்னை நவீனத்துவ சூழல்களில், உலகமுழுவற்குடம் ஓற்றை வரலாற்றுப் பாதை என்ற கருத்தாக்கம் மறுதலிக்கப்படும்போது, மார்க்ஸ் குறிப்பிட்ட ஆசிய உற்பத்தி முறை என்ற மாற்றுக் கருத்தாக்கம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பின்னைக் காலனியச் சூழல்களில், ஐரோப்பிய வரலாற்று முன் மாதிரியையே உலகம் முழுவதற்குமான வழித்தடமாகக் கொள்ளுதல் என்ற கருத்தாக்கம் மறுத்தலிக்கப்படும்போது, மீண்டும் ஆசிய உலக நாடுகளுக்குள் திணித்து வரும் போது நமது நாடுகளின் தனித்த பண்புகள் பற்றிய கவனம் கூடுகிறது. ”நாகரிகங்களின் மோதல்” என்ற பெயரில் போரடும் ஆசிய ஆப்பிரிக்க மக்களைக் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கு அதிகரிக்கும் போது மீண்டும் ஆசிய உற்பத்தி முறையைப் பற்றிப் பேச வேண்டி வருகிறது. மூன்றாம் உலக அல்லது தெற்கத்திய நாடுகளுக்கான சமூக அமைப்புகளின் பிரத்தியேகப் பண்புகள் குறித்த அக்கறைகள் அதிகரிக்கின்றன.

மார்க்சின் எழுத்துக்களில்

1840களில் மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறை பற்றிப் பேசவில்லை. அந்த வருடங்களில் அவர் எழுதிய ஜெர்மானியக் கருத்தியல். மெய்யறிவின் வறுமை, கம்யூனிஸ்ட் அறிக்கை ஆகிய நூல்களில் ஆசிய உற்பத்தி முறை என்ற சொல்லாக்கம் இல்லை. பண்டைய சமுதாயம், அடிமைச் சமுதாயம், நில உடமைச் சமுதாயம், முதலாளியச் சமுதாயம் என்ற வரலாற்று வரிசையில் ஆசிய உற்பத்தி முறை இடம் பெறவில்லை. 1850-60களிலான மார்க்சின் எழுத்துக்களில் ஆசிய உற்பத்தி முறை என்ற சொல்லாக்கத்தையும் கீழைச் சமூகங்கள் பற்றிய குறிப்புகளையும் சந்திக்கிறோம்.

மார்க்ஸ் தனது அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான முன்னுரை என்ற கட்டுரையில் முதலில் ஆசிய உற்பத்தி முறை பற்றிப் பேசினார். மூலதனம் நூலின் பல்வேறுபட்ட பொருளாதார விவாதங்களுக்கு ஊடாக ஆசிய உற்பத்தி முறை பற்றிய பல குறிப்பிபுகளை இட்டுச் சென்றுள்ளார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி அமெரிக்கப் பத்திரிக்கையான நியூயார்க் டிரிபுயூனுக்கு எழுதிய கட்டுரைகளில் இந்தியச் சமூக அமைப்பு பற்றி எழுதினார். இஸ்லாம் பற்றியும் அரபுச் சமூகம் பற்றி மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிக்கொண்ட கடிதங்களில் கீழைச்சமூகங்களின் தனித்த பண்புகள் பற்றிய கருத்துக்களைக் கலந்து கொண்டனர்.

