Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

கல்வாரியன்
பேரா. அப்துல் காதர்

வாரன் ஹேஸ்டிங்ஸ் நம் அன்னை நாட்டைச் சுரண்டிய ஆங்கிலக் கொடுங்கோலன். துலாக்கோலோடு வணிகத்துக்காக நுழைந்தவர்கள் தாயகத்தின் செங்கோலைக் கைப்பற்றியதன் அதிகார அசிங்க அடையாளம் அவன். பக்கிங்ஹாம் அரண்மனையின் ஆட்சிப் பிரதிநிதியாக இங்கு ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆளும் பணி முடித்துத் தன் தாயகம் மீண்டான். சிறிது காலம் சென்றது. பாராளு மன்றங்களின் அன்னையெனப் போற்றப்படும் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது விசாரணை விவாதம் தொடங்கியது. பின்னர் அது வாரன் ஹேஸ்டிங்ஸ் மீதான குற்றக் கண்டன நடவடிக்கையாக (Impeachment of Warren Hastings) முடிவுற்றது. எதிர்கட்சி உறுப்பினர்கள் வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது செய்த ஊழல் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினார்கள். இங்கிலாந்து நடாளுமன்றத்தில் இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸின் ஆதரவாளர்கள் சிலர்.

Kannaki “இந்தியாவில் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஊழல் செய்ததாக மக்களைத் துன்புறுத்திச் சுரண்டிக் கொள்ளையடித்தாகச் சொல்லுகிறீர்களே, வாரன் ஹேஸ்டிங்ஸைப் பற்றி இந்திய மக்கள் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? வாரன் ஹேஸ்டிங்ஸைத் தெய்வம் என்று போற்றுகிறார்கள்” என்று எதிர் மறுத்தார்கள். உடனே அங்கிருந்த ஆங்கில நாவலன், எட்மண்ட் பர்க் (Edumund Burke) எழுந்து

“இந்திய மக்கள் வாரன் ஹேஸ்டிங்ஸைத் தெய்வம் என்று சொல்லியிருக்கலாம். இந்தியர்கள் அம்மை போன்ற உயிர்க்கொல்லி நோய்களைக் கூடத் தெய்வம் என்றுதான் கூறுகிறார்கள்”

என்று அடித்த அடியில் நாடாளுமன்றமே நாவடங்கிப் போயிற்று. அந்தச் சப்தச் சவுக்கில் எடுப்பாய் இருந்தது எள்ளல் என்றாலும், அடிப்படையில் ஓர் உண்மை இரத்தப் பிசிறலாய்த் தெறித்துள்ளது.

மற்ற நாட்டவர்கள் நோய் என்றதைத் தமிழர்கள் மட்டும் தாய் என்றது ஏன்? Small pox, Big pox, Chicken pox என்று ஆங்கிலேயர்கள் அழைக்க நம்மவர்கள் அம்மை, பெரியம்மை, சின்னம்மை என்றழைப்பதும், அம்மை விளையாடியுள்ளது, அம்மா வந்தள்ளார் என்று மக்கள் பேச்சு வழக்கில் குறிப்பதும் சிந்திக்கத் தக்கது. அந்த நோயை ‘அம்மை’ என்றது அம்மைக் கொப்புளத்திற் குள்ளே கோர்த்துக் கொண்டிருக்கும் திரவமே அந்த நோய்க்கு மருந்தாவதை உள்ளடக்கியே. ஆம் அந்தத் திரவத்தை ‘அம்மைப்பால்’ என்றே அழைப்பது வழக்கம்’ அம்மைப் ‘பாலு’ட்டி நோய் தீர்ப்பதால், நோயைத் தாய் என்றார்கள் தமிழர்கள் அம்மா என்று சுட்டினார்கள்.

அம்மாவின் கோபம் (நோய்) தணிக்க வேப்பிலையை வீட்டு வாசலில் காப்பாகக் கட்டுவார்கள். அம்மை நோயாளியின் படுக்கையில் வேப்பிலையை பரத்துவார்கள். வேப்பங் கொழுந்தினை அரைத்து உட்கொள்ளக் கொடுப்பார்கள். இதன் பின்னணியில் ஒரு காப்பிய வரலாறு இருக்கிறது. மாரியம்மன் வழிபாடு என்பது கண்ணகியின் வரலாற்றோடு தொடர்புடையது.

