Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
ISO - தரக்கட்டுப்பாடும் தாராளமயமும்
- ஆர். பிரேம்குமார்.

“ஐப்பசி மாதம் அழகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை என்று பெரியோர்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கு. மழை கலக்கு கலக்குன்னுல்ல கலக்கிட்டுது. . .”

மோட்டார் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த கேசவனின் பேச்சைக் கேட்டதும் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த தாணப்பனுக்கு எரிச்சல் வந்தது.

“ரோடு கிடக்கிற கிடப்பில சந்திர மண்டலத்தில தள்ளு வண்டி போற கணக்கில நான் ஓட்டிக்கிட்டிருக்கேன். . . நீ என்னடான்னா மழை பெஞ்சது பற்றி பினாத்திக்கிட்டு இருக்கே. . . வேறெந்த நாட்டிலயாவது இப்படி கிழிஞ்சு போன நாரு மாதிரி ரோடு கிடக்குமா. . . வண்டி ஓடற பாதைன்னா ஒரு குவாலிட்டி வேண்டாமா?”

“ஒரு சாண் காட்டில முழத்தடி வெட்டுற கதை பேசாதே. . .! இப்பதான் இந்தியா முன்னேறிக்கிட்டு வருதில்லே. . .1”

“என்ன, கிழக்கிலே இருந்து மேற்கு நோக்கியா முன்னேறுது? எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலயிருந்து இந்தச் சாலைகள் எல்லாம் இப்படி மழை பெஞ்ச மறுநாளே தலைவிரிக் கோலமாய் மாறிடுது. . . சின்னச் சின்ன குண்டு குழியெல்லாம் அவ்வப்போது சரி பண்ணுற மாதிரி சாலைப் பணியாளர்கள் இருந்தாத்தான் சரியாவும். . . இல்லேன்னா, இப்டி ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீர் போட்டு ஒன்பது பேர் கூடி இழுப்பது போலத்தான் இருக்கும். . .!”

“தாணப்பா. . . சாலைப் போக்குவரத்து எல்லாம் உலகத் தரத்துக்கு மாறப்போவுது. . . நீ வேணும்னா பாத்துக்கிட்டே இரு! சொன்னா நம்ப மாட்டே. . . நம்ம ஊரில போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட ‘டோட்டல் குவாலிட்டி மேனேஜ்மெண்ட்’ (TOTAL QUALITY MANAGEMENT) பற்றி வழிப்புணர்வு வந்திருக்குதுன்னா பாத்துக்க. . .!”

“என்ன ஐ.எஸ்.ஓ. (I.S.O) சான்றிதழ் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக் கைதியை எப்படி எல்லாம் அடிச்சு நொறுக்கணும். . .? யார் யார் வழக்கை எல்லாம் விசாரிக்காம கிடப்பில் போடணும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்குமோ?”

“‘கந்தகப் பொடி கடைக்காரனுக்கு கடுகு வாசனை தெரியுமா? சரி. . . சொல்றேன்; கேட்டுக்க புகார் மனுவைக் கையாளுவது - காவலர்களுக்கு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு கொடுப்பது -அவசரமான சூழ்நிலையில் பதட்டமில்லாம செயல்படுறது-மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் செவிமடுத்துக் கவனிப்பது - பிரச்சனைகளை இடைவெளியில் விட்டுவிடாமல் கடைசி வரைச் சென்று முடிப்பது. . . இப்படி நிறைய விஷயங்களைப் பதிவு செய்து வைக்கணும். அதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான் சான்றிதழ் கொடுப்பாங்க. . .”

வண்டி ஓட்டிக் கொண்டிருந்த தாணப்பன் வயிறு குலுங்கச் சிரித்ததில் வண்டியே அல்லாடியது. அவனே பேசினான்:

“கருடன் காலில் சலங்கை கட்டின கதையாயில்ல இருக்கு. . . அப்படி ஏதாவது போலீஸ் ஸ்டேஷனுக்கு ஐ.எஸ்.ஓ. கிடைச்சிருக்கா?”

