Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

திருப்பூர் நொய்யலாற்று பரிதாபம் விடிவுகாலம் பிறக்குமா?
ராஜசேகரன்


நீதிமன்றத்தின் அடுத்தடுத்த உத்தரவுகள் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர் சாயப்பட்டறை உரிமையாளர்கள். ‘சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கான நிலையங்களை அமைக்க முயற்சி எடுக்காத (25ரூ முன் பணம் செலுத்தாத) 660 ஆலைகளை மூட வேண்டும்’ என்பதுதான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஆலை அதிபர்கள் 25ரூ முன் பணத்தை 10ரூ குறைக்க வேண்டும் என்றும் ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ முறையில் கழிவு நீரை வெளியேற்ற தற்போது 10ரூ முன்பணத்தை செலுத்துவதாகவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்ட (மொத்தம்-729) 660 சாயப்பட்டறைகளில் 571 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 89 சாய ஆலைகள் மட்டுமே முன்பணம் செலுத்தியிருக்கினறன. வழக்கு விசாரணையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் காலங்காலமாக இருந்து வரும் இப்பிரச்சனையைத் தீர்க்க மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கினறன என்று பார்த்தால் ‘ஒன்றுமே இல்லை’ என்பது தான் பதிலாக வருகிறது.


அன்று முதல் இன்று வரை

1989-ல் அரசு நிலை
நீர் நிலைகளிலிருந்து 1கி.மீ. வரை சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய எந்தத் தொழிற்சாலையும் அமைக்கக் கூடாது என்று 1989-ம் ஆண்டு (அரசாணை எண்: 213) அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாயப்பட்டறை உரிமையாளர்கள் நிலை
இந்த அரசு ஆணையிலிருந்து நொய்யலாறுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைக்கிறது.

1992-ல் அரசு நிலை
பாசன வசதிக்காக ஒரத்துப்பாளைய நீர்த் தேக்கம் 2245 ச.கி.மீட்டரில் 1992-ம் ஆண்டு திறப்பு.

சாயப்பட்டறை உரிமையாளர்கள் நிலை
நொய்யலாறு ஒரு வறண்ட ஆறு. இதில் ஓடும் தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாதென்று எதிர்த் தரப்பு வாதம்.

பிரச்சனை:
அணை கட்டப்பட்டது முதல் இன்று வரை ஒரு முறை கூட அணை திறக்கப்படவில்லை. மாறாக, திருப்பூர் சாயக் கழிவுகள் தேங்கும் ஒரு கழிவு நீர்த் தேக்கமாகவே அணை இருந்து வருகிறது

2005-ல் அரசு நிலை
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க 25ரூ முன்பணத்தை செலுத்தாத 660 சாயப்பட்டறைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு. இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து 571 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு.

சாயப்பட்டறை உரிமையாளர்கள் நிலை
சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 10ரூ முன் பணம் செலுத்துவதாக பிரமாணப்பத்திரம் உயர்நீதி மன்றத்தில் தாக்கல்.

சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியேற்றபின் நிதியமைச்சராக மகுடம் சூட்டிய ப. சிதம்பரம் அவர்கள் 7500 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்பதற்காக ‘பின்னலாடைப் பூங்கா’வை ஆரம்பித்து வைத்ததோடு சரி; அங்கிருக்கக் கூடிய பிரச்சனைகளைப் பற்றி வாயே திறக்கவில்லை. பனியன் தொழிலின் முக்கியப் பொருளான சாயங்களைத் தயாரிக்கும் சாயப்பட்டறைத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 10 லட்சம் தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசாதது வேதனை அளிக்கிறது என்கிறார் தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த ராமநாதன். தமிழகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை திருப்பூர் பனியன் தொழிலை நம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல தடவை நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசால் உருப்படியான ஒரு அறிக்கையைக் கூட தாக்கல் செய்ய முடியவில்லை. இதற்கு முன் 2002 ஆம் ஆண்டு மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவின் பேரில் கரூரில் மட்டும் சுமார் 110 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. இவற்றைத் திறக்கக் கோரி 2003 ஜனவரி மாதத்தில் அங்குள்ள 600 பட்டறைகள் வேலை நிறுத்தம் செய்தன. அதன் பின்னர் என்ன நடந்ததென்றே தெரியவில்லை. மீண்டும் 110 சாயப்பட்டறைகளும் திறக்கப்பட்டு வேறுவேறு பெயர்களில் வேறுவேறு இடங்களில் மீண்டும் தொழிலை ஆரம்பித்து விட்டன.

இது போன்ற சம்பவங்களின் போது அங்குள்ள அரசியல் கட்சிகளால் எடுக்கப்படும் பிரச்சனைகள் எல்லாம் ‘ஆலையை உடனே திறக்க வேண்டும். தொழிலாளர்களைக் காக்க வேண்டும்’ என்பது தான். இதோடு அந்தப் பிரச்சனைகள் ஓய்ந்து விட்டதாக நினைத்து விடுகின்றன. ஆனால் காலங்காலமாக இப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களின் நிலங்களெல்லாம் உப்புத் தன்மை கூடி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருவதை எந்தக் கட்சியும் பேசுவதில்லை. தற்போது வேறுவிதமாக இந்தப் பிரச்சனையை அரசியல் கட்சிகள் கையிலெடுத்திருக்கின்றன. 25ரூ முன்பணம் என்பது ஆலை அதிபர்களால் கொடுக்க முடியாதது. எனவே அரசு 25ரூ முன்பணத்தை தொழிலதிபர்களுக்கு மானியமாகக் கொடுக்க வேண்டும் என்று பெருமுதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கி உள்ளார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

‘சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிப்பதற்கு 10ரூ முன்பணம் மட்டுமே தங்களால் செலுத்த முடியும்; இந்த ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ தொழில் நுட்பம் முழுமையான பலன் கொடுக்குமா என்றும் தெரியவில்லை; அரசு இது குறித்து விளக்க வேண்டும்’ என்று ஆலை அதிபர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பிலிருந்து இவர்களின் கோரிக்கைக்கு உரிய விளக்கம் அளிக்காதது பிரச்சனையை மேலும் பெரிதுபடுத்தியுள்ளது.

