Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

கவிஞர்.மு.மேத்தா நேர்காணல்
ஹாமீம் முஸ்தபா

கேள்வி : மேத்தா என்ற கவிஞனின் உருவாக்கம் குறித்து சொல்லுங்களேன்?

Metha சின்னவயதிலிருந்தே எனக்கு தமிழில் தமிழ்க் கவிதைகளில் ஈடுபாடு அதிகம். நண்பர்கள் சேர்ந்து ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கிறபோதே கையெழுத்து பத்திரிகை நடத்தினோம்.

ஏறத்தாழ ஒரு பத்திரிகை ஆசிரியனுடைய பொறுப்பை வகிக்கிற நிலை அது. கதை, கவிதை, கட்டுரை, திரைப்பட விமர்சனங்கள் எல்லாம் கூட எழுதிக்கிட்டிருந்தேன். என்னுடைய நண்பர்கள் இளைஞர்களுடைய வேறுவிதமான பொழுது போக்குகளில் ஈடுபடாமல் எழுதுறது, விவாதிக்கிறது என்ற சூழலில் வளர்ந்தார்கள். அவர்களோடு நானும் வளர்ந்தேன். இயல்பாகவே எனக்கு இருக்கக் கூடிய தமிழ்ப் பற்றும், தமிழ் ஆர்வமும் பாரதிதாசன் கவிதைகளில் இருந்த அளவுகடந்த ஈடுபாடும் இவையெல்லாம் சேர்ந்து என்னை கவிதை உலகத்திற்குள் கொண்டு வந்தது என்று நினைக்கிறேன்.

கேள்வி : புதுக்கவிதையை வெகுஜனத் தளத்திற்கு கொண்டு சென்றதில் உங்களின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் தொடக்கத்தில் நீங்கள் மரபுக் கவிஞராகவே இருந்திருக்கிறீர்கள். மரபிலிருந்து புதுக்கவிதைக்கு நகர்ந்தது எப்பொழுது?

தொடங்கியபோது மரபுக் கவிதைக் காரனாகத்தான் தொடங்கினேன். அன்றைக்குத் தமிழ்நாட்டில் இளைஞர்களுடைய மனப்போக்கில் தீவிரமான எண்ணங்களை விதைத்துக் கொண்டிருந்த திராவிட இயக்கம் எனக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அண்ணா, கலைஞர் இவர்களுடைய எழுத்துக்களும் பெரியாருடைய சிந்தனைகளும் தமிழ்ச் சமூகத்தை பாதித்தபோது அந்த சமூகத்தின் ஒரு சிறுதுளியாகிய நானும் அதிலே தாக்குண்டேன். 16, 17 வயதில் நல்ல மரபுக் கவிதைகள் செப்பனிடப்பட்ட செம்மையான வடிவத்தில் வெளிவரத் தொடங்கின. இதன்பிறகு 1968ல் நான் அரசுக் கல்லூரியிலே ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தேன். அப்பொழுது என்னோடு பணிக்கு சேர்ந்தவர் தமிழகத்தில் சிறந்த கவிஞராகவும், விமர்சகராகவும் மதிக்கப்படக் கூடிய பாலா அவர்கள்.

பாலாவும் நானும் இலக்கிய விவாதங்களில் எங்களுடைய பொழுதுகளை கழித்தோம். அவர் நிறைய ஆங்கில இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். பல்வேறு மொழிகளின் கவிதைச் சூழல் பற்றி என்னிடத்திலே பேசுவார். அப்பொழுது நான் புதுக்கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘புதுக்கவிதை சோம்பேறிகளின் சொப்பனம்’என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் மரபுக் கவிதை என்பது பலகாலப் பயிற்சிக்குப் பிறகு வரக்கூடிய ஒரு வடிவம். ‘புதுக்கவிதை என்பது சொல்லுவதை எல்லாம் எப்படி வேண்டு மானாலும், எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் சொல்வது’ என்று புதுக் கவிதைக்காரர்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்வதில்லை. அதே சமயத்தில் அந்தக்கால கட்டத்தில் புதுக் கவிதையை எழுதிக் கொண்டிருந்தவர்கள் - ஏறத்தாழ இறக்குமதி செய்து கொண்டிருந்தார்கள் - வெளிநாட்டில் இருக்கின்ற அறிவு ஜீவிகளினுடைய, கவிஞர்களுடைய படைப்புகளினுடைய தாக்கத்தை தமிழில் இறக்குமதி செய்து கொண்டிருந்தார்கள். இந்த மண்ணிலிருந்து முளைக்காத மரங்கள் அவை. தொட்டிச் செடியாக கொண்டு வரப்பட்டு இங்கே போற்றப்பட்டன. இயல்பாக எனக்கு அதிலே ஈடுபாடு இல்லை.

