Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

மைசூரில் தோற்ற மரணம்
பேரா. அப்துல்காதர்


ஆடி மழைச்சாரல், அமிழ்ந்துள்ளன விதைகள். மண்ணை விட்டு முளையாக கிளம்பும் போது கைகுவித்துத் தாய் மண்ணை தலைவணங்கியே வளர்கிறது. நிமிர்கிறது. தெய்வங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுப் பாடிய பாரதியார் இராமன் பாட்டுப் பாடினாரில்லை. மாறாகக் கண்ணன் பாட்டுத்தான் பாடினார். காரணம் என்ன?

வெள்ளை ஏகாதிபத்தியத்திலிருந்து நாட்டு விடுதலையை நரம்புகளில் பாய்ச்சிய பாரதியார், உரிமையாய்ப் பெற்ற நாட்டை விட்டுக் கொடுத்து விட்டு வெளியேறிய இராமனைப் பாடாதது வியப்பில்லை. நாட்டைப் பறிகொடுத்து அடிமைப்பட்டிருக்கும் இந்திய மக்கள் போராட வேண்டியவர்கள். அவர்களுக்குத் தற்போது வேண்டப்படுவது விடுதலைப் போராட்ட உணர்வுதான். இந்திய தேசத்தின் முப்பெருங்காவியங்கள் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம். இம்மூன்று பேரிலக்கியங்களிலும் ஓர் ஒற்றுமையுண்டு. ‘தூது போதல்’ என்ற அம்சம் தான். இராமாயணத்தில் அனுமன், மகாபாரதத்தில் கண்ணன், கந்தபுராணத்தில் வீரபாகு முறையே தூது போகிறார்கள். பாரதி அனுமனையோ, வீரபாகுவையோ பாடவில்லை; மாறாக கண்ணன் பாட்டே பாடுகிறார். அனுமன் ‘சீதை’ என்ற பெண்ணை விடுதலை செய்யத் தூது போனான். வீரபாகு (தேவர்கள்) விண்ணை விடுதலை செய்யத் தூது போனான். ஆனால் கண்ணன் மட்டும் கௌரவர்களிடமிருந்து மண்ணை விடுதலை செய்யத் தூது போனான். அதனாலேயே கண்ணன் பாட்டுப் பாடினார் பாரதியார். அவரின் முப்பெரும் பாடல்கள் ‘குயில்பாட்டு’, ‘கண்ணன் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’. கருமை வண்ணக் கண்ணன், கண்ணன் பாட்டிலும் பாஞ்சாலி சபதத்திலும் இடம்பெறுகிறான். குயிலின் வண்ணமும் கருப்புத்தான். வெள்ளை ஆட்சிக்கெதிராகக் கருப்பு வண்ணத்தைத் தூக்கிப் பிடித்த பாரதியார் 39 வயதில் இறந்து போனார். 40 வயதானால் தலையில் நரை தோன்றிவிடும். தன் தலைக்கு மேலே ஒரு வெள்ளை ஆதிக்கத்தை விரும்பாத பாரதியார் 39 வயதிலேயே மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இன்று சுதந்திர இந்தியாவின் நிலை என்ன? சுதந்திரத்திற்கு முன்பு இங்கிலாந்து என்ற ஒரே ஒரு நாட்டிற்குத்தான் இந்தியா அடிமைப்பட்டிருந்தது. இன்று எல்லா நாடுகளுக்கும் ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. மாதவி, கோவலனின் பணத்தையெல்லாம் பறித்ததைப் பற்றி, மதுரை விசுவநாததாஸ் கண்ணகி நாடகத்தில்

“காசைப் பறிக்கும் ஐரோப்பா
கவர்மெண்டைப் போலத்
கைப்பொருள்தனைப் பறித்தாள்”

என்று பாடியது நினைவுக்கு வருகிறது. ஐரோப்பா அரசு என்று ஆங்கில அரசைக் குறித்தார். இன்றிருந்திருந்தால் அகில உலக அரசுகள் என்று பாடியிருப்பார். இந்தியன் காமதேனுவின் ஈரமடியில், அன்னிய அட்டைகளை ஒட்டி வைக்கும் முயற்சிகளில் நம் அரசுகளே இறங்கி வருவது பரிதாபம். கன்றுகள் உண்ண வேண்டிய பால்மடியில் அன்னிய அட்டைகள். எல்லாத் துறைகளிலும் பங்குகள் அன்னிய தேசங்கட்கு விற்கப்படுகின்றன. ஆனால் ஒன்று மட்டும் உறுதி அட்டைகள் பாலருந்தாது. இரத்தம் தான் உறிஞ்சும். வெளியிலிருந்து மட்டுமாவிடுதலைக்குத் தளைகள்?

