Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
நூல் மதிப்புரை: விதைக்குள் விழுதுகள்
எஸ்.ஸ்ரீகுமார்

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகள் பழைய தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அடிவயிறு எங்கும் நெருப்பை சுமந்து திரிந்த காலகட்டம். பார்ப்பனியத்தின் அல்லது சனாதனத்தின் கோரமுகம் அதிகாரங்களின் கொடுமுடியில் இருந்து கொண்டு சமூகத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களை, அடித்தட்டு மக்களை வர்ணாஸ்ரமத்தின் சாதி ஏற்றத் தாழ்வுகளால் தீவிரமாக நசுக்கிய காலம்.

சில சாதிகளைப் பார்த்தாலே தீட்டு. சில சாதிகளைத் தொட்டாலே தீட்டு எனத் தீண்டாமையின் கொடுவிரல்கள் மனிதர்களை ஒடுக்கிய காலம். இந்த காலகட்டத்தில் தான் சாதீய ஒடுக்குதல்களுக்கு எதிராக சாதி சமூகங்களின் பெயரால் கட்டி எழுப்பப்பட்ட அதிகார கொடுமுடிகளுக்கு எதிராக தென்திருவிதாங்கூர் மாபெரும் கலகங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது. கோயில் நுழைவுப் போராட்டங்கள், அக்னி காவடிப் போராட்டங்கள், தோள்சீலைப் போராட்டங்கள் என சமூக மற்றும் சமத்துவ நீதிகளுக்கான போராட்டங்கள் தென்திருவிதாங்கூரில் தோற்றம் பெற்றதும் இக்கால கட்டத்தில் தான். இக்கால கட்டத்தில் தான் காலம் காலமாக சாதிப் பேய்களின் ஒடுக்குதல்களுக்கு ஆளான அடித்தட்டு சமூகங்களின் திரட்சிகளும் நடைபெற்றன. புலையர்களின் திரட்சியை மையப்படுத்தி அய்யங்காளி. ஈழவர்களின் திரட்சியை மையப்படுத்தி நாராயணகுரு. நாடார்களின் திரட்சியை மையப்படுத்தி வைகுண்டசாமி. இவர்கள் சமூகநீதியின் ஆளுமைகளாக உருவாகி வந்ததும் இந்த காலகட்டத்தில் தான். இந்த திரட்சிகளை இன்றைய காலகட்டத்தில் நவபிராமணியம் தனதாக்கி உள்செரித்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனாலும் இந்தத் திரட்சிகளின், இந்தப் பேராட்டங்களின் அடிப்படை அலகாக இருப்பது சாதித் தளைகளிலிருந்து விடுபடுதல் என்ற அம்சமாக இருப்பதால் சாதீய அடுக்குமுறையை ஒத்துக் கொள்ளும் நவபிராமணீயம் இதன் முன்னால் தோற்றுப் போகிறது.

இந்த பின்புலத்தில் இருந்து தான் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் எழுத்துக்களின் உள் அடுக்குகளுக்குள் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சுவாமித் தோப்பு இதுதான் அன்பழகனை வளர்த்த மண். ‘சுவாமித் தோப்பு இது தெட்சணா பூமி. கடவுள் மனிதனாக மலர்ந்து மணம் வீசியபூமி’. இது மனசுக்குள் ஒரு மகாத்மா கதையில் வரும் சுவாமித் தோப்பு பற்றிய அன்பழகனின் வாக்குமூலம். வைகுண்டசாமியின் பூமியான சுவாமித் தோப்பு வட்டாரத்திலிருந்து உருவான அன்பழகன் என்கிற இந்த கவிஞரிடம், இந்த கட்டுரையாளரிடம், இந்த கதாசிரியரிடம் இருக்கின்ற கோபங்கள் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியுடையது. அது வைதீகத்திற்கு எதிரான, வர்ணாசிரமத்திற்கு எதிரான, தீண்டாமைக்கு எதிரான, சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி, இந்த வரலாற்றுத் தொடர்ச்சியைத்தான் அன்பழகனின் எழுத்துக்களில் பார்க்கிறோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வரிகொடுக்கப்படாத மார்பகங்கள் அதிகார ஆயுதங்களால் தறிக்கப்பட்ட பொழுது சிரித்த முகங்களின் எச்சங்கள் தான் சுனாமியின் கோரச்சாவுகளைச் சிரித்துக் கொண்டே சொல்ல வைத்ததை கறுப்பு விடியல் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். இதற்கு எதிரான கோபம் தான் விளிம்புநிலை மக்களின் போராட்டக் குரலாகவும் இருக்கிறது. எனவே தான் சென்னை போன்ற பெருநகர்களில் விளிம்புகளில் வாழ்ந்த மக்களை தன்னுடைய எழுத்தில் பதிவு செய்து அதன் மூலம் இலக்கிய அங்கீகாரம் பெற்ற ஜெயகாந்தனின் சங்கரமட வீழ்ச்சிகளை சற்றும் குறையாத கோபத்தோடு ஜீவாவிடம் இலக்கணம் பயின்ற மனிதப்பிழை ஜெயகாந்தன் என்ற பீடை ஜெயகாந்தன் கட்டுரை பதிவு செய்கிறது.

