Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
புத்தக விமர்சனம்

நிலைக் கதவுகளுக்கு அப்பால் துள்ளும் தொலைகடல் பார்வைகள்
யவனிகா ஸ்ரீராம்


உமாமகேஸ்வரியின் 14 சிறுகதைகள் அடங்கிய ‘தொலைகடல்’ என்ற தொகுப்பு தமிழினி பதிப்பாக 2004 டிசம்பரில் வெளியாகி உள்ளது. பெண் கவிஞர்களில் குறிப்பிடத் தக்கவரும் ‘மரப்பாச்சி’ சிறுகதையின் மூலம் வெகுவாக அறியப்பட்டவருமான உமா மகேஸ்வரியின் படைப்புகளை பரவலாக வாசித்திருப்பவன் என்ற முறையில் இச்சிறுகதைத் தொகுப்பை படிக்க நேர்ந்தது. ஒரு புதிய அனுபவம்தான்.

உறுத்தாத இயல்பான மொழிநடையானது சிறுகதைக்கென தேர்ந்து கொள்ளும் கருக்களை கச்சிதமான பெண்ணுலகாய் மாற்றிக் காட்டுகிறது. ஏறக்குறைய உமா மகேஸ்வரியின் மொழிநடையில் இதுவரை வந்த தமிழ்ப்பெண் எழுத்தாளர்களின் அத்தனை சாயல்களையும் அதைக் கடந்து வெளிப்படுகின்ற தனித் தன்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம். தமிழில் அம்பை, கனிமொழி, மாலதி மைத்ரி, அனாமிகா, சல்மா, திலகவதி, வாசந்தி, சமீபமாக தமிழ்ச்செல்வி என உரைநடையில் இயங்குபவர்களைப் பற்றிய அவதானிப்பூடாகத்தான் உமா மகேஸ்வரியை பிரத்யேகமாக அணுக வேண்டியிருக்கிறது. இவர்களுக்கிடையேயான சிறுகதைப் பண்பு உலவும் உலகத்தை ஆண் எழுத்தாளர்கள் எழுதித் தள்ளும் நுட்பமான விஸ்தரிப்புகளுக்கு இடையே வைத்துப்பார்ப்பது தேவையற்றது என்றாலும் ஆண்களின் நெறிபடும் இறுக்கத்திற்கிடையே ஒரு இலகுவான கதைக்கூறல் இவர்கள் எல்லோருக்கும் சாத்தியமாகியிருப்பதைக் காண்கிறோம்.

ஆண்கள் சித்தரிக்கும் அபாயகரமான அரசியல் மற்றும் தனி நபர் உளவியல் விபரீதங்கள் மேலும் அடையாளத்துக்கான ஆவண எழுத்து எதார்த்த வகைகள், பரிசோதனை முயற்சிகள், மேற்கத்திய வடிவத்தை தளுவி எழுதமுயலும் பார்வைகள் போன்றவற்றை பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இன்று சமூகத்தின் பெரும் பரப்பில் உலவ நேர்ந்தாலும் பெண்கள் தன்னைச்சுற்றி இருக்கும் சின்ன உலகத்து மனிதர்களையும் மதிப்பீடுகளையும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்னிலைகளையும் வீடு சார்ந்த உறவுகளோடு அதில் உண்டாகும் சுதந்திர வேட்கையினையும் தன்போக்கான அறிதல்களையும் உளவியல் சிதைவுகளின் வழியே அழகியல் தன்மைகளை எழுப்பி மொழியை நேசிப்பதாகவுமே படைத்து வருவது ஒட்டுமொத்தப் பெண்ணின் இலக்கிய மதிப்பைக் கவனப்படுத்துகிறது. பொதுவான வாசிப்பிலிருந்து பெண் விலகி உருவாக்கும் மொழிநடையை தீவிரமாக எதிர்பார்க்கும் நமக்கு அவை ஓரளவு முக்கியத்துவம் பெற்றுவருவதோடு அவர்கள் எழுதும் கவிதைகளில் தான் அதற்காக அதிக வீச்சுகள் கிடைக்கின்றன என்பதைச் சொல்லிவிட்டு ‘தொலைகடல்’ தொகுப்பிற்குள் நுழையலாம்.