எனது மூவடிப் பாடல்களில் ஒன்று.

“ஓட்டு மந்தைகள் / தொழுவம் / சட்டமன்றம்”

நுகத்தடிகளைக் காவடிச் சுகத்தடிகளாகத் தாங்குகிறார்கள். ‘அரோகரா’ ஆண்டவனுக்கு அல்ல மக்களுக்குத்தான்.

அடிமைத்தன மேற்படி அழுக்கு முகங்களுக்கு மத்தியில் இழுக்கு முகம் ஒன்று. யார் யாரையெல்லாம் மணத்தல் ஆகாது எனத் தெளிவாகக் குறிப்பிடும் இறைமறை குர்ஆன் “நீங்கள் உங்கள் புதல்வர்களின் மனைவிகளை மணம் புரியாதீர்கள்” (4:23) என்று கட்டளையிட்ட பிறகும் இம்ரானாவின் நிலை என்ன? மருமகளைக் கற்பழித்த மாமனாருக்கே, மருமகள் மணமுடிக்கப் பட வேண்டும்; மணவாளனோடு வாழக் கூடாது; மார்க்கத் தீர்ப்பு என்ற பேரில் ஃபத்வா. ‘அல்லா மார்க்கம்’ தெளிவாக இருக்கிறது ‘முல்லா மார்க்கம்’ மூச்சுத்த திணற வைக்கிறது. Father-in-law, Mother-in-law, Sisrer-in-law என்ற ஆங்கிலச் சொற்களும் அந்தந்த உறவுகள் சட்டப்படி இருக்க வேண்டும் என்பதையே உணர்த்தும். உயர்குலப் பெண்ணொருத்தி திருடினாள். அவளுக்குத் தண்டனையிலிருந்து சலுகை வழங்கக் கோரிய தன் வளர்ப்பு மகன் கைதைக் கண்டித்த பெருமானார் நபிகள் நாயகம் “எனது மகள் திருடினாலும், இஸ்லாமியச் சட்டப்படி, அவள் கையை வெட்ட நான் ஆணையிடுவேன்” என முழங்கினார். ஆனால் நிகழ்ந்திருப்பது என்ன? திருடிய கையை வெட்டவில்லை. மாறாகத் திருட்டுக் கொடுத்த பெண்ணின் வாழ்க்‘கை’யையே திருடனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த நியாயம்? பெண்ணடிமைத் தனத்தை உறுதி செய்யும் ஆணாதிக்கமே இழுக்கு முகம்.

சாதி, மத அடிமைத்தனங்களை வளர்க்கவா கண்ணீரும், செந்நீரும் சொரிந்தனர் விடுதலைப் போராளிகள்? வீரத்தையும், தியாகத்தையும் இரத்த அணுக்களாகப் பெற்ற மைசூர் மாமன்னர் திப்பு

“முழந்தாளிட்டு / உயிர் வாழ்வதை விட
நின்று கொண்டு / இறப்பதே மேல்”

என்று பிரகடனப்படுத்தினார். அன்னிய நாட்டு உப்பினைப் போட்ட எந்த உணவையும் தீண்டாத திப்பு வெள்ளையர் காலில் இறுதிவரை விழவில்லை. போர்க்களத்தில் உயிர் நீத்து மானம் நீங்கா அவர் உடலைத் தேடினார்கள் வெள்ளையர்கள். வெட்டுப்பட்ட நிலையிலும் அந்த வீரனின் கை தன் வாளைப்பிடித்தபடியே கிடந்தது. அது வாளில்லை. அந்தப் போராளியின் சுதந்திர இலட்சியம். எல்லாப் பூக்களையும் உதிர்க்கும் மரணப் புயல் விடுதலைப் பூக்களின் மகரந்தத்தை விதையாக்கும் வாகனமாக மாறிவிடுகிறது !


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com