கேள்வி - பணம் - லஞ்சம்
வெள்ளை நாடாளுமன்றத்தை உலுக்கியெடுத்த கறுப்பு வார்த்தைகள்
- ராஜசேகரன்

“விபச்சாரம் என்பது
ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தை மட்டுமே பாதிக்கும்;
லஞ்சமும் ஊழலும்
ஒரு தேசத்தின் ஒழுக்கத்தை ஒட்டுமொத்தமாக விலைபேசும்”. - கார்ல் மார்க்ஸ்
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இந்தளவிற்கு அனல் காய்ச்சலை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாக, ‘துரியோதனர்கள்’ அகப்பட்டுள்ளார்கள். (‘துரியோதனர்கள் அம்பல நடவடிக்கையாகவும், துரியோதன சக்கர வியூகமாகவும்’ இதை அறிவித்துள்ளது இதை வெளிக்கொண்டு வந்துள்ள சோப்ரா டாட்காம்) ‘சோப்ரா போஸ்ட் டாட் காம்’ என்னும் இணையதளத்தைச் சேர்ந்த ஆசிரியர் அனிருத்த பெஹல், நிருபர்கள் குமார் பாதல், சுஹாசினி ராஜினின் ரகசிய கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டு ‘ஆஜ்தக் சேனலால்’ அடையாளம் காட்டப்பட்ட இவ்விஷயம் கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.
‘சிபாரிசு செய்து அரசு வேலை வாங்கித் தருபவர்கள்; அரசுத்துறையில் டெண்டர் விடும்போது சாதகம் பார்ப்பவர்கள்; அரசாங்கப் பணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மற்றவர்களை மிரட்டுபவர்கள்’ என்று மட்டுமே அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்திருந்த பொதுமக்களுக்கு அவர்களின் இன்னொரு முகம் தெரிந்திருக்கிறது.
சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி நாடாளுமன்ற அவைக்குள் கேள்வி கேட்பதற்கும், தொகுதி மேம்பாட்டு நிதியாக தரப்படுகிற தொகையை நலத்திட்டங்களுக்கு ஒதுக்குவதற்கும் பணம் கேட்டு ‘அல்பத்தனமாக’ நடந்து கொண்டிருக்கின்றனர் நமது மாண்புமிகு நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் 18 பேர். பாவம் என்ன செய்வார்கள்? வீட்டில் உப்பு, புளி, அரிசி, மிளகாய் இல்லை. இதை வாங்கிக் கொண்டு போய் வீட்டம்மாவிடம் கொடுக்காவிட்டால் அன்றைய இரவு அவர்கள் வீட்டு உலை கொதிக்காதல்லவா?
லஞ்சம் பெறுவதை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் இப்படியும் செய்வார்களா? என்றே வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர். நாடாளுமன்றமும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யான பவன்குமார் பன்சால் தலைமையிலான 5பேர் கொண்ட எம்.பி.க்கள் குழுவை உடனடியாக நியமித்தார் சபாநாயகர் சோம் நாத் சாட்டர்ஜி. அக்குழுவும் ஏறக்குறைய 8முறை கூடி விவாதித்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்களை விசாரித்து 38 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை சபாநாயகரிடம் அளித்தது.
விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் சாராம்சம் இதுதான். “10 எம்.பி.க்களும் கேள்வி கேட்கப் பணம் வாங்கியிருப்பது நிரூபண மாகியுள்ளது. அச்சம்பவம் தொடர்பான வீடியோ படம் முழுவதையும் குழு ஆராய்ந்தது. அதன் நம்பகத் தன்மையில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட எம்.பி.க்களை பதவி நீக்கம் செய்யுமாறு இக்குழு பரிந்துரை செய்கிறது”.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பரிந்துரையின் மீதான விவாதத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் பங்கேற்கின்றன. விவாதிக்கின்றன. சம்பந்தப்பட்ட எல்லா அரசியல் கட்சிகளும் பதவி நீக்கலை ஏற்றுக் கொள்வதாக தலைகுனிந்து மௌனம் சாதிக்கின்றன. நடந்து விட்ட களங்கத்திற்காக வெட்கித்தலை குனிகின்றன. ஆனால் ஒரே ஒரு கட்சி மட்டும் ‘பதவி நீக்கலை’ எதிர்த்துக் குரல் கொடுக்கிறது. வெளிநடப்புச் செய்கிறது. ‘எல்லா வகையிலும் முற்போக்காக இருப்பதாக’ தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ஜ.க. தான் அது. அதன் உறுப்பினர்கள் தான் இந்த ஊழலில் அதிகம் சிக்கியிருக்கின்றனர் (6 பேர்) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
லஞ்சப் புகாரில் சிக்கிய 11 எம்.பி.க்களை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் வேளையில், தொகுதி மேம்பாட்டு நிதியை குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஒதுக்குவதற்காக லஞ்சம் கேட்ட எம்.பி.க்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பது குறித்தும், தொகுதி மேம்பாட்டு நிதியை தொடரலாமா, நிறுத்தலாமா என்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்வது குறித்து இந்திரஜித் குப்தா கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது, இது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து தேர்தல் ஆணையம் தமது கருத்தைத் தெரிவிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதை எல்லா அரசியல் கட்சிகளும் வேகமாக தலையை ஆட்டி சம்மதம் தெரிவிக்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால் தொகுதி மேம்பாட்டு நிதியோடு சேர்த்து தேர்தல் செலவும் அரசே செய்து தருகிறது என்பது அதற்கு காரணமாக அமையலாம்.
ஆனால் இதில் இந்திரஜித் குப்தா கமிஷன் பரிந்துரையான ‘தேர்தல் செலவுக்கு பணம் தருவதற்குப் பதிலாக பொருட்களாக வழங்கலாம்’ என்பதை அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாது என்றே தெரிகிறது. இவ்வளவு நிகழ்ந்த பிறகும், இங்கு எவரும் தொகுதி மேம்பாட்டு நிதியை நிரந்தரமாக நிறுத்துவது சம்பந்தமாக வாயைத் திறக்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
“உலகிலேயே ஜனநாயக ஆட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் நமது நாட்டில் உள்ளதைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து அவரவர் விருப்பப்படி செலவு செய்யச் சொல்கிற அமைப்பு எங்கும் இல்லை. எந்த நாடும் இந்த மாதிரியான முறையை ஊக்குவிக்கவும் இல்லை. கொடுத்த நிதி சரியாகப் போய்ச் சேருகிறதா என்று பார்ப்பவர்களே தொகுதி நிதி அது இதுவென்று செலவழிக்க ஆரம்பித்தால் அவர்களை யார் கண்காணிப்பது? யார் கட்டுப்படுத்துவது? என்கிறார் சிறந்த பாராளுமன்றவாதியாக 22 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிற இரா.செழியன்.
1993ல் நரசிம்மராவ் பிரதமராக ஆட்சியிலிருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் வழியே இன்றுவரை சுமார் 16,000 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சேர்த்து மொத்தம் 790 பேர்களுக்கு தொகுதி நிநியை ஒதுக்கும் போது ஆண்டுக்கு 1,850 கோடி ரூபாய் செலவாகிறது.. இவ்வளவு ஆயிரம் கோடி ரூபாய் 12 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டும் இதற்கு முறையாக கணக்குகள் எதுவும் கிடையாது.
