Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006

பண்பாட்டு மார்க்சியர்கள் பங்கேற்ற மார்க்சிய சந்திப்பு - 2006 சில முக்கிய குறிப்புகள்
குமரன் தாஸ்

துரை அழகர் கோயில் அருகே இயற்கை எழில் சூழ்ந்த அரங்கில் புதியகாற்று ஒருங்கிணைத்த, பண்பாட்டு மார்க்சியர்கள் (என்ற புதிய அடையாளத்துடன்) பங்கேற்ற அரங்கு கடந்த 21, 22- சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மிகவும் பயனுடைய வகையில் நடந்தேறியது.

சுமார் 150 பேர் பங்கேற்ற நிகழ்வில் பாதிக்கும் மேற்பட்டோர் புதுமுகங்களாக இருந்தனர். மேலும் வந்திருந்த தோழர்களில் பெரும்பாலும் அரங்கினுள் சிரத்தையுடன் குழுமியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

(21.01.06) முதல் நாள் அமர்வுகள் சனி காலை 11 மணி அளவில் தோழர் இன்குலாப் அவர்களது துவக்க உரையுடன் ஆரம்பமானது. முதல் அமர்வு ‘மார்க்சியமும் பெரியாரியமும்’ இதில் தோழர்கள் பேரா.இ.முத்தையா, ஆதவன் தீட்சண்யா, டி.தர்மராஜன், இரா.காமராசு ஆகியோர் உரையாற்றினர்.

இவர்களில் டி.தர்மராஜன் அவர்களது உரையில், ‘பெரியார்-பார்ப்பனர் X பார்ப்பனரல்லாதார் முரணையும், அம்பேத்கர்- தீண்டப்படுவோர் X தீண்டப்படாதார் என்ற முரணையும், அயோத்திதாசர்-சாதி விரும்புவோர் ஒ சாதி விரும்பாதார் என்ற முரணையும் கட்டமைத்ததாக புதியதும், கூர்மையானதுமான ஒரு செய்தியை முன்வைத்தார். இச்செய்தி ஆழமான விவாதத்திற்கும், வளர்த்துச் செல்வதற்குமானதாக அமைகிறது. அடுத்து பெண்ணிய அமர்வு,

தோழர்கள் அனுராதா, ரேவதி, லீனாமணிமேகலை ஆகியோர் உரையாற்றினர். ரேவதி மற்றும் லீனாவின் உரை மிக குறிப்பிடத்தகுந்ததாகும், பார்வையாளருக்கு விழிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும், கேள்வி கேட்க தூண்டியதாகவும் அமைந்தது. மூன்றாவது அமர்வு மார்க்சியமும் தலித்தியமும் மாலை 7மணி அளவில் துவங்கியது.

தோழர் சி.சொக்கலிங்கம் அவர்கள், சாதி - மேல் கட்டுமானம் பொருளாதாரம் - அடிக்கட்டுமானம் என்ற வறட்டு மார்ச்சிய வாதத்தை உடைக்கும் விதத்திலும், பொதுவுடமை இயக்கத் தலைவர்களான எஸ்.ஏ. டாஸ்கே, ஈ.எம்.எஸ். நம்பூதரிபாடு ஆகியோரது பார்ப்பனியச் சார்பை விமர்சிக்கும் விதமாகவும் உரையாற்றினார். அடுத்து வந்த கலை இலக்கியப் பெருமன்றத் தோழர் வி.சிவராமன் அவர்களது உரை உண்மையான மார்க்சியர்களின் சுயவிமர்சனத்திற்கு முன்னுதாரணமாக அமைந்தது. த.மு.எ.ச. தோழர் சு.வெங்கடேசன் தன் கட்சி (சி.பி.எம்) நிலைபாட்டை அப்படியே முன்வைத்துச் சென்றார்.

நான்காவதாக இரவு 9.00 மணிக்கு பேச வந்த தோழர் இளம்பரிதி தன்னை. பிறப்பால் தலித் என்றும், மா.லெ. இயக்கத்தில் 10 ஆண்டுகளாக இயங்கியவராகவும் அடையாளப்படுத்திக் கொண்டு தான் எழுதிக் கொண்டு வந்திருந்த தனது நீண்ட உரையை வாசித்தார்.

இரவு நேரங்கடந்து விட்டபடியாலும், உரை மிக நீண்டதாக இந்தியப் பொதுவுடமை இயக்க வரலாற்றை விவரிப்பதாகவும் இருந்தப்படியால், பிற பேச்சாளர்களது உரையை கவனமாக அதுவரையில் கிரகித்துக் கொண்டிருந்த (பார்வையாளர்கள்) தோழர்கள் கலைந்து தங்களுக்குள் உரையாடி தோழர் பரிதியின் வாசிப்பை கவனிக்காமல் புறக்கணித்தனர்.

