Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டவர்கள்
- தமிழில்: ஜே.பி.அர்ச்சனா

முன்னுரை

இந்த அத்தியாயத்தின் பிரதான நோக்கம் முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டவர்களை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும். எனவே இரண்டு பிரதான பிரிவுகள் இந்து - இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம் - இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகும். எனினும், ஒரு சமூகத்திற்கிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளை புரிந்து கொள்ள வசதியாக முஸ்லிம்களின் இதர பகுதியினர் குறித்த ஒப்பீட்டு அளவிலான தகவல்களையும் தரவேண்டியது அவசியமாகிறது. (இப்பிரிவினர் இனிமுதல் முஸ்லிம்-பொது எனக் குறிப்பிடப்படுவர்).

முதல் தர மற்றும் இரண்டாம் தர தகவல்கள் கொண்ட ஒரு பரந்த தகவல் குவியலிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது. இந்தியாவில், முஸ்லிம்களுக்கிடையேயான ஜாதிகள் மற்றும் பிரிவுகளிலிருந்து இடையேயான சிக்கலான உறவுமுறைகளைப் புரிந்துகொள்ளத் தேவையான தகவல்கள் முஸ்லிம் சமூகப் படிநிலைகள் குறித்த சமூகவியல் ஆய்வுகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் இயக்கங்கள் குறித்த ஆய்வுகள், அரசியல் நிர்ணயசபை விவாதங்கள் பற்றிய ஆய்வுகள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற முக்கிய தீர்ப்புகள் ஆகியவை ‘இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்ற பிரிவு உருவான வரலாற்றினை புரிந்து கொள்வதில் பேருதவியாய் அமைந்தன.

முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் - ஒரு கண்ணோட்டம்

இந்தியாவில் முஸ்லிம்களின் சமூகக் கட்டமைப்பு குறித்த சமூகவியல் ஆய்வுகள், மரபு வழி சமூகப் படிநிலைகள் இருப்பதாக அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்து சாதி அமைப்பின் கூறுகளான சமூகக் குழுக்களின் படிநிலைகள், தங்கள் சமூகத்திற்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் முறை, பரம்பரைத் தொழில்கள் ஆகியவை இந்திய முஸ்லிம்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்றன. முற்றிலும், அல்லது ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக இருக்கும் 133 சமூகக் குழுக்களை 1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பட்டியலிடுகிறது. இந்தியாவில் காணப்படும் இஸ்லாமியச் சமூகம் கீழ்வரும் நான்கு பிரதான பிரிவுகளாகக் காணப்படுகிறது.

அஷ்ரப்கள் என அழைக்கப்படும் அரேபிய, பெர்சிய, துருக்கி அல்லது ஆப்கானிஸ்தானியர்களின் வழித்தோன்றல்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்து உயர்சாதியினர், சுத்தமான தொழில்களைச் செய்கிற நடுத்தர வர்க்கங்களிலிருந்து மதம் மாறியவர்கள் (ண்ஸ்) தோட்டி (பங்கி, மெஹ்தர்), தோல் தொழில் செய்பவர்கள் (சமர்) போன்ற முந்தைய தீண்டத்தகாத சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள்.

இந்த நான்கு பிரிவினரும் வழக்கமாக ‘அஷ்ரப்’ மற்றும் ‘அஜ்லஃப்’ என இரு பெரும் பிரிவுகளுக்குள் அடங்குவார்கள். ‘அஷ்ரப்கள்’ வெளிநாட்டவர் மற்றும் உயர்சாதியினரின் வாரிசுகள். ‘அஜ்லஃப்கள்’ தாழ்ந்ததாகக் கருதப்படும், புனிதமற்ற மற்றும் சுத்தமான தொழில்களைச் செய்பவர்கள் மற்றும் தாழ்ந்த நிலையினரில் மதம் மாறியவர்கள். பீகார், உ.பி, வங்காளத்தில் செய்யது, ஷேக் முகலாயர் பதன்கள் ஆகியோர் அஷ்ரப் எனவும், ஆசாரிமார், கைவினைஞர்கள், பெயிண்டர்கள், தோல் தொழில் செய்வோர், பால்காரர்கள், மாடு மேய்ப்பவர்கள் போன்றோர் அஜ்லப் எனவும் கருதப்படுகின்றனர்.

1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அஜ்லப் பிரிவு பீகாரில் ‘நவ முஸ்லிம்’களையும், வடக்கு வங்காளத்தில் ‘நஸ்யா’ பிரிவுனரையும் உள்ளடக்கியதாகும். தொழில் பிரிவினரான நெசவாளர்கள் (ஜொலாக), நூல் நூற்பவர்கள் (துனியா), எண்ணெய் ஆட்டுபவர்கள் (குலு), மரக்கறி வியாபாரிகள் (குஞ்ஜ்ரா), சவரத் தொழிலாளர் (ஹஜ்ஜாம்), தையல் தொழிலாளர் (தார்சி) போன்றோரும் ‘அஜ்லப்’ பிரிவில் அடங்குவர். 1901 கணக்கெடுப்பின்படி ‘அர்சால்’ என்ற ஒரு மூன்றாவது பிரிவும் காணப்படுகிறது. ‘அவர்கள் மிகத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த ஹலால்கர், லால்பேசி, அப்தல், பேடியா போன்றவர்கள்...’

