Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006

மதச்சார்பற்ற கட்சிகளின் சண்டைகளும் பா.ஜ.க.வின் லாபங்களும்
- எம். அசோகன்

தென் மாநிலங்களின் ஒன்றில் பா.ஜ.க. முதன் முதலாக அதிகாரத்திற்கு வந்து விட்டது. கர்நாடகா மீது அது நீண்ட நாட்களாகக் குறிவைத்திருந்தது. திட்டமிட்டு கர்நாடகா மக்கள் சமூகத்திலும் அதிகார அடுக்குகளிலும் ஊடுருவியது. வகுப்புவாதப் பிரச்சாரமும் கலவரங்களும் கடந்த 20 வருடங்களாக நடந்து கொண்டே இருந்தன.

1989லிருந்து நடைபெற்ற நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் அது மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. ‘ஈ பாரி பா.ஜ.க. (இந்த முறை பா.ஜ.க.) என்று ஒவ்வொரு முறையும் மக்களை ஏமாற்ற முயற்சித்தது. எனினும் மக்கள் ஏமாறவில்லை. மதச்சார்பற்ற கட்சிகள் தங்களுக்குள் என்னதான் சண்டையிட்டுக் கொண்டபோதும் மக்கள் மீண்டும் மீண்டும் அக்கட்சிகளையே தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இவர்களோ மக்களை ஏமாற்றிக் கொண்டேயிருந்தார்கள். இப்போது மக்களின் முதுகில் குத்தி விட்டார்கள். எனினும் மதவெளியர்களால், நேரடியாக அதிகாரத்திற்கு வரவே முடியவில்லை கடந்த 2004ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்து அது அதிகாரத்திற்கு வருவதைத் தடுத்தன. மதவெறியர்களின் கைகளில் ஆட்சி போய் விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுதான் இது. பா.ஜ.க.வும் அதன் ஆதரவு ஊடகங்களும் எப்போதும் புனிதம் பேசும் உதவாக்கரைகளும் சந்தர்ப்பவாதம் என்று அக்கூட்டணியை விமர்சித்தனர்.

ஆனாலும், இப்போது அதே பா.ஜ.க. அதே மதச்சார்பற்ற ஜனதா தளத்தை உடைத்து பதவியைப் பிடித்துள்ளது. மதவெறிக் கட்சியும் மதச்சார்பற்ற கட்சியும் கூட்டணி சேர்ந்தால் அது சந்தர்ப்பவாதமன்றி வேறென்ன? காங்கிரசும் ஜனதாதள(எஸ்)மும் அடிப்படையான கொள்கை வேறுபாடுள்ள கட்சிகள் அல்ல, ஆனால் பா.ஜ.க. அந்த வகையில் சேர்த்தியில்லையே!

பா.ஜ.க. எப்போதுமே தன்னுடைய வகுப்புவாதக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மற்றவர்கள் தோளில் கைபோடும், அதிகாரம் எதற்கு? தன்னுடைய கொள்கைத் திட்டங்களை அமல்படுத்துவதற்கு!

காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து கன்னியாகுமரியின் திராவிடக் கட்சிகள் வரை இருபதுக்கும் மேற்பட்ட மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு மத்தியிலே அதிகாரத்தைப் பிடித்த பா.ஜ.க. ஆறாண்டு கால வாஜ்பாய் ஆட்சியிலே என்ன செய்தது? குஜராத், வரலாற்றுப் பாட திருத்தம், சிறுபான்மையினருக்கு எதிராக மட்டும் பிரயோகிக்க என பொடா சட்டம் என பல விஷயங்களில் அது தன்னுடைய வேலையைக் காண்பித்தது. மதவெறியர்களை அனைத்து மட்டத்திலும் கேந்திரமான பதவிகளிலே நியமித்தது. இன்றைய தலைமை தேர்தல் அதிகாரிகள் சிறந்த உதாரணம்.

ஆனால் மற்ற கட்சிகள்? பதவி சுகத்தை அனுபவித்ததிலும், தங்கள் சொந்த வேலைகளை செய்து கொள்வதிலும் காலம் கழித்தன. கடைசி நேரத்திலேனும் பா.ஜ.க.விலிருந்து அணி மாறியவர்கள் (தமிழகம் போல) தப்பித்தார்கள்; கூட்டணியைத் தொடர்ந்தவர்கள் (ஆந்திரம் போல) மண்ணைக் கவ்வினார்கள்.