தொகுதியைப் பொறுத்தவரை பொது மக்களுக்குத் தேவையான பள்ளிக் கட்டிடங்களைக் கட்டுவது, குடிநீர்த் திட்டங்கள், சாலை மேம்பாடு, முதியோர் இல்லங்கள், சிறுபால வசதிகள், கிராமப் பஞ்சாயத்துக்கான கட்டிடங்கள் என்று 22 வகையான திட்டங்களுக்கு தொகுதி மேம்பாடு நிதியை ஒரு எம்.பி. செலவழிக்கலாம் என்று சொல்கிறது 1994ல் உருவாக்கப்பட்ட விதிமுறை. அது மாதிரியே அந்த நிதியை எதற்கெல்லாம் செலவழிக்கக் கூடாது என்பதும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. மதம், சாதி சம்பந்தப்பட்ட எந்தப் பணிக்கும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நெறிமுறைகள் வலியுறுத்தினாலும் இந்திய முழுமைக்கும் 66 இடங்களில் 58 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்குகிற போது உருவாக்கப்பட்ட விதிமுறைகளில் காண்ட்ராக்டர்கள் மூலம் இந்த வேலையைச் செய்யக் கூடாது என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும் இது பல மாநிலங்களில் மீறப்பட்டிருக்கிறது.
நமது எம்.பி.க்களுக்கான சலுகைகள்
1. நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதச் சம்பளம் ரூ.25,000 அலவன்ஸ் உட்பட.
2. மாதம் ஒன்றுக்கு தொகுதிக்கான செலவு ரூ.10,000.
3. அலுவலகச் செலவு மாதமொன்றுக்கு ரூ.14,000.
4. தொகுதியில் இருந்து டில்லிக்குச் சென்று திரும்ப பயணச் சலுகை கி.மீ.க்கு ரூ.8 வீதம் 6000 கி.மீ.க்கு ரூ.48,000.
5. நாடாளுமன்றம் நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாட்களுக்கும் பேட்டாச் செலவு ரூ.500. இந்தியா முழுக்கப் பயணம் செய்ய முதல் வகுப்பு ஏ.சி. ரயில் கட்டணம் இலவசம்.
6. ஒரு வருடத்திற்கு, மனைவியுடனோ அல்லது உதவியாளருடனோவிமானத்தில் 40 தடவை இலவசமாகப் பயணம் செய்யலாம்.
7. நாடாளுமன்ற உறுப்பினர் விடுதியில் இலவசமாகத் தங்கலாம்.
8. வீட்டில் கரண்ட் பில் 50,000 யூனிட் வரை கட்டத் தேவையில்லை.
9. உள்ளூர் தொலைபேசி அழைப்புகளுக்க 1லட்சத்து 70ஆயிரம் அழைப்புகள் வரை கட்டணம் இலவசம்.
10. ஓர் ஆண்டு ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குச் செலவு ரூ.32 லட்சம்.
11. ஐந்தாண்டுக்கான செலவோ ரூ.1 கோடியே 60 லட்சம்.
12. நமது இந்தியப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 534 பேருக்கு ஆண்டொன்றுக்குச் செலவு சுமார் ரூ.855 கோடி.
|
2000 வரை தொகுதி மேம்பாட்டு நிதியில் 854 கோடி ரூபாய் வரை செலவழிக்கப் பட்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களே தவிர அவற்றிற்கு முறையாக கணக்குகள் இல்லை. 2000 வரை செலவு செய்யப்படாமல் மிஞ்சியிருந்த 1797 கோடி ரூபாய் பணம் மத்திய அரசுக்குத் திருப்பித் தரப்படவில்லை. அந்தப் பணம் எங்கே போனது? என்றே தெரியவில்லை” என்கிறார் முன்னாள் எம்.பி. இரா.செழியன்.
