Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

மதசார்பின்மைக்கு ஆதரவாக இருந்த திராவிட பாரம்பரியம் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது - ந. முத்துமோகன்


நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற காலம் என்பது சமய உறவுகளில், சர்வதேச உறவுகளில் உலக நாடுகளுக்கிடையே நீடித்த உறவில்லாத ஒரு மோசமான காலகட்டம் என்று சொல்ல வேண்டும். உலக அளவில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு தடையாக இருந்த சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தடையாக இருக்கக்கூடிய சக்திகள் எவை என்பதைப் பற்றிய திட்டமிடுதலை ஐரோப்பிய, அமெரிக்க ஆட்சியாளர்கள் நடத்தினார்கள். அப்படி அவர்கள் ஒரு திட்டமிடுதலை நடத்தும் பொழுது தடையாக விளங்கக்கூடிய சக்தியாக இருப்பது மூன்றாம் உலக நாடுகள் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள் எனச் சொல்லலாம்.

மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்வது ஆசிய, ஆப்பிரிக்க, அரேபிய, தென் அமெரிக்க நாடுகளை உலக வரைபடத்திலே தெற்கு என்று இப்பொழுது குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க ஐரோப்பிய மயமாக்கம் அதனுடைய முதலாளித்துவ சமூக அமைப்பின் கீழ் இந்த உலகம் முழுவதையும் கொண்டு வரவேண்டும், குறிப்பாக இந்த மூன்றாம் உலக நாடுகளைக் கொண்டு வரவேண்டும் என்ற முடிவிற்கு வந்தது எனவே உலகமயமாக்கம் என்ற திட்டத்தை அவர்கள் உலகம் முழுவதும் அறிவித்து வேலை செய்யத் தொடங்கினார்கள்.

இரண்டாவதாக, அவர்கள் மூன்றாம் உலக நாடுகளை அடக்குவதற்கு கிளாஸ் ஆப் சிவிலைசேஷன் என்ற ஒரு சொல்லை அவர்கள் பயன் படுத்துகிறார்கள். நாகரீகங்களின் மோதல் என்று சொல்லக்கூடிய ஒன்று. சாமுவேல் ஹன்டிங்டன் என்று அறிஞரால் இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அவரது நூலின் தலைப்பு இது. ஐரோப்பிய அமெரிக்க நாகரீகத்திற்கும் பிற நாகரீகங்களுக்கும் இடையிலான மோதல் தான் வருங்கால வரலாற்றை கொண்டு செல்லும் என்ற ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அமெரிக்க ஐரோப்பிய நாகரீகத்தை ஒரு பக்கமாக எடுத்துக் கொண்டு இந்த மூன்றாம் உலக நாடுகளுடைய நாகரீகங்கள் அனைத்தையும் மற்றொரு பக்கமாக கொண்டுவந்து நிறுத்தினார்கள். மூன்றாம் உலக நாடுகளின் நாகரீகம் எனும் போது ஜப்பானிலும், சைனாவிலும் உள்ள நாகரீகமாக இருக்கலாம், இந்தியாவிலுள்ள நாகரீகமாக இருக்கலாம், ஆப்பிரிக்கா நாடுகளிலுள்ள நாகரீகமாக இருக்கலாம். மூன்றாம் உலக நாடுகளின் நாகரீகங்களை ஐரோப்பிய அமெரிக்கா நாகரீகத்தை ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்யக்கூடிய ஒன்றாக அவர்கள் அடையாளப் படுத்தினார்கள்.

