Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
நாஞ்சில் சம்பத் - நேர்காணல்


நாஞ்சில் சம்பத் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர். கட்சி எல்லைக்கு வெளியிலும் இலக்கிய மேடைகள், பொதுவிழாக்கள் என தனது தளத்தை விரித்துப் போட்டிருப்பவர். புதிய காற்றுக்காக அவர் தனது பேச்சு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது...

அரசியல் பேச்சாளராக எப்பொழுது அங்கீகாரம் பெற்றீர்கள்?

1986ல் ஏப்ரல் 6 சென்னை சௌகார் பேட்டையில் பரிதி இளம்வழுதியும் திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் சேலம் அருண்மொழியும் பேசுகிற பொதுக் கூட்டம். நான் ஒரு பத்து நிமிடம் பேச விரும்புகிறேன் அங்கு என்னுடைய பெயர் சம்பத். (நாஞ்சில் சம்பத் என்று அப்பொழுது அடைமொழி கிடையாது) எனக்கு நாகர்கோவில் என்று ஒரு பத்துநிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு வாங்கி, மேடையில் ஏறி அரைமணி நேரம் பேசினேன்.

அந்தப் பேச்சு உடனடியாக அங்கு ஒரு அதிர்வலைகளை உருவாக்கியது. அங்கு வந்திருந்த மாநில நிர்வாகிகள் கோட்டூர்புரத்திற்கொரு கூட்டம். மயிலாப்பூருக்கு வாருங்கள். சைதாப்பேட்டை வாருங்கள் என்று என்னை அழைத்து பேச வைத்தார்கள். நான்கு ஐந்து மாதம் எங்குப் பார்த்தாலும் சம்பத் சம்பத் என்று சுவரொட்டி அடிக்கப்பட்டு அது கலைஞரின் கவனத்திற்குப் போனது "இந்த சம்பத் நாகர்கோவிலிருந்து இங்கயா வந்து தங்கி இருக்கான். அவனைப் பார்க்க வேண்டும்' என்று கலைஞர் அழைத்தார். என்னைப் பார்த்து, “வீட்டில் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீ வந்து எவ்வளவு நாளாச்சு, ஏன் வீட்டுக்கு இன்னும் தகவல் கொடுக்கவில்லை என்ன ஆச்சு உனக்குன்னு” கேட்டார்.

‘‘நான் செய்த தொழில் நசிவடைந்து விட்டது. வீட்டில் இருக்க விருப்பமில்லை. ஏதாவது வேலை தேடலாம் என்று சென்னை வந்திருக்கிறேன்’’ என்றேன். ‘வேலை எதற்கு இயக்கத்தில் சொற்பொழிவாளனாக இருந்தே வாழ்க்கையை வசந்தத்தின் வீதிக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறதே. ஏன் நீ இன்னொரு வேலை தேடிக் கொள்ள வேண்டும். இதுவே உனது தகுதிக்கும் திறமைக்கும் சரியான வேலைதானே’. என கலைஞர் சொன்னார். ‘நான் சென்னைக்கு அறிமுகமாகி இருக்கிறேன். பிற பகுதிக்கு நான் அறிமுகமாகலை அதற்கான வாய்ப்போ சூழலோ அரசியலுக்கு தேவையான சாதிபின்புலமோ, பொருளாதார பலமோ இல்லாதவன் நான். அதனால் எனக்கு எப்படி அறிமுகமாவது என்று தெரியவில்லை’ என்றேன்.1986 நவம்பர் 8, 9 கோவை சிதம்பரம் பூங்காவில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. அதில் பாவேந்தர் படத்தை திறந்து வைத்துப் பேச கலைஞர் வாய்ப்புத் தந்தார். அந்த மாநாட்டில் பேசிய பேச்சு நான் இன்றைக்கு நினைத்தாலும் அப்படி ஒரு பேச்சை பேச முடியாது. அந்த பேச்சு தான் இன்று ஒரு சொற்பொழிவாளனாக தமிழ் நாட்டை சுற்றி வரும் தகுதியை எனக்கு தந்தது.

நீங்கள் அரசியல் நுழைந்த கால கட்டம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நெருக்கடியிலிருந்த காலகட்டம். எம்.ஜி.ஆர். ஆட்சி உச்சத்தில் இருந்த சூழல். எப்படி நீங்கள் துணிச்சலாக தி.மு.க.வை தேர்ந்தெடுத்தீர்கள்?