“நாட்டில உள்ள சுமார் 650 மாவட்டக் காவல் அலுவலகங்களில் (S.P.OFFICE) ஐ.எஸ்.ஓ. 9001 : 2000 தரச் சான்றிதழ் பெற்றிருக்கிற முதல் அலுவலகம் நம்ம தூத்துக்குடி மாவட்டக் காவல் அலுவலகம் தான்னு நாம பெருமையாகச் சொல்லிக்கலாம். . .!”

“பெருமை அடிக்கிறது இருக்கட்டும். . . கரணம் தப்பினால் மரணம் என்கிறது மாதிரி வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். வண்டியை நிறுத்தி ஓரமா உட்காந்து கொஞ்சம் பேசலாம். . . இப்படியே பேசிக்கிட்டு போன களியங்காட்டு நீலிக்கிட்டதான் மாட்ட வேண்டி இருக்கும். . .!”

“என்ன தாணப்பா, சம்பந்தமே இல்லாம களியங்காட்டு நீலியை இழுக்கிறே. . . பழைய காலத்தில மாட்டு வண்டியில போறவங்களை வழி மறிச்சு நீலி சுண்ணாம்பு கேட்பாளாம்; வசமா மாட்டிக்கிற வங்களைக் கொன்னு போடுவாளாம். இப்பதான்தேசிய நெடுஞ்சாலை வந்த பிறகு ஏது நீலி?”

“அதான் கேசவா நெடுஞ்சாலையில் 100 அடிக்கு ஒரு தெருவிளக்கு இருக்கோ இல்லையோ- ஆஸ்பத்திரின்னு ஒரு காங்கிரீட் கிங்காங்கை எழுப்பி விட்டிருக்காங்களே. . . அதிலயும் குறிப்பா எலும்பு முறிவு சிகிச்சை ஆஸ்பத்திரிகள் களியங்காட்டு நீலியை விடப் பயங்கரம். . . எப்படா எவண்டா சாலையில் விழுந்து நொறுங்குவான் என்று பார்த்துக் கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது. . . அதிலயும் ஐ.எஸ்.ஓ. சர்ட்டிபிகேட் வாங்கின ஆஸ்பத்திரின்னு பேரு வேற பெருசா போட்டிடறாங்க. . . தமிழகத்தில் முதன் முதலாக / அல்லது தென் தமிழ்நாட்டில் முதன்முதலாக / அல்லது, ஒண்ணுமில்லேன்னா இந்த தேசிய நெடுஞ்சாலையில் எட்டு கிலோ மீட்டர்களுக்குள் முதன் முதலாக ஐ.எஸ்.ஓ. பெற்ற ஸ்தாபனம் என்று விளம்பரம் செய்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். . . கொஞ்சம் புரியிற மாதிரி இந்த ஐ.எஸ்.ஓ. சமாச்சாரத்தைச் சொல்ல முடியுமா கேசவா. . .?”

இரண்டு பேரும் ஒரு மரநிழலில் உட்கார்ந்து கொண்டனர். கேசவனுக்குப் பேச வாய்ப்பு கிடைத்ததால் வாய் அகப்பை போல் திறந்தது. இனி மூடுமா என்பது சந்தேகம்தான்.