இம்மாதிரியான மரபுவழி படிநிலைகள் மற்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. கேரளாவின் மலபார் பகுதியின் ‘மாப்பிள்ளைகள்’, ‘தங்ஙள்’, ‘அரபி’, ‘மலபாரி’, ‘புசாலர்’, ‘ஓசான்’ என ஐந்து படிநிலைப் பிரிவினராக உள்ளனர். மிக உயர்ந்த பிரிவினராகிய ‘தங்ஙள்’ பிரிவினர் முகமது நபியின் மகள் பாத்திமாவின் வழித்தோன்றல்களாகக் கருதப்பட்டு உயர்நிலையில் உள்ளனர். ‘அரபிக்கள்’ என அழைக்கப்படும் அரபு ஆண்களுக்கும் உள்ளுர் பெண்களுக்கும் தோன்றி அரபு வம்சா வழியைத் தக்க வைத்திருப்பவர்கள் படிநிலையில் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள்.

அடுத்த படிநிலையினரான ‘மலபாரிகள்’ அரபு ஆண்களுக்கும், உள்ளுர் பெண்களுக்கும் தோன்றி, அரபு வம்சாவழியை இழந்து, தாய்வழி தொடர்ச்சியைப் பின்பற்றுபவர்கள். ‘முக்குவர்’ என அழைக்கப்படும் இந்து மீனவர்களில் மதம் மாறியவர்கள் புசாலர்கள் அல்லது புது முஸ்லிம்கள். இவர்கள் தாழ்ந்த படிநிலையில் உள்ளவர்கள். முடிதிருத்துபவர்கள் ஒசான்கள், தொழில் காரணமாக கடைசிப்படி நிலையில் உள்ளவர்கள். 1987 இல் ஆந்திரா பிரதேசத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் முஸ்லிம்களிடையே வெளிநாட்டவரின் வாரிசுகளான சையது, ஷேக், பதான், அரபு வியாபாரிகளுக்கும், இந்திய பெண்களுக்கும் பிறந்தவர்களின் வம்சாவழியைச் சேர்ந்த லெப்பை போன்றோரும், மிகக் கீழ் நிலையில் ‘சுத்தமில்லாத’ தொழில்களான துதேகுலா (பருத்தி எடுப்பவர்கள்), ஹசாம் (முடி திருத்துபவர்கள்), ஃபக்கீர் - புத்புத்கி (பிச்சை எடுப்பவர்கள்) ஆகியோரும் உள்ளனர்.

தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவிற்குள் வருபவர்கள் அஷ்ரப் அல்லாத இதர பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்களே. இவர்கள் இடைநிலை மற்றும் கீழ்சாதி இந்துக்களாயிருந்து மதம் மாறியவர்கள். அதே பரம்பரைத் தொழிலைச் செய்து வருபவர்கள். உத்திர பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இவ்வகையான ஜுலாக்கள் (நெசவாளர்கள்) மிராகிகள் (பாடகர்கள்), தார்கிகள் (தையல் தொழிலாளர்), ஹல்வாய்கள் (இனிப்பு தயாரிப்போர்), மனிஹர்கள் (வளையல் தயாரிப்போர்) போன்ற 18 வகையான குழுக்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது. 1911 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பட்டியலிடப்பட்டிருக்கும் சுமார் 102 முஸ்லிம் சாதிக் குழுக்களில் குறைந்த பட்சம் 97 வகையினர் அஷ்ரப் அல்லாத பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ராஜபுத்திரர், காயஸ்தர், கோயெரிகள், கோரிகள், கும்ஹர், குர்மிக்கள், மாலிகள், மோச்சிகள் போன்றோர் இந்து, முஸ்லிம் இரண்டு மதங்களிலும் உள்ளனர்.