1971ம் ஆண்டு கோவை அரசுக் கலைக் கல்லூரிக்கு மாற்றலாகச் சென்றேன். அங்கு அற்புதமான ஒரு கவிஞர்களுடைய வட்டம் அமைந்தது. புவியரசு, சிற்பி, பாலா, தமிழ்நாடன் முல்லை ஆதவன், அக்னிபுத்திரன் இப்படி தமிழ் நாட்டின் மிகச்சிறந்த கவிஞர்களெல்லாம் கோவையிலே இணைந்து, ‘வானம்பாடி’என்ற ஒரு இதழைத் தொடங்கினோம்.

வானம்பாடியின் சூழல் அமைப்பு, சிற்பி-மீரா இப்படி பலகவிஞர்களின் கூட்டுறவு; அதே சமயம் ஞானி, ஜனசுந்தரம் போன்ற மார்க்சிய சித்தாந்தவாதிகளின் இணைப்பு, தத்துவ வாதிகளுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஏற்பட்ட மோதல்கள் இவையெல்லாம் சேர்ந்து புதுவிதமான பரிமாணத்திற்கு என்னைக் கொண்டுவந்தன என்று நான் நினைக்கிறேன்.

அப்பொழுதுதான் நான் புதுக்கவிதையை எழுதத் தொடங்குகிறேன். அப்போது கூட மரபுக் கவிதையைத் தாக்குகிற போக்கையும், மரபை முழுக்க முழுக்க தகர்க்கிற போக்கையும் நான் எதிர்த்தேன். ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’என்று முதன் முதலாக நடந்த வானம்பாடிகள் கூட்டத்திலே நான் அறிவித்தேன். அப்போதுதான், ‘இந்தப் பூமி உருண்டையை புரட்டி விடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்’என்ற கேள்வியை; வானம்பாடிகளை நோக்கி முன்வைக்கிற கவிதையை எழுதினேன். அது வானம்பாடி முதல் இதழிலே வெளிவந்தது.

இன்றைக்கும் நான் அப்படித்தான் இருக்கிறேன். மரபை முழுக்க சிதைக்கிற போக்கை நான் ஒப்புக் கொள்ளவில்லை. தேவையற்ற மரபுகளை தூக்கி எறிவதும், தேவையான போது மரபுகளை நாம் தேர்வு செய்து கொள்வதும் தேவை என்று கருதுகிறவன் நான்.

கேள்வி : இறக்குமதி செய்யப்பட்டவற்றை அப்போதைய புதுக்கவிதைக்காரர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னீர்கள். இதற்கு மாற்றாக வானம்பாடி எதை முன்வைத்தது?

‘எழுத்து’காலகட்டத்துக் கவிதைகள், ‘கசடதபற’ காலகட்டத்துக் கவிதைகள் இவையெல்லாம் வேற்றுமொழி சிந்தனையாளர்களின் எண்ணங்களை எல்லாம் தமிழில் விதைக்கத் தொடங்கிய முயற்சியில் ஈடுபட்டது. அவை என்னை ஈர்க்கவில்லை. என்னை மட்டுமல்ல தமிழ் வாசகர்களையும் அது ஈர்க்கவில்லை. ஆதலால்தான் அப்பொழுது புதுக் கவிதைகள் வெற்றியடையவில்லை. ‘தோற்றுக் கொண்டிருந்த புதுக் கவிதையை வெற்றியடைய வைத்தவர்கள் யார்? என்று கேட்பீர்கள்’என்று சொன்னால் வானம்பாடி கவிஞர்களும், மரபிலே எழுதி வெற்றி பெற்று புதுக் கவிதையை எழுதத் தொடங்கிய போது, அப்துல் ரகுமானைப் போன்று சிற்பியைப் போன்று, நா.காமராசனைப் போன்று புதுமையும் அவர்களது எழுதுகோலுக்கு வந்தது. மரபின் பலமும் அந்த எழுதுகோலுக்கு இருந்தது. மரபின் பலமும், புதுமையினுடைய நலமும் வளமும் சேர்ந்து புறப்பட்ட போது புதுக்கவிதை தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது.

