Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
கியூபாவின் உயர்தர சுகாதாரத் துறை
- காலின் ஹக்ஸ் / தமிழில் - ஜே.பி.அர்ச்சனா

கிழக்கு பெர்த் மாகாணத்தின் பொதுசுகாதாரத் துறையின் முன்னாள் தலைவர் மற்றும் ஆஸ்திரேலிய அரசு பொதுமருத்துவக் கல்லூரியின் (Royal Australian College of General Practitioners) முன்னாள் தலைவர் என்ற முறையில் கியூபா நாட்டிற்குச் சென்றுவந்த எனக்கு கியூபா மீதான அமெரிக்காவின் 45 வருட கால வணிகத்தடை நடவடிக்கைகள் அச்சிறு தீவு நாட்டின் மக்களுக்கான பொது சுகாதாரம் சார்ந்த பணிகளை கடுமையாக பாதித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

இருந்தபோதிலும் நிலைமை மிக நன்றாகவே உள்ளது. சி.ஐ.ஏ-வின் இணைய தளத் தகவலின்படி கியூபாவில் தனி மனித சராசரி ஆயுட்காலம் 77 ஆண்டுகள். அமெரிக்காவில் இது 78 ஆண்டுகள். குழந்தைகள் இறப்பு விகிதம் கியூபாவில் 1000 குழந்தைகளுக்கு 6.04. (அமெரிக்காவின் 6.37ஐ விடக்குறைவு). எய்ட்ஸ் 0.1% (அமெரிக்காவில் 0.6%)

உலகில் சுகாதாரச் செலவுகளுக்காக மிகக் குறைவாகச் செலவிடும் நாடுகளில் ஒன்றான கியூபா இதனைச் சாதித்துள்ளது. தனி நபர் ஒருவருக்கு சராசரியாக கியூபா 250 அமெரிக்க டாலர்கள் செலவிடுகிறது. அமெரிக்கா 6000 டாலர்கள், பிற வளர்ச்சியடைந்த நாடுகள் 3000 டாலர்கள்.

இங்குதான் விஷயம் இருக்கிறது. மருத்துவத்திற்கு அதிகமாகச் செலவு செய்வதன் மூலம் மட்டும் உயர்தர மருத்துவச் சேவையையோ, ஆரோக்கியமான வாழ்வையோ உறுதிசெய்ய முடியாது. இடுப்பு எலும்பு மாற்று சிகிச்சையோ அல்லது இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சையோ கியூபாவில் அவசியமானவர்களுக்கு மட்டுமே, அன்றி செலவு செய்யத் தயாரானவர்களுக்கு அல்ல.

இன்னமும் புகைப் பழக்கத்தைக் கைவிடாத 75 வயது சர்க்கரை வியாதிக்காரருக்கு ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவில் தனியார் மருத்துவக் காப்பீடு மூலம் அளிப்பது போன்று இதயச் சிகிச்சை கியூபாவில் அளிக்கப்படமாட்டாது.

இதற்குமுன் கியூபா செல்லும்போது என்னுடன் பயணித்திருந்த ஒரு மாணவருக்கு பயணத்தின்போது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது. கியூபாவில் அவருக்கு கொடுக்கப்பட்ட உடனடி அவசரச் சிகிச்சையும், அவரது உயிரைக் காப்பாற்றிய அறுவைச் சிகிச்சையின் தரமும் ஆஸ்திரேலிய மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களால் பாராட்டப்பெற்றது.

இறுதிநிலைப் புற்று நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு கியூபாவில் சோதனை முயற்சியிலான, மிக அதிக செலவு ஏற்படுத்தும், கடுமையான குமட்டலை ஏற்படுத்துகின்ற, ஒரு சில அதிக மாதங்கள் மட்டும் வலி நிறைந்த வாழ்க்கையை நீட்டிக்கின்ற கீமொதெரபி மற்றும் கதிரியக்கச் சிகிச்சை கியூபாவில் தரப்படுவதில்லை. எனினும் எப்படியோ கியூபாவில் புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்குதல் கணிசமான அளவு குறைவாகவே உள்ளது. ஒருவேளை கியூபா விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும், இரசாயனங்களையும் பயன்படுத்த மறுப்பது காரணமாக இருக்கலாம்.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் எந்த நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டுபோல் பயமுறுத்திக்கொண்டிருக்கும் நீரிழிவு நோய் மற்றும் உடற்பருமன் போன்ற வியாதிகள் கியூபாவில் கணிசமான அளவு குறைவாகவே உள்ளது. இதற்கான காரணம் பெரும்பாலும் கியூபாவில் துரித உணவகங்களில் மற்றும் தேவையற்ற உணவுகளை உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் இல்லாதிருப்பது போன்றவை ஆகலாம். எனினும் கியூபாவில் 4000 சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைகள் இலவசமாக நடத்தப்பட்டுள்ளன. அனைத்து பிராந்திய மையங்களிலும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கான (டயாலிசிஸ்) வசதி உள்ளது.

