Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
சிரிப்பு தரும் சிந்தனைகள்

அவசரம் அழிவின் அஸ்திவாரம்
- நீலம் மதுமயன்

அமைதி எப்போதும் ஆர்ப்பாட்டம் இல்லாதது. வருவோர் போவோர்க்கென தனித்தனி வருகைப் பதிவேடுகள் இல்லாதது. அது கதவற்றது. எனவே அதற்கென தனியான அவசர வழிகள் தேவையில்லை.

அமைதியின் மடியில் அழிவுக்கு இடமில்லை. ஆனால் அவசரம் அழிவின் அஸ்த்திவாரமாய் இருக்கிறது. நிதானம் பிரதானம் என்பதை நினைவில் கொண்டால் அவசரப்படும் மனநிலை அற்றுப் போகும்.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்னும் பழமொழி அவசரப்பட்டு அவதிப் படுபவர்களுக்காக ஏற்பட்டதுதான். எதையும் நிதானமாகச் செய்பவன் செயலில் தடுமாறுவதில்லை. எதையும் நிதானமாகச் சொல்பவன் பேச்சிலும் தடுமாறுவதில்லை.

ஆங்கில மோகத்தின் உச்சத்தில் பிரவேசிக்கும் வீடுகளில் அதுவும் ஒன்று. அவசர அவசரமாகவே அம்மாவும் அப்பாவும் அலுவலகங்களுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்புவர். வந்ததும் முதல் வேலையாக அம்மா உணவு தயாரிப்பில் ஈடுபடுவாள். அப்பா பிள்ளைகளை விடாப் பிடியாக முன்னால் உட்கார வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுவார்.

அன்று மாலையும் வழக்கம் போலவே அவசர கதியில் பிள்ளைகளை விரட்டிக் கொண்டிருந்த அப்பா தன் மகனை அடிக்க ஆரம்பித்தார். “அறிவு இருக்காடா முட்டாப்பயலே இந்த சின்ன வித்தியாசம் இன்னும் தெரியல்லியே”- என்று போட்ட அடியையும் சப்தத்தைக் கேட்டு சமையல் கூடத்திலிருந்த மனைவி, “ஏங்க பிள்ளையை போட்டு இப்புடி அடிக்கிறீங்க?”- என்று கேட்டுக் கொண்டே வேகமாக முன்னறைக்கு வந்தாள்.

அவரோ, “அப்புறம் என்னடி? மாசா மாசம் ஆயிரம் ரூபாய் கட்டி இங்கிலீஸ் மீடியத்தில இந்த நாய படிக்க வச்சா இதுக்கு இன்னும் சன்னுக்கும் மூணுக்கும் வித்தியாசம் தெரியல்ல” என்று படபட என அவசரத்தில் பொரிந்து தள்ளினார்.

அதைப் பார்த்த மனைவி மூக்கில் விரலை வைத்த படி, “அது எப்புடிங்க அவனுக்கு தெரியும்? உங்களுக்குத்தான் தன் வீட்டுப் பிள்ளைக்கும் எதிர் வீட்டுப் பிள்ளைக்கும் வித்தியாசம் தெரியல்லியே. அது நம்ம புள்ள இல்லங்க”- என்று கூறிய பிறகுதான் கவனித்தார். அது அடுத்த வீட்டுப் பையன்.

அவசரத்துக்கு ஐம்புலனும் கிடையாது என்பதை அனுபவத்தில் இருந்துதான் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் அவசரம் அழிவின் அஸ்த்திவாரமாய் இருக்கிறது என்று சொல்வது.

முடிவெடுக்கும் போது நிதானமாக இருக்கிறீர்களா என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். ஆம் என்றால் அப்போதே முடிவெடுங்கள் அது சரியாகவும் இருக்கும். ஒருவரிடம் கோபத்தைக் காட்ட வேண்டும் என்று நினைத்தாலும் அதை நிதானமாக இருக்கும் போது காட்டுங்கள். ஏனெனில் அவசரத்தில் பிறக்கும் ஆத்திரத்துக்கு புத்தி மட்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.பள்ளி ஒன்றில் தமிழாசிரியர் மீது தலைமை ஆசிரியருக்கு பெரும் வெறுப்பு. ஆனால் அந்தத் தமிழாசிரியரோ தனது கடமைகளில் தவறாதவர். ஆனாலும் அவர் மீது ஏதாவது குற்றம் குறை காண வேண்டும் என்ற ஆர்வம் தலைமை ஆசிரியருக்கு குறையவே இல்லை. எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தும் தலைமை ஆசிரியர் அன்று லீவு லட்டரில் கையெழுத்து வாங்கப் போய் வசமாக மாட்டிக் கொண்டார்.

