Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
புத்தக விமர்சனம்

நிமிர்ந்த ஏணிகள் நிறைந்த வாழ்க்கைப் பாதை
சரவணன் 1978


ரஜினி என்ற ஒரு மனிதன் கடந்துவந்த பாதையில் பின்நோக்கிப் பயணித்து, அந்த மனிதன் இன்று இங்கு நிற்க, அன்று அவருக்கு உதவியவர்கள் முதலாக அவரது முழு முயற்சிகள் வரை புள்ளி விபரமாக ஜெ.ராம்கி தொகுத்தெழுதி கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது ‘ரஜினி: சப்தமா? சகாப்தமா?’ எனும் புத்தகம்.

பொதுவாக சுயசரிதை புத்தகங்கள், பிறர்சரிதை புத்தகங்கள் எல்லாம் வாழ்ந்து முடித்தவர்களின் அல்லது வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைப் பாதை பிறருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சம்பந்தப் பட்டவர்களைப் பற்றிப் பிறர் உயர்வாக நினைக்க வேண்டும் என்ற சிந்தனையிலும் சரிதையில் பல இடங்களில் ‘வார்த்தைகளால் வாசகனை நெக்குருகச் செய்யும்’ வித்தையைக் கையாண்டிருப்பதையும், குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்காக எண்ணற்ற பக்கங்களைச் செலவு செய்திருப்பதையும் காணமுடியும். மகாத்மா காந்தியின் ‘சத்தியசோதனை’ நூலும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்நூலின் சிறப்புகளாக மூன்று விஷயங்களைக் கூறலாம். ஒன்று: ரஜினியின் வாழ்க்கையை நடிப்பு-ஆன்மீகம்-அரசியல் என்ற முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் ரஜினியின் இடம் பற்றியும், அந்த மூன்றையும் ரஜினி தனக்குள் வைத்திருந்த இடம் பற்றியும் விளக்கிக் கூறுவது. இரண்டு: ரஜினியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் 10 அத்தியாயங்களாகப் பிரித்து, அவற்றிற்குத் தலைப்பாக ரஜினி நடித்த திரைப்படங்களின் தலைப்புகளைப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துச் சூட்டியுள்ளமை. மூன்று: தன்னைப் பற்றி ரஜினி கூறிய கருத்துக்களும், ரஜினியைப் பற்றிப் பிறர் கூறிய கருத்துக்களும் சுருக்கமாகவும், நூலின் தேவைக்கேற்ப சரியான இடத்திலும் கொடுத்திருப்பது.

எதிர்பாராமல் தனக்குக் கிடைக்கும் பெரும் புகழையும், பெருஞ்செல்வத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஓர் எளிய மனிதனின் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ‘ரஜினியின் வாழ்க்கை’ ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மனத்தடுமாற்றத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளவே ரஜினி ஆன்மீகத்தைப் பற்றிக் கொண்டார். குழப்பமான மனநிலையில் ரஜினி எடுத்த ஒரு தெளிவான முடிவு அது. ‘தமிழக அரசியல் எனும் ஒரு பெரும் விபத்திலிருந்து’ அவரைக் காப்பாற்றியதும் அதுவே தான்.

ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எவ்விதமான மறைவுகளுமின்றி வெளிப் படையாகவே இந்நூலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. ரஜினி, ‘தனது இமேஜை தானே முறியடிப்பவர்’ என்பதால், அவரைப் பற்றிய இத்தகவல்கள் அவரது இமேஜை ஒரு போதும் பாதித்துவிடாது. ரஜினியின் அரசியல் ஈடுபாடுபற்றிக் கூறும்போது காங்கிரஸ் கட்சியினரின் வழக்கமான சோம்பேறித் தனத்தைச் சுட்டிக்காட்டுவதிலும், ரஜினி சந்தித்துவந்த ஆன்மிகப் பெரியோர்களை வரிசைப்படுத்துவதிலும் நூலாசிரியரின் துணிவும், திறமையும் மிளிர்கின்றன.

இப்புத்தகத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும், ஊடுபாவாக ரஜினியைப் பற்றிக் கூர்மையான விமர்சனங்களும் கலந்திருப்பதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொது வாசகர்களும் உற்சாகமாகப் படிக்கக் கூடியவகையில் உள்ளது. ‘சந்திரமுகி’ திரைப்படத்தினைப் பார்த்த பிறகும், இந்நூலைப் படித்த பிறகும் ரஜினி என்ற மனிதர் கடந்து வந்த பாதைகளில் அவருக்காக எண்ணற்ற ஏணிகள் நிமிர்ந்தபடியே இருந்துள்ளன என்பதனைப் புரிந்துகொள்ள முடிகின்றது. நடுநிலையோடு ஒரு நடிகரைப் பற்றித் தமிழில் எழுதப்பட்ட நூல் இது.

நூல்: ரஜினி: சப்தமா? சகாப்தமா? ஆசிரியர்: ஜெ. ராம்கி, வெளீயீடு: கிழக்குப் பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை- 4.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com