குழந்தைப்பருவ நோய்த்தடுப்பு (Immunisation) விகிதம் கியூபாவில் 100% (ஆஸ்திரேலியாவில் 90%). உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களில் கியூபாவும் ஒன்று. அது தயாரிக்கும் பல தடுப்பு மருந்துகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வளவும் கியூபாவுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை அமெரிக்க, ஐரோப்பிய மருந்து கம்பெனிகள் வழங்குவதைத் தடுக்கும் அமெரிக்க முயற்சிகளையும் மீறி சாதிக்கப்படுகிறது. (அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் கியூபாவுடன் வர்த்தகம் செய்வது அமெரிக்கச் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது)

அமெரிக்காவின் இந்நிலைப்பாடு மருந்து பொருட்கள் தயாரிப்புக்கும் பொருந்தும். கியூபா மூன்றாம் உலக நாடுகளுக்கு வினியோகம் செய்வதற்காக 46 வகையான அடிப்படையான மருந்து வகைகளைத் தயாரிக்கிறது. இம்மருந்துகள் அடிப்படை நோய்களான கிருமி தொற்று, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கான, காப்புரிமை முடிந்துபோன மருந்து வகைகளாகும்.

இம்மருந்து வகைகள் அதிநவீன மருந்துவகைகளாய் இல்லாவிட்டாலும், பொது சுகாதார நோக்கில் பார்க்கையில் அவை 90% பிரச்சனைகளைத் தீர்ப்பவையாக உள்ளன. எண்ணிக்கையில் சிறு அளவிலான 1-2% மேம்பாடு அடையச் செய்த புதிய காப்புரிமை பெற்ற மற்றும் விலை உயர்ந்த மருந்துகள் சுகாதாரத் தரத்தை மேம்படுத்தும் என்று சொல்வதற்கில்லை. எனினும் மருந்துவர்கள் வழவழப்பான துண்டுப் பிரசுரங்களிலும், நட்சத்திர ஓட்டல் சிற்றுண்டிகளிலும், தந்திரமிக்க மருந்து கம்பெனி விற்பனைப் பிரதிநிதிகளிடமும் மயங்கி புதுவகை மருந்துகளை நோயாளிகளின் மேல் சோதிக்கின்றனர். சிலவேளை, விளைவுகள் வையோக்ஸ், ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை போன்று மிக மோசமாகிப் போகின்றன.

ஆஸ்திரேலியா சுகாதார விழிப்புணர்வுக்கும் நோய்த் தடுப்புக்கும் 1%க்கும் குறைவாகவே செலவிடுகிறது. அதுவும் புகையிலை மீதான வரியிலிருந்து பெறப்படுகிறது. மாற்றாக கியூபாவில் மொத்த சுகாதார ஒதுக்கீட்டின் 10% நோய் தடுப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

கியூபப் பொதுமருத்துவர்கள் தினசரி மதியத்திற்குமேல் வீடுவீடாகச் வருகைதந்து சுகாதார ஆரோக்கியக் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். உடற்பயிற்சி உடற்கூறு மருத்துவர்கள் மற்றும் உணவுமுறை வல்லுநர்கள் உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுமுறைகள் குறித்து அண்டைக்குழுக்களுக்கும், பள்ளிகளிலும் பயிற்சியளிக்கின்றனர்.

வெனிசுலாவுடனான கியூபாவின் எண்ணெய்க்காக மருத்துவச் சேவைகளைக் கைமாறும் ஒப்பந்தங்களிலும் இத்திட்டங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. கியூபா 20,000 மருத்துவர்களையும் பொதுசுகாதாரப் பணியாளர்களையும் காரகாஸின் மாவட்டங்களுக்கும், மற்ற தென்னமெரிக்க நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் வெனிசுலா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து கியூபாவிற்குப் பறந்து சென்று அறுவைச் சிகிச்சை மூலம் கண்பார்வை திரும்பக் கிடைக்கப்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் எந்த பிராந்திய நகரத்தையும்விட சிறந்த எக்ஸ்ரே, சோதனைக் கருவிகள், எண்டோஸ்கோப், கண் சார்ந்த நோய்களுக்கான சோதனைக் கருவிகள் கொண்ட சோதனைச்சாலைகள் கியூபாவின் அதே போன்ற நகரங்களில் உள்ளன.