ஜனாதிபதி உத்தரவு (1950) என அறியப்படும் 1950 ஆண்டில் அரசியல் சாசன (பட்டியல் சாதியினர்) உத்தரவு. அசுத்தமான தொழில் செய்யும் இந்துக் குழுவினரை மட்டுமே பட்டியல் சாதியினர் எனக் குறிப்பதால், அதே தொழில்களைச் செய்யும் இந்து மதத்தைச் சாராதவர்கள் இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களுடன் சேர்க்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்டவராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோர் இரண்டு பிரிவாகக் காணப்படுகின்றனர். ஹலால்கர், ஹேலாக்கள், லால்பேகிகள் அல்லது பங்கிகள் (தோட்டிகள்), வண்ணார், ஹஜ்ஜாம்கள் (சவரத் தொழிலாளர்கள்), இறைச்சி வெட்டுவோர், பிச்சைக்காரர்கள் போன்றே அர்சால் பிரிவைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்களாக இருந்து முஸ்லிம் மதம் மாறியவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஜுலாகர்கள் (நெசவாளர்கள்), தார்சி அல்லது இத்ரிகள் (தையல் தொழிலாளர்), காய்கறி வியாபாரிகள் (ராயீன் அல்லது குஞ்ஜரர்கள்) போன்றோர் சுத்தமான தொழிலைச் செய்யும் அஜ்லஃப் பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே முஸ்லிம்களில் மூன்று பிரிவினர் இருப்பதை உணரலாம். (ண்) சமூக ரீதியாக ஒடுக்கப்படாதவர்கள் (அஷ்ரப்கள்), (ண்ண்) இந்து இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சமமான அஜ்லப்கள், (ண்ண்ண்) இந்து பட்டியல் சாதியினருக்குச் சமமான அர்சல்கள் ஆகியோர். முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோர் என்பவர்கள் (ண்ண்) மற்றும் (ண்ண்ண்)ம் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

4. முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதிக்கான அணுகுமுறைகள்

அகில இந்திய அளவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முயற்சியாக, பின்தங்கியிருக்கும் தன்மையை அளவிடுவதற்கான அளவுகோல்களை நிர்ணயிக்கவும், அதன் அடிப்படையில் சமூகக் குழுக்களைக் கண்டறியவும், அவர்கள் நிலைமையை மாற்றவும் உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யவும் இரண்டு பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் முதல் கமிஷனாகிய காகா காளேஸ்கர் கமிஷன் அறிக்கை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் சாதி அடிப்படையில் பின்தங்கிய தீர்மானித்ததால், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது கமிஷனாகிய மண்டல் கமிஷன் அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு பத்தாண்டுகள் கழித்து 1991ல் ஒரு பகுதி மட்டும் செயல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் இவ்விரு முயற்சிகள் தவிர, பல மாநில அரசுகள் தங்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்களை அமைத்து பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு குறித்த தங்கள் அணுகுமுறையை வடிவமைத்தன.

4.1. காகா காளேஸ்கர் கமிஷனும் (1955) பி.பி. மண்டல் கமிஷனும்

முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தனது அறிக்கையை 1955ல் தாக்கல் செய்தது. 2399 சாதியினர் மற்றும் பிரிவினரை அவ்வறிக்கை பிற்பட்டோராகப் பட்டியலிட்டது. இதில் 837 மிகவும் பிற்படுத்தப்பட்டோராக, அரசின் சிறப்பு கவனத்தைப் பெற வேண்டியவர்கள் என்கிறது அறிக்கை. இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு பிற்பட்டோராகவும், மிகவும் பிற்பட்டோராகவும் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த பட்டியலில் இந்து மதத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட குழுக்களுடன், இந்து அல்லாத முஸ்லிம் உள்ளிட்ட மதத்தைச் சார்ந்த குழுக்களும் அடங்கும்.

இந்த கமிஷனின் அறிக்கை தான் முதன் முதலாக முஸ்லிம் மற்றும் இதர மத சிறுபான்மையோரில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளனர் என்பதற்கு அரசு அங்கீகாரம் வழங்கிய நிகழ்வு. சாதி அடிப்படையிலான பிரிவு கமிஷன் தலைவரின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. காரணம் இஸ்லாமிய கிறிஸ்தவர்களிடையே நிலவி வருவதாகச் சொல்லப்படும் ‘சாதியின்மை’. ‘‘நாட்டின் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ பிரிவினரிடையே இது உருவாக்கப் போகும் மிக ஆரோக்கியமற்ற விளைவைக் கண்ட போது சாதி அடிப்படையில் தீர்வுகளை அளிப்பதன் ஆபத்துகளை உணர்ந்திருந்தேன்’’ என்று...

இரண்டாவது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன், மண்டல் கமிஷன், தனது அறிக்கையை 1980ல் சமர்ப்பித்தது. சமூக, கல்விரீதியாக பின்தங்கிய நிலையினை அளவீடு செய்ய சாதி மற்றும் வகுப்பு அம்சங்கள் கலந்த பதினொரு குறியீடுகளை அக்கமிஷன் முன்வைத்தது.

சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை அமைப்பதை குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சாசனத்தையும் மீறி இன்னமும் நிலைபெற்றிருக்கும் சாதிகளை ‘இந்து சமூகக் கட்டமைப்பின் செங்கற்கள்’ என கமிஷன் கருதுகிறது. அது 3743 சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் என அறிவித்தது.