கேள்வி : ஒரு வீச்சுடன் உருவான வானம்பாடி இயக்கம் ஏன் தமிழகத்தில் தேங்கி நில்லாமல் போனது?

தேக்கத்திற்கு வந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஆட்சிக்கு வருகிறது ஒரு கட்சி. அந்த கட்சியை மக்கள் அனுமதிக்கிற வரைக்கும், அல்லது எதிர்க்கட்சிகள் தொல்லை செய்து கவிழ்க்காத வரைக்கும் அந்த கட்சியினுடைய ஆட்சி நடைபெறுகிறது. அந்த கட்சி சில சீர்திருத்தங்களைச் செய்கிறது. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு, கட்சி அழிந்து விடவில்லை. அந்த ஆட்சிக்குப்பதில் வேறு ஆட்சி வருகிறது. அதுபோல வானம் பாடிகளின் பணி, தொடக்க காலத்திலே வீரியமிக்க கவிஞர்களின் ஒன்று சேர்ந்தகுரல் தமிழகத்தில் திருப்பத்தை உருவாக்கியது. வானம்பாடியைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் உருவாகின.

தமிழகத்தினுடைய இலக்கியப் போக்கில் அது ஒரு புதிய பிரமிப்பான பெருமையை தோற்றுவித்தது. மனிதனைப் பாடாத, மனித நலத்தைப் பாடாத, எதையும் நாங்கள் புறக்கணிப்போம் என்று மக்களிடத்திலே குரலெழும்புமாறு செய்தது வானம்பாடியினுடைய வேலை. தன்னுடைய காலகட்டத்தில் அது சாதிக்க வேண்டிய சாதனைகளை எல்லாம் நிகழ்த்தியது. ஒரு கூட்டிலே வளர்ந்த பறவைகள் சிறகுகள் முளைத்து தனித்தனி அரசுகள் அமைத்து பறந்து போய்விட்டன என்று சொல்லலாமே தவிர, வானம்பாடி சிதறிப்போய் விட்டது என்று சொல்ல முடியாது. அதனுடைய பணி முடிந்தது. வானம்பாடிக்காரர்கள் ஆங்காங்கே அவரவர்கள் ஒரு சிறந்த சிந்தனையின் தளமாக இருக்கிறார்கள்.

கேள்வி : புதுக்கவிதையின் சமகால வரலாற்றைப் பேசுபவர்கள், ‘வெறும் வார்த்தைக் கூட்டங்களும், கோஷங்களும் தான் வானம்பாடிக் கவிதைகள்’என்ற விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்களே. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

அம்மா என்பது கூட வெறும் வார்த்தைதான். தாய் என்பது கூட வெறும் வார்த்தை தான். வார்த்தையாக பார்க்கிற போது வெறும் வார்த்தை. உணர்வாகப் பார்க்கிறபோது அது உயிர். இப்படி சொல்கிறார்களே இவர்கள் வார்த்தை களுக்குப் பின்னாலே அலைகிறவர்கள். இவர்கள் சமூகத்தைப் பற்றியோ மனித குலத்தின் மேன்மை களைப் பற்றியோ கருதாதவர்கள். தனக்குள்ளே முழ்கிப்போய் எதையோ தேடிக் கொள்கிறார்கள். இவர்கள் இங்கே இருப்பதை விட எங்காவது மலைமுகடுகளில் சென்று உட்கார்ந்து தவம் செய்து கொண்டிருப்பது நன்று. இவர்கள் மிகச்சிறிய ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து 1,000 பேர் 2,000 பேர் படிக்கிற பத்திரிகைகளை நடத்திக் கொண்டு தங்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஜனங்களை சந்திக்கிறவர்கள்.

