Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

ஒளியும் ஒளியும்
பேரா. அப்துல் காதர்

2004ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து ஒரு முஸ்லிம் தாய் கைக்குழந்தையுடன் சென்னைக்கு வந்தார். பிறவியிலேயே அந்தக் குழந்தைக்குப் பார்வையில்லை. கறுப்பு விழிப் பொட்டிழந்து விதவை ஆடையுடுத்தி வெள்ளை விழிப்படலம் அக்குழந்தைக்கு. இரண்டு தமிழர்கள் விழிதானம் செய்யும் கண்ணப்பர் ஆனார்கள். அறுவை சிகிச்சை முடிந்தது. குழந்தைக்குப் பார்வை வரம் கிட்டிவிட்டது. வெளிச்ச சாட்சியாக விதவை மறுமணம் நிகழ்ந்து விட்டது. என் நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்.

“பாகிஸ்தானியர்களே!
இதுவரை
இந்தியர்களாகிய எங்களுக்குக்
கண்ணீரையே தந்தீர்கள்
நாங்கள்
கண்களையே தந்தோம்!
எல்லை தாண்டிய
பயங்கரவாதம் உங்களது
எல்லை தாண்டிய
மனித நேயம் எங்களது!

பார்வை விழிபெற்ற
பாகிஸ்தான் குழந்தையின்
தாயே!
உனக்கொரு வேண்டுகோள்!
இதுவரை
இந்திய விழிகளில் இருந்து
கண்ணீரையே வரவழைத்தீர்கள்!
அந்தப் பழக்கத்தில்
உன் குழந்தையின்
கண்களிலிருந்து
கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்!
அதிலிருப்பவை
இந்திய விழிகள் அல்லவா!”

2004 என்ற எண்ணுள்ள ஆண்டு சொன்ன செய்தி இதுதான். 2 என்பது இரண்டு மனிதர்கள்; இரண்டு பூச்சியங்கள் இரண்டு விழிகள்; இரண்டு மனிதர்கள் இரண்டு விழிகளைத் தானம் செய்தால் 4 பேர் விழிகளில் வெளிச்சம் பதியனாகும்.

பாகிஸ்தான் திரும்பிய அந்தத்தாய் அங்குள்ள தொலைக்காட்சிக்கு அளித்த வேட்டி உலுக்கி விட்டது. அவர் சொன்னார்:

“கண்ணறுவை முடிந்தது
விழிநடவு நிகழ்ந்தது
நடவிற்குப் பிறகு அறுவடை இல்லை
வித்தியாசமாக
அறுவைக்குப் பிறகு
அழகிய நடவு.
என் குழந்தைக்குக்
கிடைத்தவை
வேற்றுக் கண்கள் அல்ல
நாற்றுக் கண்கள்
மாந்தநேய
ஊற்றுக் கண்கள்.

கண்கட்டு அவிழ்க்கிறார்கள்!
என் குழந்தையின்
கன்னிப்பார்வை
எதன் மீது விழும்?

தன்னைத் தந்த
அன்னை மீதா?

அன்னைக்குக் குழந்தையாகிய
தன்னைத் தந்த தந்தை மீதா?
இரண்டின் மீதும் அல்ல
கண்ணைத் தந்த
சென்னை
மண்ணைத்தான்
மழலை பார்த்தது!
இதோ
வெளிச்ச தீபம்
ஏற்றிய
விழிகளோடு என் குழந்தை!
இந்த
முஸ்லிம் குழந்தையின்
விழிவீட்டில்
இனி
தினந்தோறும்
தீபாவளிதான்”