“தாணப்பா, ‘அக்கரைப் பாகலுக்கு இக்கரை கொழுகொம்பு’ என்கிறது மாதிரிதான் இந்த ஐ.எஸ்.ஓ. சர்ட்டிபிகேட் பற்றின விஷயமும். ஐ.எஸ்.ஓ. 9000க்கு இணையான தரக் கட்டுப்பாடு முறைமை ஒன்றை இந்தியாவின் தரக் கட்டுப்பாட்டு நிறுவனமான ‘பிஸ்’ (Bureau of Indian standards) ஐ.எஸ் 14000 என்ற பெயரில் முன்னிறுத்தி இருக்கிறது. இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (Indian standards Institution) வழங்கி வந்த ஐ.எஸ்.ஐ. (I.S.O) முத்திரைக்கு தனி மதிப்பு உண்டு. இந்த நிறுவனம் மத்திய அரசின் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலன் பேணும் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனம் ஆகும். இதுதான் தன் பெயரைத் தற்போது ‘பிஸ்’ என்று மாற்றிக் கொண்டுள்ளது. 1987 ஏப்ரல் முதற்கொண்டு ‘பிஸ்’ செயல்பட ஆரம்பித்து இருக்கிறது.

‘பிஸ்’ தர முத்திரைச் சான்று பெறுவதன் மூலம் தயாரிப்பாளர்கள் தங்கள் பொருள் பற்றிய ஓர் உத்தரவாதத்தை நுகர்வோர்களுக்கு வழங்க முடியும். ‘பிஸ்’ சொல்லி இருக்கும் வரை முறைகளுக்கு ஏற்ப பொருள் தயாரிக்கப் பட்டிருந்தால் தரமுத்திரை பெறுவதில் சிரமம் ஏதும் இல்லை. நுகர்வோர் நலன் பேணும் பொருட்டு மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்களுக்கும், உணவுப் பொருட்களுக்கும் ‘பிஸ்’ முத்திரை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர், சிமெண்ட், எஃகு போன்றவற்றுக்கும் ஐ.எஸ்.ஐ. முத்திரை கட்டாயம் வேண்டும்.

பல்வேறு பொருட்களுக்கு என இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரமேம்பாட்டு அளவீடுகளை ‘பிஸ்’ நடைமுறைப் படுத்தி இருக்கிறது. 4:3 என்ற நீள உயர விகிதாச்சாரத்தில் அமைந்த கட்டத்தின் உள்தெரியும் ஐ.எஸ்.ஐ. முத்திரைக்கு ஒரு தனிகௌரவம் இருக்கிறது. ஐ.எஸ்.ஐ முத்திரை பெறும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறியீட்டு எண் உண்டு. பிரஷர் குக்கர்களுக்கு ஐ.எஸ்:2347; கேஸ் ஸ்டவ்களுக்கு ஐ.எஸ்: 4246 என்று இந்த அடையாள எண்கள் அமைந்திருக்கும்.

‘பிஸ்’ அனுமதி வழங்கி உள்ள நிறுவனங்களில் 70 சதவீதத்துக்கு மேல் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொருட்களின் தரத்தை தீர்மானிக்க ஐ.எஸ்.ஐ. இருக்கும்போது எதற்கு ஐ.எஸ்.ஓ?”

“1987ல் நாட்டிடைத் தரச்சான்று நிறுவனம் (INTERNATIONAL ORGANISATION FOR STANDARDS) வரையறுத்துக் கூறியதுதான் இந்த ஐ.எஸ்.ஓ. 9000.

1993 ஜனவரியிலிருந்து ஐரோப்பியச் சமுதாயத்துக்குள் ஏதாவது பொருளை விற்கக் கொண்டு சென்றால் அதற்கு ஐ.எஸ்.ஓ. 9000 தரச் சான்றிதழ் இருக்க வேண்டும் என்று சட்டமியற்றி இருக்கிறார்கள்.

“ ‘ஊரை உழக்கால் அளக்கிறான்; நாட்டை நாழியால் அளக்கிறான்’ கதையாயில்ல இருக்கு.!”

