Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

உமிழ்ந்து பூச்சூடுதல்
பேரா.ஞா. ஸ்டீபன்


நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இயல்பாகப் பிணைந்து கிடக்கும் பல நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் நமக்கு வினோதமாகத் தெரிவதில்லை. ஆனால் நம்மிடம் பழக்கத்தில் இல்லாத ஒரு பழக்கமோ வழக்கமோ இன்னொருவரிடம் காணப்பட்டால் அது நமக்கு “வினோதமானதாக” தெரிகிறது.

மேலைநாட்டவர்கள் நம்மிடம் இருக்கும் சாதி அமைப்பைக் காணும் போது அவர்களுக்கு அது ‘வினோதமானது’. ஏனெனில் அவர்களிடம் நம்மிடம் இருப்பது போன்ற சாதி அமைப்பு இல்லை.

‘வினோதம்’ என்பதை ஒப்பீடு செய்வதிலிருந்து அடையாளப் படுத்துகிறோம். ஒரு பண்பாட்டில் இருந்து இன்னொரு பண்பாடு வேறுபடுத்தப்பட்டு அவற்றுக்கிடையிலான தனித்தன்மையை அடையாளப்படுத்துவதாக ‘வினோதம்’ அமைகிறது.

நடைமுறையில் வினோதம் என்ற சொல் நாகரீகமற்றது, காட்டுமிராண்டித் தனமானது, மூடத்தனமானது என்ற பொருளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ‘வினோதம்’ என்ற சொல் இந்த அர்த்தங்களுக்குள் அமிழ்ந்து விடும் ஒன்றல்ல.

தமிழகத்தில் உமிழ்ந்து பூச்சூடும் ஒரு பழக்கம் இருக்கிறது. தென் தமிழ்நாட்டில் பொழுது சாய்ந்த பின்னர் தலையில் பூச்சூடி வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படும் பொழுது பெண்கள் பூவில் மூன்று முறை உமிழ்ந்து தலையில் சூடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பாண்டிச்சேரி உள்ளிட்ட வடதமிழகத்தில் இந்த வழக்கம் இல்லை. அங்குள்ள பெண்களுக்கு இது ஒரு ‘வினோதமான’ ஒன்றாக இருக்கிறது.

இந்த வழக்கத்திற்கான பண்பாட்டு பின்னணி என்ன? வட தமிழகத்தில் இந்த வழக்கம் ஏன் இல்லை? என்பது ஆய்வுக்குரிய ஒன்று. பொதுவாக தமிழகத்தில் இரவு நேரம் பெண்களை வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. மின்வசதி இல்லாத காலத்தில் இது மிகவும் வலுவாக இருந்தது. மின்சார வசதி, நகரமயமாக்கம் இவற்றின் காரணமாக இன்று இந்தக் கட்டுப்பாடு நெகிழ்ந்து காணப்படுகிறது. ஆனாலும் இரவில் பெண்கள் வெளியில் செல்வது தொடர்பாக உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கப்படுகின்றன. அதில் ஒன்றே உமிழ்ந்து பூச்சுடுதல்.

ஆவிகள் தொற்றிச் செல்லும் பொருட்களில் பூவிற்கு இன்றியமையாத இடமுண்டு. பூவின் வழியாக பல தெய்வங்கள் தொற்றிச் செல்வது குறித்த நம்பிக்கைகளும், நிகழ்ச்சிகளும் பல உள்ளன.

இசக்கியம்மன், மாரியம்மன், முத்தாரம்மன் போன்ற பெண் தெய்வங்கள் மிக எளிதில் பூவில் தொற்றிச் செல்லும் இயல்புடையன என்பது நம்பிக்கை. இத்தெய்வங்களின் பரவலில் தொற்றிச் செல்லுதல் என்பது இன்றியமையாத இடத்தை வகிக்கின்றது. ஒரு தெய்வம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பரவிச் செல்ல தொற்றிச் செல்லும் முறையை பயன்படுத்தும். இவ்வாறு நிலை பெறும் தெய்வங்களை “தொற்றி வந்த தெய்வம்” என அழைப்பதுண்டு. இதுபோன்றே தீய ஆவிகளும் பூவின் வழியாகத் தொற்றிச் செல்லும் என்பது நம்பிக்கை.இரவு நேரம் மனித நடமாட்டத்துக்கு உரியதில்லை. தெய்வங்களும் ஆவிகளுமே இரவில் நடமாடும் என்பது நம்பிக்கை. எனவே இரவில் பூச்சூடி நடமாடும் பெண்களிடம் தெய்வங்களும் ஆவிகளும் தொற்றிக் கொள்ளும் என அஞ்சப்படுகிறது. பூவின் மணம் ஆவிகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதிலிருந்து தங்களை பாதுகாக்க பெண்கள் இரவில் உமிழ்ந்து பூச்சூடுகின்றனர். உமிழ்ந்து பூச்சூடுவதற்கும் ஆவி தெய்வங்கள் தொற்றிச் செல்வதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் என்ன தொடர்பு?

எச்சில் நம் சமூகத்தில் தீட்டாக கருதப்படுகிறது. தீய ஆவிகளுக்கு எதிரானதாகவும் எச்சில் நம்பப்படுகிறது. தீய ஆவிகளிலிருந்து காத்துக் கொள்ள எச்சில் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படுவதை வழக்கில் காணலாம். இதன் அடிப்படையிலேயே இரவில் சூடப்படும் பூவில் எச்சில் உமிழப்படுகிறது. பூவில் உமிழ்வதன் மூலம் அது தெய்வங்களும் ஆவிகளும் தொற்றிச் செல்வதற்கு தகுதியற்றதாக மாற்றப்படுகிறது.

தெய்வங்கள் பலி ஏற்கும் விலங்குகள், பறவைகள் குறையற்றதாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. குழந்தைகள் இறந்து போனால் காது அல்லது மூக்கில் குத்தி உடலில் குறை ஏற்படுத்தும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக உள்ளது. குறையுடைய ஒன்றை தெய்வம் ஏற்காது என்ற அடிப்படையே இவற்றின் பின்னணி.

இந்த நம்பிக்கைகளின் பின்னணியிலேயே உமிழ்தலின் காரணமாக ‘பூ’ குறைபாடுகளுடையதாக மாற்றப்படுகிறது. எச்சில் பட்ட எந்தப் பொருளையும் தெய்வம் ஏற்பதில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே பல கோயில்களில் படையலாக படைக்கும் உணவுப் பொருள்களை சமைப்பவர் சமையலின் போது வாயில் துணி கட்டியிருப்பதையும் காணலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com