எங்களுக்கும் மக்களுக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. வெறும் எழுத்தோடு மட்டுமல்ல; நேரடியான பங்களிப்பிலும் நாங்கள் இடம் பெறுகிறோம். எங்களுக்கிருக்கிற திமிர், எங்களுடைய படைப்புகளின் மீது எங்களுடைய செயல்பாடுகளின் மீது எங்களுக்கிருக்கிற நம்பிக்கை - ஒருவர் கூறுவதற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற அந்தக் கடமையிலிருந்து எங்களைத் தவற வைத்து விடுகிறது. அதனால் இவர்கள் சொல்லுவ தெல்லாம் பொருளாகிக் கொண்டிருக்கிறது. ‘வானம்பாடி’ என்பது வெற்று கோஷமல்ல. ஒரு காலகட்டத்தில் பாரதி எப்படி தமிழ்க் கவிதையின் திசையைத் திருப்பினானோ அதுமாதிரி, ‘மனிதனைப் பாடாத, சமூகத்தைப் பாடாத, மக்களைப் பற்றி கவலைப்படாத கலை கலையல்ல’ என்ற மாபெரும் ஒரு கருத்தைத் தோற்றுவித்தது வானம்பாடி. இதை இவர்கள் சொல்வதைப் போல எளிதாக எள்ளி நகையாடி விட முடியாது.

கேள்வி : கவிதை ஆக்கம், திரைப்படப் பாடல் ஆக்கம் இவை இரண்டுக்குமான தனித் தன்மையாக எதைப் பார்க்கிறீர்கள்?

கவிதை என்னுடைய சொந்த படைப்பு. என்னுடைய சொந்த படைப்பில் வேறுயாரும் குறுக்கிடுவதற்கு இடம் கிடையாது. ஆனால் என்னுடைய பாடலில் பிறர் கைவைப்பதை நான் அனுமதித்தாக வேண்டும். அதுதான் பாடலாசிரியன் என்கிற பணிக்கு நான் செய்கிற மரியாதை. கவிதை என்பது ஒரு கவிஞனுடைய சுதந்திர மலர்ச்சி. ஆனால் திரைப்பாடல் என்பது பலபேருடைய கூட்டு முயற்சி. திரைப்படப் பாடல் என்பது அந்தப் பாடல் இடம் பெறுகிற சூழலை, அந்தப் பாடலை பாடும் கதாபாத்திரத்தை, அந்த கதாபாத்திரத்தின் உணர்வை கதாபாத்திரத்தின் கருத்தை, அந்த இசையின் மீது கொண்டு வந்து வைத்து சொல்வது. இசைக்காக சில சொற்களை நாம் நீக்க நேரலாம். இசைக்காக சில வடிவங்களை மாற்ற வேண்டிய அவசியம் நேரலாம்.

கதாபாத்திரத்தின் தேவைகருதி என் சொந்தக் கருத்தும் அல்லாத வேறொரு கருத்தை நான் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். திரைப்பாடலில் பல்வேறுபட்டவர்களின் எண்ணப் போக்கிற்கும் இயைந்த ஒரு முயற்சியைத்தான் நான் செய்ய முடியுமே தவிர, கவிதையைப் போல என்னுடைய கருத்தை என்னுடைய ஆளுமை மிக்க சிந்தனைகளை சொல்லிவிட முடியாது. ஆனால் கவிதையைக் காட்டிலும் திரைப்பாடலுக்கு ஒரு மிகப்பெரிய வசதி உண்டு. கவிதை மெல்ல மெல்ல மக்களை சென்று சேரும். திரைப்படப் பாடல் உடனடியாக உள்ளத்திலே போய் பதியும். அது வழங்குகின்ற வரிகள் ‘வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்பதாகக்கூட இருக்கலாம். ‘தேராட்டம் காரினிலே ரொம்ப திமிரோடு போறவரே எங்கள் ஏரோட்டம் நின்று போனால் உங்கள் காரோட்டம் என்ன ஆகும்?’ என்று கேட்கிற வரிகளாகக்கூட இருக்கலாம். ‘ஏரோட்டம் நின்று போனால் உங்கள் காரோட்டம் என்னவாகும்?’ என்று ஒவ்வொரு கிராமத்துக்காரனையும் பாடவைக்கிறதே அது கவிதையை விட சட்டென்று தீப்பற்றி கொள்கிற உணர்ச்சியை உண்டாக்குகிறது.