தமிழாசிரியரைப் பார்த்ததும் ஏற்பட்ட கோபத்தில் எழுந்த அவசரத்தில் குறை கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்து, “என்னய்யா தமிழய்யா வேலையை ஒழுங்கா பார்க்கிறதில்ல போலும், வேல பார்க்கிறதுக்குத்தான் அரசாங்கம் சம்பளம் தருது. காம்போசிசன் நோட்டெல்லாம் ஒழுங்காத் திருத்துறதில்ல, பிழைகளை மார்க் பன்றதில்ல, பக்கத்துக்கு பக்கம் பிழைகளா இருக்கு. இப்படியே போனா மெமோ தர வேண்டியதாகியிடும்”
வைது முடித்ததும் தமிழாசிரியர் சிரித்தபடி, அதெப்படி பிழைகளா இருக்கும் நான்தான் இன்னும் காம்போசிசன் நோட்டையே உங்ககிட்ட வைக்கவே இல்லியே..” என்று கூறியவாறு மெல்ல நடந்தார். தலைமை ஆசிரியர் தலையைச் சொறிந்தார்.

தேவையா இந்த அவமரியாதை. இவற்றிற்கெல்லாம் காரணம் அவசரப் படுவதுதான் அவசரத்தில் அள்ளித் தெளித்து விட்டு நிதானமாக வாரிக் கட்டிக் கொள்ள வேண்டுமா?

இன்னும் சில நேரம் அவசரத்தில் என்ன பேசுகின்றோம் அல்லது என்ன கேட்கின்றோம் என்பதைப் பற்றியே யோசிக்காமல் பேசுபவரைப் பார்க்கலாம். இதனால் ஏற்படும் அவமானத்தை அனுமதிக்க முடியாமல் அப்புறம் அவதிப் படுபவர்களையும் பார்க்கலாம்.

வகுப்பில் ஆசிரியர் போகும் போது ஒரே சப்தம் அதுவும் இரண்டு பேரால் வந்தது என்பதைக் கண்டு கொண்ட ஆசிரியர் அந்த இரண்டு பேரையும் நிற்கச் சொல்லி விசாரித்துக் கொண்டிருந்தார்.

அதில் ஒருவன், “கெட்ட வார்த்தை சொன்னான் சார் அதனாலதான் அடித்தேன்”-என்றான். அப்புறமாவது விட்டுத் தொலைய வேண்டியது தானே விடவில்லை. அவர் அவசரப்பட்டு அந்தச் சொல்லின் அர்த்தத்தைப் பற்றி யோசிக்காமல், “எங்காதில் மட்டும் சொல்லுடா” - என்றால் என்ன அர்த்தம்?

அவசரமே அழிவின் தொடக்கத்துக்கு பூபாளம் இசைக்கும் என்பதை புரிந்து கொள்ள வில்லை என்றால் தொடக்கமே முடிவாய்த் தொடரும்.

கேட்பதில் நிதானம், சொல்வதில் நிதானம், செயல்படுவதில் நிதானம், கண்டிப்பதில் தண்டிப்பதில் என்று எல்லாவற்றிலுமே நிதானத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீதிபதி ஒரு கொலைகாரனிடம் விசாரிக்கும் போது, “என்னபா நீ ரெம்ப மோசமான ஆளா இருக்கிறியே,
வாடகைக்கு இருந்த நீ வீட்டுக்காரரையே வெட்டிப் போட்டியே இது சரியா?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “அவர் தான மூணு மாசமா காலி பண்ணு காலி பண்ணுண்ணு நச்சரிச்சுட்டே இருந்தார், அப்புறம் ஒரு நாள் உன்னால காலி பண்ண முடியுமா முடியாதா என்றார். அதனாலதான் அவசரத்தில அவர காலி பண்ணிட்டேன்”- என்றானே பார்க்கலாம்.

ஆகவே அன்பர்களே அவசரப்பட்டு அல்லல் படும் அவஸ்த்தையை அகற்ற முயல வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com