மேலும் மூன்றாம் உலகநாடுகளில் கியூபாவைச் சேர்ந்த 10,000 சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்

கிழக்கு தைமூர் இந்தோனேசியாவிலிருந்து விடுதலை பெற்றபின் கிழக்கு தைமூர் கிராமப் பிரதேசங்களுக்குச் சென்ற முதல் மருத்துவர்கள் கியூபாவிலிருந்து சென்றவர்கள். கடந்த 3 வருடங்களாக 350 பேர் கொண்ட மருத்துவக்குழு-மருத்துவர்கள், சோதனை வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள்-கிழக்கு தைமூரின் மருத்துவ மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துவருகின்றனர். அத்துடன் 2012ல் கிழக்கு தைமூரை மருத்துவத் தேவைகளில் சுயசார்புடையதாக ஆக்கும் கியூப அரசு உதவித் திட்டத்தின்கீழ் 500 கிழக்கு தைமூரிய மாணவர்கள் கியூபாவில் மருத்ந்துவக் கல்வி பெறுகின்றனர்.

மே 24 அன்று, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிழக்கு தைமூர் அதிபர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்த்தா தனது உரையில் கியூபா ‘‘தன்னலமற்று’’ அவ்வறிய நாட்டிற்குச் செய்யும் உதவிகளைப் புகழ்ந்துரைத்தார். ‘‘நம் நாடுகள் இருப்பது வெகு தொலைவிலாக இருந்தாலும் மருந்துகளையும் சுகாதாரத்தையும் பொறுத்தமட்டில் தன் முன்னுரிமைகளில் கிழக்கு தைமூரும் ஒன்று எனக்கருதும் தளபதி பிடல் காஸ்ட்ரோவின் தலைமைக்கும் அவரது தொலைநோக்குக்கும் நன்றி செலுத்துகிறேன்’’. திலி நகரத்தில் கிழக்கு தைமூர், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன், உலக வங்கி, ஐப்பான் ஆகியவை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் ராமோஸ்-ஹோர்த்தா கூறியது இது.

அனைத்து கியூப மக்களுக்கும் பேறுகால சேவைகள் வழங்கப்படுவது காரணமாக குழந்தை மரணம் மிகக்குறைந்த அளவே உள்ளது. ஆஸ்திரேலியாவின் ‘‘வசதி வாய்ந்த’’வர்களிடையே சிசேரியன் அறுவைச் சிகிச்சைமுறை 40 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், கிராமப்புறங்களில் வசிக்கும் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினருக்கு பேறுகால சேவை என்ற ஒன்றே கிடைப்பதில்லை. இந்த நிலை அமெரிக்காவின் சேரிப்பகுதிகளுக்கும், மருத்துவம் சார்ந்த வழக்குகள் காரணமாக காணாமல் போய்விட்ட அரசு பேறுகால சேவைகள் கொண்ட ஒரு சில மாநிலங்களுக்கும் நிகரானதாகும்.

ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 58, பெண்களுக்கு 63- நல்ல மருத்துவச் சேவைக்கான இலக்கணம் அல்ல.

ஒருவேளை கியூபாவில் ஒரு தலைவலி மாத்திரை வாங்க முடியாமற்போகலாம். ஆனால் மாதவிடாய் வலி முதல் ஒற்றைத்தலைவலி வரையான நோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பாரம்பரிய மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், குறைந்த பக்க விளைவுகளுடன் தரமான குணமளிக்கக் கூடிய சிகிச்சை முறைகளும் உள்ளன.

இறுதியாக, சுமார் 70,000 லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய மாணவர்கள் சுகாதாரப் பணியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் கியூபாவினால் பயிற்சியளிக்கப்படுகின்றனர். சர்வ நிச்சயமாக மக்களின் மனதைக் கொள்ளைகொள்ள அமெரிக்க ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் பகாசுர நிறுவனங்களின் சுரண்டல் மற்றும் ‘முன்னெச்சரிக்கை யுத்த’க் கொள்கைகையவிடச் சிறந்த வழி.

Greenleft Weekly Issue 713 13th June 2007


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com