“நீ சொல்றது ஒரு விதத்தில் சரிதான் தாணப்பா. ஐ.எஸ்.ஓ. 9000 என்பது தர மேலாண்மை அமைப்பு (QUALITY MANAGEMENT) பற்றிய அடிப்படை கருதுகோள்களையும், அருஞ்சொற்களையும் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்ற நாட்டிடைத் தரம் பற்றியது ஆகும். ஐ.எஸ்.ஓ. 9000, தர நிர்ணயக் குடும்பத்தில் வழங்கப்படும் கருத்துக் களையும், மொழியையும் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது. அது 81 வரையறை களைக் கூறுகிறது.
ஐ.எஸ்.ஓ.9001 என்பது ஒரு நிறுவனம் தன்னுடைய வாடிகையாளர்களின் தேவை களையும் எதிர்பார்ப்பு களையும் தொடர்ந்து பூர்த்தி செய்வதற்கான தர மேலாண்மை முறைகளில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றிக் கூறுகிறது. ஐ.எஸ்.ஓ. 9001 பொருட்களின் தரத்தைப் பற்றியது அல்ல. அது நிறுவனங்களின் நடத்தையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவது பற்றியது.

ஐ.எஸ்.ஓ. 9004, மேலும் தரத்தை உயர்த்தி வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றிச் சொல்கிறது. ஐ.எஸ்.ஓ.9001யையும் தாண்டி, தரத்தில் முன்னேறி, தனித்துவம் மிக்கத் தர மேலாண்மை முறையை நிறுவ முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9004 பொருந்தும்.

“கேசவா. . . ‘ ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவிலுக்கு ஆண்டி’ போலல்ல இருக்கு... அப்ப என்ன மாதிரி ஆளெல்லாம் ஐ.எஸ்.ஓ. முத்திரையை விளம்பரத்தில போடுற கம்பெனி எல்லாம் சூப்பர் பொருட்களை உற்பத்தி செய்யுதுன்னு நினைச்சிட்டிருக்கேன். நீ என்னடான்னா சுற்றி வளைச்சு மூக்கைத் தொடுற மாதிரி, இந்த ஐ.எஸ்.ஓ. சமாச்சாரமே பொருட்களின் குவாலிட்டி பற்றினது இல்லை. பொருட்களை தயாரிக்கிற கம்பெனி அல்லது சேவைத் தொழில் (SERVICE INDISTRY) செய்யிற கம்பெனி, குவாலிட்டியான பொருட்களையோ சேவையையோ உருவாக்கவும்/விற்கவும் தகுதி உடையது எனப்பறை சாற்ற இந்தச் சான்றிதழ் பயன்படும் என்கிறே. அப்படித்தானே?”

“ஆமா; ஐ.எஸ்.ஓ. 9000: 1994 என்பது தரக்குறைவான பொருள் தயாரிப்புக்கு காரணிகள் என அனுபவத்தின் அடிப்படையில் கண்டறியப் பட்டவற்றில் கவனம் செலுத்த வலியுறுத்துவது. ஐ.எஸ்.ஓ. 9000:2000 என்பது எட்டு மேலாண்மைக் கொள்கைகளை முன் வைக்கிறது. இவை ஒழுங்காகக் கடை பிடிக்கப்பட்டால் சம்பந்தப் பட்ட எல்லோருக்கும் சம்பூர்ண திருப்தி என்கிறார்கள்”.

ஐ.எஸ்.ஓ. 9001:2000 என்பது வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்யவும், நிறுவனங்களின் திறமையை மெச்சப்படுத்த தேவையானவைப் பற்றியும் கூறுகிறது.

ஐ.எஸ்.ஓ. 9004:2000 என்பது நிறுவனங்களின் செயல்பாட்டு முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக அமைகிறது.
“தாணப்பா. . . நீ சொல்றதைக் கேட்டா சாதாரண மனுஷனுக்குப் புரியாதே. . . பின்னே வியாபாரிகளுக்கு எப்படிப் புரியப் போகுது?”