ஆக உலகமயமாக்கம், நாகரீகங்களுக் கிடையிலான மோதல் என்ற இரு திட்டங்களை முன்வைத்து கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் ராணுவ, அரசியல் பொருளாதார, கலாச்சார ரீதியாக இந்த இரு திட்டங்களையும் முன்வைத்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் மிக முக்கியமாக இஸ்லாமியருக்கு எதிராகவும், அரேபிய நாடுகளுக்கு எதிராகவும், ஈராக்கிலே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது, ஈரான் அரசியலுக்குள் தலையிடுவது, ஆப்கானிஸ் தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது, பாலஸ்தீன பிரச்சனையை இழுத்தடிப்பது என பல்வேறு விதமான திசைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சர்வதேச சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; ஆசிய, லத்தீன், அமெரிக்கா, அரேபியா நாகரீகங்களில் காஞ்சமேனும் புத்திசாலித்தனம் இருக்கு மானால், நம் ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும் உலக நிலைமைகளை உண்மையில் சரியாகப் பார்த்துக் கொள்வார்களேயானால் ஆசிய, அரேபிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்துடன் வேலை செய்ய வேண்டும். ஐரோப்பிய மையத்தைப் பலவீனப்படுத்துவதற்கு, ஐரோப்பிய மையம் நம்மீது ஆதிக்கம் செலுத்தாமல் தடுப்பதற்கு நமக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் ஆசிய, ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளுக் கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது தான். நாகரீகங்களின் மோதல் என்ற தளத்தில் யோசித்துப் பார்த்தாலும் ஐரோப்பிய நாகரீகத்தை எதிர்கொள்வதற்கு ஆசியாவிலுள்ள பௌத்த, இஸ்லாமிய, இந்து ஆப்பிரிக்க நாகரீகங் களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பதுதான் சாத்தியமான ஒன்றாக இருக்க முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கின்ற இந்துத்துவம் இந்து-முஸ்லிம் பிரச்சனையை மீண்டும் முன்னுக்குக் கொண்டுவந்து இந்தியாவில் கடந்த 20 வருடங்களாக எத்தகைய அழிவை ஏற்படுத்தினார்கள் என்பது நமக்குத் தெரியும்.

நாம் தமிழக சூழல்களுக்கு வந்தோம் என்றால் தமிழகத்தில் நீண்ட காலமாக மதச்சார்பின்மைக்கு அரணாக, மதச்சார்பின்மைக்கு வலுவான தளமாக இருந்தது திராவிடக் கருத்தியலின் செல்வாக்கு. தமிழகத்தில் இந்து-முஸ்லிம் மோதல், இந்துத்துவத்தின் எழுச்சி நடைபெறாமல் போனதற்கு திராவிடக் கருத்தியலின் செல்வாக்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பெரியாருடைய காலத்திலிருந்து, அதற்கு கொஞ்சம் முன்னதாக நீதிக்கட்சியின் காலத்திலிருந்து திராவிடக் கருத்தியல், பிராமண எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என்ற விஷயங்களில் செல்வாக்கு செலுத்தியது. இது மதச்சார்பின்மைக்கு நீண்டகாலமாக வலுவூட்டியது.

ஆனால் கழிந்த 15 வருடங்களில் தமிழகத்தினுடைய நிலைமை என்னவென்றால் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக இருந்த திராவிட பாரம்பரியம் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. என்று சொல்லக் கூடிய இந்த முன்னேற்றக் கழகங்கள் எல்லாம் யாராவது ஒருவர் மாற்றி மாற்றி இந்துத்துவத்தோடு கூட்டுச் சேருகிற நிலைமையை தமிழகம் சந்தித்து வந்திருக்கிறது. இது தமிழகத்தில் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரும், பெரும்பான்மையான இந்து அடித்தள மக்களும் நீண்டகாலமாக திராவிட ஆட்சிகளுக்கு ஓட்டளிப்பவர்களாக இருக்கின்ற சூழலில் இதன் மறுபக்கம் சில பெரியாரிய குழுக்கள் இந்த கழக அரசியலிலிருந்து விலகி தனியாக செயல்படத் தொடங்கி உள்ளன. தலித்திய இயக்கங்கள் வலுப்பெற்று வருகின்றன. கழிந்த 20 ஆண்டுகளில் மிக சிக்கலான வரலாற்றுக் கட்டத்தில் இடது சாரிகளும் மதச்சார்பின்மைக்கு வலுசேர்க்கின்றனர். பெண் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மதச்சார்பின்மைக்காக முன்னுக்கு வந்திருக்கின்றனர். எனவே மதச்சார்பின்மைக்கு ஆதரவாக இருந்த திராவிட இயங்கங்களில் நெருக்கடி ஏற்படும் பொழுது இந்த சக்திகள் வலுப்பெறவேண்டும். திராவிட பாரம்பரியம் மதச்சார்பின்மையைக் காப்பாற்றும் என்பதில் சில சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும் சூழலில் நாம் சில மாற்றுத் தளங்களை உருவாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com