அதிகமும் வீடு சார்ந்த பெண் குழந்தைகளின் மன உலகம் தொடங்கி விரிவாகி மதிப்பீடுகள் சார்ந்த மத்திய தரக்குடும்பத்துப் பெண்களின் மீதான விமர்சனமாகவும் ஆண்கள் குறித்து அபரிமிதமாய் பெருக்கிச் சொல்லும் கனவுலக முரண்பாடுகளே உமா மகேஸ்வரியின் கதைகளுக்கான பொதுத் தன்மையாகிறது. குடும்ப வாழ்வின் சரி தவறுகளுடன் குழந்தைப் பருவத்து நினைவுகளைத் துல்லியமாக கலக்க முயலும் படைப்பாளி வெளிப்பாடுகளை பூடகப் படுத்துவதோடு தன் புறவுலக ஆளுமைகளையும் துலங்கத் தருவதில்லை. ஆனால் கதைகளுடாக வெளிப்படும் கனவுசார் நீட்சிகளோ பெண்ணில் அடியுறங்கும் சமூக அதிர்வுகளாக துடித்துக் கொண்டிருக்கிறது.

தொகுப்பில் ‘என்றைக்கு’ என்ற சிறுகதையில் ஒரு அணில் குஞ்சிற்கு கிரி எனப் பெயரிட்டு தன் பிடிவாதத்தால் அப்பாவையும் மீறி வீட்டில் வளர்க்கும் தன் பெண் குழந்தையின் நடத்தைகளை துல்லியமாக கணக்கிட்டு வளர்க்கும் ஒரு தாய்க்குமான உரையாடல் மிக இயல்பாய் வெளிப்பட்டிருக்கின்றன. அணிலை கருணையற்று விரட்டிவிடச் சொல்லும் தந்தையை அவன் அதிகாரத்தை மங்கலாக்கி அதோடு குழந்தையின் பிடிவாதத்தை கட்டுப்படுத்தி அணிலைச் சுதந்திரமாக விரட்டிவிட்டு தன்னோடு மகளைச் சமாதானப்படுத்தி உறங்க வைக்கும் தாயின் கறாரான நடத்தை குழந்தையின் மீதான அக்கறையாகவும், மெல்லிய வன்முறையாகவும் மிளிர்ந்திருப்பது அதை ஒரு நல்ல சிறுகதையாக மாற்றியிருக்கிறது. தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை எனலாம். பெண் தனக்கு கீழ் குடும்பத்தை எப்படி சாதுர்யமாக வசப்படுத்தி ஆளுமை செய்ய முடியும் என்ற அளவில் இக்கதை சிறப்பிற்குரியது.

‘அறிவு’ என்னும் கதையில் கருணையற்ற பெண் சுதந்திரத்தின் வெளி ஒரு பெண்ணை அருவிக்கு அழைக்கும் குரலாக மாறி கனவு வெளிக்குள் உடலை தூக்கிக் கொண்டு இயற்கையோடு உரசிப்பார்க்கும் பயணமாக தன்னிச்சையை வெளிப்படுத்தும் உரையாடலாக மாறிவெளிப்பட்டிருக்கிறது. ஆசிரியரின் எடுத்தியம்பும் ஆற்றல் உடலுக்கும் மனதுக்குமான பரிவர்த்தனையை வேண்டுகிறது. இது காமம் மட்டுமல்ல. உடலின் இறைமையாகவும் இருக்கிறது. அந்த ஆண்குரல் ஆண்டவனுடையதைப் போல சகல துன்பங்களையும் தீர்க்கும் சுதந்திரத்தின் அழைப்பாகவும் இழுத்துச் செல்வதை நாம் காண்கிறோம். தன்னுடல் இதுவரை லட்ஜையற்று பயணித்ததாக உணரும் சூழலில் எதார்த்தத்தை முன்வைத்து வீட்டின் கூடத்திலேயே கதையை முடிக்கிறார். எனக்கென்னவோ அக்கனவு விழிப்படையாமல் ஒரு முடிவற்ற தன்மையிலேயே விட்டிருந்தால் அதுதரும் உணர்வுகள் வேறுவிதமாயிருக்க வாய்ப்பிருக்கிறது.