சிரத்தை எடுத்து தயாரித்து வந்த கட்டுரையாளரது உழைப்பு வீணாவது வருத்தத்தை அளித்ததுடன் அரங்க குலைவுக்கான காரணத்தையும் யூகிக்க முடிந்தது. பெரும்பான்மையாகக் கூடியிருந்த சி.பி.ஐ., சி.பி.எம்., தோழர்களின் மத்தியில் போலி கம்யூனிஸ்டுகள் என்று சாடியதும் மறுபுறம் பார்வையாளர்களை ஈர்த்து, சிந்திக்கத்தூண்டி தனது அரசியல் இலக்கை நோக்கி திசைவழிப்படுத்தும் ஆற்றலையும் கட்டுரை கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இறுதி அமர்வு மீதான விவாதத்தை தோழர் ஆதவன் தீட்சண்யா துவங்கினார். நேரம் கருதி முதல் நாள் அமர்வுகள் அத்துடன் முடிக்கப்பட்டன.

முதல்நாள் நடைபெற்ற மூன்று அமர்வுகளிலும் ஒவ்வொன்றின் தொடர்ச்சியாக விவாதத்திற்கென நேரம் ஒதுக்கப்பட்டது. இதனை பெண்ணியம் குறித்து உரையாற்ற வந்திருந்த தோழர்களே மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். தங்களை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளையும் சிறப்பாக எதிர்கொண்டு பதில் வழங்கினர். மற்ற இரு அமர்வுகளும் அவ்வாறு அமையவில்லை. அதற்கான காரணம் என்ன என்று சிந்திக்கும் போது அமர்வை ஒழுங்கமைத்த தோழர்கள், பங்கேற்கும் உரையாளர்களை தேர்வு செய்ததில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது புலப்பட்டது.

அதாவது ‘மார்க்சியமும்’ என்பதை மார்க்சிய (சி.பி.ஐ., சி.பி.எம்) இயக்கம் என்றே பொருள் கொண்டு பெரும்பாலோர் உரையாற்றும் போது தலித்தியம், பெரியாரியம், பெண்ணியம், மதச்சிறுபான்மையினர் என்பனவற்றிற்கும் அவை சார்ந்த இயக்க தோழர்களை அழைத்து பேசச் செய்திருந்தால் இன்னும் காத்திரமாகவும், பொதுவுடமை இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த தங்களது எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும், விமர்சனத்தையும் முன்வைத்திருப்பர்.

பொதுவுடமை இயக்கமும்-தோழர்களும் அதன் மீது தங்களது விமர்சனம்-சுயவிமர்சனத்தை முன்வைப்பதன் மூலம் மேலும் தங்களை வலிமையாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

இரண்டாம் நாள் (22.01.06) அமர்வு தோழர் இளம்பரிதியின் உரைமீதான விவாதத்துடன் துவங்கியது. தோழர் ஆதவன் தீட்சண்யா இயக்கம் சார்ந்த படிப்புடன் தனது கிண்டலான விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு தோழர் அசோக் ‘ஒரு தலித் இளைஞனின் கோபத்தை கிண்டலடிப்பதன் மூலம் காலி செய்து விட வேண்டாம்’ என்ற குறிப்புடன் ஓட்டுப் பொறுக்கி அரசியலின் சீரழிவு குறித்தும், சாதி ஒழிப்பால் தலித் அல்லாதார் கடமை குறித்தும் எழுப்பிய கேள்வி ஏற்படுத்திய கனத்த மௌனம் தொடர்ந்து பேச வந்த தோழரின் பேச்சால் கலைந்தது. ‘மார்க்சியமும் தலித்தியமும்’ என்ற அமர்வு ஆக்கப்பூர்வமான விவாதமாக தொடராமல் முடிந்து போயிற்று. அடுத்து ‘மார்க்சியமும் சிறுபான்மையினர் பிரச்சனைகளும்’ என்பது குறித்து தோழர் ஹெச்.ஜி.ரசூல் மிக சிரத்தையுடன் உரையாற்றினார். சிறுபான்மையினர் பிரச்சினை அரங்கினுள்ளும் சிறுபான்மையாகவே ஒலித்தது. பெரும்பான்மையினர் அலட்டிக் கொள்ளவே இல்லை.

உரையாளராலும் பெரும்பான்மையினரின் உளவியலைச் சிதைத்து குற்றஉணர்வை ஏற்படுத்த முடியவில்லை. அடுத்து ‘மார்க்சியமும் படைப்பிலக்கியமும்’ என்ற தலைப்பில் தோழர்கள் தமிழ்ச்செல்வன், தி.சு.நடராசன், ஆனந்தகுமார், அன்பு ஆகியோர் உரையாற்றினர்.

தோழர். தமிழ்ச்செல்வனின் உரை அனைவரையும் ஈர்க்கக் கூடியதாகவும், ஜனரஞ்சக நடையிலும் சுயவிமர்சனம் சார்ந்த உண்மைகளே பார்வையாளத் தோழர் (ஆண்)களின் மனசாட்சியை தட்டி எழுப்பியிருக்கும் என்று பட்டது.

