Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
சிலியின் கலகம் - வாழும் வரலாற்று ஆவணம் (Battle of Chile)
ஆனந்த் பட்வர்த்தன் / தமிழில் ; ஹவி

பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த எழுபதுகளில் நான் அமெரிக்காவில் மாணவனாக படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பார்க்கக் கிடைத்த நிறைய ஆவணப்படங்கள் தான் என்னைப் படம் எடுப்பதற்கான ஒரு உந்துதலை நோக்கித் தள்ளின. அதிலும் குறிப்பாக, இன்னும் என் மனதில் பதிந்து போன ஒரு ஆவணப்படமான, வலுவான மற்றும் உயிரோட்டமுள்ள ஒரு படைப்பாக இருப்பது பெட்ரிசியோ குஷ்மானின் ‘சிலியின் கலகம்’(Battle of chile) என்கிற ஆவணப்படம் தான்.

சிலியின் அதிபர் சல்வடார் அலண்டே ஏற்கனவே எங்கள் இலட்சிய தலைவராக இருந்தார். அவர் வாயிலாக மிகவும் உணர்வுப்பூர்மாக என்னைப் பற்றிக் கொண்ட ஜனநாயகத்தின் மதிப்பீடுகளைக் குறித்து எனது மார்க்சிய தோழர்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஜனநாயகத்தின் மதிப்பு, அஹிம்சை குறித்த எனது புரிதல்களையும், வர்க்கக் கண்ணோட்டமில்லாத, சமூக நீதியை தன்னுள் கொண்டிராத காந்திய அஹிம்சை குறித்த குறைபாடுகளையும் காந்தியவாத நண்பர்களுடன் இதைப் பகிர்ந்து கொண்டேன். இந்த இடத்தில் தான் அலண்டே, ஒரு மார்க்சீயர், எப்படி இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம், தேர்தல் வழிமுறைகள் வாயிலாக மக்கள் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார் என்பது மிகவும் கவனத்திற்குரியது.

அதே நேரத்தில் 1973ல் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட கூலி ராணுவப் படைகளால் திடீர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், இளம் சிலிய மக்களும், மக்கள் பணியில் ஈடுபட்டிருந்தோரும் கொல்லப்பட்டு ஒரு குறுகிய வர்க்கத்தினர் கையில் திடீர் எழுச்சியாக அதிகாரம் பறிக்கப்படுகிறது. அந்த திடீர் எழுச்சி ஜனநாயக சோஷலிசத்தின் விளைவு என்பது என் தனிப்பட்ட கருத்து. குஷ்மானின் காவியமான அந்த ‘சிலியின் கலகம்’ ஆவணப்படம் அலண்டேயின் புரட்சியின் அற்புத தருணங்களையும் அதற்கான சவால்களையும் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், செப்டம்பர் 11, 1973ல் நடந்த அலண்டேயின் கொலையின் மூலமாக ஒரு துயரத்தைச் சந்திக்க நேர்ந்ததையும் அழுத்தமாகக் காட்டியது.

மிகவும் நாடகத்தனமாக அல்லாத இயல்பான காட்சிகளைக் கொண்ட அந்தப் படத்தை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் அப்படம் என்மீது வலுவான பாதிப்பை ஏற்படுத்தியது. அர்ஜென்டினிய ஒளிப்பதிவாளர் ராணுவப் புரட்சியின் துப்பாக்கி தாக்குதலை தொடர்ந்து படமெடுக்கிறார், எனவே அவரும் நேரடியாக துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாக்கப்படுகிறார். அங்கே படம் பிடிக்கின்ற தருணத்திலேயே அவருடைய மரணமும் நிகழ்கிறது. வெறும் படக்காட்சியாக மட்டுமல்லாமல், மோனேடே கட்டிடத்தில் வெடி வைத்து தகர்ப்பதன் ஊடாக அலண்டே கொல்லப்படுகிறார். அது ஒரு வலி மிகுந்த பதிவுகளாக தினசரி நிகழ்வுகளை அதிர்வுக்குள்ளாக்கி சிலியின் குடிமக்களை உலுப்புகிறது. மட்டுமின்றி சிஜஏவின் கைக்கூலி அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை உருவாக்கி துயரத்துடன் முடிவடைகிறது.

மீண்டும் ஒரு கால் நூற்றாண்டு தள்ளி அப்படத்தைப் பார்க்கின்ற பொழுது பிரமாதமான ஒரு வரலாற்றுச் சித்திரத்தை தீட்டிக் காண்பித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‘சிலியின் கலகம்’ ஆவணப்படம் உருவாவதற்காக அந்த கேமிராக் கலைஞர்கள் தந்த வீரம் செறிந்த உழைப்பும், திறமையும், தியாகமும் என்றென்றைக்குமாக போற்றக்கூடியதாகும்.

