Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
அந்தோனியோ கிராம்சியின் குடிமைச் சமூகம் எனும் கருத்தாக்கம்
ந.முத்துமோகன்

இத்தாலியில் கிறித்தவ மதம், தேசியம், பின்னர் பாசிசம் போன்ற கருத்தியல்கள் எவ்வாறு வெகுசன செல்வாக்கு பெற்றன? என்ற ஒரு கேள்வியை எழுப்பி கிராம்சி அதற்கான பதிலைத் தேடினார். இக்கருத்தியல்கள் வெறுமனே ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள், ஆளும் வர்க்கத்தால் எல்லா மக்களிடையிலும் பரப்பப்பட்டன என்ற பதில்களோடு கிராம்சி திருப்தி அடையவில்லை.

மார்க்சியத்தின் கோட்பாடான, அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகார எந்திரம் என்ற விளக்கத்தோடும் அந்தோனியோ கிராம்சி திருப்தி அடையவில்லை. ஆளும் வர்க்கத்தின் நலன்களை அரசு எந்திரம் போலீஸ், ராணுவம், அரசியல் சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் வழி வன்முறையாகக் காத்து நிற்கிறது என்ற விளக்கத்தோடும் கிராம்சி முடித்து விட விரும்பவில்லை. அரசு தவிர்த்த பிற ஆளும் வர்க்க வடிவங்களை அவர் கண்டறிய விரும்பினார்.

மேற்குறித்த கேள்விகளோடு தான் கிராம்சி குடிமைச் சமூகம் (Civil Society) என்ற கருத்தாக்கத்திற்கு வந்து சேர்ந்தார். கிராம்சியைப் பொறுத்தமட்டில், குடிமைச் சமூகம் என்பது நேரடியாக அரசியல் பண்பும் அதேபோல நேரடியாகப் பொருளாதாரப் பண்பும் இல்லாத ஒரு வட்டாரம் எனலாம். மார்க்சிய சிந்தனையின் படி, பொருளாதாரத்தை அடித்தளம் (Basis) எனக் கொண்டால், அதன் மீது, கிராம்சியின் கருத்துப்படி, இருவகை மேற்கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. ஒன்று, நாம் ஏற்கனவே நன்கு அறிந்த அரசியல் மேற்கட்டுமானம், மற்றொன்று, கிராம்சி சொல்லும் குடிமைச் சமூக மேற்கட்டுமானம். அரசியல் கட்டுமானம் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம், அதிகாரம் போன்ற வன்முறை அல்லது பலாத்கார (Coercion) வடிவங்களை நேரடியாக எந்தவித ஒளிவுமறைவுமின்றி தொழில்படுத்துகிறது. மற்றொன்றான குடிமைச் சமூகக் கட்டுமானம் சமயம், குடும்பம், கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின் வழி ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான பொது மனோபாவம் ஒன்றை உருவாக்குகிறது. அரசுக்கு ஆதரவான பொதுச் சம்மதத்தை (Consent, Consensus, Common Sense, Ethico-political moment, Passive acceptance, Subjectivity, Internalized Values, Culture, Cultural Structures of Passivity, Routine Passivity, In-authenticity, Automatism, Ideology, Maral recognition, False Consciousness, Aliented consciousness, Practico-inert and spontaneous consent) குடிமைச் சமூகம் உருவாக்கித் தருகிறது.

வர்க்க சமூகங்களில் ஆளும் வர்க்கம் குடிமைச் சமூகத்தின் வழி தனது கருத்தியல் மற்றும் கலாச்சார மேலாண்மையைச் (Hegemony) சாதிக்கிறது என்று கிராம்சி குறிப்பிட்டார். குடிமைச் சமூக நிறுவனங்களின் வழி ஆளும் வர்க்கம் தனது நேரடியான, பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை மறைத்துக் கொண்டு தான் ஒரு பொது ஒழுங்கில், சமூக ஏற்பாட்டில் அல்லது சமூக அமைதியில் அக்கறை கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது. இம்முயற்சியில் அது வெற்றியும் பெறுகிறது. ஆளும் வர்க்கம் குடிமைச் சமூகத்தில் தனது மேலாண்மையைச் சாதித்துக் கொள்ளும் போது தனது வர்க்க நலன்களோடு தன்னுடன் வரும் இன்னும் சில வர்க்கங்களின் நலன்களையும் தொகுத்துக் கொள்ளுகிறது. அப்படித் தொகுத்துக் கொள்வதன் மூலமே அதனால் குடிமைச் சமூகத்தில் ஒரு பொது முகத்தைக் காட்டிக் கொள்ள முடிகிறது.