சாதி அல்லாது அது போன்ற அமைப்பு ‘‘இந்து சமூகத்திற்கு மட்டுமானதல்ல எனவும், இவை இந்து அல்லாத குழுக்களாகிய முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்துவர்களிடமும் காணப்படுவதாக கொள்கை அளவில் ஒத்துக்கொண்டது கமிஷன். 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படியும், கமிஷன் நடத்திய கள ஆய்வுகளின் படியும் சுமார் 82 முஸ்லிம் சமூகப் பிரிவுகள் இதர பிற்பட்டோராக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், கமிஷன் இந்து அல்லாத மதப்பிரிவினரை இதர பிற்பட்டோராக அறிவிக்க சாதியை அடிப்படையாகக் கொள்ளவில்லை. இம்மதங்கள் சமத்துவத்தைப் போதிப்பதாக உள்ளதே காரணம். ஆனால் ‘வறுமை’ என்பதை மட்டுமே கணக்கில் கொள்வது என்றும் இல்லை. கமிஷன் இரண்டு பிரதான விஷயங்களைக் கணக்கிலெடுத்து பிற்படுத்தப்பட்ட தன்மை தீர்மானிக்கப்பட்டது.

1. இந்து மதத்திலிருந்து மதம் மாறி அனைத்து ‘தீண்டத்தகாதவர்கள்’ முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இவர்கள் அர்சால்கள்.

2. இந்துக்களாக இருந்தால் ‘இதர பிற்படுத்தப்பட்டோர்’ பட்டியலில் சேர்க்கப்படும். பரம்பரைத் தொழில் ரீதியாக அடையாளப்படுத்தப்படும் சமூகங்கள் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அஜ்லப் பிரிவினர்.

அர்சால்களையும் அஜ்லப்களையும் ஒரே பிரிவில் சேர்த்ததன் மூலம் அவர்களுக்கிடையேயான பிற்படுத்தப்பட்ட தன்மையின் வேறுபாட்டைக் கணக்கில்கொள்ள மண்டல் கமிஷன் தவறிவிட்டது. சமூகப் படிநிலையின் மிக கீழ்த்தட்டில் இருக்கும் அர்சால்களுக்குத் தனிப்பிரிவு அவசியம். அவர்கள் அட்டவணை சாதியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ‘மிகப் பிற்படுத்தப்பட்டவர்’ என்ற பிரிவினை ‘இதர பிற்படுத்தப்பட்டோர்’ பிரிவில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

4.2. முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டவர்களும், மாநிலங்களில் சமூக நீதி நடவடிக்கைகளும்

கேரளா, கர்நாடக வடிவம் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கொள்கையைப் பொறுத்தமட்டிலும், மாநிலத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீட்டுப் பலனை அளித்ததன் மூலம் கேரளாவும், கர்நாடகமும் தனித்துத் திகழ்கின்றன. முஸ்லிம்களை (கிரிமிலேயர் தவிர்த்த) பிற்படுத்தப்பட்டோரில் தனித்த குழுவாக பாவித்து தனியான கோட்டாவினை வழங்கியுள்ளன. இம்மாநிலங்கள் காலனிய காலகட்டத்திலிருந்தே இம்முறை நிலவி வருகிறது. பழைய மைசூர் ராஜதானியில் 1874லேயே, காவல்துறையில் 80 சதவிகிதம் இடங்களை பிராமணர் அல்லாதவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்திய கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கியதன் மூலம் சமூகநீதிச் செயல்பாடு தொடங்கிவிட்டது. கேரளாவில் 1936ல் திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்களிலும், அதற்கும் முன்னதாக மலபாரில் 1921லும் தொடங்கிவிட்டது. ஒதுக்கீடு ஈழவர் போன்ற சாதிப் பிரிவினருக்கு மட்டுமல்லாமல், முஸ்லிம்கள், ஒரு பகுதி கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினருக்கும் வழங்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின், மைசூர் கர்நாடக மாநிலமாக சீரமைக்கப்பட்டதும் அனைத்து பிராமணரல்லாத இந்து ஜாதியினரும் இந்து அல்லாத சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்தவர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்டனர். 1960ல் நாகன் கவுடா கமிட்டி பரிந்துரைகளின் பேரில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் (28%) என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஒதுக்கீட்டையும் சேர்த்து ஒதுக்கீட்டு சதவீதம் 68 ஆக உயர்ந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை 50% ஆக தீர்மானித்து தீர்ப்பு வழங்கியது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோராகத் தொடர்ந்தனர்.

ஹவானூர் கமிஷன் 1972ல் மதச் சிறுபான்மையினரைத் தனிக் குழுவாகப் பிரித்து 60%க்கு மிகாமல் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர் என மூன்று பிரிவாகப் பிரித்தது. வருட வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குக் குறைவான அனைத்து முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் என அறிவிக்கப்பட்டு அதிகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் சேர்க்கப்பட்டு தனியாக 4% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இக்கமிட்டிக்கு அரசு வழங்கிய தகவல் அடிப்படையில், மாநில அரசுப் பணியிடங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர இந்நடவடிக்கை உதவியது.