தனது சொந்த நாடான ஜெர்மனியின் மத்தியகால கம்யூன்கள் அவற்றிற்க மார்க்குகள் என்று பெயர். ஜெர்மானிய நாணயத்தின் பெயரும் இதுவே. பற்றிய கட்டுரை ஓன்றில் அவற்றின் கீழைத்தேய பண்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் மார்க்ஸ் ரஷ்ய கம்யூன்கள் பற்றியும் ரஷ்யப் புரட்கிக்கான பாதை பற்றியும் சிந்தித்தார். மீண்டும் அவை ஐரோப்பிய முன்மாதிரியிலிருந்து வேறுபடுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிக்காட்டினார். சில ரஷ்ய புரட்சிக்காரர்களோடு மார்க்ஸ் எழுதிக்கொண்ட கடிதங்களிலும் இவ்வகை விவாதம் தொடர்ந்து. 1870களின் கடைசியிலும் 1880களின் முதலாண்டுகளிலும் கம்யூன் உற்பத்தி முறையை ஐரோப்பிய சமூகத்தைப் புரிந்து கொள்ளுவதற்கும் புரட்சிகர இயக்கங்களின் வளர்ச்சியை அனுமானிப்பதற்குடம் கூட அவசியமான ஒன்றாக மார்க்ஸ் கருதினார் என சில ஆய்வாளார்கள் எடுத்துக் காட்டுகின்றனர்(1). ஆக மார்க்சைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய வரலாற்றின் முன்மாதிரியை உலகின் எல்லா நாடுகளுக்கும் பொறுத்தியே ஆகவேண்டும் என்ற முன்முடிவு அவருக்கு இருக்கவில்லை.

அவர் அதிகம் அறிந்த ஐரோப்பிய வரலாற்றுத் தகவல்கள் அவரது ஆய்வுகளின் போக்கை நிர்ணயித்தன. ஐரோப்பிய தத்துவ மரபிலிருந்து அவர் சுவீகரித்துக் கொண்ட முறையியலும் ஐரோப்பிய வரலாற்றை முன்னோடி வளர்ச்சிப் போக்குகள் அன்றைய ஐரோப்பாவில் நிகழ்ந்து வருகின்றன என்று அவர் கருதினார். எனவே சோசலிசம் நோக்கிய நகர்வும் கூட ஐரோப்பாவில் தான் முதலில் நிகழும் என்றும் அவர் எதிர்பார்த்தார். ஆனால் ஆசிய-அராபிய நாடுகள் என வரும்போது அந்நாடுகளுக்கு ஐரோப்பாவிலிருந்து வேறுபட்ட வரலாறு இருக்க முடியும் என்பதைப் பின்னாட்களில் அவரை வந்தடைந்த தகவல்கள் வற்புறுத்தின. அத்தகவல்கள் அவரது முறையியலிலும்கூட மாற்றங்களைக் கோரின. ஆசிய அரேபிய நாடுகளை உள்ளடக்கிய வரலாற்றின் பன்முகத்தடங்களை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார். இவை குறித்த புரிதல்கள் நமது காலத்தில் முக்கியப் படுகின்றன.

மார்க்சுக்குப் பிறகு

ஆசிய உற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் இட்டுச் சென்ற தடங்களிலும் அவற்றிலிருந்து சிறிது விலகியும் தொடர்ந்து விவாகங்கள் மார்க்சுக்குப் பிறகு நடந்துள்ளன. ரஷ்ய கம்யூன்கள் குறித்து நிற்கும் ரஷ்ய ஆன்மா பற்றி ரஷ்ய புரட்சிக்காரர்கள் பேசியிருக்கின்றனர். ரஷ்ய ஆன்மாவைப் பெரிதும் புனிதப் படுத்தி அவர்கள் பேசினார்கள் என்பதும் உண்மை. தஸ்தயேவ்ஸ்கி, தல்ஸ்தோய் போன்றோரின் இலக்கியப்படைப்புகளில் ரஷ்ய நாட்டின் பிரத்தியேகப் பண்புகளும் முதலாளியத்திள் நுழைவால் தூண்டிவிடப்பட்ட அறவியல் பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டன. ரஷ்யக் கம்யூன்கள், ஆன்மா ஆகியவை குறித்த லெனின் எரிச்சலோடு எதிர்வினை புரிந்ததும் உண்மை. ரஷ்யாவில் கம்யூன் அமைப்பு உடைந்துவிட்டது, அங்கு முதலளியம் வலுப்பெற்று வருகிறது என்ற கருத்தை அறிமுகப்படுத்தியபடியே லெனின் ரஷ்ய அரசியலுக்குள் நுழைந்தார். லெனின் இவ்வளவு அடியோடு கம்யூன்களை மறுப்பது சரியா? என அப்போது பிளிக்கானவ் எச்சரிக்கை செய்தார். லெனினைப் பொறுத்தமட்டில், ரஷ்ய கம்யூன்களுக்கு அவர் முன்னுரிமை வழங்கவில்லை எனினும் சோசலிசப் புரட்சி வளர்ச்சியடைந்த (ஐரோப்பிய) முதலாளிய நாட்டில்தான் நடக்கும் என்ற மார்க்சிள் கணிப்பை மீறிச் சென்ற முதல் சிந்தனையாளர் அவரே.