குடிமைச் சமூகம், மேலாண்மை போன்ற கருத்தாக்கங்களின் வழி ஆளும் வர்க்கம் உருவாக்கும் பொதுச் சமூக மனோபாவத்தின் உள் இயங்கியலை கிராம்சி மிக அற்புதமாகக் கண்டறிந்து சொல்லியுள்ளார் என்று அவரைப் பலர் பாராட்டுகின்றனர். ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன் அல்லது அரசு எந்திரத்தின் அதிகாரம் எனும் ஒற்றைத் தளத்தைத் தாண்டி அதிகச் சிக்கலான, கூடுதல் பன்மைத்தன்மை கொண்ட ஒரு தளத்தை நோக்கி கிராம்சி பயணித்துள்ளார் என்று நாம் இதனை அடையாளப் படுத்த முடியும். குடிமைச் சமூகம் எனும் கருத்தாக்கத்தில் லுக்காசின் ஒட்டு மொத்தப்படுத்துதல் (Totalizing), ஹெர்பர்ட் மார்க்கியூசின் ஒற்றைப் பரிமாண மனிதன், அல்த்தூசரின் கருத்தியல் அரசு எந்திரம் (Ideological State apparatus), மிகை நிர்ணயம் (Overdetermination) பூக்கோவின் அறிவும் அதிகாரமும் போன்ற கருத்தாக்கங்களின் முன்வடிவங்கள் உள்ளன என்றும் இதனை மதிப்பிடலாம். மார்க்சிய அடிப்படைகளுடன் சில பின்னை நவீனத்துவத் தேடல்கள் அவரிடம் இடம் பெற்றுள்ளன என்றும் இதனைக் கூற முடியும்.

குடிமைச் சமூகம், மேலாண்மை குறித்த கண்டுபிடிப்புகளோடு கிராம்சி சோசலிசப் புரட்சியின் செயல் திட்டத்தை விவாதிக்கத் தொடங்குகிறார். ஆளும் வர்க்கம் கடந்த காலங்களிலும், இப்போதும் அரசு அதிகாரம், குடிமைச் சமூக மேலாண்மை என்ற இரட்டைத் திட்டத்தைக் கொண்டிருந்ததெனில், சோசலிசத்தைச் சாதிக்க விரும்பும் மார்க்சியரும் அதே போன்ற இரட்டைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம்சி முன்மொழிகிறார். அதாவது, மார்க்சியர்கள் அரசு அதிகாரத்தை கைப்பற்றவது என்ற தமது வழக்கமான வேலைத் திட்டத்தோடு, அதற்கு முன்னதாக, குடிமைச் சமூக மேலாண்மையை நோக்கி நகர வேண்டும் என்று கிராம்சி கூறுகிறார். ஆளும் வர்க்கத்தின் குடிமைச் சமூக மேலாண்மைக்குள் மார்க்சியர்கள் தீவிரத் தலையீடுகளை நிகழ்த்தி கருத்தியல் பொதுச் செல்வாக்கை (Counter Hegemony) ஈட்ட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஆளும் வர்க்கத்தை வீழ்த்த விழையும் தொழிலாளர் வர்க்கம் விவசாயிகளோடும் புதிய அறிவுத் துறையினரோடும் உண்மையாகவே ஒரு கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது கிராம்சியின் திட்டம். வடக்கு இத்தாலியின் தொழிலாளரும் தெற்கு இத்தாலியின் விவசாயிகளும் தத்தமது நலன்களின் தொகுப்பில் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பாசிச சிறைக்குள் அடைபடுவதற்கு முன்னதாகவே கிராம்சி விரும்பினார் என்று எர்னஸ்டோ லக்லௌ என்ற அறிஞர் எடுத்துக் காட்டுகிறார். மரபு சார்ந்த அறிவாளிகளின் கருத்தியல் மற்றும் கலாச்சாரச் செல்வாக்கைத் தகர்த்தெறிய கிராம்சி புது அறிவுத் துறையினரைத் தொழிலாளர் - விவசாயிகளோடு சேர்த்துக் கொண்டார் என்றும் விளக்குகின்றனர். தொழிலாளர் - விவசாயி - அறிவுத்துறையினர் எனும் பரந்த கூட்டணி, முன்போல, தொழிலாளர் வர்க்கத்தை முதன்மைப்படுத்தாமல் அல்லது தலைமைப்படுத்தாமல் கலாச்சார மேலாண்மையை நோக்கி நகர வேண்டும் என அவர் கருதியிருக்கலாம். இக்குடிமைச் சமூகக் கூட்டணி நெகிழ்வு கொண்டதாக, பல வர்க்கங்களின் தொகுப்பு நலன்களைக் குறிப்பதாக பன்மைத் தளம் கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் கருதியதாக பின்னை நவீனத்துவச் செல்வாக்கு கொண்ட அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். தொழிலாளி / முதலாளி என்ற பிரதான முரண்பாட்டை கிராம்சி பலவீனப்படுத்துகிறார் என்று அவரைக் குற்றம் சாட்டுவோரும் உண்டு. கிராம்சி வரைந்து தரும் சித்திரம் கிழக்கு நாடுகளின் யதார்த்தத்திற்கு அதிகப் பொருத்தம் உடையது என்று மதிப்பிடுவாரும் உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமீபத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் பெற்றுள்ள வெற்றிகளுக்குப் பின்னால் கிராம்சியம் உள்ளது என்ற கருத்தும் சொல்லப் படுகிறது.