இயல்பாகவே என்னுடைய பலமே அதுதான். இன்றைக்கும் ஜெயலலிதா ஆட்சியில் என்மீது நாற்பது வழக்குகள் போடப் பட்டிருக்கிறது. என்னுடைய இல்லம் 2002 ஜனவரி 4ல் ஆக்கிரமிப்பு என்ற பெயரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அன்றைக்கும் நான் மதுரையில் பொதுக் கூட்டத்தில் பேசினேன். துணிச்சல் எனது தந்தையும் தாயும் பாலுடன் சேர்த்துத் தந்தது. திராவிட இயக்கச் சாயல் இருந்த காரணத்தினால் எம்.ஜி.ஆரை எனக்கு அப்பொழுதே ஜீரணிக்க முடியலை. சினிமா என்றாலும் கூட சிவாஜி படங்களின் மீது தான் ஈர்ப்பு இருந்ததே தவிர எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்க மனம் ஒப்பவில்லை.

வெறி பிடித்த தி.மு.க தொண்டனாக என்னுடைய கால்சட்டைப் பருவத்திலே நான் இருந்த காரணத்தினால் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இந்த இயக்கத்தினுடைய வாழ்வை தீர்மானிக்கிற சக்தியாக என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வு. திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றுவதற்கான சூழலும் இருந்தது. அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய கடிதங்கள், அண்ணாவினுடைய படைப்புகள் கல்லூரி காலத்திலேயே எனக்குள்ளே கனலை உற்பத்தி செய்தது.

அண்ணாவின் - ‘ரத்தம் பொங்கிய இருபதாண்டுகள்’, ‘தாழ்ந்த தமிழகமே’, ‘புராண மதங்கள்’, ‘தீ பரவட்டும்’, ‘திராவிட மாயை’, இவையெல்லாம் என்னை பாதித்தன. அந்த அண்ணன் உருவாக்கிய ஒரு அமைப்பில் நானும் ஒரு அங்கமாக இருந்தால் அது வாழ்வில் பெற்ற பெரிய பேறென்று கருதினேன். அந்தப் படைப்புகள் உருவாக்கிய பாதிப்புதான் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது.

உங்கள் பேச்சின் முன் மாதிரியாக யாரை நினைக்கிறீர்கள்?

என்னை மிகவும் பாதித்தது கிருபானந்த வாரியார். அது வரைக்கும் நான் அரசியல் கட்சி கூட்டங்கள் கேட்டதில்லை. நான் கல்லூரியில் பயில்வதற்கு போன பொழுது எங்கள் கல்லூரியினுடைய யூனியன் துவக்க விழா. அதற்கு வாரியார் சுவாமிகளை அழைத்திருந்தார்கள். எனக்கு வாரியார் மீது நல்லெண்ணமோ, மதிப்போ கடுகளவும் அப்போது இல்லை. ‘என்ன இப்படி ஒரு சாமியாரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள் கல்லூரி நிகழ்ச்சிக்குன்னு சொல்லி’ எனக்கு கோபம் தான் இருந்தது. வாரியார் சாமிகள் அந்த மலைபோன்ற உடம்பை வைத்துக்கொண்டு ஒரு சைன் போர்டுல அவராகவே ஏறி உட்கார்ந்து ஒலி பெருக்கிக்கு முன்னால் வாயசைத்து அவர் பேசத் தொடங்கிய போது சங்கீதத்தை வெல்லுகிற அவருடைய சத்தமும், சந்தம் மாறாத அவரது தமிழும் ஒரு செய்தியை சொல்லுவதிலே அவர் கடைபிடிக்கக் கூடிய அந்த நளினமும் நயமும் என்னை அப்படியே கட்டிப் போட்டு விட்டது.