தொழிற்படிப்புகளாகிய மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உயர்ந்தது. 1996க்கும் 2000 ஆண்டிற்கும் இடையில் முஸ்லிம் மாணவர்களுக்கு 346 மருத்துவ இடங்களும், 258 பல் மருத்துவ இடங்களும், 3486 பொறியியல் இடங்களும் கிடைத்தன.

1952 கேரளாவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு, உச்ச அளவினை, 10% தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் உட்பட, 45% ஆக நிர்ணயித்தது. ஈழவர்கள், கம்மாளர்கள், இந்து கிறிஸ்தவ நாடார்கள், இதர இந்து பிற்படுத்தப்பட்டோர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இதன் மூலம் பலனடைந்தனர்.

1956, மாநில சீரமைப்புக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிக்கப்பட்டது. பிற்பாடு பெரிய பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு செய்து திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு 10% வழங்கப்பட்டு பின்னர் 12% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது கேரள ஒதுக்கீட்டு முறை, பிற்படுத்தப்பட்டோருக்கு 40% (ஈழவர் 14%, முஸ்லிம்கள் 12%, லத்தீன் கத்தோலிக்கர் 4%, நாடார்2%, தாழ்த்தப்பட்டோரிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் 1%, தீவராக்கள்1%, இதர பிற்படுத்தப்பட்டோர் 3%, விசுவகர்மா3%, மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 10%.)

தமிழ்நாட்டு வடிவம்

தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கான சமூக நீதிக்கான செயல்பாட்டு வடிவம் கேரள, கர்நாடக வடிவங்களிலிருந்து சற்று மாறுபட்டது. கேரளா, கர்நாடகம் போல அல்லாமல், முஸ்லிம்கள் என்று தனிப்பிரிவினருக்கு இங்கு ஒதுக்கீடு கிடையாது. ஆயினும் அனேகமாக எல்லா முஸ்லிம் பிரிவினரும் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் வருகின்றனர். மதரீதியான இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டுவிட்ட போதிலும் சுமார் 95% முஸóலிம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்குள் அடங்குகின்றனர்.

தொடக்கத்தில் கல்விரீதியாக பின்தங்கிய முஸ்லிம்களுக்கு 1872 ஜுலை 29 தேதிய தீர்மானப்படி சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. பின்னர் இது ‘ஆதி குடியினருக்கும்’, கீழ்ச்சாதியினருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அரசு உயர் பதவிகளில் பிராமணர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவும், மற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் இருந்தபடியால் 1997 ல் ஓர் அரசாணை பிராமணர் அல்லாதாருக்கு 42% இடங்களையும், முஸ்லிம்களுக்கு 17% இடங்களையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

சுதந்திரத்திற்குப் பின் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான தனி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம்களில் பின்தங்கிய நிலையிலிருந்த சமூகங்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சட்டநாதன் கமிஷன் (1970) 1951ன் ஒதுக்கீட்டு முறையை அங்கீகரித்ததோடு 105 சாதி /சமூகங்களை பிற்படுத்தப்பட்டனவாகக் கண்டறிந்து 31% ஒதுக்கீட்டையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 18% ஒதுக்கீட்டையும் பரிந்துரை செய்தது. தமிழ் பேசும் முஸ்லிம் குழுக்களாகிய லப்பை, தக்காண முஸ்லிம்கள் போன்றோர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 31% லிருந்து 50% ஆக உயர்த்தப்பட்டு, மொத்த ஒதுக்கீடு 68% ஆனது.

அம்பாசங்கர் கமிஷன் (1980) பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர், தற்போதைய இடஒதுக்கீடு 69% ஆகும். இது உச்ச நீதிமன்றம் வகுத்திருக்கும் உச்ச அளவாகிய 50% ஐ விட மிக அதிகமாகும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (கல்வி) நிறுவனங்களிலும், மாநில அரசுப் பணிகளிலும் இடஒதுக்கீடு/சட்டம், 1993, 76வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலமாக 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

பீகார் வடிவம்

‘கர்ப்பூரி ஃபார்முலா’ என அறியப்படும் பீகார் வடிவம், பிற்படுத்தப்பட்டோரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என இரண்டாகப் பிரிக்கிறது. 1971ன் முன்கேரிலால் கமிஷன்தான் பீகாரின் பிற்படுத்தப்பட்டோரின் துன்பங்களை ஆராயும் முதல் நடவடிக்கையாகும். 1975ல் சமர்ப்பிக்கப்பட்ட அக்கமிஷன் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோரை, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டது. 128 சாதியினர் இதர பிற்பட்டோர் பட்டியலிலும், 93 சாதிப் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இணைக்கப்பட்டனர். 1978ல் கர்ப்பூரி தாக்கூர் அரசு முன் கேரிலால் கமிஷன் பகுப்பை அங்கீகரித்தது.