தொகுப்பில் இன்னுமொரு சிறப்பான கதை ‘வடு’. வயதிற்கு வராத ஒரு பெண்ணின் நடைமுறை வாழ்வின் குழப்பமும் அதற்கு பரிகாரம் செய்வதாக சொல்லும் பூசாரிகளின் அயோக்கியத்தனமான செயலும் ஒரு புறமிருக்க வன்புணர்ச்சிக்கு ஆளான அப்பெண்ணின் நிலையை மறைத்து திருமணம் செய்துவைக்கும் போது அவள் இன்னும் பூப்படையாத நிலையில் கணவன் தொடும்போது உண்டாகும் வெறுமை, அவனை ஏமாற்றும் தந்திரம், அதனூடான வலி போன்றவை இதுவரை தமிழில் பேசாத ஒரு புதிய உலகத்தை காட்டுகிறது. உறவு கொள்ள முடியாத ஒரு பெண்ணின் இருப்புதான் சகஜ வாழ்வில் எத்தனை வித்தியாசமானது?

இத்தொகுப்பில் முதல் கதையான ‘மூடாத ஜன்னல்’ நம்மை இனம்புரியாத சோகத்தில் ஆழ்த்துகிறது. சிவாம்மா என்ற வேலைக்காரியை அக்குழந்தைகளின் தகப்பன் தனது பாலியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் போது அவர்களது தாயின் உள்ளக் கொதிப்பும் அதை ஒட்டிய அவமானத்துடன் வெளியேறும் வேலைக்காரியும் தொலைபேசியில் அக்குற்றத்தை பகிரங்கப்படுத்த விடாமல் அத்தந்தையின் தாயானவள் நாகரீகமாக மறுப்பு சொல்வதும் குடும்பத்தில் உள்ள ஒரு ஒற்றை ஆணை முன்வைத்து பல பெண்கள் இயங்கும் நாடகவெளியாய்மாறி மரபு வெளிப்பட்ட பெண் அடையாளங்களாய் இக்கதையில் மீந்து நிற்கிறது. நல்லது / கெட்டது என தீர்மானிக்க முடியாதபடி தம் மனம் போன போக்கில் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் குழந்தைகளின் பார்வையில் மிகையின்றி இக்கதை சொல்லப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

உமா மகேஸ்வரியின் கதைகளை படிக்கும் போது ஆணின் வரலாற்றுப் பாத்திரங்களுக்கிடையே பெண் தனது அடையாளத்தை தீவிரமாய் தக்க வைக்கச்செய்யும் உத்திகள் பெருந்தாபத்துடனே பதிவு செய்யப்படுவதாய் சொல்லலாம். ‘மழை’ என்ற கதையில் மருமகளாக வந்த பெண்ணிடம் சகமனுஷியான மாமியார் என்ற உறவு கேட்கும் கற்புசார்ந்த கேள்வி அவளின் ஒட்டுமொத்த குழந்தைக் கனவுகளையும், அபிலாஷைகளையும் கலைத்துப்போட்டு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மனச்சிதைவை உண்டாக்கக் கூடியதும் அவமானத்தில் மனம் குமுறும் அதிர்வாகவும் நின்றுபோகிறது. வார்த்தைகள் தான் வாழ்க்கையோடு எவ்வளவு உறவுபூண்டு வலிமை அடைந்திருக்கிறது என்பதற்கு இக்கதை ஒரு சாட்சி. ஆணை தன்னுடன் தனிமைப்படுத்தும் போது அவனை தன் வசப்படுத்துவது ஒரு பெண்ணிற்கு ஏதுவாக இருக்க அந்நிலையில் அவளிடம் ஒத்துப்போகும் ஒரு ஆண் தன் குலப்பெருமை, பெற்றோர் பெருமிதம், குடும்ப கௌரவம் போன்றவற்றில் தூண்டப்படும்போது பெண்ணின் அத்தனை அசைவுகளையும் கட்டுப்படுத்தும் வன்முறையின் வடிவமாகி போகிறான். இதற்கு ஆதாரமான ஒரு குடும்பம் எவ்வளவு மோசமான ஒரு கருத்தியல் வன்முறை வடிவம் என்பதை இக்கதை நமக்கு மறைமுகமாய் தெரிவிக்கிறது.