‘கால் ஏஜ் முடிகிற பொழுது காலேஜ் முடிந்து விடுகிறது’ என்று சொன்னார். ‘ஏடு இட்டு ஒரு இயல் என்பது தான் எடிட்டோரியலாயிற்று’ என்று சரம் சரமாக சிலேடைகளை அள்ளி எறிந்ததிலே நான் அவருடைய பேச்சுக்கு அப்பொழுதே கட்டுண்டேன். என்னை வியப்பிலாழ்த்திய பேச்சு அது. அந்த நிகழ்ச்சியில் நன்றியுரையை நான்தான் சொன்னேன். அப்பொழுது, ‘தந்தைக்கொரு மந்திரத்தை சாற்றி பொருள் விரித்து / முந்து தமிழில் முருகென்று பெயர் படைத்து / அந்தத்தில் ஆதி ஆதி அந்தமென / வந்த வடிவேலை வணங்குவதே என்வேலை / எனக் கொண்டு விட்ட சோலை இளம் காற்றே வாரிக்களிக்கும் வண்ணத்தமிழ்க்கடலே / இன்பத் தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டில் கவிகாளமேகத்தைப் போல் சிலேடைகளை / வாரியார் சுவாமிகளைத் தவிர வாரி யார் தான் சொல்கிறார்கள்’ என்று கூறினேன். அவர் எனது ஆட்டோகிராபில் ‘இரை தேடுவதைப் போல் இறைவனையும் தேடு’ என்று எழுதி, இரவு நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி பள்ளியில் நடைபெற்ற கந்தர் அலங்காரம் சொற்பொழிவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் நான் இன்றொரு ஞானச் சிறுவனைக் கண்டேன் என்று அவர் சொன்னது என்னுடம்பில் மின்சாரம் பாய்வது போல் இருந்தது.

அதற்குப் பிறகுதான் தமிழிலக்கியங்களை உலக இலக்கியங்களை நாடத் தொடங்கினேன். இந்தப் பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் அரசியல் மட்டுமே உதவாது அரசியலையும் கடந்து நாம் நிறையத் தேட வேண்டும் என்ற தேடல் எனக்கு அப்போது தான் வந்தது.

நெருக்கடி காலம் முடிந்த பிறகு, திருநெல்வேலி பாப்புலர் தியேட்டரில் "நெருக்கடி நிலையில் நாம்' என்ற தலைப்பில் கலைஞர் பேச வந்தார். எமர்ஜென்சியில் பேச முடியாது என்ற தடைவிதிக்கப்பட்டதனால் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் பேசுகிறார். கட்டுக்கடங்காத கூட்டம். எனக்கு அரசியல் உணர்வை உருவாக்கிய ஜஸ்டிஸ் என்ற சகோதரர் என்னை அழைத்துக் கொண்டு சென்றார். நான் அந்த நிகழ்ச்சியை முன்னாடி உட்கார்ந்திருந்து கேட்டேன். கலைஞர் பேசுவதற்கு முன்னால் வைகோ பேசினார். கலைஞர் பேச்சை விட வைகோவின் பேச்சுதான் என்னை ஈர்த்தது அப்போது. என் உடம்பில் ஒரு புத்துணர்ச்சியை, உள்ளத்தில் புது நம்பிக்கையைத் தந்தது. ஒரு மிகப் பெரிய தலைவர் கலைஞர் அவருடையப் பேச்சையும் அன்றைக்குத் தான் நான் கேட்டேன். தன்னால் எதையும் எதிர் கொள்ளக் கூடிய தன்மையைத் தந்தது வைகோவின் பேச்சு தான். அதற்குப் பிறகு வை.கோ. எங்கே பேசினாலும் நாகர்கோவிலிலிருந்து மதுரை வரை நான் வை.கோ.வின் பேச்சைக் கேட்கப் போவேன். என்னுடைய பேச்சின் இன்ஸ்பிரேஷன் வணக்கத்திற்குரிய தலைவர் வைகோவும், வாரியாரும் தான். ஆனால் நான் யாருடைய பாணியையும் பின்பற்றவில்லை.

வைகோவின் பேச்சில் ஏற்பட்ட ஈர்ப்புதான் பின்னால் ம.தி.மு.க. வரையிலும் உங்களைக் கொண்டு வந்து சேர்த்ததா?

