Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

அதிசய கிராமம் அபூர்வ நம்பிக்கை
ராஜசேகரன்


நகரத்து தெருக்களின் வீடுகளுக்குள் உள்ள சமையலறை ஒன்றினுள் நீங்கள் செல்ல வேண்டுமெனில் நாலைந்து கதவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவ்வளவு தடுப்புகள்; கதவுகள். ஒவ்வொரு நிலைக் கதவுகளும் பலவித கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருக்கும். இவ்வளவு கதவுகளையும் போட்டு வீட்டை பூட்டி விட்டு இரண்டொரு நாள் வெளியூர் சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்தால் வீட்டுக்குள் இருந்த பணமும், நகையும் காணாமல் போயிருக்கும்.

ஆனால் வீட்டை பற்றி கொஞ்சங் கூட கவலையின்றி, வீட்டைத் திறந்து போட்டு விட்டு (கதவு இருந்தால் தானே திறந்து போடுவதற்கு) கதவுகளே இல்லாமல் ஒரு கிராமமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ‘பாப்பனம்’ என்பது அக்கிராமத்தின் பெயர். இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சியிலிருந்து கிழக்குப் புறமாகப் பிரிந்து செல்லும் ஒத்தையடிப் பாதையில் சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது இவ்வூர்.

பெண்கள் தொகுதியான அவ்வூரில் முத்துப் பிள்ளை என்ற பெண்மணி பஞ்சாயத்துத் தலைவியாக இருக்கிறார். இவரின் வீட்டிலிருந்து மட்டுமே படித்து அரசு வேலைக்குச் சென்றுள்ளனர். இவரும் அந்த ஊரில் வசிப்பதில்லை. பக்கத்து டவுனுக்கு குடிபெயர்ந்து விட்டார். ஊரில் உள்ள பெரும்பான்மை இளைஞர்களும் திருப்பூர், கோவை போன்ற இடங்களில் உள்ள பனியன் தொழிற்சாலை வேலைக்குச் சென்று விட்டனர். ஊருக்குள் நீங்கள் அவ்வளவு சீக்கிரமாகச் சென்று விட முடியாது. நீங்கள் பஸ்ஸிலோ, காரிலோ, மோட்டார் பைக்கிலோ, சைக்கிளிலோ சொகுசாக பயணம் செய்யக் கூடியவர்களாக இருக்கலாம். ஆனால் ஊருக்குள் செல்ல மூன்று மைல் தூரம் மணலில் கால் புதையப் புதைய நடந்துதான் ஆக வேண்டும். அந்தளவிற்கு சாலை வசதியில்லாத ஒத்தையடிப்பாதை அது. 3மைல் தொலைவும் நடந்து செல்ல தைரியமுள்ளவர்களுக்கு மட்டுமே அந்த ஊரைப் பார்க்கக் கூடிய பாக்கியம் கிடைக்கும். ஆனால் அந்த ஊர் மக்களுக்கோ சாப்பாட்டுக்கு ரேசன் அரிசி வாங்குவதிலிருந்து குழந்தைகளை பள்ளிக் கூடம் அனுப்புவது வரைக்கும் இந்தப் பாதையை நம்பித்தான்.


தகவலகம்

குழந்தைத் திருமணம் சமூகத்தில் வழக்கமாக இருந்த காலங்களில் திருமணச் சடங்குகள் நடைபெறும் போது திருமணம் செய்யப்படும் குழந்தைகள் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காக பெற்றோர் அந்தக் குழந்தைகளை திருமணச் சடங்கு முடியும் வரை மடியிலமர்த்தி சடங்குகளை நடத்தி வைப்பார்கள். இதன் தொடர்ச்சியே இன்றும் பிராமணர்களின் திருமணத்தில் மணப்பெண்ணை அவரது தந்தையின் மடியில் அமர்த்தி திருமணச் சடங்கை செய்யும் வழக்கமாக தொடர்கிறது.

குழந்தை வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட வயதை அடையும் வரையில் பாலியல் உறவிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். அவர்கள் பாலியல் உறவுக்கான வயதை அடைந்தவுடன் அதற்கான அடையாளமாக நடத்தப்பட்டதுதான் சாந்தி முகூர்த்தம் என்னும் சடங்கு. இன்று குழந்தைத் திருமணம் பெருமளவில் நின்று போன பிறகும் அதன் மிச்ச சொச்சமாக சாந்தி முகூர்த்தச் சடங்கு தொடர்கிறது.

திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற ‘பண்பாட்டு வேர்கள்’ நிகழ்ச்சியில் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன்.

அபிராமத்தைச் சேர்ந்த இடைநிலைச் சாதிக்காரர்கள் அந்த ஊருக்கான பாதையை தங்களுக்கான நிலமென்றும், போனால் போகிறதென்று நடக்க பாதை விட்டால் ரோடு போடுமளவுக்கெல்லாம் பாதை விட முடியாது என்றும் இதனால் தங்களது நிலம் பாதிக்கப்படும் என்றும் கோர்டில் வழக்கு தொடுத்துள்ளனர். ஆனால் ஊர்தரப்போ “ஏழெட்டு தலைமுறையாக இது தான் எங்களுக்கு பாதையாக இருக்கிறது. இந்தப்பாதை எங்கள் ஊருக்கானது தான். எங்களை ஏமாற்றி அந்த நிலங்களை வாங்கி விட்டு, இப்போது பாதை விட மாட்டேன் என்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஊருக்குள் நாம் நுழைந்ததும் எதிர்ப்படும் வீடுகளனைத்தும் கதவுகளற்று திறந்தே கிடக்கின்றன. முள் வேலியற்ற விவசாய நிலங்களைப் போல் பிற்பகல் வெயிலில் ஆளரவமற்று கிடக்கிறது தெருக்கள். இராமநாதபுர மாவட்டத்திற்கே உரிய வறட்சி அக்கிராமத்திலும் தொற்றிக் கொண்டிருக்கிறது. ‘வீடுகளில் உள்ள ஆண்களும் பெண்களும் கரி மூட்டம் போடுவதற்காக விறகு வெட்டச் சென்றுள்ளார்கள்’ என்கிறார் வேப்பமர நிழலில் உட்கார்ந்திருக்கும் வயதான பாட்டி.

கிராமங்களுக்கே உரிய ஆலமரம், அரசமரம் என்ற எதுவும் அக்கிராமத்தில் இல்லை. கரிசக் காட்டு பூமியான அப்பகுதி முழுமைக்கும் பள்ளம் விழுந்து விரிவோடிக் கிடக்கின்றது. ஊரில் இருக்கும் ஒரேயொரு ஊருணி வற்றிப் போய் சேறும் சகதியுமாய் கிடக்கிறது. ‘சுக்கான்’ தரை என்பதால் ஊருணி தண்ணீர்ப் ‘பாடு’ தாங்காமல் அடிக்கடி காய்ந்து போவதாக புலம்புகின்றனர் ஆடு மாடு மேய்ப்பவர்கள். ஊருக்கு வெளியே நிலக்கடலை விளையும் புஞ்சைக் காட்டுப் பகுதியில் ஒய்யாரமாய் நிற்கிறது அருள்மிகு ஸ்ரீ முனியப்பசாமி திருக்கோயில்.

பாப்பனம் கிராம தேவேந்திரர்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் தான் இந்த முனியப்பசாமி. “நாங்க வீடுகளுக்கு கதவு மாட்டாததற்குக் காரணம் எங்கள காவல் காக்கிற முனியப்பசாமி தான். எங்க பாட்டன், பூட்டன் காலத்தில் தான் இந்தச் சாமிய வேற ஊர்ல இருந்து தூக்கிக் கிட்டு வந்ததாக. இங்கு இந்த சாமி வந்த பிறகு யாரு வீட்டிலேயும் நிலை வச்சு கதவு போடக் கூடாதுன்னு சாமி உத்தரவு போட்டிருச்சு. நாங்க ஏன் எதுக்குன்னு கேட்டதற்கு “என்னோட கோவில் வாசலுக்கு தங்கத்துல நிலை வச்சு தங்கத்துல கதவு போட்டப் பின்னாடி, களத்து மேட்டுல இருக்கிற மண்ண தோண்டினா தங்க உண்டியல் இருக்கும். அத வச்சு உங்க வீட்லயும் கதவு போடணும். அது வரைக்கும் எவனும் கதவு போடக் கூடாதுன்னு உத்தரவு போட்டிருச்சு. அதே மாதிரி வேற சாதிக்காரங்க எங்க ஊர்ல வந்து ராத்திரில கட்டில் போட்டுப் படுத்தா ரத்தம் கக்கி செத்துப் போயிடுவாங்க. அந்த அளவுக்கு சக்தி உள்ள சாமி” என்ற படி முனியப்பசாமி இருக்கும் திசையை கையெடுத்துக் கும்பிடுகிறார் 90 வயதாகும் ராக்கி எனும் பாட்டி.