அதற்கும் அப்பால், அந்த அர்ஜென்டினிய ஒளிப்பதிவாளர் லியனார்டோ ஹென்ரிக்சன் படப்பிடிப்பு தருணத்திலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார். அப்படத்தின் முக்கிய ஒளிப்பதிவாளரான போர்ஹே முல்லர், திடீர் புரட்சியின் மூலம் அலண்டேயைத் தூக்கி வீசிவிட்டு, அதன் பொறுப்பேற்ற கொடுங் கோன்மை அரசின் அதிபர் ஜெனரல் அகஸ்டோ பினாசெட்டின் அரசு யந்திரத்தின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார். குஷ்மானின் காமிரா ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும் அச் சமூகத்தைப் பார்க்கிறது.

நகர்ப் புறத்தின் வலதுசாரி மேட்டுக் குடியினருடன் பேசியபடி, தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களின் அவர்களுடைய வேலைத்தளத்திலும், வீடுகளிலும் ஒன்றாக கலந்து இருந்தபடி, அதிகார வர்க்கத்தின் அரசியல்வாதிகளை சட்டமன்றத்தில் அவர்களை கவனித்தபடி, எதிர்ப்புப் பேரணியில் கலந்து செல்கையில் உயரமான இடங்களில் இருந்து சுட்டுத்தள்ளுகிற அதிகார வர்க்கத்தினரை அம்பலப்படுத்தியபடி, துப்பாக்கிக்கு இரையான தொழிலாளரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியபடி, இறுகி சிதறுண்டு, காட்டிக் கொடுத்தல்களாலும், உடன் வேலைப்பார்ப்பவரை சந்தேகப்பட்டு கொன்றழிப்பதனையும் மிகவும் அப்பட்டமாக படம் பிடிக்கிறது. மிகவும் நகைக்கத்தக்க விதத்தில் ராணுவ தலைமைகள் ஏற்கனவே ‘வாஷிங்டனின்’ கட்டுப்பாட்டுக் குள்ளானவர்களாக இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு விசுவாசமில்லாதவர்களை சந்தேகித்தும், கொன்றழித்தும், மிகப் பெரிய காட்டிக் கொடுத்தல்களின் வழியாக தன்னை இருத்திக் கொள்கிறது பினாசெட்டின் கொடுங்கோன்மை அரசு.

மிகவும் தீர்க்க தரிசனத்துடன் முன்னுரைப்பது போல் துவங்குகிறது அப்படத்தின் துவக்கக் கதையாடல். வலதுசாரி யந்திரவாதம் தேவைப்பட்டால் எவ்வழியிலேனும் அதிகாரத்தைப் பற்றிக் கொள்வதற்கும், ஜனநாயகத்தை உருவாக்கும் வழிக்கு இடையூறாக, இணைக்க முடியாத கண்ணிகளாக, விரும்பத் தகாத கூட்டணிகளாக உருவெடுத்து, தொழிலாளர்களை ஒடுக்கி, தன்னை மிகவும் பட்டவர்த்தனமாக பாசிசத்துடன் இணைத்துக் கொள்கின்ற போதிலும், மிக நெடிய தூரமாயினும் இறுதியில் ஜனநாயகம் வெற்றி பெறும் என்பதற்கான சாட்சியமாக விளங்குவதாக திகழ்கிறது அப்படம்.

புரட்சியில் ஒரு பொற்காலம் கிடைத்துவிடும் என்பது போன்ற மேற்பூச்சுகளை பூசுகின்ற பெரும்பாலான மற்ற படங்களைப் போலல்லாமல், வரலாற்றில் சந்திக்க நேர்ந்துவிட்ட துயரத்தின் வீழ்ச்சிகளையும், அதே நேரத்தில் புரட்சியானது இரத்தம் சிந்தாமலும், சமூக நீதியாலும், ஜனநாயகத்தை தியாகம் செய்து விடாமலும் அடைவிட முடிகிறதையும் இப்படம் முன்னுரைக்கிறது. தொழிற்சாலைகளில், கூட்ட அறைகளில், நிகழ்கின்ற உரையாடலை, அந்தத் தருணங்களை உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் பதிவு செய்வதன் ஊடாக காண்கிற ஒருவரின் நரம்புகளினூடாக, ஒரு ஜனநாயகப்பூர்வ எதிர்காலம் விரைந்து வருவதை மிகவும் அழகியல்பூர்வமாக உணரச் செய்துவிடுகிறது. நேருக்கு நேராக ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாமல் அதை உணரச் செய்துவிடுகிறது.

சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது உழைக்கும் தொழிலாளர்கள் கைகளால் தான் பாதுகாக்கப் படுகிறது என்பதை வெளிப்படுத் துவதை காணலாம். ஆனால் அலண்டே இறுதிவரை ஒரு இலட்சியவாதியாகவே இருக்கிறார். இறுதிவரை அவரது அரசானது கண்ணியமும், மரியாதையும் மிகுந்த சட்டரீதியான தன்மைகளால் மக்களை வழிநடத்துகிறதே தவிர, ஒரு பொழுதும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளால், அவர் தன்னையும், தனது அரசையும் காப்பாற்றிக் கொள்ளவில்லை. ஒரு அபாயம் உருவாகி வருவதை குறிப்பிட்டு காட்டுகிற இப்படத்தின் உள்ளடக்கமானது அதனை அழகியல் பூர்வமாக ஆய்வு செய்வதிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறது.

சரியாக சொல்வதானால், 70களில் ஜுலியோ கார்சியா எஸ்பினோசா நிறுவிய கோட்பாடான ‘கச்சிதமற்றத் திரைப்படம்’ என்பதற்குப் பொருந்தக் கூடிய, ‘காண்-உணர்’ சினிமாவான அது போராட்டத்தின் அடையாளங்களை சுமந்து செல்வதை குறித்து தெளிவாகப் பேசுகிறது. ஆகவே கறுப்பு-வெள்ளையில், மங்கலான, குறுக்கு மறுக்கான சிதிலமடைந்த பிலிம் சுருளோடு, வேகமாக இயங்கக் கூடிய, கையின் அதிர்வுகளை கொண்ட படக்காட்சிகளையும் கொண்ட ஒரு சினிமா அழகியலை வெளிப்படுத்தி நிற்கிறது. ‘சிலியின் கலகம்’ (Battle of chile) திரைப்படமானது (அது உருவாக்குகிற ‘கச்சிதமின்மையானது’) தன்னெழுச்சியான அரசியல் கொந்தளிப்புகளையும் கடந்து மிகவும் செறிவான முறையில் வெகுதூரம் கடந்து செல்வதுடன், அதன் கவித்துவ மையமானது முடிவற்ற உண்மைக்கும், இயல்புத்தன்மைக்குமான உறவின் முக்கியத்துவத்தை மிகவும் அசாதாரணமான முறையில் பின்னுகிறது.

இதைப் போலவே விளங்குகிற மற்றொரு திரைக் காவியமும், வரலாற்றை மீள் கட்டுமானம் செய்யக் கூடியதுமான கீலோ பொந்தே கார்வோவின் ‘அல்ஜீயர்களின் போராட்டம்’ (Battle of Algiers) திகழ்கிறது. ‘சிலியின் கலகம்’ (Battle of chile) படத்திற்குப் பிறகு, அதே போன்ற பெயருடன், அதை நினைவு கூறும் வகையில் வந்திருக்கிறது. ‘சிலியின் கலகம்’ திரைப்படம் வெளிப்படையாக அதிகாரத்தை எதிர்க்கக் கூடிய ஒரு உறுதியான வரலாற்று அத்தியாயமாக உயர்ந்து திகழ்கிறது. இது புனைவான மறு உருவாக்கமல்ல; மக்களின் வாழும் ஆவணம். மட்டுமல்லாமல் நம்பிக்கையின் ஞாபகங்களை மீளுருவாக்கம் செய்த திரைப் படங்களில் உலகளாவிய அளவில் இதைப்போன்ற வேறொன்றை ஒரு பொழுதும் காண முடியாது. அதைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், இதைப் போன்ற தீரமிக்க படைப்பைப் பெற்றதற்காக நாம் எத்தனை பேறு பெற்றிருக்கிறோம் என்பதை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள முடிகிறது.


ஆனந்த்பட்வர்த்தன் இந்திய ஆவணப்படப் போராளிகளுள் முதன்மையானவர். இவர் எடுத்த ‘ராமனின் பெயரால்’, ‘மும்பை நமது நகரம்’, ‘பகத்சிங் நினைவுகள்’ போன்றவை குறிப்பிடத்தக்க ஆவணப்படங்களாகும். மேலும் தொடர்ந்து இந்திய துணைக்கண்ட பரப்பில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களை உற்று அவதானித்து, கடந்த கால் நூற்றாண்டாக அதிகார வர்க்கத்தினருக்கும், அடிப்படைவாதத்திற்கும் எதிராக தொடர்ந்து தனது காட்சிபூர்வ படங்களால் போராடி வருகிறார். எந்த ஆட்சியின் போதும் மக்கள் பார்க்கும் நேரத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இவரது படங்களை ஒளிபரப்ப அனுமதித்ததேயில்லை. தொடர்ந்து வழக்குகளால் போராடி வெற்றி பெற்ற போதிலும் அதிகார வர்க்கம் இவரது படத்தை மக்களிடமிருந்து தள்ளி வைக்கவே முயற்சித்து வந்துள்ளது. ஆனால் மக்களும், மக்கள் சார்ந்த இயக்கங்களும் இவரது படத்தை தொடர்ந்து காண விழைந்து வீதிகள் தோறும் திரையிட்டு அதிகாரத்திற்கு எதிரான ஒரு உரையாடலை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com