மக்களவைத் தேர்தலுக்குப்பின் மராட்டியத்தில் மதவெறியர்களின் கூட்டணி தோற்றது. ஹரியானாவில் கூட்டு சேர யாருமில்லாததால் பா.ஜ.க. தோற்றது. ஆனால் ஜார்க்கண்ட்டிலும், பீகாரிலும் மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் பா.ஜ.க. இளைய பங்காளியாகவோ மூத்த பங்காளியாகவோ அதிகாரத்திற்கு வந்து விட்டது. இப்போது கர்நாடகாவிலும், மதச்சார்பற்ற கட்சிகளின் உதவி இல்லையென்றால் வாஜ்பாய் பிரதமராகஆகியிருக்க முடியாது; இன்று அது ஆட்சியிலிருக்கும் பல மாநிலங்களிலும் அப்படித்தான்.

குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களைத் தவிர இதரவற்றிலெல்லாம் கூட்டணிதான். அந்த மூன்றிலும் கூட மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளிவிட முடியும். ஆனால் அவை அப்படிச் செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

கர்நாடகாவில் நடந்தது என்ன?

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணியொன்றும் சுலபமாக அமைந்து விடவில்லை. முதல்வர் பதவி காங்கிரசுக்கா, ஜனதா தளத்திற்கா என்று பெரிய இழுபறி நடந்தது. பா.ஜ.க. அப்போதே தேவேகவுடாவிற்கு ஆசை காண்பித்தது. அதிகாரத்தில் இருந்தே பழகிப் போன காங்கிரசும் பிடிவாதம் பிடித்தது. ஆயினும் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது சொன்னபடி காங்கிரஸ் நடந்து கொள்ளவில்லை என்பது தேவேகவுடா - குமாரசாமியின் குற்றச்சாட்டு. பதவிகள் கொடுக்கவில்லை; கொடுத்த பதவிகளில் மந்திரிகள் எடுக்கும் முடிவுகள் ‘முதல்வர்’ தரம்சிங்கால் அலட்சியப் படுத்தப்பட்டன; இது மட்டுமின்றி, ஜனதா தளத்திலிருந்து விலகிச் சென்று எங்களுக்கு எதிராகச் செயல்படும் சித்தராமைய்யாவிற்கு காங்கிரஸ் எல்லா உதவிகளையும் செய்கிறது என்பதும் குமாரசாமியின் குற்றச்சாட்டு.

இதில் கொள்கைச் சண்டை ஏதும் இருக்கிறதா? பதவியும் சுயநலமும் தவிர வேறு எதுவும் இல்லை. பா.ஜ.க. பார்த்தது. வலையை வீசியது. நீ இருபது மாதம் முதல்வர், நான் இருபது மாதம் முதல்வர் என்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மதவெளி பா.ஜ.க.வோடு கூடிவிட்டது. ஏற்கனவே இதே வலையைத்தான் உத்திரப் பிரதேசத்தில் மாயாவதிக்கும் வீசியது. உ.பி.யில் ஆறுமாதம் ஆறுமாதம் என்ற ஒப்பந்தம் கர்நாடகத்தில் இருபது மாதம் இருபது மாதம் என்று விரிவிடைந்திருக்கிறது.

இந்த நாட்டில் கொள்கையெல்லாம் முக்கியமில்லை என்றுள்ளார் குமாரசாமி, நேர்மையைப் பாராட்டலாம். ஆனால் மக்களிடம் ஓட்டுக் கேட்கும்போதே இதைச் சொல்லியிருக்க வேண்டும்.

காங்கிரசுக்கோ பிறருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முழுமனது இல்லை; இதர மதச்சார்பற்ற கட்சிகளுக்கோ தங்களுக்குள்ளேயும் காங்கிரசோடும் பதவி, ஈகோ போன்ற அடிப்படையில் மோதல்கள்; லல்லுவிற்கும் நிதிஷ்குமாருக்கும் ஆகாது; ராம் விலாஸ் பாஸ்வானுக்கும் அப்படியே; முலாயம்சிங் யாதவை ஒரு வழி செய்யலாமா என காங்கிரஸ் முயற்சிக்கிறது; தேசியவாத காங்கிரசோ பல மாநிலங்களில் முரண்டு பிடிக்கிறது. இவர்கள் ஒன்று, பா.ஜ.க.வோடு சேருவார்கள் இல்லையென்றால் தங்களுக்குள் சில்லறைத் தகராறுகள் செய்து கொண்டு பா.ஜ.க.விற்கு உதவுவார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது மக்களுக்கு மட்டுமல்ல; மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும். இல்லையெனில் மதவாதிகளின் கைகளுக்கு மீண்டும் நாடு போய்விடும்; மக்கள் விருப்பத்திற்கு மாறாக.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com