மார்க்சின் மூலதனத்திற்குப் புறம்பாக நடந்த புரட்சி அது என அப்போதே அந்தோனியோ கிராம்சி ரஷ்யப் புரட்சியைப் பற்றி எழுதினார். ரஷ்யப் புரட்சியின் வழியாக மார்க்சியம் 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் தத்துவமாகவும் அரசியல் சிந்தனையாகவும் நிலைகொண்டது மட்டுமல்ல, அது கீழைநாடுகளின் பிரத்தியேகப் பண்புகளை உள்வாங்கிய சிந்தனைப் போக்காகவும் பரிணமிக்கத் தொடங்கியது. 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகும் ரஷ்யாவில் சோசலிசக் கட்டுமானம் பற்றிய பல புதிய பிரச்சனைகளை லெனின் சந்திக்கவேண்டி வந்தது. மிகச் சிக்கலான சூழல்களில் ரஷ்ய நாட்டின் தனித்தன்மைகளைக் கணக்கில் கொண்டு பயணிக்க வேண்டியிருந்தது. ரஷ்யாவில் சோசலிசத்தின் வெற்றிக்கு தொழிலாளி-விவசாயி கூட்டணி உயிரோட்டமான முன்நிபந்தனை என்று லெனின் வரையறுத்தார்.

தொழிலாளி வர்க்கம் ஓரு பொரும்பான்மை வர்க்கமாக இல்லாத சூழல்களில் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை முன்னிறுத்தி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியே அரசியல் தலைமையேற்கும் என வரையறுத்தார். லெனினின் இந்த வரையறைகளில் சிக்கல்கள் இருப்பதாக டிராட்ஸ்கி போன்றோர் கூறி வந்தனர். தொழிலாளி-விவசாயி கூட்டணியோ, உழைக்கும் வர்க்கத்தைக் கட்சியே பிரதிநிதித்துவப்படுத்துவதோ, புரட்சியின் பாதுகாப்புக்குப் போதுமானவை அல்ல என்று டிராட்ஸ்கி கூறினார். ஆயின் அன்றைய ரஷ்யச் சூழல்களில் மேலே குறிப்பிட்ட வகையான வரலாற்றுப் பாதையையே ரஷ்யா தேர்வு செய்தாக வேண்டும் என்பது லெனினது நிலைப்பாடாக இருந்தது. இவ்வாறாக லெனின் ரஷ்யாவின் பிரத்தியேகச் சூழல்கள் பற்றிய சுதந்திரமான கணிப்புகளின் அடிப்படையில் சோவியத்துகளின் வரலாற்றைத் தேர்வு செய்தார்.