‘கவலை’ நாவலில் அழகிய நாயகியம்மாள் எழுதிக் செல்வது போலவும் சல்மாவின் ‘இரண்டாம் சாமத்தில்’ பெண்களால் பேசப்படும் பின்கட்டு உரையாடல்களும் உமா மகேஸ்வரியின் கனவும் குழந்தைமையும் கூடிய மொழிநடையில் தீவிரமாகி நமது சமூக வாழ்வில் பெண்ணிற்கான பல கோணங்களை சமகால இருத்தலாய் நமக்கு காட்சிப்படுத்துகின்றன. பல இடங்களில் உமாவின் கவித்துவச்சாயல்களின் வீச்சு நுட்பமானதாகவும் அளவிற்கு உட்பட்டதாகவும் இருப்பது தனிச்சிறப்பு. முழுத் தொகுப்பையும் வாசிக்க அலுக்கவில்லை என்பதே ஆசிரியரின் முக்கியத்துவத்தை கூட்டுகிறது. இன்றைய ஏகாதிப்பத்திய நெருக்கடியில் வீட்டை விட்டு வெளியேவர வேண்டிய அவசியத்தில் இருக்கும் பெண் வாழ்வு இருகூறாக பிளவு பட்டிருக்கிறது. வீட்டிற்கு வெளியே இன்று பெண்கள்தான் பல புதுமையான விளைவுகளை உருவாக்குகிறார்கள்.

மூன்றாம் உலகத்தில் அதுவும் இந்தியா போன்ற நீண்ட கால சனாதன மரபில் உழலும் ஒரு நிலத்தில் பெண்களால் உண்டாக்கப்படும் உற்பத்தி உறவு அதன் பொருளாதார சார்புகள்யாவும் ஆணிய சட்டகத்துக்குள்ளேயே மீண்டும் மீண்டும் அடைக்கப்படுகின்ற தொடர்ச்சியான அவலத்தில் பெண் சுதந்திரம், பெண் இயங்கும் வெளி, பெண்ணின் வேட்கைகள் போன்றவை ஒரு புரட்சிகரமான விளைவை உருவாக்க முடியுமா? குடும்பம் ஏன் பெண்களை தனக்குள் அடைகாக்கிறது? சமூக வயமான ஒரு பெண் எந்த விடுதலையை வேண்டுகிறாள்? குடும்பத்திற்குள் தன்னால் உருவாக்கிக் கொள்ள முடிகின்ற ஆளுமையை அதிகாரத்தை பெண் உள்ளபடியே வரவேற்கிறாளா? ஆணின் தலைமையில்லாமல் பெண்ணிற்கு தனியான இருப்பு உண்டா? அப்படியிருந்தால் அதற்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையென்றால் பெண்கள் அரசியல் ரீதியாக அதை உருவாக்கிக் கொள்ள முடியுமா? அதற்காக போராட்டங்கள் இருக்கிறதா? என்பதையெல்லாம் ஒரு மத்தியதர மனோநிலையில் கதைசொல்லி வந்திருக்கும் உமா மகேஸ்வரியின் படைப்புகளுக்குள் சிறுசிறு வீச்சுகளாக, கேள்விகளாக நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

சாதி, சமயம், வர்ணங்கள், வர்க்கம் வழியாக பெண் நிலைகளை அணுகத் தெரிந்திருக்கும் உமா மகேஸ்வரி தீவிரமான மீறல்களின் மேல் எந்த நம்பிக்கையும் வைக்காமல் குடும்பத்திற்குள்ளான வன்முறையையும் அதற்கான மாற்றுகளையும் சற்றே புத்திசாலித்தனமான முறையில் தமிழில் சிறுகதைகளாக பேசத்தந்திருக்கும் வகையில் நவீன குடும்பங்களுக்கான ஒரு சில முன்மாதிரிகளை சமூகப்பரப்பில் முன்வைக்கிறார் என்பதோடு எதிர்கால குடும்பங்களுக்கான முன் அசைவுகளையும் தளர்ந்திருக்கும் இறுக்கங்களையும் அடையாளப் படுத்துகிறார் என்பதால் தமிழின் சிறுகதை தளத்தில் அவரது முக்கியத்துவத்தை நாம் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. பாலியல் தளத்தில் பெண்களின் கவித்துவ உச்ச நிலையை பரவசமாக்கும் உரை நடையில் அவர் மனத்தடையற்றும் இயங்குவதை நாம் கூடுதல் ஆரோக்கியமாக வரவேற்று ‘தொலைகடல்’ தொகுப்பை வாசித்து மகிழலாம்.

நூல்: தொலைகடல், ஆசிரியர்: உமா மகேஸ்வரி, வெளீயீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. விலை: ரூ.50/- பக்கம்: 127


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com