‘வேலைக்காரன்’திரைப்படத்தில் இடம் பெறுகின்ற ‘தாஜ்மஹாலின் காதிலே இராம காதை கூறலாம், மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்’என்ற பாடல் வரியை நான் கவிதையிலே எழுதி இருந்தால் அது 10 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, லட்சக்கணக்கான மக்களைத் தான் சென்றடைந்திருக்கும். ஆனால் கோடிக் கணக்கான தமிழர்கள், உலகத்திலே வாழுகிற அத்தனை திசைகளிலும் இருக்கிற தமிழர்களைப் போய் இந்த சிந்தனைகளை சட்டென்று விதைக்கிற ஆற்றல் இந்த திரைப்பாடலுக்கு உண்டு.

திரைப்படப் பாடலை தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டோம் என்று சொன்னால் சமூகத்திற்கு மிகுந்த பயன் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.

கேள்வி : திரைப்படக் கவிஞர்களில் சந்தங்கள் இயல்பாக வந்து விழுகின்ற பாடலாசிரியராக நீங்கள் இருக்கிறீர்கள்? ஆனாலும் சில குறிப்பிட்ட இசையமைப்பாளர்களுக்குத் தான் நீங்கள் பாடல்கள் எழுதுகிறீர்கள். அதிலும் பெரும்பாலும் இளையராஜாவுக்கு. என்ன காரணம்?

இளையராஜாவைத் தவிர வேறு யாருடைய இசையிலும் எழுதுவதாக இப்பொழுது உங்களுக்குத் தெரியவில்லை. நான் முதன் முதலில் எழுதத் தொடங்கியது சங்கர்-கணேஷ் அவர்களின் இசையில் தான். எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார், அண்மையில் பரத்வாஜ் இசையில் கூட எழுதியிருக்கிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களின் இசையில் எழுதவில்லை என்பது உண்மைதான். இளையராஜா அவர்களின் இசையில் நான் நிறைய எழுதியிருக்கிறேன் என்பதும் உண்மைதான்.

அதற்குக் காரணம் இன்றைக்குத் திரைப் பாடல்களுடைய சூழல்கள் மாறி இருக்கின்றன. பாடலாசிரியனுக்கும் ஒரு பொறுப்பு உண்டு என்பது என்னைப் போன்றவர்களுடைய கருத்து. அந்த பொறுப்பை நிறைவேற்ற முடியாதபோது பாடல் எழுதுவதைவிட சும்மா இருப்பது சுகம் என்று கருதுகிறவன் நான். எல்லாவற்றோடும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இறங்கி வருவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் கீழே விழுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. கீழே விழுவதுதான் ஆகாயத்தில் மிதப்பது என்று கருதுகிற உலகத்தில் எங்களுக்கு சம்பந்தமில்லை. நாங்கள் சுடுகாட்டில் கூவுகிற குயில்களல்ல. எங்களுடைய வனாந்தரம் வேறு. இந்தச் சுடுகாட்டிலும் எங்களுக்கு வேலை இருக்கிற போது இந்தச் சுடுகாட்டை நந்தவனமாக்கும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம். வாய்ப்புக் கிடைக்கிறபோது எங்களுடைய வனாந்தரங்களில் எங்களுடைய சிறகுகளை விரிக்கிறோம்.