“அதில பிரச்சினை இல்லை, கேசவா. ஐ.எஸ்.ஓ. விதிமுறைகளை நடப்பிலாக்க ஆலோசனை மையங்களும், குவாலிட்டி குருக்களும் இருக்கிறார்கள். இவர்களின் ஆலோசனைப்படி கேட்டு நடந்தால், ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்குவதற்கென்று இருக்கின்ற ஏஜென்சிகள் மூலம் தரச்சான்று பெற்று விடலாம்.”
ஓஹோ. . . விஷயம் அப்படிப் போகுதா? சரி.

“இந்த ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட் வைத்தருக்கிறவங்க லாப நோக்கில செயல் படுறாங்களா? சேவை நோக்கில செயல் படுறாங்களா?”

“லாபம்தானய்யா தொழிலின் சூட்சுமம். . . ஆனா பன்னாட்டுக் கம்பெனிகளின் இராஜ தந்திரங்களில் ஒன்றாகிவிட்டது ஐ.எஸ்.ஓவும். . .! இந்தியா மாதிரி கட்டுக்கடங்காத பரப்பும், மக்கள் தொகையும் உள்ள நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதுதான் (AVAILABILITY) முதற்கடமை. ஆனால் தரத்தின் (QUALITY) அளவீடு காட்டி அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கான வாய்ப்பையும், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என்ற சிறுதொழில் மேம்பாட்டுச் சிந்தனையையும் சேதாரப்படுத்தத்தான் தரம் பற்றிய வெளிநாட்டுக் கருத்தாக்கங்கள் உதவும்.

1990ல் மேற்கு ஜெர்மனியும், கிழக்கு ஜெர்மனியும் பெர்லின் சுவரை உடைத்தெறிந்து விட்டு ஒன்று சேர்ந்த போது, ஜெர்மனி உலகின் பொருளாதார இமயமாக உயர்ந்து விடும் என்று கிளி ஜோசியம் சொன்னர்கள். கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் பழகி வந்த உற்பத்தி முறைகளில் மாற்றம் வந்து விட்டதனால் இனி கிழக்கு ஜெர்மானியர்களின் பாக்கெட்டுகள் நிரம்பி வழியும் என்றார்கள். ஆனால் கிழக்கு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் எதுவும் மேற்கு ஜெர்மனியில் விற்பனை ஆகாதபடிக்கு இந்த தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் தடைகளை ஏற்படுத்தின என்பதுதான் உண்மை!

உள்ளூர் தயாரிப்புகளின் தரம் பற்றி எந்தக் கரிசனமும் காட்டாமல், உலகமயமாகிவிட்டால் வானத்தைத் திறந்து ஏற்றுமதிப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று எதிர்பார்த்த இந்தியத் தயாரிப்பாளர்கள், அப்படிப்பட்ட மாயாஜாலம் நடக்காமல் இருக்க மறைமுகத் தடைகள் ஏராளம் உள்ளன என்பதைப் புரியத் துவங்கி உள்ளனர். . .”

தாணப்பன் வண்டியின் உறுமலை அதிகப்படுத்திய படி கேசவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான். பிறகு கேட்டான்:

“நீதான் இந்தியா முன்னேறிக்கிட்டு இருக்கு என்று சொன்னே. . .?”

“அடப் போய்யா. . . வாஜ்பேயி ஆட்சியை விட்டுப் போறதுக்கு முன்னாலே ‘இந்தியா மினுங்கிக்கிட்டு இருக்கு’ என்று (INDIA IS SHINING) சொன்னாரில்லே. . . இப்ப மன்மோகனார் ‘இந்தியா முன்னேறிகிட்டு இருக்கு’ (INDIA IS IMPROVING) என்று சொல்லலாம்ல. . . எல்லாம் ஒரு பஞ்ச் டயலாக் தான்”.

வண்டியின் பின்னிருக்கையில் கேசவன் தொற்றிக் கொள்ள வண்டி புறப்பட்டது. வண்டி கக்கின புகையில் கண் மறைய, பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த இருவர் கத்தின கெட்ட வார்த்தை அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com