இந்த நிகழ்வுக்குப் பின் இருட்டு, ஒளி பற்றி என் எண்ணங்கள் சிறகடிக்கத் தொடங்கின. காலத்தின் கால்களில் ஒன்று இருட்டு, மற்றொன்று பகல். காணும் விழியிலும் இறைவன் இந்தக் கறுப்பு வெள்ளையை இணைத்தே வைத்துள்ளான். அதிலும் ஒரு சிறப்பு வெள்ளை ஒளிப்பார்வையைக் கறுப்பு விழிதான் வழங்குகிறது. வாழ்வின் இருண்ட நேரங்களில்தான் உண்மையான உறவுகளைக் காண முடியும் என்பது போல. எது சரியான பார்வை? ஒரு பொருளின் ஒளி மிகுந்த பக்கத்தையும், இருண்ட பக்கத்தையும் பார்த்து முடிவெடுப்பதுதான் முழுமையான சரியான பார்வை. ஒளியின் பெறுமதி இருட்டினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது ஓர் அழகிய முரண்.

புகழ்மிக்க கவிஞர் பாப்லோ நெருடா, ஒரு முறை

“What is darkness/ I can explain / but / I can not explain / what is light/ Light is the shadow of god”


“இருட்டு எதுவென
என்னால் இயலும் விளக்க
வெளிச்சம் எதுவென
விளக்க முடியாது
ஒளி என்பது
இறைவனின் நிழல்”

சிவந்த பெண்ணுக்கும் நிழல் கறுப்புத்தான். எதனின் நிழலும் கறுப்புதான். இறைவனின் நிழலே ஒளிதான் என்றால், இறைவன் எப்படி இருப்பான்? தூர்சினாய் மலையில் இறைவனை தரிசிக்க அனுமதி கேட்ட மூஸா (அலை) நபிக்கு இறைவன் தன் ஒளியின் ஒரு பகுதியை வெளிப்படுத்த, அதனைத் தாங்க இயலாது என்பதால், ஒளிவண்ணத்தை எளிமையாக்கி அளி செய்வான் என்னும் வைணவம் அதனை ‘சௌலப்யம்’ எனக் குறிக்கிறது. மணிவாசகமும் இதன் உட்கிடையை

“அவனருளாலே அவன்தாள் வணங்கி”

என்று திருவாசகத்தில் பாடுவதும் எண்ணத் தக்கது.

மௌலான மூமி, தனது மஸ்னவி ஷரீஃப் காவியத்தில் 1344ஆம் கண்ணி முதல் 1348 ஆம் கண்ணி வரை மற்றொரு அழகிய கருத்தையும் புலப்படுத்துகிறார்.

“. . . ஒளியின் எதிரான இருளைக் கொண்டு நீ
ஒளியின் இயல்பைத் தெரிந்து கொண்டாய். ஏனெனில் யதார்த்தத்தில் ஒரு எதிரிஉண்டாயிருத்தலை அதன் எதிரியே எடுத்துக் காட்டுகிறது. . .

முடிவாக மறைந்திருப்பவை தத்தம் எதிர்மறையால் வெளிப்படுகின்றன. இறைவனுக்கு எதிர் இல்லாமையால் அவன் மறைவே மறைவாக இருக்கின்றான்.

இறைவன் ஒளியை எடுத்துக்காட்ட, அந்த ஜோதியின் எதிர் எதுவும் பிரபஞ்ச இயற்கையில் கிடையாது”.

இறைமை என்பது ஸ்பரிசிப்பதற்கும், தரிசிப்பதற்கும் உரியதன்று, உணர்தற்குரியது. ஒளி என்ற சொல் வெளிச்சத்தை மட்டுமின்றி ஒளிந்து கொள் என்ற பொருளையும் தருகிறது. ஒளியாய் இறைவன் ஒளிந்திருக்கிறான். அவனை ஜெபமாலை, உருத்திராட்சம், நெஞ்சில் வேர் விழ நெற்றிக் காய்ப்பு போன்ற இருட்டுப் பின்னணியில் உலகம் அடைய முயல்கிறது. ஊசிக்கண்ணால் ஒன்றும் பார்க்க முடியாது.

“விட்டிலே
விளக்கனைச் சுற்றிச் சுற்றி
இறகுகளைக் கரித்துக் கொள்ளாதே
தீபச் சுடராய் எரித்துக்கொள்
செத்து விதமாவதை விட
அத்து விதமாகி விடு!”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com