கூடல் மாநகரில் கோவலனைக் கள்வன் எனப் பொற்கொல்லன் குற்றம் சாட்ட, பாண்டியன் நெடுஞ்செழியன், கள்வனைக் கொன்று சிலம்பினைக் கொணர்க என ஆணையிட்ட போது, இளங்கோவடிகள்

“வினை விளை காலம் ஆதலின்
சினைஅலர் வேம்பன் தேரானாகி”

என்கிறார். பாண்டியனுக்கு வேம்பம் பூமாலை உரியது என்பதால் பாண்டியனை வேம்பன் என்றே அடிகள் குறிப்பிடுகின்றார். கண்ணகி மதுரையை எரியூட்டிச் சென்ற பிறகு, பாண்டியநாடு பன்னிரண்டு ஆண்டுகள் மழைவளம் அற்றுப் பஞ்சத்தில் வாடியது. அப்போது வெப்பு நோயான அம்மை கொத்துக் கொத்தாக மக்கள் உயிரைப் பறித்தது. இந்தக் கொடுமைகள் நீங்கக் கண்ணகியாம் பத்தினித் தெய்வத்திற்கு பூசைகள் நிகழ்த்தினான் பாண்டியன் நெடுஞ்செழியனின் வழித்தோன்றலான வெற்றிவேற் செழியன். அதன் பின்னர் வான்மழை பெய்ய வளங்கொழித்தது. மாரி பெய்து, அம்மை நோய் நீங்கக் காரணமானான் வேம்பன். கண்ணகியே மாரியம்மன் ஆனாள். அம்மை நோய் தீர அம்மையே காரணம் ஆனாள். துணையாக வேம்பு வேந்து நின்றது. இது மட்டுமல்ல. அம்மை நோய் வந்து, குணம் அடையும் நிகழ்வில், மதுரையில் பாண்டியன் முன் கண்ணகி உரைத்த வழக்குரை காதையே இன்றும் காணலாகும் இலக்கிய மெய்மை.

வழக்குரையின் சாரம் என்ன? காவலன் தேவியின் காற்சிலம்பின் உள்ளீட்டுப் பரல் முத்தாகும். கோவலன் தேவியின் சிலம்பின் உள்ளே இருந்தது மாணிக்கப்பரல். கோப்பெருந்தேவியின் சிலம்பில் உள்ளே முத்துப் பரல் இருப்பதாகச் சொன்ன பாண்டியனிடம், தன் காற்சிலம்பில் இருப்பவை மாணிக்கப் பரல்கள் எனச் சொல்லி, கண்ணகி சிலம்பினை உடைக்க, மாணிக்கப் பரல், வாயால் தவறிய, வாய்மை தவறிய, பாண்டியனின் வாய்முதல் தெறித்தது. அம்மை நோய் கொப்புளம் கொப்புளமாய் ஆரம்பத்தில் உடம்பெல்லாம் முத்துக்கள் போடும். அம்மை இறங்கும் நேரம் முத்துக்காளாகத் தோற்றம் தந்தவை வாடி, நீல நிறம் கொண்டு மாணிக்கம் போல் தோன்றி, நாளடைவில் மறையும். முத்தல்ல, மாணிக்கமே என்று வழக்குரைத்துச் சிலம்பின் வென்ற சேயிழையாம் கண்ணகி ‘அம்மை’ வரலாறு நோயில் தென்படுகிறது. அது தமிழர்கள் வாழ்வில் இன்றும் இடம் பெறுகிறது. அம்மை விளையாட்டின் அழகிய அதிசயம் இது.

சேரநாடு அடைந்து கண்ணகி மேற்கு மலையின் உச்சியிலிருந்து தெய்வமாக விண்ணுக்குச் சென்ற வியத்தகு காட்சியைக் குன்றக் குரவர்கள் காண்கிறார்கள். அப்போது வேட்டைக்கு வந்திருந்த சேரன் செங்குட்டுவனுக்கு இந்தச் செய்தியை அறிவிக்கிறார்கள். அருகிருந்த புலவர் சீத்தலைச் சாத்தனார் வழியாக கண்ணகி, கோப்பெருந்தேவி வரலாற்றை அறிந்த சேரன் செங்குட்டுவன் பத்தினியர் இருவரில் ஒருவருக்குச் சிலையெடுத்துக் கோட்டம் அமைக்க விரும்புகிறான். தன் மனைவி வேண்மாளை அழைத்து

“உயிருடன் சென்ற ஒருமகள் தன்னிலும்
செயிருடன் வந்தஇச் சேயிழை தன்னிலும்
நன்னுதல் நீவியக்கும் நலத்தோர் யார்?”