அவர், மா.லெ. இயக்கத் தோழர் கோ.கேசவன் அவர்களது எழுத்துப் பணி குறித்தும், ம.க.இ.க.வின் மையக் கலைக்குழுவின் திறமை குறித்தும் தனது கட்சி (சி.பி.எம்) எல்லையைத் தாண்டி பாராட்டியது, குறிப்பிடத்தக்கது.

இறுதி அமர்வாக ‘மார்ச்சியமும் நவீன சிந்தனைப் போக்குகளும்’ என்ற அமர்வில் தோழர்.ஆ.சிவசுப்ரமணியன், ந.முத்துமோகன், ஆர்.முரளி ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் முரளி அவர்கள் ப்ராங்க்பர்ட் மார்க்சியர்கள் குறிப்பாக ஹேபர்மாஸ்-ன் கருத்துக்கள் குறித்து சில குறிப்புகள் வழங்கினார். அவர் பதிவு செய்த முக்கியச் செய்தி இந்திய தொழிற்சங்கம், தொழிலாளி வர்க்கம் எவ்வாறு இன்று பாட்டாளி வர்க்கமாக இல்லாமல், எவ்வாறு புரட்சிக்குத் தலைமை தாங்கும் பண்பு அற்றதாக இருக்கிறது என்பதை ஹேபர்மாஸ்-ஐ முன்வைத்து புரட்சிகரத் தன்மையையும் குறிப்பிட்டார்.

இவரது ஹேபர் மாஸ் கருத்து பற்றிய குறிப்புகள் மா.லெ. இயக்கத் தலைவர் தோழர்.சாரு மஜும்தார் 1970ல் முன்வைத்த கருத்துக்களை நியாயப்படுத்துவதாக அமைந்தது.

அதேபோல் அடுத்துப் பேசிய தோழர் நா.முத்துமோகனும் முரண்பாடு முற்றாத நாடுகளில் புரட்சி வெற்றி பெற்றது ஏன்? என்ற கேள்வியையும், புரட்சிகர உணர்வு பீறிட்டு எழக்கூடிய ஒடுக்கப்பட்ட சக்திகள் எவை என்பது பற்றியும் கேள்வி எழுப்பினார். ஆ.சிவசுப்ரமணியன் இந்திய பாண்பாட்டு தளத்தில் ஏற்பட்ட விளைவுகளின் வழிநின்று அடித்தளம்/மேற்கட்டுமானம் என்று புரிதலின் புதிய திசைகளை திறந்துவிட்டார்.

மிக விரிவாகவும் ஆழமாகவும் அமைய வேண்டிய 6-வது அமர்வு நேரமின்மையாலும் பார்வையாளரது கவனச் சிதைவினாலும் சுருக்கமாக முடிக்கப்பட்டது. நன்றி கூறலுடன் அரங்கு நிறைவடைந்தது. அரங்கில் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு அமர்வுமே இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவையாகும்.

இன்றைய அமைப்பாக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் சீரழிவான சூழலில் கட்சிக்கு வெளியே ஒடுக்கப்பட்ட சக்திகள் உணர்வுபூர்வமாக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டுள்ள நிலையில் அவர்களை தனக்குள் ஈர்ப்பதன் மூலம் பொதுவுடமை இயக்கம் தன்னை வலிமையாக்கிக் கொள்ள முடியும் என்ற விருப்பத்தின் பாற்பட்டே அரங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதாக புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த வகையிலேயே பங்கெடுத்த (சி.பி.ஐ., சி.பி.எம்) தோழர்களது சுயவிமர்சனக் குரல் மேலோங்கி ஒலித்தது. இந்த சுயவிமர்சனம் காலம் கடந்ததோ என்ற கேள்வி எழாமலும் இல்லை. அதேபோல் சமூகத்தில் வலிமையாக இயங்கும் பல்வேறு முரண்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட அரங்கு தேசிய இன விடுதலை என்பதை மட்டும் ஒதுக்கி விட்டதன் பின்னணி என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இனிவரும் நாட்களில் அவையும் எடுத்துக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் அரங்கை ஏற்பாடு செய்த புதியகாற்று, தோழர் ஹாமீம் முஸ்தபா மற்றும் (உழைத்த) பிற தோழர்களையும் அவசியம் பாராட்ட வேண்டும். கூடவே பொதுவுடமை (சி.பி.ஐ., சி.பி.எம்) இயக்கம் தன்னை வலிமையாக்கிக் கொள்வதற்கான வழிமுறை என்ற நோக்கு நிலையிலிருந்து பிரச்சினைகளை அணுகாமல் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை தீர்த்து சமூகத்தை விடுதலை செய்வது என்ற நோக்கில் திறந்த மனதுடன் அணுகினால் அதுவே மார்க்சியத்தின் பாற்பட்டதாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட தோன்றுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com