அரசு வேலைவாய்ப்பில் 8% இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், 12% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 14% தாழ்த்தப்பட்டோருக்கும், 10% பழங்குடியினருக்கும், 3% பெண்களுக்கும் மற்றொரு 3% பொருளாதாரரீதியாக பின்தங்கியோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபின் இத்திட்டத்தைச் சற்று மாற்றியமைத்து, பழங்குடியினர் ஒதுக்கீடு 1% குறைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 15% ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 13%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18%, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு3% என ஒதுக்கீடு செய்யப்பட்டது. முஸ்லிம் சாதிக் குழுவினர் அவர்களின் பின்தங்கிய தன்மையை ஒத்து இதர பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 9 முஸ்லிம் குழுக்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், 27 குழுக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சோக்கப்பட்டனர்.

மேற்கூறிய மூன்று விதமான முஸ்லிம்களுக்கான சமநீதி நடவடிக்கைகளையும் சுருக்கமாக கீழ்வருமாறு கூறலாம்.

(i) முழு முஸ்லிம் சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு (வசதியான கிரீமிலேயர் நீங்கலாக) - கேரள, கர்நாடகம்.
(ii) 95% முஸ்லிம்களை உள்ளடக்கும் விதத்தில், பிற்படுத்தப்பட்ட சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு - தமிழ்நாடு
(iii) இதர பிற்பட்டோரை, பிற்படுத்தப்பட்டோராகவும், மிகவும் பிற்பட்டோராகவும் பிரித்து, பெரும்பாலான முஸ்லிம் பிற்பட்டோரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தல் - பீகார்

5. மத்திய, மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படாத முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோர்

இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பொறுத்தமட்டிலும் மத்திய அரசைவிட மாநில அரசுகளின் வரலாறு நீளமானது. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தவுடன் மத்திய இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ‘பொதுமை’ கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. அதாவது மாநில அரசுகளின் பட்டியலிலும், மண்டல் கமிஷன் பட்டியலிலும் பொதுவாகக் காணப்படும் சாதிகள் / சமூகங்கள் மட்டுமே முதல் கட்டமாக மத்தியப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. எனவே, இவையிரண்டிலும் ஏதாவது ஒரு பட்டியலில் மட்டும் காணப்பட்ட சாதிகள் / சமூகங்கள் விடுபட்டுப் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவ்வேறுபாடு தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைக்கப்பட்டவுடன் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

1993ல் உருவாக்கப்பட்ட தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் மத்திய இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சாதிகள் மற்றும் குழுக்களைச் சேர்ப்பதற்கான சமூக, பொருளாதார, கல்வியறிவு போன்ற குறியீடுகள் அடிப்படையிலான வழிமுறைகளை வெளியிட்டது. மத்திய, மாநில அரசுப் பட்டியல்களுக்கிடையேயான வேறுபாடு இன்னமும் நிலைத்து நிற்கிறது. இது ஒரு பொதுவான புகார், முஸ்லிம்களுடைய மட்டும் அல்ல. பல குழுக்கள் எந்த மதத்தைச் சார்ந்தனவாக இருப்பினும், மாநில பட்டியலில் இருந்த போதிலும், மத்தியப் பட்டியலில் இல்லை. எடுத்துக்காட்டாக மத்தியப் பிரதேசத்தில் 91 சமூகக் குழுக்களை இதர பிற்பட்டோராக மாநில பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரை செய்தபோதிலும், 65 குழுக்கள் மட்டுமே மத்தியப் பட்டியலில் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 79 சாதிகள் மாநில பட்டியலில் இருந்த போதிலும், மாநில பட்டியலில் 74 சாதிகளும், மத்தியப் பட்டியலில் 65 சாதிகளும் உள்ளன.

இவ்வேறுபாடு முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோர் மத்தியிலும் உள்ளது. எடுத்துக்காட்டாக மத்தியப் பிரதேசத்தில் 37 சமூகங்கள் முஸ்லிம் குழுக்களாக மாநில அரசுப் பட்டியலில் உள்ளது. ஆனால் 27 மட்டுமே மத்தியப் பட்டியலில் உள்ளன. பீகாரில் சமீபத்தில் பட்டியல் திருத்தியமைக்கப்பட்ட பின், மாநிலப் பட்டியலில் உள்ள 17 இதர பிற்படுத்தப்பட்ட குழுவினருக்கு மத்தியப் பட்டியலில் இடமில்லை. இதில் பக்கீர் /திவான், ஜுலாகா/அன்சாரி (மத்தியப் பட்டியலில் மோமின் என்பதற்கு சமமானது).