“எங்க சாமிக் கட்டுப்பாட்டை எங்க ஊர்ல யாரும் மீற மாட்டாங்க. ஒருத்தர் மட்டும் மீறி கதவு போட்டாரு. மறு மாசத்திலேயே அவுங்க அப்பா, வீட்டுல நிண்ட ஒரு ஜோடி காளை மாடு, ஒரு ஆடு என எல்லாத்தையும் முனியப்ப சாமி பழி வாங்கிட்டான். அதிலேருந்து எல்லாரும் ரொம்ப பயந்து போயிட்டோம். இது மாதிரி வேறு ஜாதிக்காரங்க எங்க ஊர்ல வந்து கட்டில் போட்டு ராத்திரில படுத்தாங்க. அன்னைக்கு ராத்திரி பார்த்தா எல்லாக் கட்டிலையும் கீழே சாய்ச்சு போட்டிருச்சு. அந்தளவிற்கு துடிப்பான சாமி.

வருடந்தோறும் ஆனி மாசம் தான் ‘களரி’ எடுத்து சாமி கும்பிடுவோம். ஆனால் போன ரெண்டு வருஷமா பக்கத்து ஊருக்காரங்க இது அவுங்க சாமின்னு தகராறு பண்ணி கும்பாபிஷேகம் பண்ண விடாம தடுத்து போலீஸ்ல ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க. அது தான் இப்ப மழையில்லாமக் கெடக்கு” என்று புலம்புகிறார் அந்த ஊரைச் சேர்ந்த தங்கவேலு என்பவர். ஊரில் உள்ள 150 வீடுகளும் கதவுகளற்று திறந்து கிடந்தாலும் பணமோ, தானியங்களோ இதுவரை களவு போனதில்லை என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

“சுற்று வட்டாரத்தில் எல்லா ஊரிலும் கோவில் மணிகள் திருடு போகின்றன; சிலை காணாமல் போகிறது என்று பேசிக் கொள்கின்றனர். ஆனால் எங்க கோவிலு மணியத் திருட எந்தப் பயலுக்கும் தைரியம் இல்லை” என்று வீராப்போடு பேசுகின்றனர் இம்மக்கள். அதோடு இந்த முனியப்பசாமி தான் எங்க வீட்டுக்கும் காவல் காக்கிறான் என்கிறார்கள்.

இவர்கள் சொல்வதைப் போலவே சுமார் 100 மணிகள் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளன. ஒன்று கூட களவு போகாமல் ஒன்றையொன்று நெருக்கியபடி அவைகள் தொங்குகின்றன. மாலை நேரக் காற்றில் மெல்ல மணிகள் அடிக்கத் துவங்குகின்றன. வெள்ளிக் கிழமை ஆகையால் அவ்வப்போது ஒன்றிரண்டு பேர் சாமி கும்பிட வந்து சென்றபடி இருக்கின்றனர். சில பெண்கள் கோயிலிலேயே தலையை விரித்துப் போட்டபடி சாமியாடுகின்றனர்.

பிரமிப்பிலிருந்து மீள முடியாதபடி மீண்டும் ஐந்தாறு கதவுகளைக் கொண்ட நகரத்து வீடுகளுக்குத் திரும்பினேன். வழிநெடுகிலும் விரிந்து கிடக்கும் வெளிகள் கேலி பேசுகின்றன. ‘பூட்டி தாழிட்டுக் கொள்பவன்’ என்ற கேலியைத் தாங்க முடியாதபடி அவர்களின் நம்பிக்கை குறித்து மீண்டும் யோசிக்க வைக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com