லெனினுக்குப் பிறகும் பலமுறை சோவியத் மார்க்சியருக் கிடையில் கீழைச் சமூகங்கள், கம்யூன்கள், ஆசிய உற்பத்தி முறை பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. இருப்பினும் சோசலிசம்/முதலாளியம் ஆகிய இரு பெரும் அமைப்புகளுக்கிடையிலான போட்டிகளின் அழுத்தத்தில் ஆசிய உற்பத்தி முறை பற்றிய உரையாடல் அங்கு தேக்கடைந்ததும் உண்மை. முதலாளியத்திற்கு எதிரான சோசலிச சக்திகளின் ஆற்றல் முழுவதும் ஓருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற அரசியல் வேலைத் திட்டத்தால் ஆசிய உற்பத்தி முறை குறித்த விவாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன என்றும் கூறலாம். 1920-30களில் நடந்து தேங்கிய ரஷ்ய மார்க்சியர்களின் விவாதங்கள் மீண்டும் 1960களில் தொடரப்பட்டன. ஈ.எஸ். வர்கா, என்.பி. டெரகோப்பியான் போன்ற அறிஞர்கள் இப்போது அவ்விவாதங்களைப் புதுப்பித்தனர்.

சீனக் கம்யூனிஸ்டுகளாலும் ஆசிய உற்பத்தி முறை குறித்த விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. சீனாவின் வரலாறு குறித்த புரிதலுக்கும் சீனப் புரட்சிக்கான பாதை குறித்த தேர்வுகளுக்கும் இந்த விவாதங்கள் மிக அவசியமாக இருந்தன. சீனாவின் பிரத்தியேகப் பண்புகளை வலியுறுத்துவதில்லை. ரஷ்யப் புரட்சியைவிட சீனப் புரட்சி மிக அடிப்படையாக ஆசியப் பண்பு கொண்டிருந்தது என்பதை ஆய்வாளர்கள் மறுக்க மாட்டார்கள். ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப் புரட்சி, வியட்நாமியப் புரட்சி, இன்னும் ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க அனுபங்கள் என 20 ஆம் நூற்றாண்டில் புரட்சிகளின் வரலாறு என்னவோட ஐரோப்பா அல்லாத நாடுகளின் விசேஷித்த பண்புகள் குறித்த கவனத்தை அதியப்படுத்திக் கொண்டேதான் இருந்தன.

பிரெஞ்சு மார்க்சியர்களில் சிலர் ஆசிய உற்பத்தி முறை பற்றி அக்கறை காட்டினர். பிரெஞ்சு அறிஞர்களின் மானுடவியல் ஆய்வு ஆர்வங்களோடு இது தொடர்பு கொண்டது. பிரான்சில் இருத்தலியல் மேற்கத்திய தத்துவம் மற்றும் மேற்கதிய நாகரீகத்தின் அடிப்படைகளை ஆழமாகக் கேள்விக்குள்ளாக்கிய போது, ஐரோப்பாவிற்கு மாற்றாக கீழைநாடுகளின் மானுடவியல் அங்கு செழித்தது. இனக்குழு நாகரீகம், வாழ்வியல் முறைகள் பற்றிய சில அறிதல் பாய்ச்சல்கள் அங்கு நாகரீகம், வாழ்வியல் முறைகள் பற்றிய அக்கறை கூடியது. கோடலியர் போன்ற சில மார்க்சிய அறிஞர்களும் இப்பயணத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பிரான்சில் அமைப்பியல் சிந்தனைப் பள்ளியின் செல்வாக்கினைப் பெற்றவர்கள். பிரான்சின் மார்க்சிய-அமைப்பியல் விவாதங்களின் ஊடாக மீண்டும் ஆசிய உற்பத்தி முறை பற்றி உரையாடல்கள் நிகழ்ந்தன. அல்த்தூசரின் அமைப்பியல் மார்க்சியம் இவ்விவாதங்களில் மிக முக்கியமானது.