விளிம்பு நிலையிலிருந்து மேலெழுந்துவரத் துடிக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கனவுகளைக் காசாக்க முயலும் மெட்ரிக் கல்வி முறைகளின் அசுரமுகம் கும்பகோணத் தீ விபத்தின் குறியீடாக நிற்பதை கல்லறைப் பூக்கள் கட்டுரை சொல்கிறது. அன்பழகன் ஆழமான கருத்துக்களை அழகாக முன் வைப்பார். அதே நேரத்தில் கருத்துக்களை நிரூபிக்க சான்றாதாரங்கள் தரவும் அவர் தவறியதில்லை. வரலாறுகளும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இது அன்பழகனின் எழுத்து முறையியல்.

உலகிலேயே அழகான நூல் உன்னுடைய வாழ்க்கை, மனசாட்சி மரித்துப் போனவர்களை சுடுகாடும் உள்வாங்கிக் கொள்ளாது, மரணமே முதலாளி வாழ்வு ஒரு தொழிலாளி என்பதைப் புரிந்து கொண்டால் சமத்துவம் இயல்பாக இயங்கும். வரலாறுகளுக்காக வாழ்ந்தவர்களல்ல வாழ்ந்ததால் வரலாறானவர்கள், நதிகள் தான் நாற்காலியின் நாற்றங்கால், மனுசன மனுசன் அடிச்சிகிட்டா இந்த உலகத்தில் கடைசியா மண்டை ஓடுகள் தான் மிஞ்சும். சிலுவை திருநீறு பூசிக் கொண்டது, என்பவை வருங்கால எழுத்தாளர்களுக்கு வாசகர்களுக்கு அன்பழகன் தரும் வைர வரிகளாகும். வார்த்தைகள், இவரிடம் வசமாகச் சிக்கிக் கொள்கின்றன அதனால் வார்த்தைச் சிக்கனத்தில் இவர் வள்ளுவரையே மிஞ்சி விடுவார் என்னும் பொன்னீலனின் பாராட்டுரையும் மெய்யாகிப் போகிறது.

அன்பழகனின் கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளும் அவர் வாழும் பிரதேசங்களைப் பேசும், நாட்டு நடப்பை நவிலும், உலக நடப்பையும் உள்வாங்கிப் பேசும். திரைப்படத்துறையை அன்பழகன் சார்ந்திருந்தும் திரைப்பட படப்பிடிப்புக் கட்டணத்தைக் குறைத்தவர்கள் கல்விக் கட்டணத்தை குறைக்க முன் வராதது ஏன் என்று கேள்வியும் எழுப்புவார். மனசில் விழுந்த மழை கதை மூலம் மலையில் வாழும் செல்லி மூலம் படிப்பின் அவசியத்தைப் பரப்புவார். இந்த நேரத்தில் அன்பழகன் நம் கண்முன் சின்ன காமராஜராகத் தோற்றமளிக்கிறார். இமைக்குள் வானம் கதை மூலம் ஆட்கொல்லி நோயாம் எய்ட்ஸ் நோயாளிகளைப் பாதுகாப்போம் என்று குரல் கொடுப்பதன் மூலம் தெய்வநாயமாகக் காட்சி தருகிறார். தவறு செய்பவர்யாராக இருந்தாலும் ரஜினியாக இருந்தாலும் சரி சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி கடுமையாகச் சாடுவதன் மூலம் நவீன நக்கீரனாகக் காட்சியளிக்கிறார். அன்பழகனின் எழுத்துக்கள் முழுவதும் பயணப்படும் பகுதிகள் எல்லாம் இன்றைய நவபிராமணீயத்தையும், ஹைடெக் பிராமணீயத்தையும் எதிர்கொள்ளும் ஒரு கலக்காரனின் குரலாகவே இருக்கிறது. நட்சத்திர மழையில் விதைக்குள் விழுதுகள் இன்று முளை விட்டிருக்கிறது.

பேகன் சொல்வார்: இன்று வெளியாகும் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் விதைக்குள் விழுதுகள் புத்தகம் கொஞ்சம் கொஞ்சமாக அசைபோட்டு ஜீரணிக்க வேண்டிய நூல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com