மக்களின் பொதுச் சம்மதம் என்பதோ, விரிந்த கூட்டணி என்பதோ இறுகிய ஒன்றல்ல, அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கக் கூடிய ஒரு சேர்க்கை; அச்சேர்க்கையில் பங்கேற்கும் சமூக வர்க்கங்களின் நலன்கள் பற்றிய மறுபரிசீலனைகள் இடைவிடாமல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடத்தப்பட வேண்டும்; அக்கூட்டணி தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் மறு உற்பத்தி செய்யப்பட வேண்டும். மறு வரையறை செய்யப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ரய்மண்ட் வில்லியம்ஸ் என்ற மற்றொரு மார்க்சிய அறிஞர் கூறுகிறார். இந்தியச் சூழல்களில் அந்தோனியோ கிராம்சியின் குடிமைச் சமூகம், கலாச்சார மேலாண்மை போன்ற கருத்தாக்கங்களைச் சிந்தித்துப் பார்க்க முடியும். பெரியார், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்கள் குடிமைச் சமூகச் செல்வாக்கு எனும் திசையில்தான் சிந்தித்தார்களோ என எண்ணத் தோன்றுகிறது. மரபுச் சமூக மனோபாவத்தினுள் தீவிரத் தலையீடுகளை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். சாதியம் குறித்த பிரச்சனையை இந்து மதம் / பௌத்தம் என்ற ஒரு பெரும் விவாதத்தின் வழி அம்பேத்கர் சமூகமயமாக்கியது கணிசமான ஒரு கலாச்சாரச் செயல்பாடாகத் தெரிகிறது. பெரியாரின் மொழியும் கலகச் சொல்லாடல்களும் நமது கவனத்தைக் கவருகின்றன.

சாதி அமைப்பு எவ்வாறு ஒரு குடிமைச் சமூக நிறுவனமாகத் தொழில்பட்டுள்ளது என்பது கிராம்சி பேசாத ஒன்று. சாதி அமைப்பைக் காக்க பிற மேட்டிமைச் சாதிகளோடு எவ்வாறு தொகுப்புக் கூட்டணி உருவாக்கப் பட்டது என்பது கவனத்திற்குரியது. ஆய்வுக்கும் உரியது. சாதியத்திற்கு அரசியல் அதிகாரம் தவிர பலமான குடிமைச் சமூகப் பாதுகாப்பு இருந்து வந்துள்ளதை உணர முடிகிறது. ஆயின் சாதியத்தைப் பாது காக்கும் இந்திய குடிமைச் சமூகத் தளத்தில் பலாத்காரம் (Coercion), வன்முறை இல்லை, ஒப்புதலும் சம்மதமும் உருவாக்கப்பட்டன என்பதை ஏற்க முடியவில்லை. சாதியத்திற்கு எதிரான மாற்று குடிமைச் சமூக மேலாண்மையைச் சாதிப்பதற்கான வழிகளும் இன்னும் நமக்குத் துலக்கமாகத் தெரியவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com