இத்ர்ஃபிரோஷ்/கதேரி/இத்பஜ்/இப்ராகிமி, ஜாட், கதாரியா மற்றும் சூரஜ் புரி ஆகிய மொத்த முஸ்லிம் குழுக்களுக்கும் இடமில்லை. உத்தரப் பிரதேசத்தில் மிர்சிகர், நன்பை என்ற இரு முஸ்லிம் குழுவினருக்கு மத்தியப் பட்டியலில் இடமில்லை. குஜராத் மாநிலத்தில் ஜிலாயா, தரியா-தை, மன்சூரி, அரபு, சும்ரா, தரக், கலால், பவையா ஆகியவை மாநிலப் பட்டியலில் உள்ளன. மத்திய பட்டியலில் இல்லை. மகாராஷ்டிராவில் மன்சூரிகள், பான் ஃபரோஷ், அத்தார், சன்பகருடி, முஸ்லிம் மதாரி, முஸ்லிம் காவலி, தர்வேசி, ஹஷ்மி, நால்பந்த் போன்றவை மத்தியப் பட்டியலில் இல்லை.

மாநில அரசுகள் தயாரித்திருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், பல ஒடுக்கப்பட்ட சாதியினர், சமூகங்கள் இடம் பெறவில்லை. சில முஸ்லிம் குழுக்கள் மத்தியப் பட்டியலில் உள்ளன. ஆனால் மாநிலப் பட்டியலில் இல்லை. பீகாரில் கல்வார்கள், ராஜஸ்தானில் மன்சூரிகள், உத்தரப் பிரதேசத்தில் அதிஷ்பாஸ்கள், மேற்கு வங்காளத்தில் ராயீன்கள், கல்வார்கள், ரங்வாக்கள், சுருஹார்கள் போன்றோர் எடுத்துக்காட்டுகள். சில முஸ்லிம் குழுக்கள் மத்தியப் பட்டியலிலும் இல்லை. மாநிலப் பட்டியலிலும் இல்லை.

இந்த குழுக்களை இந்திய மானுடவியல் சர்வே அமைப்பு ‘இந்திய மக்கள் திட்டத்திற்காக சேகரித்த தகவல்கள் மூலம் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக குஜராத்தில் இத்திட்டம் கண்டறிந்த 85 முஸ்லிம் சமூகங்களில் 76 அஷ்ரப் அல்லாதவை. ஆனால் இவற்றில் 22 மட்டுமே மத்தியப் பட்டியலிலும், 27 மட்டுமே மாநிலப்பட்டியலிலும் காணப்படுகின்றன. பீகாரில் கண்டறியப்பட்ட 37 அஷ்ரப் அல்லாத சாதி/ சமூகங்களில், 23 மட்டுமே மத்தியப் பட்டியலில் காணப்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் இத்திட்டம் கண்டறிந்த 67 சமூகங்களில் 61 பரம்பரைத் தொழில் ரீதியான குழுக்கள். ஆனால் மத்திய, மாநிலப் பட்டியல்களில் 32 மட்டுமே காணப்படுகின்றன.

6. நடைமுறையில் நிலவி வரும் முறை

அறிக்கையின் இந்தப் பகுதியில் பொதுவாக முஸ்லிம்களும், குறிப்பாக முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோரும் சந்திக்கும் வாய்ப்பு மறுப்புகளை அளவீடு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆண், பெண் வேலை வாய்ப்புகள், அரசு வேலைவாய்ப்பின் பல மட்டங்களிலும், பகுதிகளிலும் பிரதிநிதித்துவம், ஊதியம் மற்றும் கூலி, சராசரி தனி நபர் வருமானம், வறுமைநிலை, நகர்ப்புற கிராமப்புற நில உடைமை, கல்வியில் ஒப்பீட்டு அளவிலான பங்கேற்பு போன்ற அடிப்படைகளில், முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் இடையேயான வித்தியாசங்கள் ஆராயப்பட்டுள்ளன. பெரும்பாலான அடிப்படைகளில் இந்து இதர பிற்படுத்தப்பட்டோரை விடவும் முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோர் பின்தங்கியுள்ளனர்.

6.1.முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை

61வது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த அலசல் அமைந்துள்ளது.

61வது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு

இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு விபரங்கள் மண்டல் கமிஷன் கணக்கு களைவிடக் குறைவாகவே உள்ளன. மேலும் 55ஆவது மற்றும் 61வது மாதிரிக் கணக்கெடுப்புகள் தரும் எண்களும் பெரும் வித்தியாச மாகவே உள்ளன. 61வது கணக்கெடுப்புப்படி, முஸ்லிம்களில் தங்களை இதரப் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறிக் கொள்பவர்களின் விகிதம்40.1%. இது 55 வது கணக்கெடுப்பின் படியான 31.7%ஐ விட 9% அதிகம். இந்த வேறுபாடு கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் சமமாகவே உள்ளது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பில் தகவல் தருபவர்கள் தாமாக முன்வந்து தங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறார்கள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இதற்கு முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோரிடையே தாங்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற விழிப்புணர்வு வளர்ந்திருப்பது அல்லது இரண்டு மாதிரி கணக்கெடுப்புகளுக்கும் இடையில் இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியல் பெருமளவில் திருத்தியமைக்கப்பட்டது காரணமாக இருக்கலாம். மக்கள் தொகையில் இந்து இதர பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. இரண்டு கணக்கெடுப்புகளிலும், இந்து எஸ்சி/எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகை சரியாகவே உள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகை சரியாகவே உள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவும், அதற்கான சலுகைகளும் மிக நீண்ட காலமாக, 50 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருவதால் இப்பிரிவினர் தங்கள் நிலை குறித்து அறிந்தவர்களாக உள்ளனர்.