நாடாளுமன்றத்தின் மிக முக்கிய அம்சமான கேள்வி கேட்டலையும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்தியுள்ளது சமூகவியலாளர்களை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
“நாட்டில் உள்ள 612 கட்சிகளில் பெரும்பாலானவை தனியார் கம்பெனிகளைப் போலவே செயல்படுகின்றன. சுதந்திரம் பெற்றவுடன் வயது வந்த அனைவருக்கும் அரசியல் உரிமையைக் கொடுத்தோம். ஆனால் அரசியல் அறிவைக் கொடுக்கத் தவறி விட்டோம். அறியாமை தான் தனிநபர் துதிபாடும் இக்கட்சிகளின் பெரும் மூலதனம்” என்கிறார் புதுவைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் பொ.லாசரஸ் சாம்ராஜ்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களைத் தண்டிக்க சட்டத்தில் வழிவகை செய்யப் படவில்லை என்பதும் இங்கு குற்றச்சாட்டாக எழுந்திருக்கிறது. இந்த நேரத்தில் அவையிலிருந்து நீக்கப்பட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள் 6பேரும் நீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்துள்ளனர். இது சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.
“மக்களால் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை 5 ஆண்டுகளுக்கு ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையை மாற்ற வேண்டும். நாடாளுமன்ற அவைக்குள் நடக்கும் விவகாரங்கள் தவிர, அவைக்கு வெளியே தங்களது நாடாளுமன்றப் பணிக்காகப் பணம் பெறுவது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் எம்.பிக்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வசதி செய்யும் வகையில், வேண்டிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்” என்கிறார் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான பீட்டர் அல்போன்ஸ்.
நாடாளுமன்ற முறைகேடு என்பது இப்பொழுதுதான் இந்தளவிற்கு வெளிச்சமாகத் தெரிகிறது. இது குறித்த குற்றச்சாட்டுகள் இதற்கு முன்பு எழுந்த போதும் இந்தளவிற்கு இல்லை என்றே இதுவரை மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் “இப்போது சிக்கியவர்கள் எல்லாம் சிறிய மீன்கள் தான்; மாபெரும் சுறாக்களை எல்லாம் யாரும் நெருங்கக் கூட இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேள்வி கேட்கப் பணம் வாங்கிய விவகாரம் என்பது வெளியே தெரியும் ஒரு சிறுமுனை போன்றது தான். மலையளவு விவகாரங்கள் மறைந்து கிடக்கின்றன” என்கிறார் இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த பத்திரிகையாளர் நீரஜா சௌத்ரி.
“இத்தகைய ஊழல்களுக்கு வழிவகை செய்யக் கூடிய எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்த வேண்டும். அந்த நிதியைப் பற்றாக்குறையால் தவிக்கிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசால் நேரடியாக வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சியின் அதிகாரங்களை அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார் இரா. செழியன்.
நீண்ட நெடுங்காலமாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்திய தேசத்தின் வரலாற்றில் அழித்தொழிக்க முடியாத கரும்புள்ளி விழுந்து விட்டிருக்கிறது. 1992ல் நாடாளுமன்றத்தில் நரசிம்மராவால் இத்திட்டம் அறிவிக்கப் பட்டபோது, தற்போதைய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும் மற்ற இடதுசாரிக் கட்சியினரும் நிதி ஒதுக்கீட்டின் அபாயத்தைப் பற்றியும், பஞ்சாயத்துக்களின் அதிகாரத்தில் எம்.பி.க்கள் தலையீடு அதிகரிப்பதில் உள்ள ஜனநாயகக் குறைபாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால் அத்தகைய தருணத்தில் இதே காங்கிரஸ் அரசு அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. திட்டங்களை அறிவிக்கும் போது இடதுசாரிகள் போன்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் ஆளும் அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தற்போது எல்லோராலும் முன்வைக்கப்படும் கருத்தாக எழுந்திருக்கிறது.
கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களை அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்துவதிலிருந்து தடை செய்வதும், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்குவதும், மாநிலங்களவையில் புரஃபஷனல்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு இடம் ஒதுக்குவதும், எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தேவையெனில் திரும்ப அழைத்துக் கொள்ள சட்டமியற்றுவதும் தற்போதைய கட்டாயத் தேவையாக உள்ளது. மத்திய தேர்தல் ஆணையமும் இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|