கனவு மெய்ப்பட வேண்டும்
அஞ்சல் அட்டைக்குள் ஒரு அதிசய உலகம்
- ராஜசேகரன்
‘அணு’ இதழை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதும் மூலிகைகளை வைத்து காலத்தால் அழியாத ஓவியங்களைப் படைப்பதுமே தமது கனவும் லட்சியமும் என தீர ஆவலோடு பேசுகிறார் முத்துக்கிருஷ்ணன்.
‘சாதனை’ இந்த ஒரு வார்த்தைக்குள் தான் எவ்வளவு பெரிய கனவு இருக்கிறது. இதுதான் மனிதனை தொடர்ந்து இயங்கச் செய்கிறது. தினந்தோறும் புது வலுவை, விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, வெற்றியை நோக்கிய இடைவிடாத பயணத்தை இதுதான் மேற்கொள்ள வைக்கிறது. இத்தகைய உயிர்த் துடிப்புள்ள ஒற்றை வார்த்தை தான் இளைஞர் ஒருவரை சாதிக்க வைத்துள்ளது.
வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்டமான சிவகங்கையைச் சார்ந்தவர்தான் அத்தகைய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ‘அணுவைத் துளைத் தெழு கடலைப் புகட்டி’ எனும் வாசகத்தைக் கொண்ட அவரது ‘அணு’ குட்டி தபால்கார்டு இதழ் தற்போது லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
என்.முத்துக்கிருஷ்ணன் எனும் ஓவியர் தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர். ஒரு சுறுசுறுப்பான தேனீயைப் போல் இயங்கிக் கொண்டிருக்கிறார் இந்த 48 வயது இளைஞர்.
“அறிவியல் தொடர்பான பத்திரிகை நடத்திட சிறு வயதிலிருந்தே எனக்கு ஆசை. அதுவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். பத்திரிகை வாசகர்கள் திறமையானவர்கள்; நாம் கோடு போட்டால் அவர்கள் ரோடே போட்டு விடுவார்கள் என்று அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தேன். அத்தகைய நேரத்தில் தான் எனது தாத்தாவின் தபால் கார்டுகள் என் கண்ணில் பட்டன. அதில் ஆறுமாதச் செய்திகள் அரை பக்கத்தில் இருக்கும். வியந்தேன். தபால் கார்டிலேயே இதழ் நடத்தலாம் எனத் தீர்மானித்து 1991ல் ‘அணு’ இதழைத் துவங்கினேன்.
செய்தி, படங்கள், வாசகர் கடிதம், போட்டி, போட்டிக்கான விடை, கவிதை, துளிக்கதை, விளம்பரம், சிரிப்பு என அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி இந்த இதழ்வெளியிடப்படுகிறது. அணு இதழை கையில் வாங்கியதும் படித்து விடலாம். பிறகு படிப்போம் என்று காலந்தள்ள இதில் வேலையில்லை” என்று பெருமை பொங்கச் சொல்கிறார் என். முத்துக்கிருஷ்ணன்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வித்தியாசத்துடன் பத்திரிகை வெளியிடுகிறார். இடையிடையே தபால்கார்டில் 101 செய்திகளை உள்ளடக்கியும் வெளியீடுகள் வருகின்றன. (இதை லென்ஸ் வைத்துதான் படிக்க முடியும். அதற்காக லென்ஸ் ஒன்றையும் இலவசமாகக் கொடுக்கிறார்)
சிவகங்கை மாவட்ட ஓவிய சங்கத் தலைவராக இருக்கும் முத்துக்கிருஷ்ணன் இதுவரை 5 ஓவியக் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். 2003ல் மத்திய அரசின் ‘கலைச் சுடர்மணி’ விருது, 2005ல் தமிழக அரசின் ‘அருங்கலைச் செம்மல்’ விருது, 1992ல் லிம்கா சாதனை விருது என விருதுகளை அள்ளிக் குவிக்கும் இந்த சிவகங்கைக்காரர் தற்போது ½* 1/2 வடிவில் ‘அணு’ இதழுடன் இலவச இணைப்பாக 1330 குறளை உள்ளடக்கிய காலண்டரை வடிவமைத்து உலக கின்னஸ் சாதனை விருதுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் கைக்குட்டையில் 2006ஆம் ஆண்டு காலண்டரை வடிவமைத்தும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த இதழ் சிவகங்கை மட்டுமின்றி மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கனடா ஆகிய நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. சீனாவின் பெய்ஜிங் நகர வானொலி வாரந்தோறும் வெள்ளிக் கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பும் தமிழ் செய்திகளில் மாதம் ஒருமுறை முத்துக்கிருஷ்ணனின் தபால் கார்டில் வெளியாகும் செய்திகள் படிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘அணு’ இதழை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதும் மூலிகைகளை வைத்து காலத்தால் அழியாத ஓவியங்களைப் படைப்பதுமே தமது கனவும் லட்சியமும் என தீர ஆவலோடு பேசுகிறார் முத்துக்கிருஷ்ணன். அவரது கனவு நனவாக வேண்டும் என்று வாழ்த்துச் சொல்லி பயணிக்கிறது புதியகாற்று.
தகவல் உதவி : பிரியா
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|