சிக்கலான சமூக அமைப்புகள் என்ற கருத்தாக்கத்தை அவர் வளர்த்தெடுத்தார். ஹெகலியத்திலிருந்து விடுபட்ட மார்க்சியத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஹெகலிய கருத்துமுதல் வாதத்திலிருந்து மார்க்சியத்தை வடுபடக்செய்யும் பொழுது ஒற்றை அமைப்பு, ஒற்றை முரண், ஒற்றை வரலாற்றுப் பாதை என்ற கருத்தாக்கங்களிலிருந்தும் மார்க்சியம் விடுபடும் என்று அல்த்தூசர் கருதினார். இக்கருத்தாக்கம் ஆசிய உற்பத்தி முறை குறித்த விவாதத்தை நியாயப்படுத்த பெரிதும் உதவுவது ஆகும்.

உம்பெர்ட்டோ மெலோட்டி என்ற அறிஞரின் படைப்பு இவ்வகை விவாதங்களில் முக்கிய இடம் வகிக்கிறது(2). இவ்வாறாக மார்க்சுக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் ஆசிய உற்பத்தி முறை பற்றிய பேச்சு வெவ்வேறு சூழல்களும் நடந்து வந்திருக்கின்றன. இன்றைய பின்னைக் காலனியச் சூழல்களும் தொடர்ந்து ஆசிய உற்பத்தி முறை பற்றிய விவாதங்களைத் தூண்டுகின்றன. 1980களின் கடைசியில் சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு உலக அரசியலில் முதலாளியம்/சோசலிசம் என்ற முரண் சிதறடிக்கப்பட்டு உலகின் ஓற்றைத் துருவ எதிர்வு கலைந்து போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உலக முதலாளியம் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் மீது தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ராணுவ, பொருளாதார, அரசியல், கலாக்சார வடிவங்களில் முன்னாளைய மூன்றாம் உலகின் அடிப்படை முரண்பாடே மேற்குலகு/மூன்றாம் உலகு என மாறிவருகிறதோ எனக் கருத வேண்டியுள்ளது. நீண்ட கால காலனி ஆட்சியில் வாழ்ந்த மூன்றாம் உலக நாடுகள் தமது வளர்ச்சிக்காகப் போராடிவரும் சூழல்களில் புதுக்காலனியாதிக்கத்தின் நேரடி வடிவங்களைச் சிந்திக்க வேண்டி வருகிறது. நாகரீகங்களின் மோதல், உலகமயமாதல், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனப் பல புதிய அரசியல் சொல்லாடல்கள் இச்சூழல்களை விவரிக்கின்றன.

இச்சொல்லாடல்களோடு வளடும் நாடுகளை ஐரோப்பியமயப்படுத்தல், முதலாளியமயப்படுத்தல் ஆகியவையும் தொடர்ந்து வருகின்றன. ஆசிய உற்பதிதி முறை பற்றிய விவாதம் முக்கியப்படும் பின்புலம் இதுவே. பின்னைக் காலனியச் சூழலின் மற்றுமொரு பண்பையும் இங்கு வலியுறுத்தியாக வேண்டும். காலனி 2 சூழல்களில் நாட்டு விடுதலையின் ‘மைய நீரோட்டத்தால்’ புறக்கணிக்கப்பட்ட பிரச்சனைகள் பல (சாதி,மதம் முதலானவை) இன்று அவற்றின் அவசரத் தீர்வுகளை கோரிநிற்கின்றன. நாப்பி விடுதலைக்கு ‘‘முக்கியப்படாத’’ அப்பிரச்சனைகள் சமூக விடுதலைக்கு முதன்மையானவை ஆகின்றன. எனவே புத்தம் புதிதாக ஆரம்பிப்பது போல இந்தியச் சமூகத்தை உற்று நோக்கவும் உற்பத்தி முறை பற்றி பேச வேண்டிள்ளது.

1. M.Vitkin, Asiatic Mode of production. Philosophy & Social Criticism, 1981; 8;46. Web version in www.sagepub.com
2. Umberto Melotti, Marx and the Third World. The Macmillan Press, 1977


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com