மாநில வாரியாக இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை

கேரளா, தமிழ்நாடு, ஹரியானா ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட அனைத்து முஸ்லிம்களும் இதர பிற்படுத்தப் பட்டவர்களாகவே உள்ளனர். கேரளாவைப் பொறுத்தமட்டிலும், முஸ்லிம்களில் 90% அதிகமானவர்களாக இருக்கும் ‘மாப்பிள்ளைகள்’ மத்தியப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். அதே போன்று ஹரியானாவில் ‘மியோ’ முஸ்லிம்களும் இந்தி-உருது பேசும் பீகார், உபி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். மாறாக அதிக முஸ்லிம்கள் வாழும் மேற்கு வங்கம், அஸ்ஸôமில் இதர பிற்படுத்தப்பட்டோரின் விகிதம் மிகமிகக் குறைவு. எனவே இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள் இம்மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்களைப் போய்ச் சேரவில்லை.

பிராந்தியரீதியாக அலசும்போது, மாநிலங்களுக் கிடையே குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் தெரிகின்றன. தகவல்கள் கிடைக்கப் பெற்ற 20 மாநிலங்களில், 14 மாநிலங்களில், 61வது மாதிரிக் கணக்கெடுப்பில் அதற்கு முந்தைய கணக்கெடுப்புகளை விட முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் மிக அதிகமாகவும் (32%), பீகார் (23%), உத்தரப் பிரதேசத்தில் 18 ம் அதிகரித்துள்ளன. மேற்கு வங்கம், அஸ்ஸôம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, டெல்லி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் இதர பிற்படுத்தப் பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. டெல்லியில் மிக அதிகமாக 24% தொடங்கி, மேற்கு வங்கத்தில் குறைந்த அளவும் குறைந்துள்ளது.

சமீபத்தில் 61வது மாதிரிக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 40.4% இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகும். இதில் 34% இந்து இதர பிற்படுத்தப்பட்டோரும், மீதி 64% முஸ்லிம் இதர பிற்படுத்தப்பட்டோரும் ஆவர். நாட்டின் மொத்த இதர பிற்படுத்தப் பட்டோரில் முஸ்லிம்கள் 15.7%. ஆனால் இது பொது வேலை வாய்ப்புகளிலோ, கல்வி நிறுவனங்களிலோ பிரதிபலிக்கப்படவில்லை என்பதை கீழ்வருமாறு காணலாம்.

6.2. முஸ்லிம்களில் பழங்குடியினர் (நபள்)

பட்டியல் சாதியினரைப் (நஇள்) போலல்லாமல், பழங்குடியினர் (நபள்) எந்த மதப்பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், இடஒதுக்கீட்டுச் சலுகைகளை அனுபவிக்கலாம். புராதன பண்புத் திறம், தனித்துவமான பண்பாடு, புவியியல் ரீதியான தனிமைப்படுத்துதல், வெளிச்சமூகத்தோடு தொடர்பின்மை, பிற்படுத்தப்பட்டதன்மை ஆகியவை பழங்குடியினர் பிரிவிற்கான காரணிகளாக உள்ளன. இவை அரசியல் சாசனத்தில் கூறப் பட்டிருக்கப்படாவிட்டாலும், நடைமுறையில் நிறுவப்பட்டுவிட்டனவாக உள்ளன.

பழங்குடியினரில் முஸ்லிம்களின் பங்கு மிகக்குறைவாக உள்ளது. 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மொத்த பழங்குடியினரில் முஸ்லிம்கள் 0.25% மட்டுமே. மிக அதிகமாக லட்சத்தீவுகளில், கிட்டத்தட்ட பழங்குடியினர் அனைவருமே முஸ்லிம்களாக உள்ளனர் (99.74%) இமாச்சலப் பிரதேசத்தில் முஸ்லிம் பழங்குடியினர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். மொத்த பழங்குடியினரான 6,77,58,285ல் 1,70,428 மட்டுமே முஸ்லிம்கள் (1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி).

மதவேறுபாடின்றி அனைத்துப் பழங்குடியினருக்கும் சலுகைகள் வழங்கப்படும் நிலையில் பழங்குடி பின்னணி கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் இச்சலுகைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல முஸ்லிம் சமூகங்களிலிருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கச் சொல்லி எழும் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாமல் உள்ளன.

(சச்சார் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com