2005 ஆகஸ்ட் மாதத்தில் ‘டெங்கு’ எனப்படும் விஷக்காய்ச்சலுக்கு 12 வயது பள்ளி மாணவியும் 4வயது சிறுவன் ஒருவனும் பலியாகியிருக்கின்றனர். இது மீடியாக்களால் வெளியுலகிற்கு கொண்டு வரப்பட்ட செய்திகள். வெளிவராமலே தினம் தினம் பல்வேறு விதமான தொற்று நோய்களுக்கு ஆளாகி பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். தமிழகக் கிராமங்களிலும் காவிரி டெல்டாப் பகுதியிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வறட்சியின் விளைவாக பல்வேறு தரப்பட்ட மக்களும் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் திருப்பூரை நோக்கி படையெடுப்பதால் தண்ணீர்ப் பிரச்சனை மேலும் விசுவரூபம் எடுத்துள்ளது.

பயன்படுத்த முடியாத அளவுக்கு நச்சுத்தன்மை ஏறியுள்ள தண்ணீரையே வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் பலரும் பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையேயும் திருப்பூரிலும் அதனைச் சுற்றியுள்ள சாயப்பட்டறைகளுக்கும் பிளீச்சிங் தொழிற்சாலைகளுக்கும் தினந்தோறும் 10கோடி லிட்டர் தண்ணீர் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் விளைவாகக் கிராமங்களின் நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது.


திருப்பூரின் அவல நிலை

  • திருப்பூரில் 729க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளும் பிளீச்சிங் தொழிற்சாலைகளும் உள்ளன. சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் 1200 அடி வரை உபயோகப்படுத்த முடியாததாகி விட்டது.


  • சாயப்பட்டறைகளின் தேவைகளுக்காக சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஒரு நாளைக்கு எடுத்துச் செல்லப்படும் நீரின் அளவு 10 கோடி லிட்டர்.


  • 1997ல் நிரம்பி வழிந்த ஒரத்துப்பாளையம் அணை நீரைக் குடித்த ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துவிட்டன. ஆடு, மாடுகள் கருத்தரிக்க இயலாமல் மலட்டுத் தன்மை அடைந்துள்ளன.
  • இதனால் விவசாயத்திற்கு கிடைத்து வந்த நிலத்தடி நீரும் வேகமாகக் குறைவதோடு 10கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றப் படுவதால் மீதமிருக்கின்ற நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது. நொய்யலாற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அவற்றின் இருபுறமும் அமைந்துள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் 300 அடி வரை உபயோகப் படுத்த முடியாததாகி விட்டது என்று கூறுகிறது. நிலைமை தினமும் மோசமாகிக் கொண்டே போகிறது. தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் எடுக்க வரும் லாரிகளைச் சிறைபிடிப்பதும் பல கிராமங்களில் தண்ணீர் லாரிகளை எதிர்த்து விவசாயிகள் முற்றுகைகளில் ஈடுபடுவதும் தொடர் கதையாகிக் கொண்டே போகிறது. விவசாயக் கூட்டமைப்பு ஒன்று இந்தப் பிரச்சனையை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக தற்போது பலன் கிடைத்தது.

    உயர் நீதிமன்றமும் 19.6.05லிருந்து வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் சாயப்பட்டறைகள் மூடப்பட வேண்டும் என்றும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் 20 கோடி ஏக்கர் சாயக் கழிவு நீர் வெளியேறுவது தவிர்க்கப்படும் என அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி சிறிது ஆறுதல் அளித்தாலும் இதை கண்காணிக்க குழு எதுவும் அமைக்கப்படாததால் இதுவும் சோடை போக வாய்ப்பிருக்கிறது.

    அவ்வப்போது இது போன்ற நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்படுவதும் சாயப் பட்டறைகள் மூடப்படுவதும் மீண்டும் திறக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உருப்படியாக ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இதைத் தவிர்க்க வேண்டுமெனில் உப்புக்குச் சப்பாக இருக்கும் சுற்றுச் சூழல் சட்டங்களை கடுமையாக்குவதும் திருப்பூர் சாயப்பட்டறைகளை முறைப்படுத்துவதற்கு அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க வேண்டியதும் கட்டாயம். இதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் இது பற்றி சிந்திக்க வேண்டும். இல்லையெனில் நொய்யலாறு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் சிந்திக்கவைப்பார்கள்.
    
    நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

    படைப்பாளிகளின் கவனத்திற்கு...

    கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

    

    Tamil Magazines
    on keetru.com


    www.puthuvisai.com

    www.dalithumurasu.com

    www.vizhippunarvu.keetru.com

    www.puratchiperiyarmuzhakkam.com

    http://maatrukaruthu.keetru.com

    www.kavithaasaran.keetru.com

    www.anangu.keetru.com

    www.ani.keetru.com

    www.penniyam.keetru.com

    www.dyfi.keetru.com

    www.thamizharonline.com

    www.puthakam.keetru.com

    www.kanavu.keetru.com

    www.sancharam.keetru.com

    http://semmalar.keetru.com/

    Manmozhi

    www.neythal.keetru.com

    http://thakkai.keetru.com/

    http://thamizhdesam.keetru.com/

    மேலும்...

    About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
    All Rights Reserved. Copyrights Keetru.com