வைகோவின் பேச்சில் தான் ஈர்க்கப்பட்டேன். ஆனால் வைகோவுடன் எந்தத் தொடர்பு வைத்துக் கொண்டதில்லை. 1993ல் கட்சியில் பிரச்னை வருகிற பொழுது வைகோவின் தரப்பில் தான் நியாயமிருக்கிறது என்று நினைத்தேன். வைகோவுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை எடுத்த எந்த நடவடிக்கையையும் என்னால ஜீரணிக்க முடியவில்லை. கலைஞர் மீது அளவற்றக் காதல்வைத்திருந்தேன் நான். இன்னும் சொல்லப் போனால் ஒரு பக்தி வைத்திருந்தேன். ஒரு தீபாவளி அன்று காலைப் பொழுதில் என்னை என்னுடைய அம்மா துயிலெழுப்பி ‘நேரமாச்சு போய் எறச்சி வாங்கிட்டு வாலே’ அப்படின்னு சொல்றாங்க. நான் தூக்கத்திலிருந்து விடுபட முடியாம ‘அண்ணனைப் போகச் சொல்லு’ என்று சொன்னேன். அண்ணன் ‘உனக்கு என்ன வேலை இறச்சிப் போயி வாங்கீட்டு வாலே கருணாநிதி சொன்னாத்தான் கேப்பியான்னு’ கேட்டான். (அண்ணன் பெயரும் கருணாநிதி) அப்படி கேட்டவுடனே கலைஞர் பேரைச் சொன்னது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது, கலைஞர் பெயரைச் சொன்னாலே தாங்கிக் கொள்ள முடியாத மனோபாவம். அடுத்த பத்தாவது நிமிடத்துல சட்டை எடுத்து மாட்டீட்டு நான் ஊரை விட்டு கிளம்பிட்டேன். கலைஞர் பேரைச் சொன்னக் காரணத்திற்காகவே கோபித்துக் கொண்டு போன தொண்டன். கலைஞர் பெயரைச் சொன்னாலே தாங்கிக் கொள்ள முடியாத நான் வை.கோ.வுக்கு இழைக்கப்பட்டக் கொடுமையை என்னால ஜீரணிக்க முடியலை. நியாயம் வை.கோ.வின் பக்கம் இருக்கிறது என்று நினைத்து வை.கோ.வின் பக்கம் வந்தவனே தவிர வேறு நோக்கமல்ல.

தி.மு.க.விலிருந்து விலகி மதிமுக உருவான பிறகு கூட்டணி என்ற பெயரால் தி.மு.க. உறவு வைத்திருப்பதை எப்படி நினைக்கிறீர்கள்?

மீண்டும் ஒரு அரசியல் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தோடு வருமென்று என்னைப் பொறுத்தவரை நான் ஒரு கனவு கூட காணவில்லை. ஆனால் அரசியல் சம்பவங்களின் திருவிளையாடல் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். வரலாற்றின் பக்கத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கை கோர்த்திருப்பது ஒரு விசித்திர சம்பவம் தான். ஆனால் எனக்கு இதிலே மகிழ்ச்சி. எந்த காரணத்திற்காக வைகோ வெளியேற்றப்பட்டாரோ எந்த அறிவாலயம் அவரை ஆகாது என்று அப்புறப்படுத்தியதோ இன்றைக்கு அதே இயக்கமும் அந்தத் தலைவரும் எங்கள் வைகோவை அரவணைத்திருப்பது கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போடுவது மாதிரி எனக்கு படுகிறது.

தமிழ் நாட்டின் அரசியல் தட்ப வெப்பத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு, அதையும் தாண்டி சிந்தித்தால் திராவிட இயக்கத்தின் தனித் தன்மைகளை காப்பாற்றுவதற்கு, ‘தீர்ந்து போக வேண்டும் திராவிட இயக்கம்’ என்று கருதுபவர்களின் கனவிலே கல்லெறிவதற்கு கலைஞரும் வைகோவும் கைகோர்த்திருப்பது தமிழ் நாட்டுக்கு நலம் செய்யும். திராவிட இயக்கத்ததுக்கு வலிமை சேர்க்கும்.

திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் பேச்சாளர்கள் வெற்றிக் கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், திண்டுக்கல் நூர்ஜஹான் இன்னும் பலர் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டார்கள், திராவிட பேச்சாளர்கள். இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

அண்ணா அவர்கள் காலம் சொற்பொழி வாளர்களின் காலம்... அவரைச் சுற்றி எப்பொழுதும் சொற்பொழிவாளர்கள் தான் அமர்ந்திருப்பார்கள் ஈ.வி.கே.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், மதியழகன் சத்தியவாணிமுத்து, டி.கே. சீனிவாசன், சி.பி. சிற்றரசு, தில்லை வில்லாளன், இளம்பரிதி, நாஞ்சில் மனோகரன், போன்ற ஈடு இணையற்ற சொற்பொழிவாளர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்த ஒரு பிரச்சார இயக்கத்தை ஐப்பசி மாத அடை மழை போல் விடாது வழங்கிக் கொண்டிருந்தார்கள். காலம் கொண்ட விசித்திர கோலத்தில் சொற்பொழிவாற்றும் திறனில்லாத தலைவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இயக்கத்தில் தலைவர்களானது போல் திராவிட இயக்கத்திலும் தலைமைகள் உருவாகின.