திரைப்படம் என்பது பலவிதமான சமரசங்களுக் கான இடம். அதில் என்னைப் போன்ற சுயசிந்தனை உடையவர்கள் இவ்வளவு காலம் தாக்குப்பிடித்தது என்பதே பெரிய விஷயம். கவிஞன் என்கின்ற மிகப்பெரிய வீச்சோடு திரைப்படத் துறையில் நான் நுழைந்ததனால் இவ்வளவு காலம் அதிலே தாக்குப் பிடித்திருக்கிறேன். நான் திரைப்பட பாடலாசிரியனாக மாறி, அதன்பிறகு நான் கவிஞனாக வந்திருந்தால் இது நடந்தே இருக்காது. திரைப்பட உலகில் புகழ்பெற்ற பிறகு கவிஞனாக புகழ்பெற்ற பலர் இருக்கிறார்கள். கண்ணதாசன் கூட திரைப்படத்தில் எழுதி இருக்கவில்லை என்றால் அவரது அற்புதமான படைப்பாற்றல் வெளிப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். எனக்கு ஏற்ற இடங்களில் நான் புரிந்தேன். திரைப்படத் துறைக்கு நான் ஏற்றவனல்ல. எனக்கு திரைப்படத்துறை ஏற்றது.

இரண்டையும் புரிந்து கொள்கிற இடங்களில் மட்டும்தான் என்னால் இருக்க முடியும். எப்போதும் திரைப்படத்திற்கு எழுதிக் கொண்டிருப்பது அப்படி ஒன்றும் உயர்ந்த நிலையல்ல என்பது என்னுடைய கருத்து. எந்த இசையமைப்பாளர் களிடத்திலும், எந்தக் காலத்திலும், எல்லாரோடும் சமரசமாக உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்கள் சரியானவர்கள் அல்ல என்றுதான் நாம் முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. நான் சரியானவன். சரியான இடங்களில் சரியான சமயங்களில் இருப்பேன்.

கேள்வி : சமகால திரைப்பாடல் பற்றி உங்களுக்கு எதிர்மறையான கண்ணோட்டம் இருப்பது போல் தெரிகிறதே?

Metha இல்லை. பாடலைப் பற்றிய கண்ணோட்டம் மட்டுமல்ல. சூழல்கள் பற்றிய கண்ணோட்டத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

கேள்வி : இந்த இடத்தில் அப்துல் ரகுமானின் ‘அம்மி கொத்தும் இடத்தில் சிற்பிக்கு என்ன வேலை’என்ற கருத்து வலுப்படுகிறதே?

அப்துல் ரகுமானுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு என்று சொன்னால், களத்துக்கு உள்ளேபோய் இந்தக் களத்தை என் கைக்குள் கொண்டுவர முடியுமா? என்று முயற்சி செய்ய வேண்டியது ஒரு வீரனுடைய வேலை. ‘இல்லை, இது எனக்கு ஏற்ற களமல்ல’ என்று ஒதுக்கித் தள்ளுவது ஒரு வீரனுடைய வேலையாகாது. அப்துல் ரகுமானைப் பொறுத்தவரைக்கும் திரைப்படத்துறை தனக்கு ஒத்துவராது என்று அவர் சொல்கிறார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் திரைப்படத்துறையில் இருப்பவர்களைப் பார்த்து குறையாகப் பேசுவது என்பது ஒத்துக் கொள்ள முடியாது.

‘சிற்பிக்கு எதற்கு அம்மி கொத்தும் வேலை?’ என்று கேட்பது ஒரு நல்ல கேள்வி போல் உங்களுக்குத் தோன்றக்கூடும். நான் அப்போதே அதற்கு பதில் சொன்னேன். சிற்பி அம்மி கொத்த வேண்டுமென்ற அவசியமில்லைதான். என்னுடைய கேள்வி ஒரு சிற்பி அம்மி கொத்த முடியுமா? முடியாதா? என்னிடத்திலே ஒரு பணி கொடுக்கப்படுகிறது. ஒரு இசை கொடுக்கப் படுகிறது. டியூனுக்கு எழுதுறோம். அவ்வளவுதான்.

அப்துல் ரகுமான் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதுவேறு. அதற்காக அவர் சொல்கிற கருத்தை எல்லாம் அங்கீகரிப்பது அவருக்கும் நல்லதல்ல. எனக்கும் நல்லதல்ல. அந்த விஷயத்தில் அவர் சொன்னது தவறு. அது ஒரு சவால். நான் ஒரு 500 பாடல்கள் எழுதியிருக்கேன். ‘ராஜராஜ சோழன் நான். எனை ஆளும் காதல் தேசம் நீதான்’ இதில் புதுக்கவிதையும் வருது, சந்தமும் வருது, சினிமாவுக்கேற்ற தன்மையும் இருக்கிறது.

‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது, சிறகை விரித்துப் பறப்போம், நம் உறவில் உலகை அளப்போம்’ என்று சினிமாவில் தானே நான் எழுதி இருக்கிறேன். நம்முடைய உறவின் மேன்மைகளை அன்பின் பெருமைகளைப் பார்த்து அதிசயப்பட்டு வானம் தன்னுடைய ஜன்னலை எல்லாம் திறந்துவிட்டு நம்மை எட்டிப் பார்க்கட்டும் என்கிற கற்பனை புதுசு.

‘நட்சத்திர ஜன்னல்’ என்று பல்லவியை எழுதுகிற போது, ‘இதைப் பாடமுடியுமா? வேறு பல்லவியைத் தாருங்கள்’ என்று கேட்டார்கள். நான் சொன்னேன், ‘இந்தப் பாட்டிலே இது ஒன்ணுதான் புதுசு. இதை மாற்ற வேண்டாம்’ என்று டைரக்டர் விக்ரமன் அவர்களுடனும், எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களுடனும் வாதிட்டு இந்தப் பல்லவியை நான் தக்கவைத்துக் கொண்டேன். சினிமாவிலும் எழுத முடியும். அதனால் சினிமாவை குறை கூற வேண்டிய அவசியமில்லை.

கேள்வி : 80களில் ஈழப் பிரச்சனை தீவிரமடைந்த போது உங்கள் கவிதைகளிலும் அந்தப் பதிவுகள் வலுவாக இடம் பெற்றன. குறிப்பாக மைய அரசின் நிலையை கடுமையாக விமர்சித்தீர்கள். இப்பொழுது மீண்டும் ஈழம் தீவிரமடைந் திருக்கிறது. என்ன சொல்கிறீர்கள்?

80களில் ஈழப்பிரச்சனை தீவிரமடைந்த போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் செயல் பாட்டை மிகுந்த கோபத்தோடு விமர்சனம் செய்தேன். ‘அமிதாப் பச்சனுக்கு அடிபட்டு விட்டதென்றால் அலறிக் கொண்டு ஓடுகின்றார். இலங்கையிலே பட்டப்பகலில் நட்ட நடுத்தெருவில், வெட்டொன்று துண்டிரண்டாய் விழுந்து கொட்டு கொட்டென்று கொட்டும் குருதியிலே தமிழ் கடந்து கோசங்கள் போடுவதும் வஞ்சமறியாத பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சினை பெய்த அம்பு நீண்டு கிழிப்பதையும் பார்த்த பின்பும் கேட்ட பின்பும் ஓர் அதட்டல் போடக்கூட உனக்கு அவகாசம் இல்லை யென்றால் சரியாடி பராசக்தி’ என்று கேட்டேன். இந்திரா காந்தியையே அப்படி கேட்டிருக்கிறேன். இன்றைக்கு இருக்கிறவர்களை கேட்பதற்கு என்ன வார்த்தை இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்திராகாந்தி அவர்கள் மட்டும் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பார்களே ஆனால் பிற்காலத்திலே அவர்களுடைய அணுகு முறையிலே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும்.

இன்றிருக்கிற மத்திய அரசைப் பற்றிய என்னுடைய கவலையெல்லாம் இவர்கள் யாரும் ஈழத் தமிழர்களை கைதூக்கி விடவேண்டிய அவசியமில்லை. அவர்களோடு கைகுலுக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை. எதிரிகளின் கையில் ஆயுதங்களைக் கொடுக்காமல் இருந்தால் அதுவே எங்கள் தமிழ் ஈழத்திற்கு செய்கிற பெரிய உதவி.