எனக் கேட்கிறான். கணவன் மறைய, தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினள் போல், ஒருங்குடன் மாய்ந்த கோப்பெருந்தேவி மேலுலகில் சிறப்பினை உறுதியாக அடைவாள். கண்ணகி என்ற

“நம் அசல்நாடு அடைந்த, பத்தினிக் கடவுளை பரசல் வேண்டும்” என்கிறாள் வேண்மாள். கண்ணகிக்குச் சிலையெடுக்கக் கல்லுக்காகவும், தமிழைப் பழித்த கனக விசய வடவாரியர் சொல்லுக்காகவும் இமயம் நோக்கிப் படையெடுத்தான் சேரன் செங்குட்டுவன். மலைநாட்டுத் தலைவன் சேரன். காணுமிடமெல்லாம் கல்லிருக்க இமயத்திற்கு ஏன் செல்ல வேண்டும். அருகே இருக்கும் பாண்டிநாட்டில் ஆனைமலை, குதிரை மலை, பழனிமலை, திருவண்ணாமலை இருக்க, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் சொந்தக்காரன் கல்தேடி இமயத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? அந்தக் கல் எல்லாம் ‘லோக்கல்’ என்றா? இல்லை.

தமிழுணர்வாளன் சேரன், தமிழைப் பழித்தவர்களைப் போரில் வென்று, பழி துடைக்கப் படையெடுத்தான். கண்ணகிச் சிலை கல்லையும் இமயத்தில் எடுத்தற்கான காரணமும் தமிழுணர்வுதான். அவன் தம்பி இளங்கோவோ, விண்ணிலிருந்து தெய்வம், மனிதனாக மண்ணில் இறக்கம் கண்ட காவியங்கட்கு மாற்றாக, தமிழ் மண்ணைச் சார்ந்த பெண் ஒருத்தி விண்ணை நோக்கித் தெய்வமாக ஏற்றம் கண்டதைக் கண்ணகி வரலாற்றின் வயிலாகச் சொற்கோட்டமாக எழுப்பினான். அண்ணன் சேரன் செங்குட்டுவன் கற்கோட்டம் எழுப்பி, இளையவனுக்கு இளைத்தவனில்லை தான் என்பதைப் புலபபடுத்தியுள்ளான்.

கங்கை உற்பத்தியாகும் இமயத்தின் கல், காலந்தோறும் கங்கை நதியால் கழுவப் பெற்றிருக்கும், புனித கங்கை பாய்ந்த இமயக்கல் தான் கண்ணகி சிலைக்கு ஏற்றது. இருந்தாலும் சேரன் சிந்தித்தது வேறு மாதிரி, பாவங்கள் தீர்க்க மனிதர்கள் புனித கங்கையில் மூழ்குவார்கள். அப்படி மூழ்கியோர் பாவங்களால் களங்கப்பட்ட கங்கை விழுந்த கல், தமிழ் மங்கையின் உருவந்தாங்கி தன்னைத்தான் கழுவி புனிதப்படட்டுமே என்று கருதியிருக்க வேண்டும். முன்னாள் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜெகஜீவன்ராம் திறந்தார் என்பதால் தீட்டுப்பட்டதென தெய்வச் சிலையைக் கங்கை நீர் ஊற்றிக் கழுவியதை அறிவோம். ஆனால் கங்கையைக் கழுவிய தமிழ் மங்கையை உலகறியச் செய்திருக்கிறோமா? புனித மலை இமயமலை. அதன் கல் புண்ணியமானது. அது கண்ணகி சிலையானதால் கண்ணியமானது. கண்ணகி சிலையைக் கரடி பொம்மையெனக் கற்பனை செய்வோர், கனகவிசயர்கள் வால்வழியோ? யாமறியோம் பராபரமே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com