ஒரு சொற்பொழிவாளன் தான் கொண்டிருக்கிற கொள்கையை பேசுகிறவனாக மட்டும் இருந்தால்போதாது. இந்த சமூகத்தைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிக்கின்ற வல்லமை படைத்தவனாகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சொற்பொழிவாளர்களாக நீங்கள் குறிப்பிடுகின்றவர்களும் அதைப் போன்றவர்களும் இன்றில்லை என்பது ஒரு சோகம். வெறும் கிண்டல்களும் தனிமனித தாக்குதல்களும் மட்டுமே சொற்பொழிவாளனுக்குப் போதாது.

அன்று சொற்பொழிவாளர்கள் ஒரு கட்சியின் தலைவிதியை தீர்மானித்தார்கள் இன்று அந்த நிலைமை இல்லை. ஊடகங்களின் தாக்கம், தேர்தல் கணக்குக் கூட்டல்கள், பணபலம், சாதிபலம் இவைகளே இன்றைய வெற்றிக்கு காரணிகளாகின்றன. ஆகவே சொற்பொழிவாளர்களை கண்டு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஒரு கட்சிக்கு இல்லாமல் போய் விடுகிறது.

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறுகின்றன. ஒரு தேர்தலில் ஆதரித்துப் பேசிய கட்சியை அடுத்த தேர்தலில் எதிர்த்துப் பேசவேண்டியது இருக்கிறது. இது உங்களுக்கு நெருடலாக இல்லையா?

ஒரு சொற்பொழிவாளன் என்பவன் கட்சியின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவன். ஒரு கட்சியின் அடியும் முடியும் அவன் அறிந்து வைத்திருக்க வேண்டும். சன்னியாசம் வாங்கும் நோக்கத்திற்காக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படுவதில்லை. அரசியல் ரீதியாக தேர்தல் களங்களில் அந்தக் கட்சி தன்னை தக்க வைத்துக்கொள்ள அணிமாற வேண்டியது அவசியமாகிறது.

நேற்றிருந்த நண்பன் இன்று பகைவனாகவும் இன்றிருக்கின்ற பகைவன் நாளை நண்பனாகவும் மாறும் காட்சிகள் அரசியல் உலகில் அவ்வப்போது அரங்கேறுகிறது. இதை ஜீரணிக்கமுடியாத மனநிலை இருந்தாலும் கட்சி சமவெளிக்கு வரவேண்டும், வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்பதற்கு ஒரு சொற்பொழிவாளன் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி நான் முன்னுரிமை கொடுக்கிற பொழுது என்னை நான் மாற்றிக் கொள்கிறேன். இந்த மாற்றம் முதலில் கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் அடுத்த ஒரு சில தினங்களில் இயல்பாகிவிடும்.

உங்கள் பேச்சு திமுக தலைமையால் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறதே...

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ஒரு சொற்பொழிவாளன் என்ற தகுதியோடு வைகோ வுடன் வந்தவன் நான் மட்டுமே. நான் மேடையில் பேசுகின்ற கருத்துக்கள் என் கட்சியின் அடிமட்டத் தொண்டனின் உணர்வுகள். அந்த உணர்ச்சியை நான் பிரதிபலிப்பதினால் தான் இன்னும் என்னால் வெற்றிகரமான பேச்சாளனாக இருக்க முடிகிறது. தேர்தல் கூட்டணி என்பது வேறு. சாதாரண கால கட்டம் என்பது வேறு. கூட்டணியில் விரிசல் வரவேண்டும் என்பதோ, உறவில் சிக்கல் எழ வேண்டும் என்பதோ எனது பேச்சின் நோக்கமல்ல. என் கட்சியை, கட்சியின் கொள்கைகளை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் செல்வாக்கு பெற்றிட வைக்கவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் என் கட்சி, வந்திட வேண்டும் என்பதே என் பேச்சின் நோக்கம். இது நியாயமானது. என் கட்சித் தொண்டன் கஷ்டங்களுக்கிடையில் போட்டுக் கொடுத்த மேடையில் என் கட்சித் தலைவனையும், என் கட்சியையும் அதன் கொள்கையையும் தான் நான் புகழ்ந்து பேச முடியும். அதைத் தான் பிரச்சாரம் செய்ய முடியும். அது தான் நியாயம். அங்கு நின்று கொண்டு பிற தலைவர்களை நான் புகழ்ந்து பேச முடியாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com