கேள்வி : சமகால கவிதையின் போக்குகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்றைய நவீன கவிதை என்பதும் நவீன எழுத்து என்பதும் தமிழ்ச் சமூகத்தினுடைய மனசாட்சியின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று நான் கருதுகிறேன். அறிவு ஜீவிகள் என்று சொல்கிற சிலபேருடைய அடாவடித்தனம் தமிழ் இலக்கிய உலகத்திலே இப்பொழுது நிகழ்ந்து வருகிறது. இன்றைய நவீன கவிதை ‘எழுத்து’ காலகட்ட ‘கசடதபற’ கால கட்ட கவிதையைப் போல போய்விட்டதோ என்று தோன்றுகிற விதத்திலே கவிதையின் வடிவ வெளிப்பாடுகள், உத்தி முறைகள், உணர்வுகளின் வெளிப்பாடுகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் மனித சமூகத்தின் மேன்மையை நோக்கி நடக்க வேண்டிய கலையை மனங்களினுடைய சூழ்நிலையை நோக்கி தள்ளிக்கொண்டு போகிறார்களோ என்று நான் கவலையோடு இந்தச் சூழலை கவனித்துக் கொண்டுள்ளேன். ஆனாலும் நம்பிக்கையுள்ள இளங்கவிஞர்கள், சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்கக் கூடிய கவிஞர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமூக அக்கறையுள்ள கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய வட்டம் அந்த வட்டத்திற்குள் பேசுகிற விசயத்தையே பெரிதுபடுத்திப் பேசி, பதிவு பண்ணி, இவர்களின் படைப்புகள் தான் கவிதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நவீன படைப்பாளிகள் தமிழ் பாரம்பரிய மரபுகளைக் கேலி செய்கிறார்கள். தமிழர்களுக்கு என்று இருக்கின்ற உணர்வுகளுடைய முன்னோட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள். தமிழை விட்டு தமிழர்களை நகர்த்தப் பார்க்கிறார்கள். இதை எதிர்த்து நம்முடைய போர் தொடர வேண்டிய கால கட்டம் இது.

கேள்வி : சமகால கவிதைகளில் பெண்மொழி, தலித் மொழி என்றெல்லாம் சொல்வது பற்றி உங்கள் கருத்து என்ன?

கவிதை ஒரு மொழி. கவிதையில் பெண்மொழி, கவிதையில் தலித் மொழி என்றெல்லாம் பகுத்துப் பார்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருவள்ளுவன் சொன்னதை தலித்தின் குரல் என்று சொல்வீர்களா? ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்; பரந்து கெடுக உலகு இயற்றியான்’ஒருவன் பிச்சை எடுத்துக் கூட வாழ வேண்டும் என்ற நிலை இந்த சமூகத்தில் இருக்குமானால் இந்த சமூகத்தினுடைய படைப்பாக்கங்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற அந்த ஆவேசக் குரல்; அவன் ஒரு ‘கம்யூனிஷ்டா’. எந்த விதத்திலே அவனை பிரிப்பீர்கள். பெண்களுக்காக ஆண்களே நிறையப் பேசி இருக்கிறார்கள். ஆண்களுடைய மொழியும் பெண்மொழிதான். பெண்களுக்காக மொழியப்பட்ட மொழியெல்லாம் பெண்மொழிதான்.

அதே மாதிரி தலித்துகளுக்காக தலித்துகளே எழுத வேண்டும் என்கிற அவசியமில்லை. தலித்துகளுக்காக மற்றவர்கள் எழுதி இருக்கிறார்கள். பாரதி எழுதலையா தலித்துகளுக்காக? ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளை பரங்கியை துரையென்ற காலமும் போச்சே’, ‘ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கு இருப்பவரன்றோ’ ‘உங்களால் ஈனப்பறையரென்று சொல்லப்படுபவர் அவர் எம்மோடு வாழ்ந்திங்கு இருப்பவர்’. ‘சீனத்தவராய் விடுவாரோ’ என்று கேட்கவில்லையா? அவன். தலித் பாரதி என்று சொல்லிக் கொண்டா அவன் எழுதினான். இதற்கெல்லாம் அப்பப்ப ஒரு புது போஸ்டர்கள் அடிக்க வேண்டியதிருக்கிறது. புதிய கொடிகளை காட்ட வேண்டி இருக்கிறது. அப்ப தலித் பாரதி என்று சொல்லிக் கொண்டா அவன் எழுதினான். தகழி சிவசங்கரன் பிள்ளையினுடைய எழுத்தில் தலித்தியம் இல்லையா? வேறுபடுத்தி வகைப்படுத்தி பார்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com